வணக்கம்
தங்கள் பூர்வீகம் இலங்கை எனத் தெரியும். இலங்கையில் எந்தப் பகுதியில் தங்கள் குடும்பம் இருந்தது?
இலங்கை யாழ்மாவட்டத்தில் உள்ள கோப்பாயில் வசித்தோம்.
எப்போது புலம்பெயர்ந்தீர்கள்? ஏன் சுவிட்சர்லாந்து நாட்டைத் தெரிவு செய்தீர்கள்?
தாயகத்தில் பல இடப்பெயர்வுகளை தாயகத்தில் சந்தித்தேன். உண்மையில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு திருமணத்திற்காகவே வந்தேன். எனது கணவர் தாயகத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளால் புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்தார். சுவிற்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் ஒன்றியம் இருப்பதால் அந்நாட்டைத் தெரிவுசெய்தார்.
தங்கள் தந்தையார் மற்றும் தாயாரைப் பற்றி..
எனது தந்தையார் இலங்கை இராணுவ உளவுப்பிரிவிலும் கவச வாகன பிரிவிலும் 22 வருடங்கள் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். அவரது ஓய்வுகாலத்திற்குப் பின்னரே நாட்டுநிலமை மோசமடைந்தது. தாயார் இல்லத்தரசி.
தங்கள் இளமைக்காலக் கல்வி எங்கே கிடைத்தது?
பெரும்பாலும் எனது யாழ் மாவட்டத்திலே கல்வி கற்றேன்.
தங்கள் இல்லத்துணைவர் மற்றும் குடும்பம் பற்றி.
கணவர் பருத்தித்துறையைப் பூர்வீகமாக கொண்டவர். பெற்றோரை யுத்த காலத்தில் இழந்து பல துன்பங்களின் பின் புலம்பெயர்ந்தவர்.
ஏதும் பணிபுரிகிறீர்களா? எங்கே?
தற்போது ஆலயத்தில் திருப்பண்டக் காப்பாளராகவும் மறை ஆசிரியராகவும் பணி புரிகிறேன்.
தமிழ்மீது பற்று வரக் காரணம் யாது?
பிறப்பால் தமிழச்சி இதைவிட வேறென்ன தகைமை வேண்டும் ?
தமிழ்க்கவிதைகளை எப்போதிலிருந்து எழுதத் தொடங்கினீர்கள்?
உனது சிறு வயதிலிருந்தே கவிதை கட்டுரை கதை எனப் பல வடிவங்களில் பத்திரிகைகளுக்கு எழுதுவேன். எனது தந்தையாரின் ஊக்குவிப்பே காரணம்.
மரபுவடிவத்தில் கவிதையில் எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?
உண்மையில் மரபுக் கவிதை எழுதும் ஆர்வம் முகநூல் குழுமங்களில் இணைந்த பின்பே ஏற்பட்டது. தொடக்கத்தில் நிலாமுற்றத்தில் ஆசான் என நான் அழைக்கும் திரு இராமவேல்முருகன் சகோதரரின் மரபுக் கவிதைப் போட்டிகளையும் விளக்கத்தையும் பார்த்தே எழுதத் தொடங்கினேன்.
நிலாமுற்றம் பற்றி
இணையத்தில் கவிதையைத் தேடிய போது கண்டுகொண்ட முகநூல் குழுமம். 2018 முதல் இணைந்து பயணிக்கிறேன். பல்வேறு போட்டிகளில் பங்குபற்றிய அனுபவமும் போட்டிகளுக்கு நடுவராகவும் பொறுப்பாளராகவும் பயணித்த அனுபவமும் மகிழ்வளிக்கிறது. கடந்த வருடம் நடைபெற்ற கவியரங்கில் நேரடியாகப் பங்குபற்றி அனைவரையும் கண்டுகொண்டதும் விருதுகள் பல பெறதும் பெரும் பேறாகும்.
பாட்டரசரின் பாவலர் பயிலரங்கம் பற்றி.
பாட்டரசரின் பயிலரங்கை பெருந்தொற்றுக் காலத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த போது (2020) அறிந்து இணைந்தேன். மரபிலக்கணத்தை முறையாக கற்று வருகின்றேன். இதுவரை பல்வேறு வகையான பாடல்களை எழுதும் பயிற்சியில் இணைந்து பயணிக்கிறேன்.
தாங்கள் எழுதிய நூல்கள் குறித்துச் சொல்ல முடியுமா?
இதுவரை அகவல் சோலை , மற்றும் விருத்தமாயிரம் என்னும் நூல்களை பிரான்ஸ் கம்பன் கழகத்தில் (2022) வெளியிட்டுள்ளேன்.
இந்தியா வந்தபோது நீங்கள் எங்கெல்லாம் சென்றீர்கள் எனக் கூறவியலுமா?
கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு செல்லும் ஆவலில் இந்தியா வந்தேன். பல நட்புள்ளங்களின் அழைப்பால் பல்வேறு இடங்களை பார்ங்கும் வாய்ப்புக் கிட்டியது. கன்னியாகுமரி தஞ்சை மதுரை சென்னை புதுச்சேரி கும்பகோணம் வலங்கைமான் கோயம்புத்தூர் ஒகேனக்கல் ஏலாக்குறிச்சி சிதம்பரம் இப்படிப் பலவிடங்களைப் பார்வையிட்ட நிறைந்த மகிழ்வு.
இந்தியா இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இக்காலப்பகுதியில் பலத்தமிழ் நட்புறவுகளை நேரடியாக சந்திப்பது நற்பேறாகும்.
மறக்கவியலாத கவியரங்கம் பற்றி.
ஆம் வலங்கைமானில் நடைபெற்ற மறக்கவியலாத கவியரங்கத்தில் தலைமை தாங்கியதை நற்பேறாகக் கருதுகிறேன். நிலாமுற்ற நிறுவுநர் சகோதரர் மாறன் அவர்களது அன்பான அழைப்பும் மற்றும் தலைவர் செயலாளர் ஏனைய ஒவ்வொருவரது உபசரிப்பும் மகிழ்வளித்தது.
தங்களுக்குப் பிடித்த கவிஞர்களைக் கூற முடியுமா?
பொதுவாக கவிதையென்றால் கொள்ளையின்பம். அதனை எழுதும் கவிஞர்களை மிகவும் போற்றுபவள் நான். எனது சிறு வயது முதலே தந்தையார் பாடும் ஓடிவிளையாடு பாப்பா பாடலை பாடிய பாரதியாரை மிகவும் பிடிக்கும். எனது சிறுபிராயத்தில் பாரதியார் பிறந்தநாளில் கவிதை படித்ததும் அவரைப் பற்றி பேச்சுபேசியதும் இன்றும் பசுமரத்தாணியாய் உள்ளது.
வெண்பா – விருத்தம் இரண்டில் எது உங்களுக்குப் பிடித்த பா வகை?
விருத்தப் பாக்களே மிகவும் பிடிக்கும் இதுவரை ஆயிரம் விருத்தங்களை கடந்து எழுதுவதே தமிழன்னை தந்த வரமாகும். வெண்பாவும் தொடர்ந்து எழுதுகிறேன்.
எதிர்காலத் திட்டம் என்ன?
எழுதிய கவிதைகளை நூலாக்கம் செய்தலும் அதற்கென விழா வைத்தலும் உலகத் தமிழர்களை தமிழ்மொழியால் ஒன்றிணைக்கும் மேலான நோக்கமுமே எதிர்காலத் திட்டமாகும் .
வளரும் கவிஞர்களுக்கு நீங்கள் கூறவிரும்பும் அறிவுரை.
தமிழை மூச்சாகக் கொண்டு தமிழன்னையை மகிமைப்படுத்த உங்கள் எழுத்தாணி பயன்படட்டும்.
தமிழ் நெஞ்சம் குறித்த தங்கள் கருத்து
பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் இணையப் பதிப்பு. மிகவும் பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் ஏடாகவும் பலதிறன் கொண்ட தமிழ் மக்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் களமாகவும் செயல்படுவது பாராட்டுக்குரியது. எனது அகவல் சோலை நூலை பதிப்பித்ததும் தமிழ்நெஞ்சம் அமின் அவர்களை பிரான்ஸ் கம்பன் விழாவில் கண்டுகொண்டதும் சிறப்பாகும்.
தமிழ்நெஞ்சம் ஆகஸ்ட் 2024