இலங்கை திருநாட்டில் எழில் கொஞ்சும் மலையகத்தில் கம்பளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்மா டீன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். கலைக்குடும்பத்தின் வாசனையில் பூத்த இவர் இலங்கையின் முதல் தினசரியான “தினதபால்” ஆசிரியர் காலஞ்சென்ற மீரா மொஹியிந்தீன் அவர்களின் பேத்தியாவார். கம்பளை ஸாஹிராவின் முத்தான இவர் கவிதை, நாடகம், கட்டுரை, என எழுதினாலும் சிறந்த ஒரு சிறுகதை எழுத்தாளராகவே காண்கிறேன்.

நேர்கண்டவர் : மாவனல்லை பாரா தாஹீர்

பிப்ரவரி 2025 / 100 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

இலக்கியத்திற்காக பங்களிப்பு செய்யும் உங்களைப்பற்றி..

மர்ஹூம் அல்ஹாஜ் கே. எம். அன்வர் ஷா,  ஹாஜா ஆயிஷா உம்மா தம்பதியினரின் புதல்வியும் அல்லாஹ் மொஹமட் டீன் அவர்களின் மனைவியுமான நான் இலங்கையின் முதல் தினசரி “தினதபால்” தந்த மர்ஹூம் மீரான் மொஹித்தீ ன்  அவர்களின் மகன் வழி பேத்தியாவேன். நான் கம்பளை ஸாஹிரா கல்லுரியின் பழைய மாணவியாவேன்.

பாடசாலை வாழ்க்கையோடு உங்கள் எழுத்து…..?

ஆம். பசுமையான‌ நினைவலைகளை மீட்டிட செய்யும் கேள்வியிது.

காணும் இடமெல்லாம், பார்க்கும் விடயமெல்லாம் நோக்கும் நிகழ்வுகள் எல்லாம் நல்லதாய் இருக்க வேண்டும் என்ற ஓர்  இளமைக்கால‌ துளிர்ப்பான எண்ணம்.

எட்டு, ஒன்பது, பத்து வயதுகளில் எல்லாம் குட்டி குட்டியாக பாடல்கள், சிறுவர் கதைகள், நகைச்சுவை துணுக்குகள் அதுவும் நானாக எல்லாமே கற்பனை செய்து எழுதுவேன். ஒவ்வொரு மாணவர் மன்றமும் எனக்கானதாய் இருப்பது போல் இருக்கும். வாரா வாரம் நாடகங்களை  எனது கற்பனையால் உருவாக்கி சக தோழியர்களை பயிற்றுவித்து நடித்திருக்கிறேன்.

இவ்வாறு பாடசாலை காலத்தில் விவாதம்,  சிறுகதை, பேச்சு கவிதை போட்டிகளில் தமிழ் தின போட்டிகளுக்காக என்னை ஆசிரியர்கள் அழைத்துச் செல்வார்கள். நிறைய சான்றிதழ்கள் பெற்றிருக்கிறேன்.

இவ்வாறு 1984இல் தினகரன் சிறுவர் உலகம் பகுதியில் ஒரு கட்டுரை மூலம் எனது இலக்கிய பிரவேசம் ஆரம்பமானது.

1990 ல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மாணவர் மன்றம் நிகழ்ச்சிக்காக எனது ஆசிரியர்,  வழிகாட்டி, ஆசியத் தாய்,  மகளாய் என்னைஇன்றுவரை  அரவணைப்பவர் கலாபூஷணம்இலக்கியதாரகை திருமதி நயீமா சித்தீக் அவர்களால் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு எல்லோரும் சிரேஷ்ட‌பிரிவு மாணவர்களாக இருக்க நான் கனிஷ்ட பிரிவு மாணவியாக இருந்தேன்.

எனது வானொலிக்கான முதலாவது ஆக்கம் இதுவாக இருந்தது.

“வேலிக்கு வைத்த முள்….” என்ற இந்த நாடகத்தை எழுதி நெறிப்படுத்தி நடித்திருந்தேன். இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் நாடகத்தில்  நான்கு கதாபாத்திரங்கள்.  நான் போட்டோ பிரதிகள் எடுக்காமல் ஆசிரியர்க்கும் சேர்த்து ஐந்து பிரதிகள் எனது கையால் எழுதியது தான். ம்.  மிகச்சிறிய வயது.அப்படி ஒரு ஆர்வக்கோளாறு.

அதன் பின் 1990ல்’சந்தேகம் சமாதியாகிறது’ எனது முதல் சிறுகதை ‘சிகரம்’என்னும் மலையக‌ச்சஞ்சிகை ஒன்றில் ‌ வெளிவந்தது.

வானொலி முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்காக கவிதை, கட்டுரை, உரையாடல்கள் என ஆக்கங்களை எழுதி வைத்து விட்டு பாடசாலைக்கு செல்வேன். எனது மூத்த சகோதரி நஜிமுன்னிஸா  அதை தனது கையால் பிரதி பண்ணி தபாலிட  செய்வார்.

அண்மையில் தங்களால் வெளியிடப்பட்ட சமூக நாவல் ஆலமரம் பற்றி…

ஆம்.

ஐந்து பெண்பிள்ளைகளின் தந்தையான ஓர் ஒய்வு பெற்ற ஆசிரியரின் கதை.

பெண் பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கி  திருமண பந்தத்திற்குள் அவர்களை இணைக்கும் வரை சமூக சாடல்களுக்கெல்லாம் முகம்கொடுக்கும் ஒரு அன்பான பண்பான ஆளுமைமிக்க தந்தையின் கதை. இதெல்லாம் சமூகத்தில் நடப்பது தானே என்றில்லாமல் தந்தையினதும் பிள்ளைகளினதும் உணர்வு பூர்வமான  அன்பின் பிணைப்பை சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

150 பக்கங்களுடன் இருக்கும் இந்நாவலில் பத்து கவிதைகள் இருக்கின்றன. அதில்” என் தந்தை ஆலமரம்” என்ற கவிதையே முதல் கவிதையாய் வருகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட எனது அடுத்த புத்தகம் கவிஞர் பைந்தமிழ் ஜாகிர் உசேன் அவர்களின் உலக சாதனை தொகுப்பிற்காக ‘மழலை உள்ளம்’ என்ற ஐம்பது பாடல்களை கொண்ட மழலை பாடல் தொகுப்பாகும் .

இலக்கிய உலகில் நீங்கள் பெற்ற அனுபவங்களை கூற முடியுமா?

ஆம். நிறைய நிறைய புத்தகங்கள் தந்தையின் நல்ல பல கருத்துக்களும் அறிவுரைகளும் சிந்தனைகளும்  தாயாரின் நன்நெறி கூறும் கதைகளும். என்னை இலக்கியபரப்பிற்குள் ஆசையோடு சஞ்சரிக்க வைத்தது.

பிற்பட்ட காலத்தில் 2002 இல் அனுசரணை நிகழ்ச்சிக்காக வானொலி முஸ்லிம் சேவையில் நாடக வேளை என்னும் நிகழ்ச்சிக்கு 14 வாரங்கள் 14 குறு நாடக பிரதிகளை எழுதி வந்தேன்.

சிரேஷ்ட அறிவிப்பாளர் வானொலி முஸ்லிம் சேவையின் “நெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிஸ்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர் நஜ்முல் உம்மா திருமதி புர்கான் பீ இப்திகார் அவர்களும் கலைஞரும் எழுத்தாளருமான திரு மஹ்தி ஹசன் இப்றாகீம் அவர்களும் அபார திறமையான நடிப்பால் அந்த நாடகங்களில் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டினர்.

அந்த நாட்களில் எல்லாம் வானொலியில் நாடகங்களை கேட்ட நேயர்கள்  தொலைபேசியிலும் நேரிலும் கடிதம் மூலமும் தொடர்பு கொண்டு கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

வாரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது பிரபல்யமான ஒரு கலைஞர் “உங்களால் எழுத முடியுமா?  தொடர்ந்தும் எழுத முடியாதே.’  என்று கேட்டப் போது நான் உடனடியாக எனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தேன்.

உண்மையில் அவர் சொன்ன விதம்,  அந்த தொனி என்னை புறந்தள்ளுவதைப் போல உணர இந்த விடயத்தில் நான் விடாப்பிடியாகவே இருந்தேன்.

 எல்லோரும் எம்மை பாராட்ட வேண்டியதில்லை. திறந்த பாதை, சிறந்த வழியாய் தெரியும் போது நிறைந்த மனதுடன் வழிகாட்டுபவர்கள்,  வாழ்த்து சொல்லுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.

ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பார்கள். ஆற்றல் இல்லாத மனிதர்கள் உலகில் பிறப்பது இல்லை.

 ஒருவர் தன்னை சார்ந்தவர்களால் இனங்காட்டப்பட  அல்லது தானே தன்னை இனங்கண்டு அத்துறையில் கால் பதிக்க அவர் உளாரோக்கியம் பெறுகிறார். ஏனெனில் இது இறைவனால் அவருக்காக வழங்கப்பட்டது. அதில் தடை‌வராத போது அல்லது தடையை தாண்டும் போது அவர் தனது திறமைகளை வெளிகொணருகிறார்.

இவ்விடயமானது சமூக நலம் காப்பதாய் மிளிரும் போதே அவருக்கு இறை புறத்தில் இருந்தும் ஆசி கிடைக்கும்.

இலக்கிய உலகில் பங்களிப்பு செய்ததன் மூலம் கிடைத்த பட்டங்கள் விருதுகள் ஏதும் உண்டா?

பெரிதாக எதுவுமே கிடைத்ததில்லை.

வானொலி முஸ்லிம் சேவையுடன் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் இணைந்து நடாத்திய  அகில இலங்கை ரீதியான மீலாத் திறந்த நாடக பிரதியாக்கத்திற்காக அகில இலங்கை ரீதியில் முதலாவது இடம் கிடைத்தது.

எனது இருபது முப்பது வயதுகளிலெல்லாம் விருது, பட்டம்,  என்று ஒரே கனவாக இருந்தது. ஆனால் நான் இதுவரை எந்தவிதமான விருதுகளுக்கும் விண்ணப்பித்த தில்லை.

இப்போது எனக்கு எந்த கனவுகளும் இல்லை. என்னை பொறுத்த வரை விருது பரிசு என்பதெல்லாம் வாசகர்களின் உள்ளங்கள் தான்.அவர்களின் விமர்சனம் தான் எனது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

(அத்தோடு) இப்பொதெல்லாம்  விருதுகள் என்ற பெயரில் வியாபாரம் நடப்பது எமது சிஷேட்ட கலைஞர்கள் பெற்றுக்கொண்ட  தகுதியான தரமான விருதுகளையும் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது.

உண்மையில் இதில் மனதுக்கு கவலையான விடயம் என்னவென்றால் இலக்கிய படைப்புகள் மனித உணர்வுகளை சிந்தனைகளை இலட்சியங்களை  முன்வைக்க கூடியவை. எனவே அவை இறைவனின் புனித படைப்பான சிந்திக்க பிறந்த மனிதனுக்கே உரிய ஆற்றலாக இருக்கும் போது எடுத்தேன் வைத்தேன் என்று விருது வழங்கும் விழாக்கள் விளம்பரத்திற்காகவும் வியாபாரத்திற்காகவும் கூட்டம் கூட்டமாக சேர்வோர் செய்ய இலக்கிய தரத்திற்கான ஆரோக்கியம் கெட்டுப் போகிறது என்பது வருந்தத்தக்க விடயமாகும்.

இலக்கியம் தவிர வேறு ஏதும் துறைகளில் நாட்டம் உண்டா?.

ஆரம்ப காலங்களில் ஆடைகளுக்கான அலங்காரங்களை வடிவமைப்பதில் அலாதியான ஆர்வமிருந்தது. அப்போதெல்லாம் எனக்கும் சகோதரிகளுக்குமான உடைகளுக்கு அலங்காரம் வடிவமைப்பேன். அதன் பின் எனது மகளுக்கான ஆடையை தைத்தேன்.

நான் உயர்தரத்தில் கற்கும் போது எனது பாடசாலை சீருடையை நானே தைத்து கொள்வேன். எனது ஆடையை நான் தைத்தாலும் அதற்குரிய கட்டணத்தை எனது தந்தை தருவது என்னை வெகுவாக உற்சாகப்படுத்தியது. இப்போது அது அப்படியே விடுபட்டு போனது.

 அடுத்ததாக பாடசாலை மாணவர்களுக்கான கைவினைப் பொருட்களை செய்வதிலும் பெரிதும் ஆர்வம் உண்டு.

இன்னும் சொல்லப்போனால் நளபாகம் என்னை கவர்ந்த ஒரு கலையாகும்.சமையல் செய்கிறேன் என்பதை விட சமையலில் ஈடுபடுகிறேன் என்று சொல்வதே எனக்கு பிடிக்கும். உணவு செய்முறைகள் பார்த்து செய்வதை விடவும் நானே புதிதாக நினைத்து செய்வதில் பெரிதும் ஆர்வம் இருக்கிறது.

எதிர்கால திட்டங்கள் ஏதும் உண்டா?

ஆம். என் கைவசம் நிறைய புத்தகங்களை எழுதி வைத்திருக்கிறேன்.

இறைவன் நாட்டத்தால் அவை கூடிய விரைவில் வெளிவர வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அனுபவமுள்ள எழுத்தாளரான நீங்கள் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

 பேனையும் தாளுமாக எடுத்து எழுதி பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி போன்றவற்றிற்கு ஆக்கங்களை  அனுப்பி விட்டு வானொலிக்கு அருகில் காதை கொடுத்துக்கொண்டிருப்பதும் பத்திரிகைகளில் கண்களை மேய விட்டு துருவி துருவி தேடுவதும் அவற்றில் எமது ஆக்கங்கள் ஒலிபரப்பபட்டால், பிரசுரமானால் ஆனந்தபரவசமடைவதும் எமது அன்றைய நிலையாக இருந்தது. ஆக்கங்கள் வெளிவருவதே எமது திறமைக்கான தரமான படைப்பிற்கான அங்கீகாரமாக இருந்தது.

  ஆனால் இன்று ஒவ்வொருவரினதும் கைகளில் கையடக்க தொலைப்பேசி எந்த அங்கீகாரமும் தேவையில்லை. தானே ஒரு வசனத்தை நான்காக உடைத்து மேலும் கீழுமாக பதிவிட்டு  அதன் கீழ் தன்னை கவிஞர் அல்லது எழுத்தாளர் என்று பறைசாற்றும் துரதிஷ்ட நிலை.

அடுத்தவர் இலக்கியம் படைக்கிறார் என்பதற்காக எடுத்த எடுப்பிலேயே நாமும் புறப்பட்டால் அந்த எழுத்து தரம் கெட்டதாய் மாறிவிடும்.

எழுத்தை ஆள்பவனே எழுத்தாளன். அவன் எழுத்தை ஆள்பவதற்கு முன் அவனை எழுத்து ஆட்படுத்தி இருக்க வேண்டும். அவன் எழுத்தை வாசிப்பவனாக நேசிப்பவனாக சுவாசிப்பவனாக இருக்க வேண்டும்.அவனது கண்கள் எழுத்தை அணுஅணுவாக படம் பிடிக்கும். மனம் அதில் இலயிக்கும். ஒரு சொல்லை மனம் பலமுறை தொட்டு தொட்டு நிற்கும்.

    இவ்வாறு எழுத்தால் ஆளப்பட்ட எழுத்தாளனின் படைப்புக்கள் காலத்தால் அழிவதில்லை.

எழுத்துக்கு உயிரில்லை. எழுதுபவர் அதற்கு உயிரூட்டுகிறார். எனவே எழுதுபவர் வாசிப்பவராக இருக்க வேண்டும்.

எல்லோரும் எழுதுகிறார்கள் எனவே நானும் எழுதுகிறேன் என பேனா பிடிப்போரின் இலக்கியம் மனித மனம் தொடுவதில்லை.

எனவே முதலில் நிறையவாசிக்க வேண்டும். வாசித்த பின் யோசிக்க வேண்டும். யோசினையிலிருந்தே சிந்தனை பிறக்கிறது.சிந்தித்துப் பார்க்கும் போதே உணர்வுப்பூர்வமாக எழுத முடிகிறது. வெறுமனே செய்திகளாக சொல்லப்படாமல் உணர்வுபூர்வமாக சொல்லப்படும் இலக்கிய படைப்புகளே வாசகர்களின் உள்ளங்களில் வாழ்கிறது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

நேர்காணல்

நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்

பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்..

 » Read more about: நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்  »

நேர்காணல்

ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்

  1. உங்களை பற்றிய அறிமுகத்தை கூறுங்கள்.

1997 ஜனவரி மாதம் 30ஆம் திகதி இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகமை எனும் ஊரில் பிறந்தேன்.

எனது தந்தையின் பெயர் முஹம்மத் ஹூசைன்,

 » Read more about: ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »