இலக்கிலக்கிய உலகில் வலுவான எழுத்துத் திறனோடு, அனுபவங்களை உணர்வு மாறாமல் எழுதும் வித்தையோடு வலம் வந்து கொண்டிருக்கும் திரு கி இரகுநாதன் அவர்களுக்கு என் முதல் வணக்கம்.
இனிய வணக்கம் விஜிம்மா. என் முதல் வாசகியும், என் கதைகளைத் திருத்தும் ஆசிரியையுமான உங்கள் மூலம் என் முதல் பேட்டி தமிழ்நெஞ்சத்தில் வெளிவர இருப்பது எனக்கும் பெருமை தான்.
நேர்கண்டவர் விஜி சிவா
உலகெங்கும் உள்ள தமிழ்நெஞ்சத்தின் வாசகர்கள் அறிந்து கொள்ள, உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.
என் பெற்றோருக்கும். தமிழுக்கும் என் முதல் வணக்கம். கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு ஆரம்பிக்கிறேன்.
நான் கி. இரகுநாதன். பொறியியல் பட்டதாரி. தனியார் துறையில் பணி. மிகவும் பிடித்தது வாசிப்பதும், எழுதுவதை நேசிப்பதும்.
ஒரு மொழியின் அடித்தளமான எழுத்தையும், வாசிப்பையும் நேசிக்கும் நீங்கள், பிரபல எழுத்தாளர், திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சமீபத்தில்நடத்திய சிறுகதைப் போட்டியில் உங்கள் சிறுகதை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதை நான் ஒரு பெரிய வெற்றியாசு பார்க்கிறேன். அதைப் பற்றிச் சொல்லுங்கள்.
உண்மைதான். எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த கதைகளின் எண்ணிக்கை 734. அவற்றிலிருந்து நடுவர் குழு 30 கதைகளைத் தேர்ந்தெடுத்தது. இவற்றில் பரிசுக்குரியனவாகத் தேர்ந்தெடுத்த முதல் 15 கதைகளில், நான் எழுதிய ‘பெருவிரல் பதிவு’ எனும் கதையும் ஒன்று எனும் போது உள்ளபடியே மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்தக் கதையில் சில மாற்றங்களைச் சொல்லி, கதையை மெருகேற்றியதில் ‘விஜிம்மா’ என நான் அழைக்கும் அன்புத் தங்கையான விஜி சிவா எனும் உங்கள் பங்கு அளப்பரியது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சான்றிதழ் மற்றும் நூலை வழங்கிய போது…
TAMILNENJAM FLIP BOOK


மகிழ்ச்சியும் நன்றியும்…!! சரி, திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களிடம் பரிசு வாங்கிய தருணம் எப்படி இருந்தது..?
பரிசளிப்பு விழாவில் என் பெயர் அறிவிக்கப்பட்டதும் கனவில் நடப்பதைப் போல் நடந்து சென்றேன். திரு. ரவி பிரகாஷ், திரு. லேனா தமிழ்வாணன், திரு உதயம் ராம், திருவாளர்கள் சுரேஷ்-பாலா, பாக்கெட் நாவல்திருஜி அசோகன், திருமிகு வேதா கோபாலன் என எழுத்துலகின் பல ஜாம்பவான்கள் நிறைந்திருந்த அரங்கம் அது. என்னை வரவேற்று நட்புடன் கைகுலுக்கிய திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் முகமலர்ந்து, ‘உங்க கதை பரிசு பெற்றிருக்கு. You deserve it வாழ்த்துகள்..’ என்று வாழ்த்தினார். விழாவில் உரையாற்றிய பலரது உரைகள் மூலம் வார்த்தைகளின் அமைப்பு பற்றியும், சிறுகதைகள் எழுதுவதைப் பற்றியும் பல விவரங்களை அன்று அறிந்து கொள்ள முடிந்தது. அது ஒரு ஆனந்த அனுபவம்.
திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுடன் ‘கதைப்போம் – 2025 சிறு கதைப் போட்டியில் பரிசு வென்றவர் களுடன் மேடையில் எழுத்தாளுமைகள். வாசகர்கள் அனைவருக்கும் நிச்சயம் அது ஒரு ஆனந்த அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.
நீங்கள் முதன்முதலில் எழுதிய சரித்திரக் கதையான ‘அபயராணி அப்பக்கா தேவி’ வெற்றிக்கதையானது எப்படி.?
இந்திய நாட்டின் வரலாறு கங்கைக் சுரையிலிருந்து அல்ல.. காவிரிக்கரையிலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்’ என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருந்ததில்லை. வடநாட்டின் ஜான்சிராணி பற்றி நாம் தெரிந்து கொண்ட அளவுக்கு தென்னாட்டின் பல வீரமங்கையரின் வரலாறு நமக்குத் தெரியவில்லை. வரலாறு தன் இருண்ட பக்கங்களில் அவர்களை மறைத்து வைத்திருக்கிறது. அப்படி மறைக்கப்பட்ட ஒரு பெயர்தான் அப்பக்காதேவி. கர்நாடகத்தைச் சேர்ந்த ராணி அவர். ஜான்சி ராணி பிறப்பதற்கு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னரே காலனி ஆதிக்கத்தை 45 ஆண்டு காலம் எதிர்த்துப் போர் புரிந்த வீர மங்கை அவள். அவளைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கும் போதே மனம் பெருமை கொள்கிறது.
அவளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் ஒரு சிறு முயற்சிதான் என்னுடைய முதல் வரலாற்றுப் புதினமான ‘அபயராணி அப்பக்காதேவி. கௌரா பதிப்பகத்தார் நடத்திய அந்தச் சிறுகதைப் போட்டியில், என் கதை வெற்றி பெற்றதில் எனக்கு மிக மகிழ்ச்சி.
ஒரு சரித்திரக் கதையை எழுதுவதென்பது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய சவால். எப்படி உங்களுக்கு சாத்தியமாயிற்று…?
75% தரவுகள். 25% கற்பனை. தரவுகளுக்கான தேடல்.. கிடைத்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் கொஞ்சம் கற்பனை இரண்டையும் கலந்தேன். சாத்தியமாயிற்று.
இந்த “அபயராஜா’ எழுத்துலக சமஸ்தானத்துக்குள் எப்படி வந்தார்.?
அபயராஜா…! ஆஹா…! (சிரிக்கிறார்
நன்றி. ‘அபயராணி..’ வெற்றி பெறுமா… இல்லையா… என்று தெரிவதற்கு முன்பே என்னை முதன்முதலில் ‘அபயராஜா’ என்று அழைத்தது நீங்கள் தான். அதன் பின்னர் நம்முடைய ‘பவர் பாயிண்ட்’ குழுமத்தின் தூண்களான வனஜாம்மாவும் (திருமிகு. வனஜா முத்துக்கிருஷ்ணன்) மற்றும் ருக்மணிம்மாவும் (திருமிகு. ருக்மணி வெங்கட்ராமன்) ஏற்று வழிமொழிந்தது என்னால் மறக்க முடியாத ஒன்று.
அப்போதெல்லாம் பொழுது போக்கு சாதனங்களாக வானொலியும், பத்திரிக்கை களும், வார, மாத இதழ்களும் மட்டும் இருந்தன. அதில் வரும் சுதைகளைப் படிக்கும் போதே எதையாவது எழுத வேண்டும் என்று நம் கைகள் பரபரக்கும்.
பேய்க்கதை மன்னன் திரு. பி.டி.சாமி அவர்கள் ‘ராணி’ வார இதழில் எழுதிய கதைகளைப் படித்து, உடனே பேப்பரும், பேனாவும் எடுத்து ‘டாண்…. டாண்…’ என்று சுவர் கடிகாரம் 12 முறை அடித்து ஓய்ந்தது. இரவு நேரம். கால்கள் தரையில் படாமல் ஒரு உருவம்….’ என்று எழுதிவிட்டு மேற்கொண்டு தொடரத் தெரியாமல் அப்படியே விட்டிருக்கிறேன். தமிழ்வாணன் கதைகளைப் படித்து, ‘சி. ஐ. டி. சங்கர்’ என்று பெயர் வைத்து… சத்தம் வராத ஷூக்களை அணிந்திருந்த சங்கர் மெதுவாக அந்த அறைக்குள் நுழைந்தார்…’ என்று எழுதிவிட்டு, ‘எதற்காக நுழைந்தார்..?’ என்கிற கேள்விக்கு என்னிடமே பதில் இல்லாததால் அவரை அறைக்குள்ளேயே விட்டுவிட்டு நான் ஓடி வந்து விட்டேன். பேயும், சங்கரும் இன்னமும் அங்கேயே இருக்கிறார்கள்.
முகநூல் குழுமங்களில் தீவிரமாக எழுத ஆரம்பித்த பின்னர் அந்தப் பேயை ‘மாயன்’ எனும் கதாபாத்திரத்தின் மூலமும், சங்கரை, தந்திரக்கதைகளில் வெவ்வேறு பெயரிலும் உலவ விட்டிருக்கிறேன்.
உங்கள் எழுத்தால் எத்தனை ராஜ்ஜியங்களை… மன்னிக்கவும்… எத்தனை மனங்களை வென்றிருக்கிறீர்கள்..?
நான் எழுதும் கதைகளாகட்டும், கட்டுரைகளாட்டும் அல்லது எல்லா வகை கவிதைகளாகட்டும்.. கடந்த பல வருடங்களாக என் முதல் வாசகியான உங்கள் பாராட்டுகளில் ஆரம்பித்த, நம்முடைய ‘பவர் பாயிண்ட்’ குழுமத்தில் ஊடுருவுகிறது. இல்லத்தாகும். உடன் பிறந்தோரும். மற்ற உறவுகளும், நட்பு களும், என்னைப் பற்றி அறிந்தோரும் என் எழுத்துகளைப் பாராட்டினாலும், நான் இதுவரை நேரில் பார்த்திராத, என்னை யாரென்றே அறியாத, பலர் பாராட்டும் போது மனம் நெகிழ்கிறது. அந்தப் பட்டி யல் மிகப் பெரியது.
அபயராஜாவின் வெற்றியை அரண் மனையில் உள்ளவர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள்.?
என் அரண்மனை ராணிக்கு கதை களைப் படிப்பதில் பெரிய ஈடுபாடு இல்லையென்றாலும், என் வெற்றியை முதலில் சொல்வது என் இணையரி டம்தான். முகத்தில் தெரியும் பெரிய மலர்ச்சியில், இறுக்கமான ஒரு கைகுலுக்கலில், உற்சாகத்துடன் சொல்லும் ‘சுங்கிராட்ஸ்’ என்ற ஒற்றை வார்த்தையில், தான் சொல்ல வந்த அனைத்தையும் சொல்லாமல் சொல்லி விடுவார்.
அடுத்ததாக என் இளவரசி. பல சமயங்களில் அவள் சொன்ன மாற்றங்களை என் கதைகளில் நான் செய்திருக்கிறேன். என் கதைகள் பிரசுரமான பின்னர் கதையின் சுருக்கத்தைச் சொல்வேன். ‘ஐ…! கங்கிராட்ஸ்.. கங்கிராட்ஸ்..’ என்று சொல்லி சந்தோஷத்துடன் ஒரு high five.
மூன்றாவதாக நான் என் வெற்றியைப் பகிர்வது உங்களிடம். என் கதையை நீங்கள் ஏற்கனவே படித்து, பலஆலோசனைகளைச் சொல்லி மெருகேற்றினாலும், வெற்றியை நான் உங்களிடம் பகிர்கையில், ‘சுங்கிராட்ஸ் அண்ணா.. யூ டிஸர்வ் இட்.. நானே வெற்றியடைந்த மாதிரி ஒரு சந்தோஷம் அண்ணா.. ‘ என்று சொல்லும் உங்கள் வாழ்த்து. தொடர்ந்து நம் நால்வர் அணியின் வனஜாம்மாவும், ருக்மணிம்மாவும் வாழ்த்துவது எனக்கு உற்சாக டானிக்.
பேரன்பின் நன்றி விஜிம்மா. அதற்கான தகுதியை இன்னமும் வளர்த்துக் கொள்கிறேன்.





முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணா நிதி அவர்களைப் பற்றி ‘மேற்கிலும் மறையாத சூரியன்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளீர்கள். அதை எழுதத் தூண்டி யது எது..?
அப்பா தினமும் படித்த முரசொலியும், என்னைப் படிக்கத் தூண்டிய அப்பாவும், கலைஞர் எனும் மகத்தான ஆளுமையும், என் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வகுப்பெடுத்த சாவித்திரி டீச்சரும் தான் காரணம். கலைஞரின், உடன்பிறப்புக்கான கடிதங்களில் உள்ளூர் அரசியல் முதல் உலக இலக்கியம் வரை அலசல் இருக்கும். எதிலும் ஒரு தெளிவான பார்வை இருக்கும். ஒரு பக்கம் எழுதவே சோம்பல்படுபவர்கள் அதிகமாகக் காணப்படும் சூழலில், எழுதுவதற்கும். பேசுவதற்கும் சளைக் காத கலைஞரின் உழைப்பு காரணம். இலட்சக்கணக்கானோரை தன் நாவண் மையால் கட்டிப் போட்ட ஆற்றல் காரணம். என்னை இப்போதும் பிரமிக்க வைக்கும் கலைஞருடைய எழுத்தாற்றல் காரணம்.
என் முதல் நூல் கலைஞரைப் பற்றி எனும் போது நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது.
மேற்கிலும் மறையாத சூரியன்’ என்ற உங்கள் முதல் புத்தக வெளியீடு, அதன் அனுபவம், அதற்கான உத்வேகம்.. எப்படி கிடைத்தது..?
கலைஞரின் நூறாவது பிறந்த நாள் நிறைவையொட்டி, கௌரா பதிப்பகத் தார் ‘நூறு எழுத்தாளர்கள், நூறு நூல்கள்’ என்கிற முயற்சியில் என்னையும் ஒருவ னாசு இணைத்துக் கொண்டேன். ‘கலைஞரைப் பற்றி இதுவரை சொல்லாத எதை நான் சொல்லப் போகிறேன்’ என்கிற மலைப்பு ஏற்பட்டது. ஆனால் கலைஞர் ஒரு தேன் கடல், அதில் என் சுண்டு விரல் நுனியில் பட்ட சிறு துளியை மட்டும் தான் நூலாகத் தொகுத்திருக்கிறேன்.
புத்தக வெளியீட்டு விழா நாள்வரை பதிப்பிக்கப்பட்ட 32 நூல்களில் என் நூலும் ஒன்று அந்த உணர்வுகளை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த நூலுக்காக தன்னிடமிருந்த பல புத்தகங்களைக் கொடுத்து உதவிய அன்பு நண்பர் திரு. நாகேஸ்வரனுக்கும், அவரை 2 அறிமுகப்படுத்திய என் மைத்துனர் திரு. கோபி அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்
கலைஞர் 100/100 விழாவில் கௌரா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட 32 நூல்களில் என்னுடைய ‘மேற்கிலும் மறையாத சூரியன்’நூல். ஒன்றிய மேனாள் அமைச்சர் திரு ஆ ராசா, மற்றும் பலர்.
கௌரா பதிப்பசு நிறுவுநர் திரு ராஜசேகரன் மற்றும் திமுகவின் திரு சூர்யா கிருஷ்ணமூர்த்தி
உங்களின் உழைப்பும் முயற்சியும் அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு வரிகளி லும் மிளிர்கிறது என நான் நினைக்கி றேன். நீங்கள் தமிழ்நெஞ்சத்தில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். தமிழ்நெஞ்சத்துக் கும், உங்களுக்குமான உறவு எப்படி ஆரம்பித்தது.?
என் உடன்பிறந்த மூத்த சகோதரியாக நான் கருதும் எழுத்தாளர் ருக்மணிம்மா அவர்கள், மூன்று அல்லது நான்கு பேராக இணைந்து சிறுகதை எழுதலாமே என்று யோசனை சொன்னார். இன்னொரு மூத்த சகோதரியாக கருதும் வனஜாம்மா… எல்லோருக்கும் அறிமுகமாகியிருந்த நீங்கள்… என நால்வரும் ‘சக்தி வாய்ந்த ஒரு ‘மையப்புள்ளி’யில் இணைந்தோம். அதற்கு ‘பவர் பாயிண்ட்’ என்று பெயரிட்டோம். ‘கண்ணாடி வளையல்களின் தாலாட்டு’ என்று நம் கதைக்கான முதல் தலைப்பை வனஜாம்மா கொடுக்க, ருக்மணிம்மா முதல் அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்க ‘தாலாட்டு’டன் நம் கதை ஆரம்பமாயிற்று.
நால்வர் அணி – ‘பவர் பாயிண்ட் குழுமம். (இடமிருந்து வலமாக.. விஜிசிவா, வனஜா முத்துக்கிருஷ்ணன், இரகுநாதன், ருக்மணி வெங்கட்ராமன்
முதல் கதையை நால்வரும் இணைந்து எழுதி விட்டோம். எழுதிய கதையை என்ன செய்வது..? எந்த இதழுக்கு அனுப்புவது..? என்று பல கேள்விகள். ‘யாமிருக்க பயமேன்’ என்று சொல்லி நீங்கள் களத்தில் குதித்தீர்கள். தமிழ்நெஞ்சம் அமின் ஐயாவுடன் பேசி, எங்கள் முதல் முயற்சியைப் பற்றி எடுத்துச் சொல்லி, தமிழ்நெஞ்சத்துடனான உறவுக்கான பல மான அடித்தளம் இட்டீர்கள்.
டிசம்பர் 2022 -ஆம் மாத தமிழ்நெஞ்சம் இதழில், நாம் நால்வரும் இணைந்து எழுதிய முதல் கதை பிரசுரமானது.
நால்வர் இணைந்து எழுதிய முதல் சிறுகதை.. தமிழ்நெஞ்சம் டிசம்பர் -2022 இதழில்.
நால்வரின் எழுத்துப் பயணத்தில் தமிழ்நெஞ்சம் இதழின் பங்கு என்ன.?
நம்முடைய ஒவ்வொரு சுதையும் குறைந்தபட்சம் 14 பக்கங்கள் முதல் அதிகபட்சமாக 21 பக்கங்கள் வரை இருந்தன. அவ்வளவு பக்கங்களையும் ஒவ்வொரு மாதமும் நம் கதைக்காக ஒதுக்கினார் தமிழ்நெஞ்சம் இதழின் ஆசிரியர் திரு அமின் ஐயா அவர்கள். மாதம் ஒரு சிறுகதை என்கிற அளவில், தொடர்ந்து 16 மாதங்கள் தமிழ்நெஞ்சம் இதழில் நாம் நால்வரும் இணைந்து எழுதிய சிறுகதைகள் வெளியாகின. அதற்கு வாய்ப்பளித்த தமிழ்நெஞ்சம் இதழுக்கும், ஆசிரியர் திரு அமின் ஐயாநால்வரும் இணைந்து எழுதிய கதையைப் பற்றிச் சொன்னீர்கள். எந்த வகையில் அது தனித்துவமாக விளங்குகிறது என்று கருதுகிறீர்கள்.?
பல வருடங்களுக்கு முன்னர் குமுதம் இதழில், அப்போது பிரபலமாக இருந்த சில எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய தொடர்கதை வெளிவந்தது. ஒவ்வொரு வாரமும் ஒரு எழுத்தாளர் சுதையைத் தொடர்வார்.
ஆனால் நாம் எழுதியது தொடர்கதை அல்ல. சிறுகதை. ஒரே சிறுகதையை ஒவ்வொரு அத்தியாயமாக நான்கு பேரும் எழுதினோம். இது நமக்குத் தெரிந்த வரையில் எழுத்துலகில் முதல் முயற்சி.
இது சமூகக்கதையா, காதல் கதையா. த்ரில்லரா, மர்மக் கதையா என்று நாம் நால்வரும் பேசி வைத்துக் கொண்டு எழுதிய கதை அல்ல. அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்த்த வேண்டும். முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நாம் விவாதித்ததில்லை.
முடிவு எப்படி இருக்கும் என்று கடைசியாக எழுதுபவருக்கே தெரியாது. மிக மிக சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட காதல் சுதை, முடிவில் த்ரில்லராக மாறியதும் உண்டு. த்ரில்லராக இருக்கும் என்று யோசிக்க வைத்த கதைகள் சுப முடிவு கண்டதுண்டு. நால்வருக்கும் சவாலாக அமைந்த எழுத்துப் பயணம் அது. அந்தப் பயணத்தில் ஓவியர்களும் இணைந்தது பெருமைக்குரிய விஷயம்.
ஆமாம். அதற்கான வாய்ப்பை தமிழ்நெஞ்சம் அமின் ஐயா அவர்களே வழங்கினார்கள்.
‘உங்கள் கதைக்கான ஓவியங்களை உங்களுக்குத் தெரிந்த ஓவியர்களையே வரையச் சொல்லுங்கள். அவர்களுக்கும் வாய்ப்பளிக்க தமிழ்நெஞ்சம் தயாராக இருக்கிறது..’ என்று சொல்லி எங்களை ஊக்கப்படுத்தியவர் தமிழ்நெஞ்சம் அமின் ஐயா அவர்கள்.

மிகவும் சிறப்பு. அந்த ஓவியர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.
நாங்கள் முதலில் அணுகியவர் ஏற் கெனவே ஓவியத்துறையில் இருந்த திருமதி லீனா கிரதர் அவர்களைத் தான். கேட்ட உடனே ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டார். எங்களுடைய பல கதைகளுக்கான ஓவியங்களை மிகவும் அருமையாக வரைந்தவர் அவர். அவருடன் மற்ற ஓவியர்களான திரு சரவணக்குமார். செல்வி கௌரி சிவா, செல்வன் கௌதம் அகிலன் என ஓவியத் திறமையுள்ள பலரை இணைத்தோம். எங்கள் நால்வர் அணியில் பன்முக ஆளுமை நிறைந்தவரான உங்கள் ஓவியமும் அதில் ஒன்று. எல்லா ஓவியர் களையும் அறிமுகம் செய்த பத்திரிகை தமிழ்நெஞ்சம் தான்.
(தமிழ்நெஞ்சம் அமின் ஐயாவுக்கு, நம்முடன் பயணித்த ஓவியர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)
அடுத்ததாக….நால்வரும் இணைந்து வெளியிட்ட புத்தகம் பற்றி.. அதன் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.
‘தமிழ்நெஞ்சம்’ இதழில் வெளியான நம் கதைகளை புத்தகமாகப் போட்டால் என்ன?’ என்கிற கேள்வியை வனஜாம்மாவும், ருக்மணிம்மாவும் வைத்தனர். மற்ற இருவரும் ஏற்றுக் கொண் டோம். தலைப்பு..?? நீங்களும், உங்கள் மகள் கௌரி சிவாவும் இணைந்து உங்கள் உறவுகளிடமும் நட்புகளிடமும் தலைப்புகளைக் கொடுத்து வாக்கெடுப்பு நடத்தி… முடிவில் நால்வரும் இணைந்து எழுதிய முதல் சிறுகதை நூலுக்கு ‘நாலும் எட்டும் பத்து’ என்கிற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.
பேக்கிடெர்ம் டேல்ஸ்’ நிறுவனத்தின் இணை இயக்குநரான திருமிகு உமா அபர்ணாவுடன் இணைந்து ‘புஸ்தகா” நிறுவனத்தாரின் பதிப்பில் நம் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நாலும் எட்டும் பத்து’ வெளியானது.
தங்களின் ராஜ்ஜியத்தில் அடுத்த இலக்கு எது..?
அக்கம் பக்கத்து ராஜ்ஜியங்களில் வெளிச்சத்துக்கு வராமலே மறைந்து விட்ட பல அரசர்கள், அரசிகள், மற்றும் தளபதிகள் ஆகியோரின் வரலாற்றுப் புனைவைப் பற்றி எழுத வேண்டும். அது என்னுடைய இலக்கு, கனவு. அதற்காக பல தகவல்களைத் திரட்ட வேண்டிய பெரும் பணி இருக்கிறது.


முகநூலில் எந்தெந்த குழுமங்களில் உங்களின் படைப்புகள் வெளி வந்துள்ளன..?
முகநூலில் பல குழுமங்களில் எழுதியிருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டு மென்றால்… ஆரம்பத்தில் தமிழ்ப் பட்டறை. பின்னர் கவிதைச் சாரல் சங்கம் மற்றும் நிலாமுற்றம் கதைக்களம் ஆகிய குழுமங்கள். இம்மூன்று குழுமங்களும் என்னுடைய இன்றைய நிலைக்கு அடித் தளமிட்டவை.
உங்கள் முகநூல் பயணத்தில் கவிதைச் சாரல் சங்கம் குழுவின் பங்கு என்ன?
என் எழுத்தை மெருகேற்றியதில் கவிதைச் சாரல் சங்கத்துக்கும் அதன் நிறுவுநர் சகோதரி பேச்சியம்மாள் ப்ரியா அவர்களுக்கும் மிகப் பெரிய பங்கு இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பு. சகோதரி பேச்சியம்மாள் ப்ரியா நியமித்த பல நடுவர்களின் பின்னூட்டங்கள் தந்த உற்சாகம் என்னை மென்மேலும் எழுதத் தூண்டிற்று.
கவிதைச் சாரல் சங்கம் தான் எனக்கு இன்னொரு முக்கியமானவரை அறிமுகப்படுத்திற்று. அங்கே சிறுகதைக்கான போட்டிகளில் பலர் நடுவராக வந்திருந்தாலும் அந்த முக்கியமானவரைப் பற்றி நான் இங்கே பதிவிட ஆசைப்படுகிறேன். நடுவராக அவர் தந்த பின்னூட்டங்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன. என் எழுத்தை, என் சிந்தனைகளை மாற்ற உதவின. சிறுகதை களுக்கான நடுவர் என்பதை விட ஒரு ஆசிரியராகவே இருந்து எழுத்தாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தன அவரது பின்னூட்டங்கள். சம்பிரதாயமான பாராட்டுகளோ, வாழ்த்துகளோ இல்லா மல் குறைகளைச் சுட்டிக் காட்டி, நிறைகளைப் பாராட்டி நடுவர் பணிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் அவர். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய கவிதைச் சாரல் சங்கத்திலேயே அவருடனேயே நடுவராகப் பயணிப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. மேலும், ஹைக்கூ பற்றிய என்னுடைய இப்போதைய சிறிய புரிதலுக்கும் அவர்தான் அடித்தளமிட்டவர். எதற்கு சஸ்பென்ஸ்?? அவர்…. இந்த பேட்டியை எடுத்துக் கொண்டிருக்கும் நீங்கள் தான்.
அதே கவிதைச் சாரல் மூலம் அறிமுக மானவர்கள் தான் வனஜாம்மாவும், ருக்மணிம்மாவும். நாம் நால்வரும் இணைந்து உருவானதுதான் ‘பவர் பாயிண்ட்’ குழுமம்.
உண்மை தான். நடுவராகப் பணியாற்றியதாகச் சொன்னீர்கள். அந்த அனுபவம் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லுங்கள்.
அன்புத் தம்பி கவிஞர் ப. வெங்கட் ரமணன் மூலம் அறிமுகமானார் சகோதரி ஜோஸ்பின் மேரி அவர்கள். அவர் தன்னுடைய ‘கவிஞர்கள் கலைக்கூடம்’ குழுமத்தில் கட்டுரைப் பதிவுக்கு நடுவ ராகப் பயணிக்க வாய்ப்பளித்தார். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக என்னை நடுவர் பணியில் பயணிக்க வைத்தார் சகோதரி ஜோஸ்பின் மேரி.. அதைத்தொடர்ந்து ‘பொற்கயல் கவிக்களஞ்சியம் குழுமத்தில் ‘விவாதமேடைக்கும் நடுவராகப் பயணித்தேன்.
இடையில் தம்பி ப. வெங்கட்ரமணன் மூலம் வேறு சில குழுமங்களில் சிறு கதைக்கு நடுவராகப் பயணித்தாலும், விஜிம்மா மூலமாக கவிதைச் சாரல் சங்கத்தில் நடுவராகும் வாய்ப்பும் வந்தது. கதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் பின்னூட்டங்கள் அளிக்கும் போது விஜிம்மாவின் பாணியையே நானும் பின்பற்றினேன். அந்த பாணியை பலரும் பாராட்டினார்கள்.
இப்போதும்நடுவராகப் பயணிக்கிறீர்களா?
இல்லை. காரணம்… திறமையுள்ள மற்றவர்களுக்கான பாதையை நான் அடைத்து விட்டாற் போன்ற ஒரு உணர்வு. ‘பலருக்கும் இதே போல் வாய்ப்பளிக்கப்பட வேண்டும், அவர்களுடைய திறமைகளும், சகோதரி பேச்சியம்மாள் ப்ரியா, சகோதரி ஜோஸ்பின் மேரி போன்றவர்கள் மூலம் வெளி உலகிற்குத் தெரியப்பட வேண்டும்’ என்று விரும்பினேன். ‘நிரந்தர நடுவர்’ எனும் போது ஒரு தேக்கம் உருவாகி விடுகிறது.
உங்களுடைய எழுத்துகள் வெளிவந்த இதழ்கள். புத்தகங்கள் மற்றும் நீங்கள் வெற்றி பெற்ற சிறுகதைகள்.. இவைகளைப் பற்றிச் சொல்லுங்கள்.
- தினச்சுடர் நாளிதழ். (துடிக்கும் குரல் பகுதி)
- வாங்க பேசலாம் – மின்னிதழ் (சிறுகதை)
- ‘கண் சிமிட்டும் விண்மீன்கள்’ – (சிறுகதை நூலில் என் சிறுகதை)
- அபயராணி அப்பக்கா தேவி – (கௌரா பதிப்பகத்தில் முதல் பரிசு பெற்ற வரலாற்று புனைவு சிறுகதை)
- மேற்கிலும் மறையாத சூரியன். (கலைஞர் பற்றிய நூல்)
- தமிழ்நெஞ்சம் மின்னிதழ். (சிறுகதைகளும், கவிதைகளும்.
- வலிமைமிகு எண்ணங்கள். (தன்னம்பிக்கை நூலில் என் கட்டுரை)
- நாலும் எட்டும் பத்து நால்வர் இணைந்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
- கொலுசு – மாத இதழ் (சிறுகதைகள்)
- ஹைக்கூ திண்ணை – மின்னிதழ் (ஹைக்கூ கவிதைகள்)
- பூஞ்சோலை – மின்னிதழ்.(ஹைக்கூ
- கதைப்போம் 2025 (திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுக்குரிய சிறுகதைகளின் தொகுப்பு நூலில் என் சிறுகதை)
- நம் உரத்த சிந்தனை. (கட்டுரை)
மிக்க மகிழ்ச்சி. தங்களின் திறமை யையும், உழைப்பையும் கண்டு வியக்கி றேன் அண்ணா.
இதுவரை தங்களைப் பற்றி பல சுவாரசியமான புதிய தகவல்களை, மிகவும் உற்சாகமாக பகிர்ந்து கொண்டீர்கள். உங்களுடன் உரையாடிய இந்த தருணங் கள் எனக்கான தேடல்களின் சங்கமமாக இருந்தது.
தங்களின் எழுத்துப்பணி சிறக்கவும், தங்களின் எழுத்தாற்றல் எனும் நதி பல வாசகர்களின் உள்ளங்களை வருடிச் செல்லவும், தங்களின் எழுத்து தாகத்திற்கு பல உயரிய விருதுகள் கிடைக்கவும், மென்மேலும் பல வெற்றிகளை ஈட்டவும் ‘தமிழ்நெஞ்சம்’ இதழ் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி விஜிம்மா. என்னை நானே திரும்பிப் பார்க்க வைத்த அருமையான கேள்விகளாகவும், என்னிடமிருந்து பல விரிவான, விளக்கமான பதில்களைப் பெற வைத்த சிறப்பான கேள்விகளாகவும் உங்கள் கேள்விகள் அமைந்திருந்தன.. தமிழ்நெஞ்சம் இதழுக்கும், எனக்கு இந்த வாய்ப்பு அளித்த அமின் ஐயாவுக்கும். இந்த இனிய மாலைப் பொழுதை சுவாரசியமாக ஆக்கிய உங்களுக்கும் என் பேரன்பின் நன்றி.
அன்பின் நன்றி.