
நவம்பர் – 2025 /108 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.
ஒரு சாதாரண தையல் தொழிலாளியாக இருந்து மரபுக் கவிஞராக பரிணமித்துள்ளார். இரண்டே அடிகளில் திருக்குறளுக்கு அதே செய்யுள் வடிவத் திருக்குறளை உரையாக எழுதியவர். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் நெருங்கிய நண்பர். இவர் எழுதிய ஒவ்வொரு நூலும் வைரமுத்து அவர்களால் வெளியிடப் பட்டது குறிப்பிடத் தக்கது.
வணக்கம் ஐயா..
தமிழையும் தமிழ் படைப்பாளிகளையும் தாலாட்டிச் சீராட்டும் தமிழ் நெஞ்சத்திற்கும் தங்களுக்கும் வணக்கம் ஐயா.
நண்பர் என்ற முறையில் கவிப்பேரரசு அவர்களின் சிறப்புதனை சுருக்கமாகச் சொல்லவும்?
கவிஞர் வைரமுத்து எங்கள் ஊருக்குத் தமிழால் பெருமை சேர்த்தவர், புகழின் உச்சத்தில் இருந்தபோதும் மயக்கத்தால் பழைமையை மறவாத மனம் படைத்தவர் எழுபதுக்கு மேலான அகவையிலும் உடலும் உள்ளமும் உறுதியிழக்காதவர். சாகித்திய அகாடமி, சாதனா சம்மான், பத்மஸ்ரீ பத்மபூசண், மூன்றுமுறை பல்கலைக் கழகங்களின் டாக்டர் பட்டம், திரையிசைப் பாடல்களுக்கு ஏழுமுறை தேசிய விருது. இப்படி வேறெவரும் பெறாத சிறப்புகளைப் பெற்றவர் கவிஞர் வைரமுத்து.
தங்களின் ‘திருக்குறளும் பொருட் குறளும்’ நூலை வாசித்தேன் இந்த யோசனை எப்படி வந்தது?
திருக்குறளைப் பொருளோடு வாசிக்கும் ஆர்வம் வளர்ந்த போது உரையாசிரியர்களின் உரைபோல் என்னாலும் எழுத இயலுமா எனப் பயிற்சித்தபோது, வெண்பா இலக்கணம் கற்றுக் கொண்டிருக்கும் போது இயல்பாகவே ஒரு குறளுக்கு குறள் வெண்பா வடிவத்திலேயே வந்துவிட்ட ஓர் உரையே என்னை இப்படி எழுதத் தூண்டியது.
அனைத்துத் திருக்குறளுக்கும் பொருட் குறள் செய்துள்ளீர்கள் தங்களுக்குப் பிடித்த ஓரிரு பொருட் குறள்களைச் சொல்லலாமா?
எல்லாப் பொருட்குறளும் பிடித்தவை தான் ஒன்றிரண்டு சொல்ல வேண்டுமெனில் குறள் எண் 2.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
‘நற்றாள் தொழாஅர் எனின்’ என்ற குறளுக்கும் பொருளாக ..
படைத்தவன் தாளை வணங்காதார் பல்நூல்
படித்ததனால் என்ன பயன்?
குறள்எண் 475.
‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்’ என்ற குறளுக்குப் பொருளாக
மயிலிற காயினும் மிக்கவே ஏற்றின்
இயல்பறும் சக்கரத் தச்சு
குறள் எண் 1212.
‘கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலன்மை சாற்றுவேன் மன்’ என்ற குறளுக்குப் பொருளாக
உயிரிருக்கும் உண்மை உரைப்பேன் கயற்கண்நான்
வேண்டி உறங்க அவர்க்கு.
ஒரு சாதாரண தையல் தொழிலாளி மரபுக் கவிஞராய் பரணமித்தி எப்படி எனச் சொல்ல இயலுமா?
ஐயா, சாதாரண தையல் தொழிலாளி அல்ல நான், அதிலும் வெண்பா இலக்கணத்தைப் போல நுணுக்கத்தைப் பயன்படுத்திக் கலை செய்யும் தையல் தொழிலாளியாவேன் நான். அதனால் என் தொழிலுக்கும் மதிப்பு உண்டு. தமிழார்வம் அத்துடன் உங்களைப் போன்ற இலக்கியவாதிகளுடன் வாய்த்த நட்பு என்னாலும் எழுத முடியுமா? என்று என்னுள் எழுந்த கேள்விகள் என்னை மரபுக்கவிஞனாய் வளர்த்திருக்கிறது எனலாம்.

வைரமுத்துவின் உரையைப் பற்றி சில சிறப்புகள் சுருக்கமாக?
கவிஞர் வைரமுத்து அவர்களின் ஒவ்வோர் உரையிலும் ஏதேனும் ஒரு புதிய சேதியை அறிமுகம் செய்வார் உதாரணமாக, ஒன்று, ஒரு நூலக விழாவில் பேசும்போது, ஆதிகாலத்தில் களிமண்ணில் செய்த சிலேட்டில் படைப்புகளைச் சேகரித்து முதன்முதலாக நூலகம் அமைத்தவர் யாரெனத் தேடி அந்த மூலவரின் சிறப்பை அழுத்தமாக அவ்விழாவில் அறிமுகம் செய்து விடுவார். இப்படி எந்த மேடையாயினும் தன்னுடைய உரைக்கான தேடலை இன்றுவரை அவர் நிறுத்தவே இல்லை, மற்றும் உணர்ச்சியும் உச்சரிப்பும் குரல்வளமும் அவையோரைத் தன்பால் ஈர்க்கும் சக்தியாக இருக்கின்றன.
கவிஞர் வைரமுத்துவின் எளிமையைப் பற்றிச் சில வார்த்தைகள்?
கம்பீரமான தோற்றம் எளிமையான உள்ளம் தோற்றம் வெளியே தெரியும் உள்ளம் வெளியே தெரியாது. எப்போதும் இயற்கையான பழைய எளிய உணவுகளே விரும்பி உண்பார் அம்மியில் மசால் அரைத்து வைத்த நாட்டுக் கோழிக் குழம்பு அவர் வடுகபட்டி வரும் போதெல்லாம் செய்வதை நான் அறிந்திருக்கிறேன். சளி பிடித்தாலும் துளசிக் கசாயமே குடிப்பார். பள்ளிப் பருவத்து நண்பர்கள் ஆறுதலாய்ச் சாய்ந்துகொள்ளத் தோள்தந்த பெரியவர்கள் என பேதம் பாராமல் அனைத்து சமூகத்தினரிடமும் ஒன்றிப் பழகுதல் அவரின் எளிமைக்கு அடையாளம் மேலும் அவர் தங்கச் சங்கிலி வைரமோதிரம் போன்ற ஆடம்பர வெளிச்சத்தை அவர் அணிந்து நான் பார்த்ததில்லை.
திருக்குறளுக்கு பொருட்குறள் எழுதி முடித்து விட்டீர்கள். அடுத்து உங்கள் இலக்கு?
திருக்குறளும் பொருட்குறளும் கவிஞர் வைரமுத்து அவர்கள் நான்குபக்க அணிந்துரையோடும் பாவலர் அறிவுமதி அவர்கள்ர் ஒரு பக்க வாழ்த்துரையோடும் வெளியாகிவிட்டது.
இலக்கண இலக்கியத்தின் உச்சமாகச் சொல்லப்படும் வெண்பா வடிவங்களில் வள்ளுவரும் புகழேந்தியும் சிறப்புப் பெற்றவர்கள்.
வள்ளுவரின் குறளுக்கு உரை செய்ததுபோல் புகழேந்தியின் நள வெண்பாவிற்கும் வெண்பாவில் உரை எழுதும் முயற்சியில் எண்பது வெண்பாக்களை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.
உதாரணமாக,
நளவெண்பா பாடல் – 22- மக்களின் சிறப்பு.
வஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம் பேவாய்விட் டாற்றுவன – கஞ்சம்
கலங்குவன மாளிகைமேல் காரிகையர் கண்ணே விலங்குவன மெய்நெறியை விட்டு. (புகழேந்தி)
பொருள் வெண்பா
வில்லே வளையும் விழியிரண்டே பொய்பேசும்
சொல்லாடல் மங்கைச் சிலம்பேயாம் – முல்லைமணக்
கூந்தலே இங்கு கலையும் கலங்குதலும்
நீந்துநீரன் றில்லாத நாடு.
நளவெண்பாவிற்கான வெண்பா உரையும் எழுதி நிறைவு செய்ய காலந்தான் அனுமதிக்க வேண்டும் பார்க்கலாம்.
தாங்கள் பெற்ற விருதுகள் சிலவற்றைக் கூறுங்கள்?
விருதுகள் என்றால்.. சிறுகதைக்கான ஜெயகாந்தன் விருது, .
குங்குமம் கவிதைப் போட்டியில் கவிஞர் வைரமுத்து கையில் வாங்கிய விருது,
முகநூல் குழுமத்தின் போட்டிகளில் பல வெற்றியாளர் சான்றிதல்கள், வெண்பா மணி, விருத்தப்பா வித்தகர்,
தமிழ் நெஞ்சம் வழங்கிய வெண்பா வித்தகர் போன்றவைகள் அடங்கும்.
தங்களுக்குப் பிடித்த திருக்குறள் எது? ஏன்?
எல்லாமே பிடிக்கும் அதில் ஒன்று.
‘பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூவும் புலிதாக் குறின் ‘.
உருவத்தில் என்ன இருக்கிறது உறுதியான உள்ளமும் செயல்திறனும் வேகமும் வெற்றி தரும். என்னும் நம்பிக்கை ஊட்டும் குறள்
எனக்கு மிகவும் பிடிக்கும்.
தாங்கள் எழுதிய முதல் கவிதை index.html நினைவில் நின்ற கவிதை ?
நான் எழுதிய முதல் கவிதை எதுவென நினைவில்லை ஆனால் என் மனதில் முதலில் நிலைத்த கவிதை என் அம்மா இறந்த சம்பவம் பற்றி நான் எழுதியது
காணாமப் போயிட்டா!
பத்து வயசுப் பையன் நான் அவமேல கால்போடாமத் தூங்கினதில்ல எப்பவும்
தூங்கவிட்டுத் தூங்கி முழிக்கு முன்னே முழிச்சுருவா
இப்போ,
தட்டி எழுப்பியும் எ(ழ)ந்திரிக்கல
கொட்டுச் சத்தமும் காதுல ஏறல
கத்தி அழுதுபார்த்தேன்
கண்ணத் தெறக்கல
ஊரக் கூப்பிட்டு ஒப்பிச்சு அழுதேன்
ஊரும் என்னோட சேர்ந்து அழுதுச்சு
காதுகுத்தப் பொறுக்க மாட்டா
இப்போ கத்திகிழிச்சும் ஒறைக்கல
குடங்குடமா தண்ணி ஊத்திக் குளிக்கவச்சும் பாத்தாக
கொஞ்சமும் அசையல
மாலபோட்டு அமர்த்தி கும்பிட்டுக் கூப்பிட்டும்
மனசக் கல்லாக்கிக்கிட்டா
தேருல வச்சு வடக்க போயி
தீய வச்சும் பார்த்தாக
திரும்பிக்கூடப் படுக்கல
‘போனாப் போறாடா
பொழுது விடியும் வா’ன்னு அழுத என்னை இழுத்து வந்தாக
மறுநாளும் போய்ப் பார்த்தோம் எலும்பப் போட்டுட்டு எங்கேயோ போயிட்டா
சுற்றியிருந்த சொந்த பந்தம் சொல்லாமப் போயிருச்சு..
வயிறும் கண்ணும் பசிக்குதிப்போ
யாரைக் கேட்பேன் சோறு
யார்மேல போட்டுத் தூங்குவேன் காலு
பத்து வயசுப் பையன் நான்.
தங்கள் காதல் மனையாள் பற்றிச் சிலவரிகள்
என் மனையாளின் பெயர் இந்திராணி. அன்னை தயையும் அடியாள் பணியும் மலர்ப் பொண்ணின் அழகும் புவிப்பொறையும் வேசி துயிலும் விறல் மந்திரியும் என மேலோர் சொன்ன மாதிரி குணம் ஆறும் கொண்டவள் என் மனைவி. எனக்குத் தாயில்லாக் குறையைத் தகர்த்தவள் எனக்கும் என் பிள்ளைகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவள் தனக்கென வாழாத் தெரியாத தயவாளி குடும்பமே அவள் அவளே குடும்பம்!

உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சிலவரிகள் சொல்லவும்?
என்னால் உருவான குடும்பதில் நான், என்மனைவி, எங்களுக்கு 4 பிள்ளைகள்.
என் மனைவி இந்திராணி, என் மகன்கள்,
தாழேஸ்வரன் காவல் துறை. அகிலேஷ்வர் காவல் துறை, பார்த்திபன் இளங்கலை பயின்று இப்போது பொது அறிவுத் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கிறான்
என் மகள். இராகவி இளங்கலை பயின்று இப்போது பொது அறிவுத் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கிறாள். எல்லோரும் நலம்.
நான் பிறந்த குடும்பத்தில் அம்மா அப்பா தங்கை தம்பி எல்லோருமே பூமிக்கு விடையிறுத்த பிறகு . நான் மட்டும் இன்னும் புவிக்கு அறுபத்துநான்கு கிலோ பாரமாக இருக்கிறேன்.

வளர்ந்து வரும் பாவலர்களுக்குத் தங்கள் அறிவுரை என்ன?
நானென்ன சொல்ல? முன்னோர் சொன்னதுதான்.. நிறைய படிக்க வேண்டும் பெற்ற கல்வியை முறையாக அறவழியில் எழுத வேண்டும் உண்மைக்கு மாறான மனத்திற்கு உடன்படாத கருத்துகளைச் சுயநலத்திற்காக மொழியாதிருக்க வேண்டும் தம்மைக் காலம் கவனித்துக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம் வேண்டும் தமிழுக்குப் புதிய பெருமையைச் சேர்க்க வேண்டும் வேறென்ன?.
தங்களைப் பேட்டி காணும் தமிழ் நெஞ்சம் மாத இதழ் பற்றி தங்களின் மேலான கருத்துகளைச் சில வார்த்தைகள் சொல்லலாமா?
தமிழ் நெஞ்சம் மாத இதழ் தமிழின் அறத்தை படைப்புத் திறத்தை மரபின் மேன்மையை உலகெல்லாம் பரப்புரை செய்யும் ஓர் இலக்கியஇதழ்.
பொருள் தேடாமல் தமிழின் புகழோங்க உழைக்கும் அமின் ஐயாவை கைக்கொண்ட இதழ்.
இராம, வேல்முருகன், ஏ.டி.வரதராஜன், அன்புவல்லி தங்கவேலர், தென்றல்கவி போன்றவர்களைத் தூணாகக் கொண்டிலங்கும் இதழ்.
படைப்பாளிகளின் திறனை வெளிக் கொணர பயிற்சியளித்து விருதளித்து அவர்களுக்குப் பெருமை வழங்கும் இதழ்
தற்காலத்தில் தமிழை இன்னும் ஓரடி மேலேற்றி வைத்த புகழ் தமிழ் நெஞ்சத்திற்குண்டு என்று நான் சொல்வதில் மிகையில்லை.
சமகாலக் கவிஞர்களில் தங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்?
கவிஞர்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும் எனினும் நேரிடையாகப் பார்த்து நான் பயின்று வளர்ந்த கவிஞரென்றால் அது எங்கள் மண்ணின் மைந்தர் கவிஞர் வைரமுத்து, அவரின் எழுத்தில் கிராமத்து மக்களின் வியர்வை வாசமும்
மண்ணின் மணமும் வெயிலின் வெப்பமும் மழையின் குளிர்ச்சியும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
தங்களின் நண்பர்கள் தங்கள் எழுத்துக்கு எவ்வாறு துணையிருக்கிறார்கள்?
என் நண்பர்கள் பெரும்பாலும் கல்லூரி சென்று படித்தவர்கள்
நான் மட்டுமே ஆறாம் வகுப்பு தாண்டாதவன். இருப்பினும் என் எழுத்தை முழுமையாக உணர முடியாவிட்டலும் அவர்கள் தம் பொருளை உழைப்பைத் தந்து என் நூலைத் தலைமேல் வைத்துக் கொண்டாடத் தவறியதில்லை. ஒரு மனிதனின் உயர்வுக்கு நல்ல நட்பு மிக அவசியம் அது எனக்கு வாய்த்திருக்கிறது.
தமிழர்வம் உங்களுக்கு வந்தது பற்றி?
அப்பா படிக்காதவர் எனினும் கேள்விஞானத்தால் உள்வாங்கிப் பொருளறிந்து பாடக்கூடியவர். அவரிடமிருந்து நாட்டுப்புற பாடல் பழைய திரைப்பாடல்கள் கேட்டறிந்தேன். அதன் தொடர்ச்சியாக தமிழார்வம் கவிதை கட்டுரை சிறுகதை வெண்பா என என்னைக் காலம் வளர்த்து வந்திருக்கிறது.
தங்களின் தற்போதைய சூழல்?
இப்போது எனக்கு வயது 58 ஆகிவிட்டது. பத்து வயதிலிருந்து ஓயாத வேலை, வறுமை வாழ்க்கை. என் அத்தைக்குத் திருமணம் முடித்ததிலிருது என் தங்கை திருமணம் அவர்களின் பிள்ளைகள் பராமரிப்பு, என் திருமணம் அடுத்து என் தம்பி திருமணம்> என் பிள்ளைகள் வளர்ப்பு என வேறெந்தப்பக்கமும் போக முடியாத வாழ்க்கைச் சூழலிருந்து மீண்டு தற்போது பொறுப்புகளிலிருந்து விடுபட்டு இப்போது பிள்ளைகள் வேலைக்குச் செல்வதாலும் என் மனைவி குடும்பப் பொறுப்புகளைச் சுமப்பதாலும் வந்தவேலையைச் செய்து வெந்த உணவை உண்டு மகிழ்வாக இருக்கிறேன்.