புதுக் கவிதை
விடுபடுதல்
சிலவேளைகளில் கற்பனைகள்
உண்மைகளைவிட உன்னதமானவை
நான் வகுப்பறைக்குள் நுழைந்தேன்
பெஞ்சுகளில் பேசாமல் அமர்ந்திருக்கும்
பட்டாம்பூச்சிகள் வணக்கம் சொல்லின
கட்டிப்போட்டு பாடம் நடத்தினால்
பட்டுப்போய்விடுமென யோசித்தேன்
அவற்றின் படபடக்கும் கண்கள்
வானுக்கு அழைத்துப் போகச் சொல்லின
பறக்கத் தொடங்கினோம்
கிறக்கமுற்ற வானம் கைகுலுக்கி வரவேற்றது
வானத்தின் வகுப்பில் கணக்குப் பாடம்
நட்சத்திரங்களை எண்ணச் சொன்னேன்
பறித்துக் கோர்த்து மாலையாக்கி மகிழ்ந்தனர்
விடுதலை பற்றிய பாடத்தில்
கூண்டுக்குள் வேண்டாமென
காற்றிடம் பெருவெளி கேட்டோம்
காற்றும் கடை திறந்து பெருவெளி கொடுத்தது
உண்டு மகிழ்ந்தோம்
நிலவின் சாலையில் நடந்தே வந்தோம்
வடை சுட்ட ஆயா காணாது தவித்தோம்
ஆயா சிறையிலிருக்கிறார் என்றான்
வடை சுடும்போது கேஸ் தீர்ந்துவிட்டதாம்
சிலிண்டரைக் கொடுத்துதவிய
ஆம்ஸ்ட்ராங் உயிர்காற்றின்றி
உயிர்விட்டுவிட்டாராம்…