01          வணக்கம் ஐயா.


சனவரி – 2026 / 100 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

“வணங்கு, வணங்க வை” என்னும் தமிழ்ப்பண்பாட்டிற்குரிய தலையாய சொல்லின் என் வணக்கம்.

02          ஐயா மோகன் என்ற பெயர் இதுவரை கேள்விப்பட்டதில்லை. தங்கள் உண்மையான பெயர் என்னவோ?

ஒரு சிற்றூரில் ஏட்டுக்கல்வி அறிவில்லாமல் மூட நம்பிக்கையில் பற்றுக் கொண்டு வாழும் குடும்பத்தில் பிறந்த எனக்கு “மூக்கன்” என்று பெயரிட்டனர். கற்ற நண்பர்களும், பெரியவர்களும் எனக்கு “மோகன்” என்று பெயரைத் திருத்தம் செய்தார்கள். அன்றைய நிலையில் நானும் ஏற்றுக் கொண்டேன். “மோகன்” என்பது வடசொல்லாயிற்றே. பெருவாரியாக என் தந்தையின் பெயர் “அய்யாவு” என்பதில் ல்அய்யால் என்ற பகுதியை மட்டும் முன் நிறுத்தி “அய்யா.மோகன்” என்றும், யான் தமிழாசிரியராகப் பணியாற்றியக் கரணியத்தால் “புலவர் அய்யா. மோகன்”  என்றும் பெயராயிற்று.

03          திருக்குறள் தங்களை கவர்ந்து இழுத்ததன் காரணம் என்ன?

மக்களாகப் பிறந்தவர் நல்லவர் ஏற்கும்படியான நல்ல வாழ்க்கை (சாதி, சமயம், மதம்) தழுவாமல் வாழவேண்டும் என்றால் அதற்கான வழிகாட்டு நூல் திருக்குறள்தான் என்று தேர்ந்தேன்.

04          1330 குறள்களில் தங்களுக்கு பிடித்த குறள் எது? ஏன்?

ஒரு வளமான மல்லிகைத் தோட்டத்தில் தூய வெண்மையும், மென்மையும், மணமும் உடைய 1330 மலர்கள் மலர்ந்துள்ள தோட்டத்தில் உள்ள மலர்களில் உங்களுக்கு எந்த ஒருமலர் பிடிக்கும் என்பது போல் இருக்கிறது.

05          “ங” போல் வளை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். அப்படி என்றால் மீதமுள்ள எழுத்துக்கள் எதற்காக? இடத்தை நிரப்புவதற்காகவா?

தமிழ் நெடுங்கணக்கு 247 எழுத்துக்களின் வரலாற்றைச் சொல்வதில் ஙகர உயிர் மெய் 12 எழுத்துக்களில் ” ங ” என்ற முதல் உயிர்மெய் எழுத்து மட்டுமே தூய தமிழ்ச் சொற்களில் முன்னின்று அதுவும் “”அ, இ, உ, எ, யா”  என்னும் சுட்டு, வினா எழுத்துக்களை முன் நிறுத்தி வருகிறது. அந்த ஒரு எழுத்து மட்டுமே தன் வருக்கத்தைக் காத்துக் கொள்கிறது. “ங ப்போல் வளை” என்னும உவமைத்தொடர் உணர்த்தும் வாழ்வியல் செய்தி என்னவென்றால், பன்னிருவர் உள்ள ஒரு குடும்பத்தில் ஒருவரின் செயல்பாட்டால் மட்டுமே ஏனைய பதினொரு பேர்களும் மதிக்கப்படுகிறார்கள் என்னும் வாழ்வியல் பேருண்மைதான் “ங ப்போல் வளைல் (வளை என்பது காத்துக்கொள்)

06          என்ன வருத்தி நீ கவி செய்யினும் முன்னோர்கள் செய்ததன்றி நூதனம் ஒன்றுமில்லை என்பார்கள். அப்படி என்றால் முன்னோர்களை யாரும் மிஞ்சக் கூடாதா?

ஆழ்ந்தகன்ற அறிவையும், ஓங்கி உயர்ந்த பண்பாட்டையும் உடைமையாகக் கொண்டவர்களைத் தான் உலகோர் என்பதாம். அம்முன்னவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்வையும், வாயுறைக் கருத்துக்களையும் பின்பற்றி வாழ்வது என்பதுதான் முன்னோர் நெறி.

அந்நெறியில் கால மாற்றத்திற்கேற்ப இடத்திற்கேற்ப அவற்றின் அடிப்படைக் கருத்தினை மாற்றாமல் தேவையான மாற்றத்தைச் செய்து கொள்ளலாமே தவிர, முழுமையாகவே மாற்றிக் கொள்ளக்கூடாது. ஏனெனில் “மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்” என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

07          மற்ற அதிகாரங்களில் திருவள்ளுவர் புலவராகத் தெரிந்தாலும், காமத்துப் பாலில் கவிஞராகத் தெரிகிறார். அவரைப் புலவர் என்று சொல்வதா கவிஞர் என்று சொல்வதா?

திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளின் முப்பாலில் அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் செயற்கை, இயற்கைப் பொருட்களை வைத்து ல்உறுவது கூறல்ல் என்னும் தன்மையில் புனைவு இன்றி தம் பல்துறைப் புலமையின் திறத்தால் மக்களின் வாழ்வியலை சீராக்கக்கூறிய வகையில் புலவர் என்றும் (இது புறப்பொருள் செய்தி.)

இன்பத்துப்பாலில் தலைவன், தலைவி, தோழி, என்று சுட்டி ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல் அவர்களின் உள்ளக் கருத்தினை வெளிப்படுத்துவது போல் இயற்கை நிகழ்வுகளைக் கொண்டு கவினுற புனைந்து கூறியுள்ள அகப்பொருள்  தன்மையுடையது. புனைந்துரை இன்றி புலமையால் கூறப் பெற்றதால்., புலவர் என்பதும்; கவினுற புனைந்து கூறியுள்ளமையால் கவிஞர் என்பதும் வள்ளுவருக்குப் பொருந்தும் என்பது எம் கருத்து.

08          இதுவரை திருக்குறளுக்கு எழுதிய உரைகளில் எது தங்களுக்கு பிடித்த உரை?

கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் தோன்றிய திருக்குறளுக்கு 1000 ஆண்டுகள் கழித்தே 10 பேர் உரை எழுதினார்கள். பிறகு தொடர்ந்து பல அறிஞர்களும், புலவர்களும், கவிஞர்களும் உரை எழுதினார்கள். 19, 20ஆம் நூற்றாண்டுகளில் எழுதிய உரையாசிரியர்கள் வரைக்கும் யான் படித்த உரைகளின் விளக்க நிலையில் சிறுசிறு மாற்றங்களைக் கொண்டு உள்ளன. மேல்மாடிக்குச் செல்ல வேண்டுமாயின், முதல்படி, இரண்டாம் படி, மூன்றாம்படி என்று பலப்படிகள் ஏறினால் தானே மேல் நிலைக்குச் செல்லலாம். படிகளின் நிலை உயர, உயர ஏறுபவர்களின் புலன் பரப்பும் கூடும் அல்லவா? அந்த வகையில் எல்லாருடைய உரைகளும் எமக்குப் பிடித்த உரைகளே. திருவருட்பாவில் முதலாம் திருமுறை முதலாக 5ஆம் திருமுறை வரைக்கும் வள்ளலார் கூறியுள்ள செய்திகளுக்கும் ஆறாம் திருமுறையில் கூறப் பெற்றுள்ள செய்திகளுக்கும் பேரளவு மாற்றங்கள் பெற்றிருந்தாலும், முதல் ஐந்து திருமுறைகளை விட்டுவிட முடியுமா? விட்டு விடலாமா? விட்டுவிடக் கூடாது அல்லவா?

09          இதுநாள்வரை பலரும் திருக்குறளுக்கு உரை எழுதினார்களே. அப்படி என்றால் எல்லா உரையும் பொருந்துகிறது என எடுத்துக் கொள்வதா? அல்லது பொருத்தமான உரையை இதுவரை யாரும் எழுதவில்லை என்று எடுத்துக் கொள்வதா?

உரையாசிரியர்கள் தத்தம் காலத்திற்கேற்ப தாம் சார்ந்துள்ள கொள்கைக்கு ஏற்ப திருக்குறளின் உட்கருவை வைத்துக் கொண்டு எழுதினார்கள். எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். எழுதுவார்கள். இருப்பினும் திருவள்ளுவரைப் போல் பல்துறை அறிவும், திருக்குறளின் நெறிப்படியும் எவர் ஒருவர் வாழ்வாரோ அவரால் மட்டுமே பொருத்தமான உரை எழுத இயலும்.

10          இன்றுவரை திருக்குறளுக்கு எழுதிய உரைகளில் எதுவும் பொருந்தாமல் இருப்பது. தமிழுக்கான சாபக்கேடு என்று ஏன் சொல்லக்கூடாது?

இன்றுவரை திருக்குறளுக்குத் தோன்றிய உரைகள் ஏதேனும் ஒரு துறையில் பொருந்துவதாகத்தான் உள்ளனவேயன்றி முற்றிலும் பொருந்தாத உரை என்று எவர் உரையும் இல்லை. பலபேர் உரையையும், திருக்குறளையும் படித்த அறிவுடையோர் தமிழில் தோன்றிய திருக்குறளுக்கு உலக அறிஞர்கள் கூட உரை எழுதியுள்ளார்கள். எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் தமிழின் சிறப்பினை உயர்த்திக் காட்டுகிறதே. தமிழுக்கு ஒருபோதும் கேடு வாரா.

11          தமிழில் இத்துணை நூல்கள் இருக்கும்போது திருக்குறளை மட்டும் தாங்கள் பற்றியதன் காரணம் என்ன?

தமிழில் உள்ள இலக்கியங்களில் நம்பகமில்லா தொன்மைக் கதைகளையும், தமிழ்ப் பண்பாட்டுக்கு முரணான ஒழுக்கப் பிறழ்வுகளையும், ஆறறிவு உடைய மக்கள் தம் அறிவாற்றலை விட விலங்கு, பறவை, பாம்பு, போன்ற அஃறிணை உயிர்களுக்கு உண்டு என்று நம்புவதையும், தவிர்த்துள்ள இலக்கியமாகிய திருக்குறளையே யான் பற்றியதற்குக் கரணியாகும்.

12          தாங்கள் திருக்குறளின் வழியே வாழ்பவர் என்று கேள்விப்பட்டேன். மற்ற வாழ்க்கைக்கும் தாங்கள் வாழும் இந்த வாழ்க்கைக்கும் என்ன வித்தியாசம்?

சினம் கொள்ளாமை, அறிவுடைமை, அன்புடைமை, அடக்கமுடைமை, அருளுடைமை, ஆள்வினை உடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நாணுடைமை, பண்புடைமை, பொறையுடைமை என்னும் உடைமையினைப் பெரும்பாலும் கடைப்பிடித்து வாழ்வதால் நற்றுணைவி, நன்மக்கள், நல்ல நட்பு வட்டாரங்கள், பெரியோர் துணை முதலியன் வாய்க்கப் பெற்று நிறைவாக வாழ்கிறேன்.

13          தாங்கள் செல்லும் இந்த வழியில் மேலும் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?

நான் திருக்குறள் நெறிப்படி வாழ்வதற்கும், மற்றையவர் வாழும் முறைக்கும் என்ன வேறுபாடு அறிந்தேன் என்றால், சமமான மாந்த நேய வாழ்க்கை வாழ்ந்து வருகிறேனே. அதுதான் என் வாழ்வியலின் வெற்றி.

14          இதுவரை குறளுக்கு சொல்லப்படாத சிறிது மாறுபட்ட உரையை அல்லது உங்கள் கோணத்தில் ஒரு உரையை தங்களால் சொல்ல இயலுமா?

பலபேர்களின் உரையில் மிகவும் விரிவான விளக்கவுரை தெளிவுரை, பதவுரை, கருத்துரை என்று இருந்தும், திருவள்ளுவர் கையாண்டுள்ள சிற்றூர் பகுதியில் வாழும் மக்களின் தொழில் முறை நுணுக்கங்களை எடுத்துக் கூறாமல் உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. நான் உரை எழுதுங்கால் அவற்றைத் துள்ளியமாக எடுத்துரைப்பேன்.

15          நீங்கள் பெற்ற பாராட்டுகள் மற்றும் விருதுகளைப் பற்றி சொல்லுங்கள்?

தாய், தந்தைக்கு உணவளித்து பேணிக்காப்பதற்காகப் பிறர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்துச் செயல்படுபவனும், தமிழுக்குத் தொண்டு செய்வதற்குப் பாராட்டை எதிர்ப்பார்ப்பவனும் ஒன்றுதானே.

அந்நிலையில் வாழ்பவன் யான். இருப்பினும் சென்னை, திருச்சி, இலங்கை, தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போன்றவர்கள் எம்மை அழைத்துப் பாராட்டினார்கள். ‘திருக்குறள் செம்மல்’, ’அறநெறி அண்ணல்’, ‘அருள் மனச் சான்றோர்’, ‘சிகரம் (இதழ் ஆசிரியர்’, ‘திருக்குறள் நெறிபரப்பும் தகைமையாளர்’ என்ற பாராட்டுகள்.

16          இதுநாள்வரை திருக்குறளை பின்பற்றி தாங்கள் சாதித்தது என்ன?

திருக்குறள் நெறியாளர், தமது செல்வாக்கால் முடியாதவர்களுக்கும் உதவும் பண்பாளர், நல்ல கொள்கையாளர், மனை விழாக்கள், பெயரக் குழந்தைகளோடு ஒரே வீட்டில் வாழும் வாழ்க்கை நிலை.

17          இனிமேல் திருக்குறளுக்கு உரை எழுத வரும் எழுத்தாளர்களுக்கு தாங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

திருக்குறளுக்கு உரை எழுத வரும் பெருமக்களுக்கு யாம் வேண்டுவது “கட்டுரை”. “செய்யுள்”, “உரைநடை” என்பதை மனதில் கொண்டு பிற மொழிச் சொல் கலவாமல் உரை எழுத வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

18          திருக்குறள் போல இன்னொரு நூலாக்கம் செய்ய இப்போது உள்ள எழுத்தாளர்கள் எதைப் பின்பற்ற வேண்டும்.

அல்லது

இனிமேல் இப்படி ஒரு நூலாக்கம் வருதற்கு வாய்ப்பு இல்லையா?

திருக்குறளின் முப்பாலிலும் உள்ள அதிகாரங்களின் பொருளறிந்து அதன்படியான வாழ்வைத்தான் பின்பற்ற வேண்டும். அப்படி எழுதுவோர்களால் நல்ல நூல் வெளிவர வாய்ப்பு உண்டு.

19          இல்லற வாழ்வைத் துல்லியமாகக் காட்டும் ஒரு குறள் என்றால் அது எது?

அறத்துப்பாலில் இல்லறவியலில் இல்வாழ்க்கை என்னும் 5ஆம் அதிகாரத்தில் 46ஆவது குறட்பா.

 “அறத்தாற்றின் இல் வாழ்க்கை யாற்றின்

புறத்தாற்றின் போஒய்ப்பெறுவ தெவன்?”

20          தங்களைப் பேட்டி காணும் தமிழ்நெஞ்சம் மாத இதழைப் பற்றி தங்களின் மேலான கருத்து என்ன?

புவிகோளமாகிய மண்ணுள் வெளிப்படாதிருக்கும் தங்கத்தைக் கண்டறிந்து, அகழ்ந்தெடுத்து, அதன் சிறப்பையும், உயர்வையும், மக்களுக்கு அறிமுகப்படுத்துவது போன்ற செயலை அல்ல தொண்டினைத் “தமிழ்நெஞ்சம்” என்னும் திங்கள் இதழ் தமிழ்த் தொண்டினை ஆற்றி வருகிறது. தமிழ்நெஞ்சம் “வளர வேண்டும். வாழ வேண்டும்” என்று வாழ்த்துகிறேன்.

Related Posts

நேர்காணல்

சங்கிலி சுப்பிரமணியன்

கரந்தை புலவர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். பள்ளி ஆசானாகவும் அதைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றினார். யாப்பெருங்கலக் காரிகையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஏகபோக ஆற்றல் இருந்தும் கவிதை எழுத விரும்பாதவர். ஆயினும் யாராக இருந்தாலும் தமிழில் ஒரு தவறு என்றால் கொம்பு சீவியக் காளை போல உடனே ஓட வந்து தவறுகளைச் சுட்டிக் காட்டி மண்டியிட வைப்பதில் இவருக்கு இணை இவரே.

நேர்காணல்

வஃபீரா வஃபி

நான் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவள். எனது பெற்றோர் இந்திய தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டாலும், சிறுவயதிலேயே வியாபார நிமித்தம் குடும்பத்துடன் இலங்கைக்கு குடிபெயர்ந்தவர்கள்.

பாடசாலைக் காலத்தில் சாரணியர் இயக்கத்திலும் அங்கம் வகித்து, பல சமூக சேவையிலும் பங்களிப்பு செய்துள்ளேன்

2022 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் எனது கன்னி நூலான "புள்ளியில்லாக் கோலம்" நூலை வெளியிட்டுள்ளேன்.

நேர்காணல்

திரு சங்கரபாண்டியன்

கவிஞர் வைரமுத்து அவர்களின் ஒவ்வோர் உரையிலும் ஏதேனும் ஒரு புதிய சேதியை அறிமுகம் செய்வார் உதாரணமாக, ஒன்று, ஒரு நூலக விழாவில் பேசும்போது, ஆதிகாலத்தில் களிமண்ணில் செய்த சிலேட்டில் படைப்புகளைச் சேகரித்து முதன்முதலாக நூலகம் அமைத்தவர் யாரெனத் தேடி அந்த மூலவரின் சிறப்பை அழுத்தமாக அவ்விழாவில் அறிமுகம் செய்து விடுவார். இப்படி எந்த மேடையாயினும் தன்னுடைய உரைக்கான தேடலை இன்றுவரை அவர் நிறுத்தவே இல்லை, மற்றும் உணர்ச்சியும் உச்சரிப்பும் குரல்வளமும் அவையோரைத் தன்பால் ஈர்க்கும் சக்தியாக இருக்கின்றன.