இலங்கயில் மீன் பாடும் கிழக்கு மாகாணத்தில் நிந்தவூரில் பிறந்து , வளர்ந்து, வாழ்ந்து வரும் பிரபலமான பல்துறை ஆளுமைகள் நிறைந்த நிந்தவூர் உஸனார் ஸலீம் அவர்களை “தமிழ் நெஞ்சம்” நூலுக்காக நேர்காணல் செய்வதில் அகம் மகிழ்கிறேன் இவரது கை எழுத்துக்கள் அச்சில் வார்த்தது போல் அழகாக இருப்பது இறைவன் இவருக்கு கொடுத்த அருள் என்றே கூறலாம்.இலங்கை நாட்டில் கலை இலக்கிய துறையில் கூடிய ஆர்வாளர்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்திலிருந்து விடிவெள்ளியாய் பிரகாசிக்கும் நிந்தவூர் உஸனார் ஸலீம் அவர்களை அன்போடு வரவேற்றுக் கொண்டு வினாக்களுக்கு வருகிறேன்.
நேர்கண்டவர்
ஊடகவியளாளர்
மாவனல்லை பாரா தாஹீர்
இலங்கை.
TAMILNENJAM FLIPBOOK 2025
01. நிந்தவூர் எனும் போது கலை இலக்கியத்தில் உஸனார் ஸலீம் எனும் நாமம் பிரபலமானது. எனினும் உங்களைப் பற்றி நீங்கள் கூறி, அறிமுகமாகனும் என எதிர் பார்க்கிறேன்.
என்னை பற்றிய ஒரு அறிமுகத்தை கேட்டிருக்கிறீர்கள் .கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் , வந்தவரை வாழவைக்கும் பல வளங்கள் ஒருங்கே நிறைந்த நிந்தவூர் எனது சொந்த ஊராகும். சாதாரணமான ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான்.எனது தந்தை ஒரு சிறந்த நல்ல விவசாயி. அந்த விவசாயக் குடும்பத்தில் நான்காவது பிள்ளையாகப் பிறந்தவன் நான். குடும்பத்தில் மொத்தம் நாங்கள் ஏழு பேர் பிள்ளைகளாக பிறந்தோம்.எங்கள் தாயும் தந்தையும் ஏழைகளாக இருந்த போதும் எங்களைப் படிப்பிக்க மறக்கவில்லை . அந்த வகையில் எங்கள் பெற்றோருக்கு நாங்கள் எப்போதும் நன்றி கடன் பட்டவர்கள்.என் தாயும் தந்தையும் இப்போது உயிரோடு இல்லாத போதும் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா தனது நல்லருளை வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் எனது நெஞ்சாரப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் ஆமீன்!
சிறுவயதிலிருந்தே எனக்கு வானொலி கேட்கும் பழக்கம், மற்றும் பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கங்கள் இருந்ததால் இன்னும் வானொலியில் அடிக்கடி எமது நிந்தவூரின் எழுத்தாளர்கள் கலைஞர்கள் பங்கு பற்றும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை அடிக்கடி கேட்கும் போதெல்லாம் எனக்கும் எழுத வேண்டும் நானும் வானொலியில் நிகழ்ச்சிகள் மூலம் பங்கு பெற்ற வேண்டும் என்று எனக்குள் ஒரு ஆர்வம் அன்று முதலே தலைத் தூக்கி இருந்தது.அதன் காரணமாக நான் ஆறாம் தரம் கல்வி பயிலும் போதே 1975ஆம்ஆண்டு காலம்அது. வானொலிக்கு ஓர் கடிதம் எழுதினேன். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவைக்கு “பாராளுமன்றத்தில் இன்று “என்ற நிகழ்ச்சி தொடர்பான ஒரு விமர்சனக் கடிதமே அது.அப்போதெல்லாம் இரவுநேரச் செய்திகளின் பின்னர் அந்த பாராளுமன்றத்தில் இன்று என்ற அந்த நிகழ்ச்சி இரவு 9. 15க்கு ஒலிபரப்பானது. அன்றைய தினம் பாராளுமன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை மிக ரத்தின சுருக்கமாக அந்த நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டது கூறப்பட்டது. அந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்தவர் திரு அன்ரனி ராசையா அவர்களாகும் .முதல் முதலாக நான் எழுதிய அந்த கடிதம் வானொலி நிலையத்தில் நேயர் கடிதம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான போது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எனது கடிதத்தை நிகழ்ச்சியில் வாசித்த இலங்கை வானொலியின் அன்றைய தேசிய சேவையின் பணிப்பாளர் திருவாளர் திருஞானசுந்தரம் ஐயா அவர்கள் என்னை இது போன்ற விமர்சனக் கடிதங்களை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு எழுதுமாறு அன்பாக வேண்டிக் கொண்டார்கள். எனது முதல் முயற்சியே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததோடு பெரும் உற்சாகத்தையும் பேரார்வத்தையும் ஏற்படுத்தியது.எனவே அன்று தொடக்கம் முழுமூச்சாக வானொலிக்கு கடிதங்கள் மற்றும் வேறு வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆக்கங்களையும் நான் எழுத ஆரம்பித்தேன். மேலும் எனக்கு சிறுவயதில் பத்திரிகைகள் வாசிப்பது புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். அதிகமாக நான் பத்திரிகைகள் புத்தகங்கள் தினசரிகள் வாசிப்பதால் எனக்கும் பத்திரிகைகளுக்கு ஆக்கங்கள் எழுத வேண்டும் என்று ஆர்வம் பிறந்தது. எனவே எனது ஆதங்கத்தை தீர்த்துக் கொள்ள முதன் முதலாக நமது நாட்டின் தேசியப் பத்திரிகைகளில் ஒன்றான ” தினகரன்” பத்திரிகையின் “கல்வி அரங்கு!” என்ற எனும் அம்சத்திற்கு ஒரு கல்விக் கட்டுரை ” கல்வி வளர்ச்சியில் பெரியார்களின் பங்களிப்பு!” என்ற தலைப்பின் கீழ் பெரு முயற்சி செய்து எழுதி அனுப்பி வைத்தேன். என்ன ஆச்சரியம் நான் எழுதி அனுப்பிய ஒரு வாரத்தில் என்னுடைய கட்டுரை தினகரன் கல்வி அரங்கில் பிரசுரமானது. அந்த மகிழ்ச்சியில் இன்னும் இன்னும் நான் தினகரன் மற்றும் சிந்தாமணி,தினபதி வீரகேசரி,மித்திரன் போன்ற பத்திரிகைகளுக்கு எனது கட்டுரைகள்,கவிதைகளை மற்றும் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தேன்.அவை அடிக்கடி பிரசுரம் ஆனதால் எனக்கு மென்மேலும் எழுதுவதற்கு ஆவல் ஆர்வம் ஏற்பட்டது .தொடர்ந்தும் சளைக்காமல் எழுத ஆரம்பித்தேன். பத்திரிகைகள் வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றுக்கு எல்லாம் என்னுடைய ஆக்கங்கள் எழத்துருப் பெற்று விரிவடைய ஆரம்பித்தது .அதன் விளைவே இப்போதும் நான் எல்லாவற்றுக்கும் தொடராக என் ஆக்கங்களை எழுதிக் கொண்டே இருக்கின்றேன்.
2. உங்கள் இலக்கிய துறை ஆர்வம் மற்றும் அதன் பிரவேசம் பற்றி கூறுங்கள்?
எனது இலக்கியத்துறை ஆர்வம் ஏற்கனவே நான் எனது அறிமுகத்தில் குறிப்பிட்டது போல மிகவும் சாதாரணமான ஒன்றுதான்.வானொலியை தொடர்ந்து சிறு வயது முதல் கேட்டு வந்ததாலும் மேலும் பத்திரிகைகளை நான் நிறைய வாசித்ததாலுமே எனக்கு இந்த இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது .அத்தோடு எனக்கு எனது பாடசாலை மற்றும் கல்லூரி நண்பர்கள் எனக்கு ஊக்கம் தந்தார்கள். மற்றும் எனக்கு தமிழ் பாடங்களை கற்றுத் தந்த ஆசான்கள் ஆசிரியர்களும் இதற்கு காரணமாகும்.அவர்களும் எனக்கு எழுத்துத் துறையை வளர்த்துக் கொள்ளுமாறு மிகவும் ஊக்கம் தந்தார்கள்.எனது பெற்றோர்களும் இதற்கு தடையாக இருக்கவில்லை அவர்களின் ஆதரவும் இருந்ததால் நான் இந்த எழுத்துத் துறையில் மிகவும் மும்முரமாகத் தொடர்ந்தேன்.
3. பல்துறை ஆளுமைமிக்க தாங்களுக்கு கலைத்துறையில் ஆர்வம் உள்ளதா?அதுப்பற்றி கூறுங்கள்?
ஆம் கலைத்துறை என்றால் அதில் சித்திரம் அடங்கும் சித்திரங்களை அழகாக வரையக்கூடிய ஒரு திறமை எனக்குள் இருக்கிறது. மேலும் பாடல் நிகழ்ச்சிகளில் பாடிய அனுபவங்கள் நிறைய இருக்கின்றன. மேலும் பாடல்கள் இயற்றுவதிலும் எனக்குள் அதிக நாட்டம் இருக்கிறது. அனேகமான மெல்லிசை பாடல்கள் மற்றும் இஸ்லாமிய கீதங்களை இலங்கை வானொலி தமிழ் சேவை மற்றும் முஸ்லிம் சேவை போன்றவற்றுக்கு எழுதியிருக்கிறேன். மேலும் இலங்கையின் முன்னணி தொலைக்காட்சிகளுக்கும் எனது பாடல்கள் இயற்றி எழுதப்பட்டு அனுப்பப்பட்டு அவை ஒளிபரப்பாகி வருகின்றன. இன்னும் நாடகங்கள் மற்றும் சித்திரங்கள் வரைவதிலும் நடிப்பதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. மொத்தத்தில் கலைகளில் நடனத்தைத் தவிர மற்ற கலைகளில் எனக்கு பேர் ஆர்வம் இருக்கிறது.
04. நிறைய தரமான கவிதைகள் , சிறுகதைகள் எழுதியுள்ள நீங்கள் இன்றைய மரபு கவிதை, புதுக்கவிதை, சிறுகதை வீச்சு எப்படியுள்ளது உங்கள் பார்வையில் என கூறலாமா?
இன்றைய எழுத்தாளர்களும் கவிஞர்களும் தரமான கவிதைகளை,சிறுகதைகளை எழுதுகிறார்கள். மேலும் நன்றாக அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்களையும் கவிதைகளையும் மற்றும் சிறுகதைகளையும் நாவல்களையும் வாசிக்கும் போது, சிறந்த வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் போது தங்கள் எழுத்துத் துறையிலும் தாங்கள் மென்மேலும் பல வளர்ச்சிகளை அடைய முடியும் என்பது எனது கருத்து. வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும் ஒரு நற்செயலாகும்.
05. நாடகத்துறையில் உங்கள் பங்களிப்பு எப்படி?
நாடகத் துறையில் எனது பங்களிப்பு பற்றி கேட்டிருக்கிறீர்கள் நான் இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்குத்தான் முதன்முதலாக நாடகங்கள் எழுதினேன் .இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் நாடகத் தயாரிப்பாளர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள்.ஏனெனில் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் நாடகங்கள் அனைத்தும் மிகவும் புனிதமான கருத்துக்களை கூறக்கூடிய நாடகங்களாக அமைய வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இஸ்லாம் மார்க்கத்தினது நெறிமுறை வழிகளுக்கு உட்பட்டதாக நாடகங்கள் அமைய வேண்டும். அந்த வழியில் மிகவும் கண்காணிப்பாக இருந்தார்கள். அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் எனது நாடகங்கள் அமைந்தன.ஏனைய முஸ்லிம் எழுத்தாளர்களின்
அனைத்து நாடகங்களும் அதுபோல்தான் அமைந்தன. இலங்கை வானொலிக்கு சுமார் 15 நாடகங்களுக்கு மேல் எழுதி இருக்கின்றேன்.அவை வானொலியில் முஸ்லிம் சேவையிலே ஒலித்திருக்கின்றன. மேலும் இலங்கை வானொலியின் தமிழ் சேவையின் தேசிய சேவைக்கும் நாடகங்கள் எழுதினேன் அவையும் ஒலிபரப்பாகி இருக்கின்றன.மேலும் இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தின் தமிழ், மற்றும் முஸ்லிம் அலை வரிசையிலும் எனது நாடகங்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன.
06. நூற்றுக் கணக்கான ஆக்கங்களை எழுதியுள்ள தாங்கள் ஏதும் நூல்கள் வெளியிட்டு இருக்கிறீர்களா?
உண்மைதான் உங்கள் வினாவின்படி நான் இதுவரை பல நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதி குவித்து இருக்கிறேன் கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் நாடகங்கள் என்று எழுதி இருக்கின்றேன்தான் இருந்தாலும் இதுவரை நான் எந்த நூலையுமே வெளியிடவில்லை. எந்த ஒரு புத்தகத்தையும் நான் வெளிக்கொண்டு வரவில்லை என்பது எனக்குள் பெரும் ஆதங்கம் தான்.அதற்குக் காரணம் பொருளாதாரம். இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் விரைவில் ஒரு சிறுகதை தொகுப்பை வெளியிட நினைத்திருக்கின்றேன்.அதற்கான முயற்சிகள் மிக நீண்ட நாட்களாக என்னுள் நடந்து வருகிறது, அதனைத் தொடர்ந்து ஒரு கவிதைத் தொகுதியையும் வெளியிடலாம் என்று எண்ணியிருக்கிறேன் இறைவன் நாட்டம் எப்படியோ …பொறுத்திருந்து பார்ப்போம்!
07. பாடலாசிரியராகவும் விளங்கும் நீங்கள் அது பற்றியும் அதன் அனுபவம் பற்றியும் கூறுவீர்களா?
உண்மைதான் இலங்கை வானொலியில் முஸ்லிம் சேவையிலும் இலங்கை வானொலியின் தேசிய சேவையிலும் மற்றும் இலங்கை வானொலியின் தென்றல் சேவையின் “சந்தன மேடையிலும்”, இலங்கையின் தொலைக் காட்சிகளிலும் எனது மெல்லிசை பாடல்கள் ,இஸ்லாமிய கீதங்கள் நிறைய ஒலிப்பதிவாகி ஒலி,ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதில் அனுபவம் என்று சொல்வதற்கு பல அனுபவங்கள் எனக்குள் இருக்கின்றன. ஓர் அனுபவத்தை இங்கே கூறுகிறேன். ஆரம்ப காலத்தில் நான் பாடல்களை எழுதி இலங்கை வானொலிக்கு அனுப்புவேன். எமது பாடல்கள் அவர்களின் கரங்களுக்குக் கிடைத்தவுடன் எமது பாடல்கள் அவர்களுக்கு கிடைத்த விபரத்தை எமக்கு கடிதம் மூலம் உடனேயே அறியத் தந்து விடுவார்கள். அதன் பின்பு பாடல்கள் எப்போது வானொலியில் ஒலிபரப்பாகும் என்று ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 8. 15 க்கு வானொலி அருகே காத்திருப்போம் .நான் ஆரம்பத்தில் எனது பாடல்களை எழுதி அனுப்பிய போது இலங்கை வானொலியிலே தேசிய சேவையிலே இசைக் கட்டுப்பாட்டாளராக இருந்தவர் திரு எம்.ஏ. குலசீல நாதன் அவர்கள் .அவரை அடுத்து இருந்த இசைக் கட்டுப்பாட்டாளர் திருமதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்கள். எனது அனுபவம் என்னவென்றால் இலங்கை வானொலியின் “சந்தண மேடை” என்ற நிகழ்ச்சியில் ஒலித்த நான் இயற்றிய மெல்லிசைப் பாடல் , சரத் விக்ரம அவர்களின் இசையமைப்பில் இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு.எஸ். கணேஸ்வரன் அவர்கள் பாடிய “ஜன்னலுக்குள் ஒரு வெள்ளை நிலா ” என்று ஆரம்பிக்கும் ஓர் அருமையான இனிய பாடல் இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாகினியிலும் ஒளிபரப்பானது .பாடலைப் பாடிய எஸ். கணேஸ்வரன் அறிவிப்பாளர் அவர்களே அந்தத் தொலைக்காட்சி திரையிலும் தோன்றி அந்தப் பாடலை பாடி நடித்திருந்தார். இதில் என்ன விந்தை என்றால் பாடலை இயற்றியவர் எனக்கு பதிலாக வேறு ஒருவரின் பெயர் அங்கு காண்பிக்கப்பட்டது. பின்பு தொலைக்காட்சிக்கு கடிதம் எழுதி தயாரிப்பாளருக்கு கடிதம் எழுதி அந்தப் பெயரை நான் மாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். எத்தனையோ ஆதாரங்களை காட்டிய பின்பு அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். அதன் பின்பு அந்த பாடலுக்கான சன்மானமும் பணமாக எனக்கு வந்து சேர்ந்தது. இருந்த போதும் முதல் தடவையாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட அந்தப் பாடல் ஒளிப்பதிவு இன்னும் அதே வேறு கவிஞரின் பெயரில் தான் ரூபவாகினியில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.ஆயினும் என்னுடைய பெயரிலும் அந்தப் பாடல் தொலைக்காட்சியிலே காண்பிக்கப்படுகிறது இதுதான் பெரிய விந்தை. இப்படி என்னுடைய பாடல்கள் சில இலங்கை வானொலி தேசிய சேவையிலும் பாடலாசிரியரின் பெயரில்ஆள் மாறாட்டம் செய்யப்பட்டிருக்கின்றன.
08. இலங்கை வானொலியோடு உங்களுக்கு நிறையவே தொடர்புள்ளது என்பதை அறிவேன். அதன் அடிப்படையில் அதன் பிரவேசம் அதனோடுள்ள தொடர்பு பற்றி கூறுங்கள்?
வானொலியில் என்னுடைய பிரவேசம் முதன் முதலாக ஏற்கனவே நான் கூறியது போன்று ஓர் “நேயர் கடிதம்!” நிகழ்ச்சி வாயிலாகத்தான் ஆரம்பித்தது.1975ஆம் ஆண்டு.
தேசிய சேவையில் ஒலிப்பது “நேயர் கடிதம்” , வர்த்தக சேவையில் ஒலிப்பது “கடிதமும் பதிலும் “, இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிப்பது “நேயர் குரல்!”. இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தொடர்ந்து எழுதினேன். நீங்கள் கேட்டவை, விடுமுறை விருப்பம் , விவசாய நேயர் விருப்பம் இவ்வாறு பாடல் விருப்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தபால் அட்டைகளிலும் எழுதினேன்.மேலும் “ஒலிமஞ்சரி!”, “இசையும் கதையும்!”, “பாட்டும் பதமும் !”, “வாலிப வட்டம்! ” ,”நவரச கோவை! “, “இசைமாலை! “, “இளைஞர் இதயம்! ” ,”இளைஞர் மன்றம்! ” ,முஸ்லிம் சிறுகதை, தமிழ் சிறுகதை, தேசிய சேவையின் தமிழ் நாடகம், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் முஸ்லிம் நாடகம் இது போன்று படிப்படியாக எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எல்லா ஆக்கங்களையும் பிரதிகளையும் வானொலிக்கு எழுத ஆரம்பித்தேன். அதன் விளைவாக காலப்போக்கில் வெற்றியும் கண்டேன்.
09. வானொலி கலைஞர்களின் தொடர்புகள் மற்றும் அவர்களுடனான மறக்க முடியாத சந்திப்புகள் மறக்க முடியாத அனுபவங்கள் இருப்பின் பகிர்ந்துக் கொள்ளலாம்?
வானொலி என்பது ஒரு மகத்துவம் வாய்ந்தது. அந்த மகத்துவம் என்னைப்போன்ற இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பழைய நேயர்களால் மட்டும்தான் உணர முடியும் .ஏனென்றால் அந்தக் காலத்தில் ஒரு அறிவிப்பாளரை காண்பது என்றால் அதைப் போன்ற ஒரு மகிழ்ச்சி இல்லை. இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்களுக்கு நேயர்கள் மத்தியில் அத்தனை பெரிய மதிப்பும் மரியாதையும் அபிமானமும் அந்த காலத்தில் இருந்தது அந்த மதிப்பும் மரியாதையும் இன்னும் அந்த இலங்கை வானொலிக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்தக் காலத்திலேயே இலங்கை வானொலியில் ஒரு ஆக்கம் ஒலித்தால் அந்த நேருக்கு மதிப்பும் மரியாதையும் மிக அதிகமாக இருக்கும். ஏனென்றால் இலங்கையிலே இலங்கை வானொலியை தவிர வேறு எந்த தொலைக்காட்சியோ வானொலியோ இருக்கவில்லை.எல்லோரும் இந்த இலங்கை வானொலியுடன் தான் தொடர்பு உடையவர்களாக இருந்தார்கள்.மக்கள் கேட்டு ரசிப்பதற்கு பொழுது போக்குவதற்குமாக இருந்தது இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தின் வானொலி மட்டும்தான்.அதனால் இலங்கை வானொலிக்கு மவுசு அதிகம். ஒரு நேரின் ஆக்கம் ஒலித்தால் அவருக்கும் அந்த வானொலி மூலம் மவுசு அதிகம். அந்த நேயருக்கு இலங்கையிலும் இந்தியாவிலும் நிறைய நண்பர்கள் கடிதம் மூலம் தொடர்பு கொள்வார்கள். அப்படியான ஒரு காலகட்டம் இருந்தது. அது ஒரு பொற்காலம் என்றால் அது மிகையல்ல. ஆயிரக்கணக்கான நட்பு உள்ளங்கள் எனக்கு இந்த வானொலி மூலம் இந்த இலங்கையிலும் இந்தியாவிலும் கிடைத்தன.அந்த வரிசையிலே மாவனல்லை நகரில் இருந்து எனக்கு கிடைத்த ஒரு சிறந்த நட்பு வானொலி எனக்குத் தேடித்தந்த நட்பு நீங்களாகும் .என்னுடைய ஆப்த நண்பியான உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டும் என்று பல வருடங்கள் காத்திருந்து ஒருநாள் உங்கள் மாவனல்லை நகருக்கு உங்கள் இல்லம் தேடி வந்து உங்களை எல்லாம் நேரில் கண்டு மகிழ்ந்ததும் எனக்கு இன்றும் பசுமையாக இருக்கிறது .அந்தப் பசுமையான நாட்களை எண்ணும் போது அந்த நினைவுகள் இன்னும் நெஞ்சில் நிறைந்தே இருக்கின்றன. அவையும் எனக்கு மறக்க முடியாத அனுபவம் தான் .நெஞ்சிலாடும் பொற்கால நினைவுகள்தான்.மறக்கவே முடியாது அந்நாட்களை!
10. சில வானொலி நிகழ்ச்சிகளை இணையத்தளங்களிலும் மறுஒலிபரப்பு செய்து வருகிறீர்கள் அந்த அனுபவம் பற்றி அறிய ஆவலாக உள்ளோம்?
அந்தக் காலத்தில் நான் இலங்கை வானொலிக்கு எழுதிய ஆக்கங்களை வானொலியில் ஒலிக்கும் போது நான் கேசட் ரேடியோ மூலம் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தேன் .காரணம் அவற்றை நான் காலம் கடந்தும் கேட்க முடியும் என்ற ஓர் ஆவலில் தான் அந்த ஒலிப்பதிவுகளை மேற்கொண்டேன். அதேபோல் அடிக்கடி நான் அவற்றைப் போட்டுக் கேட்டு அடிக்கடி மகிழ்ந்து கொள்வது உண்டு .ஆனால் இந்தக் காலத்தில் இப்படி ஒரு இணையத்தளம் வரும் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. நான் மட்டுமல்ல யாரும் அதை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் ஆனால் காலம் இப்படி கனிந்து இருக்கிறது. அந்தக் காலத்தில் கேட்ட நிகழ்ச்சிகளை அந்தக் காலத்தில் கேட்ட அறிவிப்பாளர்களின் குரல்களை அந்த காலத்தில் கேட்ட இசைகளையும் பாடல்களையும் இந்தக் காலத்திலும் கேட்பதற்கு, அவற்றை இரை மீட்டுவது போல் மீட்டி பார்ப்பதற்கும் இந்த இணையத்தளம் இன்று வசதிகளை ஏற்படுத்தித் தந்தது அதனால் எனது பழைய ஆக்கங்களையும் பழைய நிகழ்ச்சிகளையும் இன்றைய இளையவர்கள் கேட்பதற்காக, ஏன்? அந்தக் காலத்து நேயர்களும் கேட்பதற்காகத்தான் இன்றைய முகநூல் மற்றும் youtube போன்றவற்றில் நான் பதிவேற்றம் செய்து மிக்க மகிழ்ச்சி அடைந்து கொண்டுள்ளேன் ஏனைய நேயர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். என்னை வாயார வாழ்த்துகிறார்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
11. இணையத்தளங்களில் ஆக்கங்களை எழுதி நிறைய எழுத்தாளர்கள் உருவாகி உள்ளார்கள். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மிகவும் அருமையான கேள்வி.
அந்த காலத்தில் நாம் ஒரு ஆக்கத்தை எழுதி விட்டு அந்த ஆக்கம் ஒலிபரப்பாக வேண்டும் அல்லது பிரசுரமாக வேண்டும் என்று எத்தனை தவம் கிடந்தோம். அந்த அனுபவம் என் போன்றவர்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் எமது பழைய எழுத்தாளர்களுக்கும் இருக்கின்றது. காத்துக் கிடந்து எப்போதோ ஒரு நாள் அந்த ஆக்கம் வெளிவரும் அல்லது வெளி வராமல் கூட போகலாம் ,இருந்தாலும் அதற்கெல்லாம் நாம் மனம் தளராமல் தொடர்ந்து எழுதினோம். அப்படி எழுதும் ஆக்கங்களில் ஏதாவது ஒன்று வெளி வந்தால் அந்த மகிழ்ச்சியை கூற அளவே இல்லை. பூரிப்பில் மிதந்தோம். ஆக்கங்கள் வெளி வராவிட்டாலும் கவலைகளை மறைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் எழுதுவோம்.அப்படி இருந்தது நமது அந்தக் காலம். ஆனாலோ இப்போது இப்படி கனிந்தது இந்தக் காலம். நினைத்ததை எழுதி முடித்து அதை பிரசுரம் செய்ய யாரையும் நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை .நாமே அவற்றை பிரசுரம் செய்து மகிழலாம் .மற்றவர்களை மகிழ்ச்சி அடையச் செய்யலாம், மற்றவர்களுக்கு நமது திறமைகளை வெளிக்காட்டலாம் .இப்படி இந்தக் காலம் கனிந்திருக்கிறது. ஒருவரின் திறமையை மற்றவர் மறைப்பதற்கு முடியாது. அவரவரின் திறமைகளை அவரவரே உலகத்திற்கு வெளிக்காட்ட முடியும்.அந்த அளவுக்கு இன்று இணையத்தளங்கள் சேவை செய்கின்றன. இந்தக் காலத்து எழுத்தாளர்களும் கவிஞர்களும் கொடுத்து வைத்தவர்கள்.காட்டாற்று வெள்ளம் பெருகி வருகிறது அதில் அள்ளிப் பருகுவதற்கு யாருக்கும் எந்தத் தடையுமே இல்லை.இந்தக் காலத்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் ஒரு பொற்காலம். பாதை திறந்தே இருக்கிறது பயணத்தை யாரும் தொடரலாம் தடைகளேயில்லை!வெற்றிவாய்ப்பு விரலருகே தான்!!
12. கலைகளோடு தொடர்புடைய இளைய தலைமுறையினருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
கலை என்பது நமக்கு நிலையாக இருக்க வேண்டுமானால் நமக்கு கல்வி நிலையாக இருக்க வேண்டும். கலை ஆர்வம் இருக்கும் இளையவர்கள் முதலில் கல்வியை கற்றுக்கொண்டு அந்தக் கல்வியில் நமக்கு ஒரு முன்னுரிமையை முதலிடத்தை பெற்றுக்கொண்டு, எதை எதிர்பார்த்து கல்வியை கற்கிறோமோ அதற்கான ஒரு முடிவை நல்ல முடிவாக நாம் அடைந்து, அதன் பின்பு நமது கலை ஆர்வத்தை மேற்கொண்டால் மிகவும் வெற்றியடையக் கூடியவர்களாக நாம் தான் இருப்போம். இதில் இளைஞர்கள் சந்தேகம் கொள்ளவே தேவையில்லை. எனவே முன்னுரிமை கல்விக்கும், அதற்கு அப்பால் கலைக்கும் அளிப்போம் மிகவும் மகிழ்ச்சி அடையலாம்!
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அபிமான நேயர் விருதினை புலவலர் ஹாசிம் ஒமரிடமிருந்து பெற்றுக்.கொளுதல்.
தமிழ்நெஞ்சம் பத்திரிகைக்காக என்னையும் ஓர் கலைஞனாக ஓர் எழுத்தாளராக ஏற்று பேட்டி கண்டு மகிழ்வித்து நெஞ்சம் நிறைய செய்த எழுத்தாளரும் கவிஞரும் ஊடகவியலாளருமான மாவனல்லை பாராதாஹிர் அவர்களே உங்களுக்கும் , கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் தமிழ்நெஞ்சம் பத்திரிகை குழுவினருக்கும் ஆசிரியருக்கும் என் இதயத்து நெஞ்சார்ந்த நன்றிகள் வளமுடன் எல்லோரும் நீடு வாழ்க!
பல சுமைகளுக்கு மத்தியில் காலம் நேரம் ஒதுக்கி “தமிழ்நெஞ்சம்” நேர்காணலுக்காக சிறந்த கருத்துக்களை முன் வைத்து ஒத்துழைத்தமைக்காக பணிவான நன்றிகளைத் கூறி விடைப் பெறுகிறேன்.நன்றி