மின்மினிப் பூச்சிகள் மின்னலடிக்க பொன்னொளி பூத்தது மனவானில்
இலக்கிய முதுசம் சிரேஷ்ட எழுத்தாளர், கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் எழுத்துலகில் மிகுந்த முக்கியத்துவத்துடன் நோக்கப்படுபவர். இவரது கலை இலக்கியச் செயற்பாடுகள் காத்திரமானவை. எல்லா நேரமும் உற்சாகம் குன்றாமல் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை கொண்ட இவர், பல்துறை எழுத்துக்களால் பாராட்டும் பல்வேறு விருதுகளும் பெற்றவர். இவரது இலக்கியப் பணியின் (1974 – 2024) ஐம்பதாவது வருட பூர்த்தியினையொட்டி பொன் விழா நிகழ்வு 2024.08.18 இல் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் கொண்டாடப்பட்டது. இது ஒரு சரித்திர நிகழ்வாக அமைந்தது. எழுத்துத் துறையில் இன்னமும் கவனக் குவிப்புடன் செயற்பட்டு வரும் இவருடனான நேர்காணலைத் தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
இலக்கியத் துறையில் பொன் விழாக் கண்ட இலக்கிய முதுசம் பீ.ரீ. அஸீஸ் அவர்களுடனான விசேட நேர்காணல்
நேர்கண்டவர் :-
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?
பிச்சைத் தம்பி அஸீஸ் எனும் இயற் பெயரைக் கொண்ட நான், 1974 இல் கிண்ணியாச் செல்வன் எனும் புனைப் பெயரில் எழுதத் தொடங்கி 2024 இல் பொன் விழா கொண்டாடும் பேற்றினை அடைந்தேன். இப்பேறானது எனது வாழ்க்கைப் பாதையில் பொன் எழுத்துக்களால் அடையாளமிடப்பட்ட நிகழ்வாகும். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான போக்கின் அறுவடையாக இன்று நான் காணுகின்ற இலக்கிய இலக்கானது என்றைக்குமே உதாரணமானதொன்றாக நின்று நிலைத்திருக்கும் என்பது உறுதியானதும் திடமானதுமான நம்பிக்கையாகும்.
பல்வேறு நூல் வெளியீடுகள், வெற்றிகள் முகங்கொடுத்த சவால்கள், சுறுசுறுப்பும் உற்சாகமும் நிறைந்த செயற்பாடு, தோல்வியைக் கண்டு துவளாத மனப்பக்குவம் என்பன என்னை ஓர் உயர் நிலைக்கு கொண்டு வந்ததெனலாம். இதனையே எனது அறிமுகமாக எடுத்துக் கொள்ளுங்களேன்.
உங்களது இலக்கியத் தடத்திற்கு வழி வகுத்தவர்களைப் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது இலக்கியப் பயணத்துக்கு வழி வகுத்தவர்களாக பலபேரை அடையாளப்படுத்த முடியும். இவர்களது ஆதரவும், ஒத்துழைப்பும் நிறையவே கிடைக்கப் பெற்றதால்தான் பொன்னொளி மலர் வெளியீடும், பொன்விழாவும் காத்திரமாகக் கொண்டாடப்பட்டது. அத்தகையவர்களைக் கட்டாயம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எனது தாயார் ஹாஜரா உம்மா, தகப்பனார்பிச்சைத் தம்பி, பாட்டனார் அலியான் பணிக்கர் மற்றும் எனது வாழ்க்கைத் துணைவி மர்ஹுமா சித்தி கம்சுனா மேலும் எனது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் போன்றோரையும் குறிப்பிட முடியும். இவற்றோடு எனது எழுத்துலகப் பயணிப்பில் 2011 அம் ஆண்டு முதல் இற்றைவரை கைகோர்த்து நிற்கும் எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா மற்றும் மர்ஹுமா எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா, அமரர் நந்தினி சேவியர் முதலானவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
மேலும் எனது ஆரம்ப கால எழுத்துலக வழிகாட்டிகளாக கவிஞர் அண்ணல், ஈழமேகம் பக்கீர் தம்பி, திமிலைத்துமிலன், திமிலைக் கண்ணன் போன்றோரும் டாக்டர்ப்ஹில்மி மஹ்ரூப் போன்றோரும் குறிப்பிடக்கூடியவர்கள். அத்துடன் முன்னோடிகள் கலை இலக்கிய வட்ட அங்கத்தவர்கள், அதன் செயலாளர் ஏ.எம். கஸ்புள்ளா மற்றும் நண்பர்கள், நல்லெண்ணம் கொண்டவர்கள் எனப் பலர் இருக்கின்றனர். மேலும் மிக முக்கியமாக இலங்கையின் தேசிய பத்திரிகைகள், பத்திரிகையாசிரியர்கள், துணையாசிரியர்கள், வலைத்தளங்கள், வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள் என்பனவும் நன்றிகளோடு நினைவு கூறத்தக்கது.
இலக்கிய வாழ்வில் கடந்து வந்த உங்களது பொன் விழா நிகழ்வு பற்றிக் குறிப்பிடுங்கள்?
கடந்த 2024.08.18 ஆம் திகதி நடைபெற்ற எனது பொன் விழா நிகழ்வு பற்றிய சில முக்கிய விடயங்களை ஞாபகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். இந்நிகழ்வு பல முக்கிய செய்திகளை எனது வாழ்வில் படிப்பினையாக்கி நின்றது.
இலக்கிய வாழ்வில் 50 வருடங்கள்
இலக்கிய போட்டி நிகழ்களில் 50 முதலிடங்கள்
ஐம்பது நூல்களின் திறன் நோக்கு (கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அச்சிட்டு தரப்பட்டமை)
பொன்னொளி மலரின் 50 பிரமுகரின் கருத்துரைகள்
எனது திருமண வாழ்வும், 50 வருடங்களை மெல்லக் கடந்த நிலை
எனது மூத்த மகனின் 50 ஆம் ஆண்டு பிறந்தநாள்
பொன் விழா நிகழ்வு காலத்தில் நீண்ட கால இடைவெளியின் பின் இளைய மகனுக்கு ஓர் மகள் பிறப்பு
இவ்வாறான பல முக்கிய நிகழ்வுகள் பொன் விழாக் காலத்தில் நடந்தேறி இருப்பது ஆச்சரியமாக நோக்கத்தக்க தாகும். இதனால் பொன் விழா நிகழ்வும், “பொன்னொளி” பொன்விழா மலர் வெளியீடும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுத்திகழ்கிறது.
உங்களுடைய பொன் விழா நிகழ்வில் வெளியீடு செய்யப்பட்ட “பொன்னொளி” மலர் பற்றிக் குறிப்பிடலாமே?
எனது பொன் விழா நிகழ்வின் ஞாபகார்த்தமாக “பொன்னொளி” மலர் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது. இம்மலரில் 50 முக்கியத்தர்களின் கருத்துரைகள் உள்ளடக்கம் பெற்றிருப்பது விஷேட சிறப்பம்சமாகும். மேலும் எழுத்தாளர்களின் கருத்துரைகள், ஆய்வு கள், கவிதைகள், கட்டுரைகள், வாழ்த் துரைகள், பார்வைச் சுருக்கம், அறிமுகம், நினைவுகளும் நிகழ்வுகளும் போன்ற பல தகவல்களும் மலரில் இடம்பெற்றுள்ளன. அத்தோடு இந்த நிகழ்வில் 50 இலக்கியவாதிகளுக்கு பொன்னொளி விருதும் வழங்கி கௌரவிப்புச் செய்யப்பட்டது. விஷேடமாக முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தினரால் எனது இலக்கியப் பணிக்கான கௌரவமாக பொன்னொளி சாதனையாளர் விருது உரித்தாக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உணர்வூட்டும் கிராமியச் சுவைகள் நிறைந்த உங்களது கட்டுரைகள் பற்றி விஷேடமாக என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள்?
எழுத்துரு கிராமிய சுவை நிறைந்த கவிகள் எவர் மனதையும் இலகுவில் கவர்ந்திழுக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது. அவை விரைவாக சமூகத்தை சென்றடைந்து கிராமிய படைப்புகளின்பால் தன் கவனத்தை திருப்புகின்றன. உதராணமாக அவ்வாறான கட்டுரைப் புத்தகத்தில் உள்ள சில கவிகள இதோ:-
நாத்துக்கு வெச்ச வெத
நடுவால வெடிச்சிருக்கு
சோத்துக்கு ஆகுமெண்டால்
செறிமானம் ஆகாதாம்
செம்பருத்தி பூ மேல
சித்தெறும்பு ஓடினது
குத்தமெண்டு காட்டினா
மெத்தவுந்தான்
கவல வரும்
மௌத்து வர அந்த
நெனவு வரும்
மதமதத்த