பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்..

தலைமுறை தலைமுறையாக தமிழ் வளர்க்கும் பெருமிதம் குடும்பத்திற்கு உண்டு..

கவி முகில் தங்க அன்பு வல்லிஅவர்களின் மூத்த சகோதரர். தென்றல் கவி தமிழ்ச்சிட்டு சுந்தரபாண்டியன் அவர்களுடைய தாய்மாமன் என்பதும் குறிப்பிடத்தக்கது

செங்கிஸ்கான் என்ற சிறந்த வரலாற்று நூலை மொழிபெயர்த்து வெளியிட்டு இருக்கிறார் இன்னும் மார்க்கோ போலோ மன்னன்

சாலமனுடைய சுரங்கங்கள் ஆகிய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு அச்சுக்குக் காத்திருக்கின்றன அத்தகைய பெருமைக்குரிய  அறிஞர் பெருமகனின் நேர்காணலை வெளியிடுவதில் தமிழ்நெஞ்சம் மகிழ்ச்சி அடைகிறது

நேர்கண்டவர் ஆய்வறிஞர் பாவேந்தன், மாத்தூர்

மார்ச் - 2025 / 108 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

வணக்கம். பல்லாற்றானும் மூத்த உங்களுடன் பேசுவதில் எங்களுக்கு உவப்பே. முதலில் உங்களைப்பற்றி அறிமுகப்டுத்திக்கொள்ளுங்களேன்.

வணக்கம். உங்களோடு உரையாடுவதற்கு மகிழ்ச்சி.  நானும் எல்லாரையும்போல எளிய குடும்பத்தில் பிறந்தவன்தான். என் தந்தையார் பெரும்புலவர் மீ. தங்கவேலனார், மாவட்டக்கழக உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர். தாயார் தில்லையம்மாள் முறையான கல்வி பயின்றவர் இல்லை. ஆனால் இயற்கை அறிவு மிக்கவர். குடும்பத்தலைவி.  எங்கள் எல்லார்க்கும் தலைவி. என் தந்தையார்க்குத் தன்மக்களைப் பட்டந்தாங்கிகளாக ஆக்கிவிட வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது.. அப்பொழுது(1961) இளங்கலை பட்டப்படிப்புக்குத் தமிழ்வழிக் கல்வி வழக்கத்துக்கு வந்தது.  நான் தமிழ்வழியில்தான் பட்டக்கல்வி பயிலவேண்டும் என்று கோவை அரசினர் கலைக்கல்லூரியில் சேர்த்தார்கள். இளங்கலை புவியியல் படித்தேன். தேர்வுமுடிவுகள் வந்தவுடனேயே ஆசிரியர் பணியும் கூடவே வந்தது. பட்டந்தாங்கி ஆசிரியராகப் பணியேற்றேன். பிறகு தமிழில் முதுகலை பயின்று மேல்நிலை வகுப்புகளுக்குத் தமிழ்ப்பாடம் பயிற்றினேன். காலப்போக்கில் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராயும் பணியாற்றி ஓய்வு பெற்றேன் ஆக 13 ஆண்டுக்காலம் ஆங்கிலமும் வரலாறும் புவியியலும் கற்பித்துவந்த நான் 18 ஆண்டுகள் மேல்நிலை வகுப்புகளுக்குத் தமிழ் ஆசிரியராகவும்  18 ஆண்டுகள் பணிபுரிந்து, 5 ஆண்டுகள்  தலைமை ஆசிரியராகவும் இருந்து பணி ஓய்வுபெற்று இருக்கிறேன். பணி ஓய்வுக்குப்பின் மனத்தின் ஓரெழுச்சியினால் அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கும் இளையோரைப் பயிற்றினேன். இதிலும் ஒரு 12 ஆண்டுகள் கழிந்தன.இக்காலத்தில் நானும் புதியகோணத்தில் கற்றேன் என்றும் சொல்லாம்.

அப்பயிற்சியினால் பயன்பெற்றோர் எவ்வளவுபேர் இருக்கலாம்.

மாநில அரசுப்பணி பலவற்றிலும் ஏறத்தாழ 250 பேர் இருக்கிறார்கள். நடுவண் அரசுப்பணியிலும் (ஆட்சிப்பணி)யிலும் இருக்கிறார்கள்.

விழா நிகழ்வு ஒன்றில் குடும்பத்துடன்
பெரும்புலவர் தங்கவேலனார் தில்லையம்மாள்... நின்றுகொண்டு இருப்பவர் அ.த.ப தாயாரின் மடியில் தங்க அன்புவல்லி அவர்கள்

உங்களுடைய பரந்துபட்ட கல்வியறிவு வியக்கவைக்கிறது. இதில் தமிழ்க்குடும்ப வழிவழிப் பெற்ற பட்டறிவினையும் நீங்களாகத் தேடிச் சேர்த்ததையும் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?

எங்கள் தந்தையார் ஆழமான தமிழறிவு உடையவர். எங்கள்தாயார் உலகத்தோடு ஒட்ட ஒழுகும் பண்பு மிக்கவர். தம்பி தங்கையரைத் தொட்டிலில் போட்டுத் தூங்கவைக்கும்போது கம்பராமாயணம் தேவாரம் போன்றவற்றிலிருந்து பாடல்களைத் தந்தையார் பாடுவார்கள். தமிழாசிரியர் ராகம் என்று ஒன்று உண்டு அந்த ராகத்தில்தான் பாடுவார்கள் ! தானாக நான் நூல்களைப் படிக்கத் தெரிந்து்கொண்ட நாள் தொடங்கி திருக்குறள் மனப்பாடம் செய்வதற்கு தந்தையார் பயிற்சி கொடுத்தார்கள். அந்தக்காலத்திலேயே திருக்குறள் முழுமையும் எனக்கு மனப்பாடம். அறத்துப்பால் முழுமையும் பரிமேலழகர் உரையுடன் தெரியும். அதனால் இலக்கியங்களைச் சுவைக்கும் மனமும் பெற்றேன். தந்தையாரிடம் தனி மாணவராகத் தமிழ்படிக்க வீட்டுக்குப் பலர் வருவர். அவர்களுக்குத் தமிழ் இலக்கணம் பயிற்றும்போது நானும் கவனிப்பேன். அதனால் தமிழ் இலக்கணத்தில் தனி ஈடுபாடு உண்டு. குறிப்பாகத் தொல்காப்பியம் எனக்குப் பிடிக்கும். தொல்காப்பியப் பற்று ஆய்வு உணர்வை ஊட்டியதால் எல்லாவற்றையும் ஆய்ந்து பார்க்கும் மனப்பான்மைதான் எனக்குள் விழுந்த விதை. தொல்காப்பியருடைய எளிமை நேர்மை ஆகியவை என்னைக்கவர்ந்தவை.

தொல்காப்பிய நேர்மை என்றால்……?

தன்னூலில் தனக்கு முன்னால் இலக்கணங்கண்டவர்களின் கூற்று இவை. தான் செய்தவை இவை என்று தனித்தனியாக்க் கூறும் நேர்மைதான். !  நூலைத் தொடங்கும்போதே எழுத்து எனப்படுப என்றுதான் அவர் தொடங்குகிறார். தமக்கு முன்னோடியான இலக்கணிகள் சொன்ன தமிழ் எழுத்துகள் முப்பஃது. அவர்கள் சார்ந்துவரும் எழுத்துகளைக் கணக்கில் கொள்ளவில்லை நான் சார்பெழுத்துகள் மூன்றை எழுத்தாகக் கொள்கிறேன் என்பன போன்று கூறும் நேர்மைதான். பிற்காலத்தில் நன்னூலார் சார்பெழுத்துகள் பத்து என்று கூறுகிறார்.  இது அவருக்குத் தொல்காப்பியர் கொடுத்த உரிமை

பல்துறையிலும் உங்கள் நாட்டமும் வெற்றியும் எப்படி வாய்த்தன.

கல்லூரிக் காலத்தில் எங்கள் பேராசிரியர்கள் எனக்குத் தேடிச் சேர்க்கும் கலையைக் கற்றுத் தந்தார்கள். தேடுதல் நேர்மையோடு நிறையச் சேர்த்திருக்கிறேன். இன்னும் தேடல் முந்தபாடில்லை. கல்வி கரையில என்ற தொடரின் முழுமையான பொருள் இந்த 81 ஆம் அகவையில் எனக்கு நன்றாகத் தெரிகிறது.

உங்கள் மேடைத் தமிழ்பற்றி…

எங்கள் காலத்தில் மேடைகளில் அடுக்குமொழித் தமிழ் முழங்கியது. சங்க இலக்கியங்கள் அச்சில் வெளிப்பட்ட காலம். அதனால் அவை பரவலாக்கம் பெறவேண்டிய சூழல் எழுந்தது. பேச்சுமேடைகள் இடந்தந்தன. பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் இலக்கியங்களைச் சுவைக்கும் மனமும் திறமும் பெற்றனர். பின்னர் கவியரங்கங்கள் புகழ்பெற்றன. கவியரங்கங்களில் எனக்கு அவ்வளவான ஈடுபாடில்லை.  அங்குக் கவிதைகளை எழுதிப்படிப்பார்கள். அதுதான் சரியான முறையுங்கூட. ஆனால் எழுதியவற்றை மட்டுந்தான் படிக்கமுடியும் அவ்வப்போது தோன்றும் புதிய சிந்தனைகளுக்கு அங்கு இடமில்லை. எனக்கு ஏதேனும் ஒன்றைப் பற்றிச் சொல்லும்போதே புதிய எண்ணங்கள் தோன்றும் ஆகையால் மேடையில் எனக்கு அப்படியொன்றும் பெரிய வெற்றி ஏதுமில்லை.

இன்றைய மேடைகளைப்பற்றிச் சொல்லுங்கள்.

நிறைய மக்கள் இலக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கூடினார்கள். அதே போல நிறையச் செய்திகளும் பரவின. இன்றைக்கு மக்களுக்குப் பொழுதுபோக்கு வழிகள் மலிந்துவிட்டன. எனவே கருத்துரைத்து மக்களை நெறிப்படுத்தி வந்த மேடைகள் நகைச்சுவை மன்றங்களாக மாறி மக்களைக் கவரவேண்டியநிலைக்கு ஆளாயின. இப்போது நகைச்சுவை மட்டுமே கோலோச்சுகின்றன.

இளையோர்க்கு இலக்கணம் பற்றிச் சொல்வீர்களா?

என் போக்கில் நிறைய மாணவர்க்கு இலக்கணம் பயிற்றியிருக்கிறேன். ஆயினும் காலத்தால் எழுகின்ற புதிய புதிய இலக்கணத் தேவைகளை, மொழின் போக்கினைத் தமிழறிஞர்கள்  எளிதில் ஏற்பதில்லை. அதனால் இலக்கணக் கோட்பாடுகளைத் தேவைக்கேற்ப அவ்வப்போது சொல்வதுண்டு.

சுவைத்தலைத் தாண்டி தமிழ் இலக்கியம் மக்களுக்கு என்ன உணர்த்துகிறது..

இலக்கியம் என்பது ஒருவகைக் கலை. மனத்தோடு தொடர்புடையது. அது மிகத் தெளிவாக மக்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்திருக்கிறது. தீதும் நன்றும் பிறர்தரவாரா என்பது வழிகாட்டல் இல்லையா. குலங்கோத்திரங்கொண்டு என்செய்வீர் என்று கேட்கவில்லையா. அரசு வரைமுறையற்று வலிந்து விதிக்கும் வரிமுறைகள் (கோலொடுநின்றான் இரவு) வேலோடு நின்றான் இடு என்று அச்சுறுத்துவது போன்றது என்று எடுத்துக் காட்டவில்லையா இளையோர்க்கு அறஞ்செய விரும்பு என்று எடுத்துரைத்தது. இலக்கியங்கள்தாம். ஆனால் தற்காலத்தில் ‘’இதுதான் இலக்கியம்’’ இவர் சொன்னதுதான் வழிமுறை என்று தங்களை ஒரு வட்டத்துகுள் சுருக்கிக்கொள்வது முறையில்லை. இதனால் சாறு குறைந்து சக்கைகள்தாம் கிடைக்கும்.

இளைஞர்க்கு நீங்கள்சொல்லும் செய்தி யென்ன?

எல்லாவற்றையும் சுவைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நிறையப் படியுங்கள். வரியிடை இருக்கும் செய்திகளைப் புரிந்துகொள்ளுங்கள். சிந்தியுங்கள். செயல்படுங்கள். வழி சொல்பவன் கூடவரவேண்டும் என்று விரும்பாதீர்கள். நீங்களாகச் சென்று அடைய முயலுங்கள். சான்றாகப் புகழ்பெற்ற ஒரு தொடரைச் சொல்ல விரும்புகிறேன். இந்தக்கதவு பாதி மூடியிருக்கிறது என்றால் பாதி திறந்திருக்கிறது என்றும் புரிந்துகொள்ளல் வேண்டும் என்கிறேன். தனி மனிதப் புகழ்ச்சி செய்வதை விட்டொழியுங்கள் என்பதே என் வழிகாட்டுதல்.

அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி கூடடிக்கொண்டே போகிறதா?

மக்களிடையேதான் அறிஞர்களும் இருக்கிறார்கள். நாம்தாம் அவர்களைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் சிலரைமட்டும்  அளவுக்கு அதிகமாக நாம் புகழ்ந்துகொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். பொருந்தாப் புகழச்சி என்பது வீழ்ச்சியைத்தான் தரும்.

நாங்கள் இளைஞர்களுக்குக் காட்டும் வழி என்ன.

இன்றைய இளைஞர்கள் நிறையக் கற்கவேண்டும். குறிப்பறியவேண்டும். தன்னம்பிக்கை மட்டுந்தான் வெற்றிக்கு வழி. நம் உழைப்புதான் நம்முடையது என்று உணரவேண்டும். வெற்றி உங்களைத்தேடி வரும். அரசு எல்லார்க்கும் கல்வி எட்டுவதற்குரிய  வழிவகை செய்யவேண்டும் தடைகள் வந்தால் அவற்றைத்  தாண்டிச்செல்லும் வழிமுறைகளை வகுக்கவேண்டும்             நல்வாழ்த்துகள்.

உங்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி நன்றி சொல்லி விடைபெற்றுக்கொள்கிறோம்.

Related Posts

நேர்காணல்

மலையகத்தின் பெண் ஆளுமை அஸ்மா டீன்

இலங்கை திருநாட்டில் எழில் கொஞ்சும் மலையகத்தில் கம்பளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்மா டீன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். கலைக்குடும்பத்தின் வாசனையில் பூத்த இவர் இலங்கையின் முதல் தினசரியான “தினதபால்” ஆசிரியர் காலஞ்சென்ற மீரா மொஹியிந்தீன் அவர்களின் பேத்தியாவார்.

 » Read more about: மலையகத்தின் பெண் ஆளுமை அஸ்மா டீன்  »

நேர்காணல்

ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்

  1. உங்களை பற்றிய அறிமுகத்தை கூறுங்கள்.

1997 ஜனவரி மாதம் 30ஆம் திகதி இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகமை எனும் ஊரில் பிறந்தேன்.

எனது தந்தையின் பெயர் முஹம்மத் ஹூசைன்,

 » Read more about: ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »