லோகநாதன் ஜி
விருதுநகர் மாவட்ட வட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர், சமூக ஆர்வலர், சிறந்த தமிழறிஞர், மிகச்சிறந்த மரபுக் கவிஞர் போன்ற பன்முகத் திறமையுடன் இருக்கும்,. ஐயா லோகநாதன் ஜி அவர்களின் சுவாரஸ்யமான பேட்டி இதோ.
வணக்கம் ஐயா
அன்பான வணக்கம் ஐயா.
வட்டாட்சியர் லோகநாதன் கவிஞர் லோகநாதன் இவை இரண்டில் எந்த பெயர் உங்களுக்கு பிடிக்கும்?
வட்டாட்சியர் என்பது எனது பதவியின் பெயர்..கவிஞர் என்பது எனது விருப்பம் . இரண்டிலும் பிடித்தம் இருக்கிறது..
வட்டாட்சியர் லோகநாதன் மரபுக் கவிஞராக பரிணமித்தது எப்படி?
சங்க இலக்கியங்களில் எனக்கு மிகுந்த ஆர்வமும் பிடிப்பும் இருக்கிறது. மேல் கணக்கு நூல்கள் படிப்பேன்.. மேலும் பாரதிதாசன் அவர்களுடைய கவிதைகளை விரும்பிப் படிப்பேன்.. அவர் போல எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுந்ததே மரபுக் கவிதைகளுள் பரிணமித்தது.
தாங்கள் முதலில் வட்டாட்சியராக பணியில் அமர்ந்த மாவட்டம் எது ? எந்த ஆண்டு?
விருதுநகர் மாவட்டம்..நான் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி II தேர்வு மூலம் 2001 ல் நேரடி வருவாய் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்து பதவி.உயர்வில் கடந்த 11 வருடங்களாக வட்டாட்சியராக பல்வேறு நிலைகளில் விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றேன். துணை ஆட்சியர் பதவி உயர்வை.எதிர் பார்த்துள்ளேன்.
தமிழ்நெஞ்சம் Flip Book அக்டோபர் 2025
இத்தனை ஆண்டுகள் அரசுப் பணியில் உங்களை லஞ்சம் வாங்கச் சொல்லி அரசியல் வாதிகள் யாரேனும் அழுத்தம் கொடுத்ததுண்டா?
இல்லை.. அவ்வாறான அழுத்தங்கள் எனக்கு இதுவரையில் வந்ததில்லை..
அரசு சலுகையைக் குறுக்கு வழியில் பெறுவதற்கு உங்களிடம் கையொப்பம் வாங்குவதற்காக வந்து நிற்கும் அரசியல் வாதிகளை எதிர்த்து. உண்மையான ஏழைக்களுக்கு அந்த கையொப்பத்தை இட்டதுண்டா
மக்களுக்கான சான்றுகளை உரிய ஆவணங்கள் மற்றும் விசாரணை அடிப்படையில் தான் வழங்கி வருகின்றோம்.
தவறான அரசியல் பரிந்துரைகளுடன் வரப் பெறும் மனுக்களை விசாரித்து ஏன் வழங்க இயலாது என்ற காரணத்தை பரிந்துரைப்பவரிடமே சற்று பொறுமையாக
அந்த சான்றுகள் வழங்கப் படுவதால் ஏற்படும் பாதகங்ளை விவரித்து மறுத்ததுண்டு.
ஒரு மாவட்டஇத்தின் வளர்ச்சி என்பது கல்வியா? பொருளாதாரமா? ஏன்?
கல்வியே.. பொருளாதர வளர்ச்சிக்கு அடிப்படையே கல்விதான் என்பது என் கருத்தாகும்.
தாங்கள் வருவாய் வசூல் செய்த ஊர்களில் எந்த ஊரின் கணக்கு நேர்மையாகவவும் துல்லியமாகவும் இருந்தது? எந்த ஊரின் கணக்கு மறு பரிசீலனை செய்யும் படி இருந்தது?
கிராம கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்கள் பராமித்து வருகின்றனர். கிராம கணக்குகளைப் பொதுவாக வட்ட அளவில் மாவட்ட அளவில் தணிக்கை செய்த பின்னரே துணைஆட்சியர்/ வருவாய் தீர்வாய அலுவலரால் (ஜமாபந்தி) முடிவு செய்யப்படும்.தவறான கணக்குகள் ஏதும் எழுதப்பட்டிருப்பின் அறியப்பட்டு சரி செய்த பின்னரே ஒப்புதல் வழங்கப்படும்.
இயற்கைப் பேரரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது? நீங்கள் கண் கலங்கிய நிகழ்வு ஏதேனும் உள்ளதா?
அவ்வாறு இருப்பின் அந்த ஏழைக்கு நீங்கள் உங்கள் சொந்த செலவில் தனிப்பட்ட முறையில் ஏதும் செய்ததுண்டா ?
சாத்தூர் வட்டத்தில் வட்டாட்சியராக பணி புரிந்த பொழுது, தாய் தந்தை இறந்த நிலையில் 17 வயதான மூத்த மகள் தனது ஒரு தங்கை மற்றும் இரண்டு தம்பிகளை அருப்புக் கோட்டையில் உள்ள நூற்பாலையில் கூலி வேலை செய்து காப்பாற்றி வந்த நிலையில் அவர்கள் குடியிருந்த குடிசை வீட்டின் பக்க சுவர்கள் மழையால் இடிந்து விட்டது. தகவல் கிடைத்த உடன் வீட்டிற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளருடன் சென்று ஒரு மாதத்திற்கான அரிசி பலசரக்குக் கான உதவிகள் செய்தோம். தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்தோம். தொடர்ச்சியாக அந்த இடத்திற்கு பட்டா வழங்கி, ஆறு மாத காலத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் அழகான வீடு கட்டிக் கொடுக்க உதவினோம். அந்த குழந்தைகள் நால்வரும் புதிய வீடு பால் காய்ச்சும் போது கொண்ட மகிழ்ச்சியையும் காட்டிய நன்றி உணர்வையும் இன்றும் மறக்க இயலாது. கல்விக்கான மாதந்திர உதவியும் அரசு மூலம் செய்ததால் நன்றாக படித்து வருகின்றனர் .இன்றும் எனது தொடர்பில் இருக்கின்றனர்.
ஆவணங்கள் பற்றாக் குறையால் நிலவரி வசூல் செய்வதில் சிக்கல் வரும்போது… உடனடியாக எப்படி அதைத் தீர்ப்பீர்கள்?
பட்டா தாரர்களிடம் மட்டுமே நிலவரி வசூல் செய்யப்பட்டு வருகின்றது. பத்திரங்கள் மட்டுமே வைத்து சிலர் தங்கள் நிலம் என்று உரிமை கோரி தீர்வை செலுத்த வருவார்கள். இவ்வினங்களில் பட்டா மாற்றம் செய்ய அவர்களை அறிவுறுத்துவோம் , சரியான கிரையம் தானா என உறுதி.செய்து பெயர் மாற்றம் செய்து பட்டா தாரிடம் நிலவரி வசூல் செய்யப்படுகிறது.
சட்ட விரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கும் அரசியல் வாதிகளிடம் இருந்து வரியை வசூலிப்பதில் சிரமம் ஏற்படும் போது என்ன செய்வீர்கள்?
சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் வரி வசூல் செய்வதே தவறு ஆகும். அவரை அவ்விடத்தில் இருந்து சட்ட விதிகளின் படி அகற்ற வேண்டியதே வட்டாட்சியரின் பணி. சிவகாசியில் நீர் வழிப் புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை பல மிரட்டல்கள் மத்தியில் அகற்றியுள்ளோம்.
நில உரிமையாளர்கள் நிதி நெருக்கடியில் இருக்கும் போதும், அதே சமயம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வரி வசூலித்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் போதும் என்ன செய்வீர்கள்?
நிலவரி வசூல் எனனபது ஒரு வருடத்திற்கான வரி விதிப்பு. கிராம நிர்வாக அலுவலர்கள் பசலி ஆண்டின் துவக்கத்திலேயே கேட்புப் பட்டயல் படி வசூல் நடவடிக்கையை ஆரம்பிப்பதால் இந்நிலை அவ்வளவாக வருவதில்லை. மேலும், நிர்பந்தம் ஏதும் இருப்பதில்லை. சில விவசாயிகள் இரண்டு மூன்று பசலி ஆண்டுகளுக்கு சேர்த்து கட்டுவதுண்டு.
வருவாய்க் குறைவாக இருக்கும் பகுதிகளில் எப்படி வரியை வசூல் செய்வீர்கள்?
வருவாய் தீர்வாயம் என்பது ஒவ்வொரு வருடமும் நடக்கும். ஜமாபந்தி எனச் சொல்வார்கள். நிலவரி முடிவு செய்வது இந்த ஜமாபந்தியில் தான். அடங்கலின் படி விளைச்சல் அறுவடை ஆகியவை கணக்கில் கொண்டு துணை ஆட்சியர் தலைமையில் நிலவரி நியாயமான முறையில் இறுதி செய்யப்டுவதால் வரி வசூல் செயதலில் அவ்வளவாக பிரச்சனைகள் வருவதில்லை.
“Adjustment” எனும் ஒன்றைக் கடந்து வராத மனிதர்களே இருக்க முடியாது. மேலும் Adjustment ஆகாத எவரும் இருக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
கொஞ்சம் எனக்காக அட்ஜஸ் பண்ணுங்க சார்…. என்ற வார்தையை எத்தனை முறை கேட்டுள்ளீர்கள்?
ஒரு செயலை.செய்வதால் பாதிப்பு என்ன என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகள் யாது என்பதையும் ஆரய்ந்து செயல் படல் வேண்டும்.
எடுத்துக் காட்டாக …
ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டிஸ் கொடுத்த நிலையில் சிறது கால அவகாசம் கேட்பாங்க. அழுத்தமும் வரும். இந்த மாதிரியான சூழல்களில் கெடு பிடியாக இல்லாமல் adjust பண்ணிதான் ஆகனும்
நிலவரி வசூல் செய்யும் பகுதிகளில் ஏதோ ஒரு பகுதி கல்வியில் சிறந்தும், வருவாயில் குறைந்தும் இருந்தால் அப்பகுதியைப் பார்த்து வருத்தம் அடைவீர்களா ? அல்லது மகிழ்ச்சி அடைவீர்களா?
கல்வியும் பொருளாதாரமும் சேர்ந்தே முன்னேறுவது சிறப்பு! இருப்பினும் கல்வியில் சிறந்திருத்தல் மகிழ்ச்சியே. அதே நேரத்தில் வருவாயைப் பெருக்குவதற்கான முயற்சிகளையும் எடுப்போம்.
தமிழில் உங்களுக்குப் பிடித்த பா வகை எது? ஏன்?
கட்டளை கலித்துறையில் எழுத எனக்கு மிகவும் பிடிக்கும். வெண்டளையில் எழுத்து எண்ணிக்கை கட்டுப்பாட்டுடன் எழுதி முடித்து அதை வாசித்துப் பார்க்கையில் இனிமை தரும் மனத்திற்கு.
முகநூல் குழுமங்களைப் பற்றி தங்களின் கருத்து என்ன?
போட்டிகள் நடத்தி சான்றிதழ்கள் தருகின்றனர். என்ன எழுதினாலும் சான்றிதழ் வழங்கி தங்களது உறுப்பினர்களைத் தக்க வைத்துக் கொண்டு தங்களது குழுமங்களை வளர்க்கிறார்கள்..ஆனால் நல்ல படியாக செயல்படும் சில குழுமங்களும் உள்ளது.
தாங்கள் எழுதிய நூல்கள் மற்றும் விருதுகள் பற்றி சொல்லவும்?
நூல்கள் இன்னும் வெளியிட.வில்லை
ஒரு கவிஞனுக்குத் தேவை சொல்வளமா? கற்பனையா?
இரண்டுமே வேண்டும்! கற்பனை இல்லமல் கவிதை எழுதினால் அறிவுரை யாகவோ உரைநடை போலவோ மட்டுமே இருக்கும்..கற்பனையோடு சொல்ல வேண்டிய கருத்தை சொல் நயத்தோடு வைத்தல் கவிதையின் தன்மை படிப்போரைக் கவரும்.
என்ன வருத்தி நீகவிசெய்யினும் முன்னோர்கள் செய்ததன்றி நூதனம் ஒன்றுமில்லை என்பார்கள் . அப்படி என்றால் நம்மால் முன்னோர்களை மிஞ்ச முடியாதா? அல்லது மிஞ்சக் கூடாதா?
மிஞ்ச வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு கவிஞனின் படைப்பாளியின் ஆசையாக உள்ளது. மிஞ்ச முயல்வோம்.
புதுக்கவிதை மற்றும் புதுக் கவிஞர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
புரியாமல் குழப்பிப் புரிய வைப்பது என நினைக்கிறேன். வடசொற்கள் பயன் படுத்தப்பட்டு எழுதப்படுகிறது அதிகமாய்.
மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை இவை இரண்டில் எது உயர்ந்தது? ஏன்?
மரபுக்கவிதை தான். கருத்தை ஓசை நயத்தோடு சொல்லுதல் மற்றும் பயிலப்படும் ஒழுங்கு
வளரும் பாவலர்களுக்குத் தாங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை?
சங்க இலக்கிய சிறப்பைப் படித்துணர்ந்து நவீன தமிழ் மக்களை அறிய வையுங்கள். நம் தொன்மையை புரிய வையுங்கள்
தமிழ்நெஞ்சம் மாத இதழைப் பற்றி தங்களின் மேலான கருத்து என்ன?
உலகளவில் தமிழை வளர்க்கும் சிறப்பான தமிழ்த் தொண்டை தமிழ்நெஞ்சம் ஆற்றி வருவதை அறியும் பொழுது மனம் மகிழ்கிறது; குறிப்பாக மரபுக் கவிதைகளுக்கு அங்கீகாரம் தருகிற ஒரு சில உயர்ந்த இதழ்களில் தமிழ்நெஞ்சம் மீச்சிறப்பு கொண்டது. தலை வணங்குகின்றேன்.
(ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லவும்)
தமிழின் சிறப்பு ஓரிரு சொற்களில்
அழகு..
காதல் என்பது
அவசியம்
ஏமாற்றம் என்பது
மாற்றம் தரும்
மத மாற்றம் என்பது
தனிநபர் சுதந்திரம்
எது உண்மையான படைப்பு
நல்ல சமூக வளர்ச்சியை நோக்கியது
எவன் உண்மையான படைப்பாளி
எழுத்தால் மக்கள் மனங்களில் நல்ல மாற்றம் செய்பவன்
திருமணம் என்பது
குடும்பம் சார்ந்தது
தாயைப் பற்றி ஒரே சொல்லில்
உண்மையான அன்பு
எது அழகு
தனிமனித மற்றும் சமூக ஒழுக்கம்
விமர்சனம் என்பது
சரியானதாய் இருந்தால் ஏற்றுக் கொண்டு சரி செய்!
வெற்றி என்பது
மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சி தருவது
கடவுள் என்பது
ஒருவனே தேவன்
எதைக் கண்டு அஞ்ச வேண்டும்
தீ.வினை அச்சம்
எதைக் கண்டால் அஞ்சக் கூடாது
அதிகார வர்க்கம்
ஆசை என்பது
அளவாக வேண்டும்
சாதி என்பது
மன நோய்
பணம் என்பது
அவசியம்
நட்பு என்பது
ஆராய்ந்து கொள்..
எது உண்மையான பக்தி
சக உயிர்கள் மீது அன்பு செலுத்தல்
யார் உண்மையான நாத்திகன்
சக உயிர்கள் மேல் இரக்கம் இல்லாதவன்.