சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர். தற்போது பல மின் சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறார். sithy mashoora suhurudeen என்ற தனது முகநூல் பக்கத்திலும் தனது படைப்புகளை பதிவேற்றி வருகிறார்.
கவிதை, சிறுகதை ,கட்டுரை, நாடகம் பாடல், வில்லுப்பாடல் ,தாளலயம் பேச்சு, சித்திரம், கைப்பணி ,சஞ்சிகை என பல் துறைகளிலும் தேர்ந்தவராவார்.
2021 ல் கிழக்குமாகாண கலாசார அலுவல்கள் திணைக்களம் வழங்கிய இலக்கிய வித்தகர் விருது உட்பட இலக்கியத்திற்காக
பதினைந்து விருதுகள் பெற்றுள்ளார்.சுற்றாடல் அமைச்சின் ஆசிரியர்களுக்கான பசுமை விருது கல்வியமைச்சின் ஆசிரியர் பிரதீபா பிரபா விருது உட்பட சாரணியம் முதலுதவி போன்றவற்றில் ஈடுபாடுகாட்டியமைக்கான சேவை விருது என்மனவும் பெற்றுள்ளார். இலங்கை இந்தியா உட்பட பல கவிதைத் தொகுதிகளில் இடம்பெற்றிருக்கிறார்.
நதிகளின் தேசிய கீதம் இவரது கவிதைத் தொகுதியாகும்.மூன்று தொகுப்பு நூல்களைத் தந்துள்ளார்.
இவரால் ஸ்தாபிக்கப்பட்டு இயங்கிவரும் Sri Lanka pen club ஆற்றலுள்ள பெண்களுக்கு களம் அமைக்கும் பணியைச் செய்து வருகிறது. இவ்வமைப்பின் மூலம் அவரி என்ற காலாண்டு சஞ்சிகையொன்றினையும் வெளியிட்டு வருகிறார்.இவ்வருடம் (2024) க்கான சாஹித்திய விருதினை அவரி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. முப்பதுக்கு மேற்பட்ட சஞ்சிகைகளின் ஆசிரியராக செயற்பட்டிருக்கிறார்.
பாடலாக்கம்,கவிதை,சிறுகதை ,நாடகம் என தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். தேசிய மட்டத்தில் நாடகத் தயாரிப்பிற்கான விருதும் பெற்றுள்ளார்.
இவர் அகில இலங்கை சமாதான நீதிவானுமாவார்.
கவிதாயினியாக, கைப்பணிக் கலைஞராக,சித்திரக் கலைஞராக ஓர் அமைப்பின் ஸ்தாபகராக, ஓய்வு பெற்ற ஆசிரியராக பன்முகத் துறைகளில் மிளிரும் நீங்கள் உங்கள் அமைப்பைப் பற்றி, அதன் செயற்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் பற்றிக் கொஞ்சம் கூறுங்களேன்!
இலக்கியம் மட்டுமன்றி அனைத்து ஆற்றல்களையும் பெண்கள் வெளிப்படுத்துவதில் பெரும் சவால்களுள்ளன.தற்காலத்தில் கணிசமான அளவு இத்தகைய குறுக்கீடுகள் குறைந்திருந்தாலும் இன்னும் குறைய வேண்டியிருக்கிறது.நான் எழுதவாரம்பித்த அல்லது எழுதிக் கொண்டிருந்த காலகடடங்களில் பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் ஆண் எழுத்தாளர்களின் வழி காட்டலில் தம் ஆற்றல்களை வெளிக் கொணர்வதாய் எண்ணிக் கொண்டு அவர்களது பிடிக்குள் அடங்கிக் கிடந்ததையும் நான் அறிவேன். அத்தகைய பெண்கள் தான் வாழும் சமூகத்தில் இழிவாக விமர்சிக்கப்பட்ட சந்தர்ப்பங்களையும் அறிவேன்.தங்கள் பெயர்களை கெடுத்துக் கொண்டு சொந்த வாழ்க்கையில் நொந்து போனவர்களுமுண்டு.இத்தகைய அவல நிலைக்கு மூத்த பெண் எழுத்தாளர்களும் கணிசமான காரணம்தான்.இளையவர்களை வழிநடத்தவோ கைதூக்கி விடவோ அனுசரணை கொடுக்கவோ இவர்கள் முன் வந்ததில்லை. இத்தகைய வழிநடாத்தல் கைதூக்கல் அல்லது அனுசரணை வழங்கும் நோக்கில்தான் இந்த Srilanka Pen Club ஐ ஆரம்பித்தேன்.பின்னர்தான் வெவ்வேறு அடைவுகளை இலக்குகளை நோக்கிய திட்டமிடல்கள் நகரலாயிற்று.
தற்போது கலையிலக்கியம் சார்ந்ததாக மட்டுமன்றி பெண்களுக்கு அவசியமான வலுவூட்டல்கள் வாழ்க்கைத் தேர்ச்சிகளை அடைவதற்கான இலக்கு நோக்கி எமது அமைப்பு பயணிக்கிறது.
எதிர்காலத்தில் இதனை ஒரு நூல்வெளியீட்டு நிறுவனமாகவும் பொதுப்பணியில் ஈடுபடக்கூடியதாகவும் கட்டமைக்கும் முன்னெடுப்புகள் உள்ளன.
பணிப்பங்கீடுகள் மூலம் பெரும்பாலோரின் ஆத்மார்த்தமான ஒத்துழைப்பும் உழைப்பும் எமது அமைப்பை உயிரோட்டமாக வைத்திருக்கிறது.
உங்கள் அமைப்பை சர்வதேச ரீதியில் கொண்டுபோக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எவை ?
சர்வதேச ரீதியில் கொண்டுபோகும் இலட்சியம் உள்ளதுதான்.ஆயினும் அதில் அவசரப்படுவதாக இல்லை.உளவீட்டில் பசியோடிருப்பனுக்கு வயிறார உணவிட்டு பசி தீர்ந்தபின்தானே அடுத்த தெருவைப்பற்றி சிந்திக்க முடியும்.எங்கள் அமைப்பின் பெண்கள் தங்களது ஆற்றல்களை மேம்படு்த்திக் கொள்ள தாகித்திருக்கிறார்கள்.எனவே சர்வதேச ரீதியில் முன்னெடுப்பதை ஆறுதலாக ஆற்றலாமென நினைக்கிறேன்.
பழைய கால இலக்கியத்துறையை விட நடைமுறைக்கால இலக்கியத்துறை மேம்பட்டிருக்கிறதா?
மேம்பட்டிருக்கிறதெனச் சொல்ல முடியாது.பரவலாக இலக்கியம் என்ற பெயரிலாவது தமது எண்ணங்களை தாபங்களை வெளிப்படுத்துகிறார்கள்.இதற்கு இணையத்தளங்களின் வரவு முக்கிய காரணம்.யாரும் யாரையும் அங்கீகரிக்க வேண்டியதில்லை.
அன்றைய காலகட்டத்தில் ஒரு ஆக்கத்தை பத்திரிகைக்கு அனுப்பி விட்டு மாதக்கணக்கில் பிரசுரத்திற்காக காத்திருப்போம்.பிரசுரமாகாமலும் போகும்.ஒரு படைப்பின் இலக்கியத்தரத்தை நிர்ணயம் செய்ய வாய்ப்பிருந்தது.இப்போது இலக்கியம் என்ற பெயரில் எதை எழுதினாலும் பதிவிட முகநூல் சுவரிருக்கிறது.எனது சுவர்.நான் எப்படியும் பெயின்ட் அடிக்கலாம். யாரும் வடிகட்ட வேண்டியதில்லை.


எதிர்கால சந்ததிக்கு நம் கலாசார பண்பாட்டு விழுமியங்களை பழுதுபடாமல் கொண்டு சேர்க்க எவ்வகையான உத்திகளைக் கையாளலாம்?
கலைகளினூடு இதனை கடத்த முடியும்.ஆனால் அதை கொண்டு செல்லும் முன் பாதுகாக்க வேண்டிய அவசியமிருக்கிறது.அவை இன்று அருகி வருவதே ஒரு ஆபத்தான நிலைதான்.நவீன யுகத்தின் இளம் சமுதாயம் பழையனவற்றை முற்றிலும் புறந்தள்ளி விபரிப்புகளில்லாத சுருக்கமான முறையிலேயே அனைத்தையும் கையாள விரும்புகிறது.நம் கலாசார பண்பாடு விழுமியங்களின் அழிவிற்கான காரணமும் கணிசமான அளவு இவர்கள்தான்.இவர்களிடமிருந்து பாதுகாத்து இவர்களுக்கும் இவர்களின் சந்ததிகளுக்கும் கையளிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கிருக்கிறது.நூல் வெளியீடுகள் இவற்றை பாதுகாப்பதற்கான உத்திகளில் முதன்மைாயனதாக கருதலாம்.இன்றும் இலங்கையைப் பொறுத்தவரை இவ்வாறான பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. கலாசார நிகழ்ச்சிகள் கூட பங்களிப்பு செய்ய முடியும்.பக்கீர் பைத் களிகம்பு கஸீதா போன்ற கலாசார அம்சங்கள் பற்றிய மூன்று ஆய்வு நூல்களை கிழக்குமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களம் கடந்த வருடம் வெளியிட்டிருந்தது.வெளியீடுகளால் அறிவை மட்டுமே தக்க வைக்க முடியும்.எனினும் செயற்பாட்டு ரீதியில் இடம்பெற்றால் மட்டுமே மேம்பாடடையும்.அது வருங்காலங்களில் சாத்தியமான விடயமில்லை.அசாத்தியத்திற்கான காரணிகள் நிறையவுண்டு.

இலக்கிய விடயங்களில் கிழக்கிலங்கை வாழ் மக்களுக்கு அரசினால் கிடைக்கும் அனுகூலங்கள் ஏனைய மாவட்ட,பிரதேச வாழ் மக்களுக்கு கிடைப்பதில் தடைகள், சிக்கல்கள் உள்ளனவே! இதற்கு என்ன காரணம் என நீங்கள் கருதுகிறீர்கள்?
நானும் இதனையிட்டு சிந்தித்திருக்கிறேன்.கிழக்குமாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் இலக்கியம் நாட்டாரியல் சிற்பம் இசை பல்துறை என வித்தகர் இளம் கலைஞர் விருதுகளும் பல்திறன் போட்டிகளும் இடம்பெறுகின்றன.அவ்வாறு விண்ணப்பம் கோரும்போது நாம் எமது அமைப்பின் வாட்சப் குறூபில் தெரிவித்தும் விடுகிறோம்.ஏனைய மாகாணத்திலுள்ளவர்கள் தங்கள் மாகாணங்களில் நடைபெறுவதே இல்லை என்கிறார்கள்.தவிர மாகாண அலுவல்கள் மட்டுமன்றி தேசிய ரீதியிலும் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் பொறுப்பான கலாசார உத்தியோகத்தரிருக்கிறார்.தேசிய ரீதியில்தான் கலாபூஷணம் விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களுக்கூடாக கோரப்படுகிறது.கலை கலாசாரப் போட்டிகளும் நடைபெறுகின்றன.ஏனைய மாகாணங்களில் இவை இல்லை என்கிறார்கள்.பெரும்பான்மை இனத்தவர்கள் வாழும் பிரதேசங்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதான ஒரேயொரு காரணம்தான் சொல்லப்பபடுகிறது.
குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் மாகாணப் பணிப்பாளரின் சிந்தனையில் புதிய அம்சங்கள் இடம்பெற வாய்ப்புண்டு.ஆயினும் செயற்திட்டங்கள் வேறுபட்டாலும் தேசிய ரீதியில் அனைத்து பிரதேசங்களும் ஒரே திட்டமிடலில்தான் இடம்பெறும்.இவ்விடயம் பற்றி எமது அமைப்பு புதிய வருடத்தில் பிரச்சினைகளை இனம்கண்டு தீர்வுபெற எண்ணியிருக்கிறது.


நிகழ்கால மாணவர்களின் கலாச்சார சீர்கேட்டிற்கு பெற்றோர்களின் வழிநடத்தல்கள் காரணமா அல்லது ஆசிரியர்களும் பாடசாலை சூழல்களும் தான் காரணமா?
முதற்காரணம் கல்விக் கொள்கைதான்.சிறுவர் உரிமை என்ற பெயரில் அதீத சுதந்திரங்கள் வழங்கப்படுவதால் பெற்றாரோ ஆசிரியர்களோ வழிகாட்டிகளாயிருந்து மாணவர்களை நல்லவற்றின்பால் ஏவ திராணியற்றுப் போயினர்.தண்டனை முறைகள் எதுவும் பிள்ளைகள் மீதான வன்மம் காரணமாக நிகழ்த்தப் படுவதில்லை.சில புறநடைகளிருக்கலாம்.புறநடைகள் எதில்தானில்லை.நானும் ஒரு ஆசிரியை என்ற வகையில் மாணவர்களை நல்வழிப்படுத்த எடுத்துக் கொள்ளும் சவால்களை அறிவேன்.ஒரு மாணவனை இன்னொரு மாணவன் உடல் ரீதியாக இம்சை செய்தாலும் ஒரு மாணவன் ஒரு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாலும் அவனை ஒரு ஆசிரியர் தண்டிக்க உரிமையில்லை.கண்டு கொள்ளாமல் குருடனாயிருக்க வேண்டும்.சட்டதிட்டங்களை ஒருபுறம் தூக்கிப் போட்டுவிட்டு மனச்சாட்சியுள்ள ஒரு ஆசிரியன் குருடனாய் நடிக்க முடியுமா?தண்டித்தால் மனித உரிமை மீறல் வழக்கில் ஆசிரியர் தொழிலைக்கூட இழக்க வாய்ப்புள்ளது.ஆசிரியர்களோ பாடசாலை சூழலோ காரணமாக முடியாது. கணிசமான ஆசிரியர்கள் ஓரளவேனும் கண்டித்தாலும் பெரும்பாலானோர் தமக்கேன் வீண்வம்பு என ஒதுங்கி விடுகின்றனர்.
பெற்றாரும் இவர்களை சரியாக வழிநடத்தாத தன்மை அதிகமுள்ளது. முறையற்ற ஆடைக்கலாசாரத்துடன் பாடசாலைக்கு ஒரு பிள்ளை வருவது வீட்டிலிருந்துதான்.பெற்றாரின் கண்டு கொள்ளாமைதான் பாடசாலை கட்டொழுங்குகளை சீர் குலைக்கிறது.ஆசிரியர்கள் தண்டித்தால் போர்க்கொடி தூக்கிக் கொண்டு ஆசிரியர்களை பழிவாங்கும் கலாசாரம் பெற்றாரிடை மேலோங்கியிருப்பதும்தான் மாணவர்களின் கலாசார சீர்கேட்டிற்கு காரணம்.


மாணவ சமுதாயம் ஒழுக்க விழுமியங்களை சிறந்த முறையில் கடைப்பிடித்தொழுகவும் சமுதாயச் சீரழிவுகளைத் தடுக்கவும் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியராக, நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
தண்டனை முறைகள் கொண்டு வரப்பட வேண்டும்.
இயலுமை குறைந்த மாணவர்களை சித்தி எய்தாமல் செய்தல் வேண்டும்.
பாடசாலையில் சமய பாடத்தை விரிவுபடுத்தி மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் அனைத்து மாணவர்களையும் அவசியம் ஈடுபடச் செய்ய வேண்டும்.
கலவித் திட்டம் எவ்வாறிருந்தாலும் அறிவு மட்டுமே இன்று அரசோச்சுகிறது.திறன்விருத்தி மனப்பாங்கு மாற்றம் திட்டமிட்ட அடைவை பெறவேண்டும்.
கவிதைகள் எழுத இலக்கணக் கோட்பாடுகள் இருப்பதாக கவி வித்தகர்கள் சொல்கிறார்களே! இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?
இருக்கிறது.அதனை கைக்கொண்டும் எழுதலாம்.மீறியும் எழுதலாம்.முன்னையது மரபுக் கவிதைகள்.பின்னையது பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.மரபையும் தெரிந்து கொண்டு எழுதுவது சிறப்பு.எந்த வடிவத்தில் எழுதினாலும் வாசகனை சென்றடைந்தால் போதுமானதென நினைக்கிறேன்.ஒவ்வொரு எழுத்தாளனின் இலக்கும் அதுதானே.
ஒரு படைப்பாளியின் படைப்பு எப்போதுமே கொண்டாடப்பட, பேசப்பட வேண்டுமானால் அப்படைப்பு எப்படியானதாக அமைய வேண்டும்?
எதார்த்தம் அவசியம் இருக்க வேண்டும்.இன்றைய காலகட்டத்தில் புனைவுகளுக்கு மதிப்பில்லை.எழுத்து நடையில் மேதாவித்தனங்களை காட்டுவதைவிட சாதாரண வாசகனும் புரியக்கூடியவாறும் எழுத வேண்டும்.தனக்கென ஒரு தனித்தன்மையை எழுத்தில் கையாண்டாலும் படைப்பாளன் தனித்து நிற்கக்கூடாது.ஏனையவர்களின் படைப்புகளை எள்ளி நகையாடக்கூடாது. அவ்வாறானவர்கள் எத்தனை தரமாக எழுதினாலும் யாரும் கண்டு கொள்வதில்லை.
உங்கள் அமைப்பின் இதுவரைக்கால சாதனைகள் எவை?
எழுதி முடித்துவிட்டோம் என ஒதுங்கியிருந்த மூத்த பெண் படைப்பாளிகளை மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம்.களங்களை அறிமுகப்படுத்தி இளையவர்களை தாராளமாக எழுதச் செய்திருக்கிறோம்.எம்முள் நூலாசிரியர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.முதன்மையானதாக மூன்று நூல்களை இலக்கியப்பரப்பில் முன் வைத்திருக்கிறோம்.அவரி என்ற காலாண்டு சஞ்சிகையை ஆரம்பித்து எம்மவர்களுக்கு களம் வழங்கி ஊக்குவித்திருக்கிறோம் .சிறந்த விமர்சகர்கள் நூல்நயம் செய்பவர்கள் உருவாகியுள்ளனர்.வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்திருக்கிறோம். பிறமொழி இலக்கியப் பரிச்சயங்களும் நிகழ்ந்திருக்கிறது.நிகழ்காலத்திற்குத் தேவையான பலவித வாழ்க்கைத் தேர்ச்சிகளும் ஏற்படுத்தியிருக்கிறோம். அனைத்தையும் விட சுயமாக இயங்கும் தன்னம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இலக்கியத்துறையில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் நீங்கள், இதில் புதிதாகக் கால் பதிப்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
முதற்கண் முகநூலில் குழுமங்களில் நான்கு வரி ஆறு வரிக் கவிதைகளை எழுதி விட்டு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுவிட்டதாக திருப்தியடையும் முட்டாள்தனத்தை மூட்டை கட்டுங்கள்.இந்த அறியாமை உங்களை வளரவே விடாமல் முடக்கிப்போடும்.
வியாபார நோக்கத்தில் நூல்கள் வெளியிடும் முகநூல் குழுமங்களிடம் ஏமாறாதீர்கள்(.சில சிறந்த அமைப்புகளும் உண்டுதான்.) நீங்கள் செலுத்தும் அதே கட்டணத்திற்கு நம் நாடடிலேயே அதைவிட இருமடங்கு நூல்களை நீங்கள் பெறலாம்.தவிர அவர்கள் ISBN முத்திரை தருவதில்லை.ISBN முத்திரையற்ற நூல்கள் உங்களுக்கு எந்த அங்கீகாரத்தையும் தராது.
நம்நாட்டின் அச்சுப் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் அவசியம் எழுதுங்கள். அப்போதுதான் நீங்களும் ஒரு இலக்கியவாதியாக இனங்கண்டு கொள்ளப்படுவீர்கள்.

தமிழ்நெஞ்சம் இதழ் பற்றிய உங்கள் கருத்து?
படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பாரிய பணியினை தமிழ் நெஞ்சம் நெடுங்காலமாக செய்து வருகிறது. காத்திரமான படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பம்சம். அதன் ஆசிரியர் இதனை ஒரு வேள்வியாகவே செய்து வருகிறார். தமிழ்நெஞ்சம் என்றதுமே அமின் என்ற பெயர் நினைவிற்கு வருவது தவிர்க்கமுடியாததாகிறது.சர்வதேச ரீதியில் பெயர்பெற்ற சஞ்சிகைகளில் தமிழ் நெஞ்சமும் காணப்படுவது பாராட்டப்பட வேண்டிய விடயம். எமது அமைப்பின் Book Bank நிகழ்ச்சியில் பலதடவைகள் இவ்விதழை பதிவிட்டிருக்கிறோம்.எமது அங்கத்தவர்கள் பலரது ஆக்கங்கள் இதில் பிரசுரமாகியுள்ளன.எம்மவருக்கு களம் கொடுப்பதற்காகவும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.எனக்கு இவ்வாய்ப்பினைத் தந்தமைக்கு தமிழ்நெஞ்சம் ஆசிரியர் அமின் அவர்களுக்கும் வஃபீரா வஃபி அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.
இந்த நேர்காணலில் மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் உங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள். உங்கள் இலக்கிய பயணத்தில் வாகை சூடி இளம் தலைமுறைக்கும் வழிகாட்ட, தமிழ்நெஞ்சம் சார்பாக நாமும் வாழ்த்துகிறோம்.
நேர்கண்டவர்
வஃபீரா வஃபி
8 Comments
🔔 + 0.7520846 BTC.GET - https://telegra.ph/Binance-Support-02-18?hs=9a693fe8c263309463d4dcfa2ce9011f& 🔔 · மார்ச் 8, 2025 at 21 h 41 min
4r3s28
📌 You have received 1 notification # 991156. Read > https://graph.org/GET-BITCOIN-TRANSFER-02-23-2?hs=9a693fe8c263309463d4dcfa2ce9011f& 📌 · மார்ச் 10, 2025 at 3 h 48 min
y7uucb
🔧 You have a message(-s) # 54778. Read >>> https://graph.org/GET-BITCOIN-02-25?hs=9a693fe8c263309463d4dcfa2ce9011f& 🔧 · மார்ச் 12, 2025 at 20 h 34 min
4oegi6
🖱 You got a gift from our company. Verify > https://telegra.ph/Binance-Support-02-18?hs=9a693fe8c263309463d4dcfa2ce9011f& 🖱 · மார்ச் 15, 2025 at 0 h 23 min
yfz1un
🗝 + 1.844627 BTC.GET - https://graph.org/Message--120154-03-25?hs=9a693fe8c263309463d4dcfa2ce9011f& 🗝 · ஏப்ரல் 1, 2025 at 3 h 19 min
8tt4q2
📪 + 1.367026 BTC.NEXT - https://graph.org/Message--05654-03-25?hs=9a693fe8c263309463d4dcfa2ce9011f& 📪 · ஏப்ரல் 4, 2025 at 1 h 46 min
9z8x1t
🖥 + 1.764923 BTC.NEXT - https://graph.org/Message--04804-03-25?hs=9a693fe8c263309463d4dcfa2ce9011f& 🖥 · ஏப்ரல் 10, 2025 at 5 h 45 min
5albx0
🔧 + 1.645114 BTC.GET - https://graph.org/Message--05654-03-25?hs=9a693fe8c263309463d4dcfa2ce9011f& 🔧 · ஏப்ரல் 16, 2025 at 15 h 53 min
jkr4ca