வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவரும், கவிஞரும், நூலாசிரியருமாகப் பன்முக திறமைகளுடன்  மிளிரும்  கவிஞர் நஜ்முல் ஹுசைன் நேர்காணலில் இணைகிறார்.
நேர்கண்டவர் – வஃபீரா வஃபி

வேறாக வேர்கள் நூல் வெளியீட்டு விழாவின் போது
மே – 2026 / 96 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
  1. உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தை தாருங்கள்!
நான் இலங்கையில் கொழும்பு தலை நகரை பிறப்பிடமாக கொண்டவன். ஹமீத் அல் ஹுசைனி எனும் பிரபல பாடசாலையில் கல்வி கற்றேன். தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றேன்.
எனது மனைவி பிரபல ஊடகவிய லாளர், எழுத்தாளர். அரசாங்க தகவல் திணைக்கள தகவல் அதிகாரியாக பணியாற்றிய கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன். எங்களது ஒரே மகள் சட்டத்தரணி நூருஸ் ஷப்னா சிராஜுதீன்.
பாடசாலை நாட்களிலிருந்தே  எழுத்துத் துறையின் பக்கம் எனது கவனத்தைத் திருப்பினேன்.  இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் குரல் கொடுத்தேன். முஸ்லிம் சேவையில் ‘இஸ்லாமிய சமய பாடசாலை’ நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக பங்குபற்றினேன். 1986 ல் ‘இளைஞர் இதயம்’ எனும் நிகழ்ச்சியை நடத்தினேன்.  தேசிய பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவை எழுதியிருக்கிறேன். முதல் ஆக்கம் தமிழகத்தின் ‘குமுதம்’ சஞ்சிகையில் வெளிவந்தது. ‘ராணி’ இதழிலும் கவிதை வெளிவந்துள்ளது.
  1. உங்கள் இலக்கியப் பணிகள், முன்னெடுப்புக்கள் பற்றி….
ஆம் இலக்கியத்தோடுதான் வாழ்ந்து வருகிறேன். ஆரம்பத்தில் மரபுக் கவிதை களில் ஏற்பட்ட ஈர்ப்பு இலக்கியத் துறைக்கு இழுத்து வந்தது. பிறகு புதுக்கவிதையிலும் ஆர்வம் ஏற்பட்டது. அதன் காரணமாக 1992 ல் ‘பனித்தீ’ எனும் புதுக்கவிதை நூலை வெளியிட்டேன்.
1981ல் உருவான இலங்கை தமிழ்க் கவிஞர்களின் தேசிய அமைப்பான ‘வலம்புரி கவிதா வட்ட’ மேடைகளில் அக்காலத்திலேயே இணைந்து கவிதை பாடியமை இக்கவிதை நூலை வெளியிடும் ஆர்வத்தைத் தந்தது.  இப்போது ‘வலம்புரி கவிதா வட்ட’ தலைவராக கடந்த  2023 ல் இருந்து வழிநடத்தி வருகிறேன்.
  1. வகவம் என்றொரு அமைப்புக்குத் தலைவராக, பௌர்ணமிகள் நூறைத் தாண்டி வெகுதூரம், வெற்றிகரமாக இலக்கிய சங்கமத்தை கொண்டு செல்கிறீர் கள். இதன் ஆரம்ப வளர்ச்சி, எதிர்கால முயற்சிகள் பற்றி சொல்லுங்களேன்!
வகவம் என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் வலம்புரி கவிதா வட்டம் 1981 ல் ஆரம்பிக்கப்பட்டது. டொக்டர் தாஸிம் அகமத், மறைந்த சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி, மறைந்த கவின்கமல்,  கலைக்கமல், டொக்டர் நூர்தீன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட அமைப்பு. நானும் அதன் ஆரம்ப கால உறுப்பினர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் மேடையில் கவிதை பாடும் கவிஞர்களுக்கு களமமைத்துக் கொடுப்பதே அதன் முதலாவது இலக்கு. எமது நாட்டில் ஏற்பட்ட சில அசாதாரண சூழல் கவியரங்கை தொடர்ந்து நடத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தியிருந்தது. மீண்டும் 2013ல் அது மீள் ஆரம்பம் செய்யப் பட்டபோது நான் தலைவராக நியமிக்கப் பட்டேன். இறைவன் அருளால் எனது தலைமையின் கீழ் இதுவரை 120 கவியரங்கங்கள் செய்திருக்கிறோம்.  இது தமிழ் பேசும் கவிஞர்களின் அமைப்பு. இதில் தமிழர், முஸ்லிம் என்ற பேதமின்றி மிகவும் ஒற்றுமையுடன் பயணம் செய்கி றோம். இந்த அமைப்பின் செயலா ளராக இளநெஞ்சன் முர்ஷிதீனும், பொருளாளராக ஈழகணேஷும், தேசிய அமைப்பாளராக எஸ். தனபாலனும் விளங்குகின்றனர்.
கொரோனா காலத்தில் நாடே முடங்கியிருந்த நேரத்தில்கூட நாம் எமது பௌர்ணமி கவியரங்கை முடக்கவில்லை.  எமது 67 ஆவது கவியரங்கை 07.05.2020 அன்று Zoom ல் நடத்தினோம். தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் நடந்த இக் கவியரங்கே முதலாவது Zoom ல் நடந்த கவியரங்காக இருக்க வேண்டும். அதுபோன்றே 68 ஆவது கவியரங்கு கவிச்சுடர் சுபாஷினி பிரணவனின் தலைமையில் 05.06. 2020 ல் Zoom ல் நடந்தது.
கொழும்புக்கு அப்பாலும் பலகத்துறை இலக்கிய வட்டத்தோடு இணைந்து பலகத்துறையில் எங்கள் கவியரங்கை நடத்தியுள்ளோம்.
இரண்டு ஆண்டு விழாக்கள் நடத்தி யிருக்கிறோம். எமது நூறாவது கவியரங்கை விழாவாக நடத்தினோம். அதில் சிறப்பம்ச மாக எமது வகவ மேடையில் கவிதை பாடிய பெரும்பான்மையான கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து ‘வகவக் கவிதைகள்’ என்ற நூலை வெளியிட்டோம். இதை கவிஞர் ஈழகணேஷும், நானும் தொகுத்து வழங்கினோம். எமது ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி அவர்களின் மறைவையொட்டி பிரத்தி யோகமாக நினைவரங்கு ஒன்றை நடாத்தினோம். எமது 125 ஆவது கவியரங்கைக்கூட விழாவாக நடாத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
பல புதிய திட்டங்களோடு இளைஞர், யுவதிகளின் பலத்தோடு இன்னும் முனைப்போடு பயணம் செய்யவும் இளைய தலைமுறையினரிடம் இதனை ஒப்படைக்கவும் காத்திருக்கிறோம்.
சென்னை, பனையூரில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் இல்லத்தில்
கத்தார் கவியரங்கு
குடும்பத்தினருடன் - மனைவி நூருல் அயின், மகள் நூருஸ் ஷப்னா, மருமகன் சிராஜுதீன், பேரர்கள் முஹம்மத் சிமான், முஹம்மத் சிமாஸ்
ஆதவன் தொலைக்காட்சி நிகழ்வில் கவிராஜ் அவர்களுடன்.
கம்பளைதாசன் அவர்களின் முத்தமிழ் மன்ற ஏற்பாட்டில் நடந்த பட்டிமன்றத்தில் கொழும்பு கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் பொன்னாடை பார்த்துக்கிறேன்
வலம்புரி கவிதா வட்டத்தின் நூறாவது கவியரங்கமும், 'வகவக் கவிதைகள்' நூல் வெளியீடும்.  மேடையில் இலங்கை தேசிய பத்திரிகைகளான தினகரன் பிரதம ஆசிரியர் தெ. செந்தில் வேலவர், வீரகேசரி பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், பொருளாளர் ஈழகணேஷ், தேசிய அமைப்பாளர் எஸ். தனபாலன்
தமிழ்நெஞ்சம் ஆசிரியர் திரு. அமின் அவர்களுக்கு நூல்கள் வழங்கியத் தருணம்.
  1. பலவித இலக்கிய நிகழ்வுகளுக்காக கடல் கடந்த பயணங்களையும் மேற் கொண்டிருக்கிறீர்கள். அவற்றுள், உங்கள் மனது மறக்காத ஒரு நிகழ்வாக எதைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்?
ஆம், 2016 ல் தமிழகத்திலே திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சுப வீரபாண்டியன், கவிஞர் இளமதி போன்றோர் முன்னிலையில் திருமண வாழ்த்துக் கவிதை பாடியது, 2022 ல் ஸ்கை தமிழ் பணிப்பாளர் ஜே.எம். பாஸித் ஏற்பாட்டில் “வண்ணத் தமிழெடுப்போம் வானமெங்கும் சிறகடிப்போம்” எனும் மகுடத்தில் கத்தார் நாட்டில் இலங்கை இந்திய கவிஞர்களுக்கு தலைமை தாங்கி கவியரங்கம் நடத்தியமை போன்றவை இன்றும் நினைவில் நிற்கின்றன.
2011 ஆம் ஆண்டு மலேசிய கோலாலம்பூ ரில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் தலைமையில் சர்வதேச கவிஞர்களுடன் கவிதை பாடிய அந்த நிகழ்வு கொஞ்சம் ஆழமாகவே எனது மனதில் இடம்பிடித்துள்ளது.
  1. உங்கள் படைப்புக்கள், நூல்கள் பற்றி….
1992 ம் ஆண்டு ‘பனித்தீ’ எனும் புதுக்கவிதை நூலை வெளியிட்டேன். 2018 ஆம் ஆண்டு ‘இனிவரும் நாட்களெல்லாம்’ என்ற கவிதை நூலை வெளியிட்டேன். இதனை நான் வெளியிட தயாரான நேரம் எனது மனைவி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், 25 வருடங்களுக்குப் பிறகு ஒரு நூல் வெளியிடுவதா என்று சொல்லி, நான் மேடைகளில் பாடிய கவிதைகளைத் தொகுத்து அதனை ‘நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள்’ என்ற பெயரில் அதே வேளை வெளியிட்டார். இதனை அவர் எனக்குத் தெரியாமலேயே இரகசியமாகவே செய்தார். அதன் இறுதிக் கட்டத்திலேயே அது எனக்கு தெரியவந்தது.
நான் பத்திரிகைகளுக்கு சஞ்சிகை களுக்கு எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து 2023 ல் ‘வேறாகா வேர்கள்’ எனும் நூலை வெளியிட்டேன்.
இது தவிர மேமன்கவியோடு இணைந்து ‘வகவச் சுவடுகள்’, ஈழகணேஷோடு இணைந்து ‘வகவக் கவிதைகள்’ ஆகிய நூல்களுக்கு தொகுப்பாசிரியராக  இருந்தி ருக்கிறேன்.
  1. ஓர் எழுத்தாளன் எப்போது மனநிறைவு பெறுகிறான்?
தனது எழுத்து அங்கீகரிக்கப்படும் போது ஓர் எழுத்தாளன் மனநிறைவு பெறுகிறான். எல்லா எழுத்தாளர்களும் தங்கள் எழுத்து பாராட்டப்பட வேண்டும் என்று நினைப்பது  இயல்பு. ஆனால் எமது எழுத்து பற்றிய மற்றவர்களின் கருத்துகளையும் நாம் ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வலம்புரி கவிதா வட்டம் சார்பில் கவிமாமணி அல் அஸூமத் அவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 'வகவ விருது' வழங்கியபோது
  1. இன்றைய தலைமுறையினருக்கு இலக்கியம் மற்றும் வாசிப்பு மீதான பிடிப்பு குறைந்திருப்பதற்கு காரணம், புதிய தொழிநுட்ப முறைகளால் ஏற்பட் டுள்ள கவனச்சிதறலா அல்லது இளம் பருவத்தினரின் அலட்சியப் போக்கா?
அதனை புதிய தொழில்நுட்ப முறைகளால் ஏற்பட்டிருக்கும் கவனச் சிதறல் என்று சொன்னால் அது பிழையல்ல.
ஆனால் இந்த தொழிநுட்பம் பழைய இலக்கியங்களை அவர்கள் இலகுவில் தேடிப்பிடித்து  கற்க வைக்கின்றது என்ற உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நூலாக கையில் எடுத்து வாசிப்பது குறைந்திருந்தாலும் வலைத்தளங்களில் வரும் ஆக்கங்கள், செய்திகள் இன்றைய இளைய தலைமுறையினராலும் பரவலாக வாசிக்கப்படுகின்றன.
வாசிப்பு குறைந்து விட்டது என்று சொல்லுவதைவிட வாசிப்பு முறை மாறிவிட்டது என்று சொல்லலாம்.
  1. AI எனும் செயற்கை நுண்ணறிவைப் பற்றிய உங்களது கண்ணோட்டம் எப்படி யிருக்கிறது?
இன்று நாங்கள் அதிசயக்கத்தக்க வகையிலே AI யின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவற்றில் நாம் தெரிந்து கொண்டிருப்பவைகளையும் தாண்டி அது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஒரு கவிதை எழுத, கதை எழுத ஓர் எழுத்தாளனே தேவையில்லை என்ற நிலையினை பார்க்கும் போது மிகவும் கவலையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
ஒரு பாடலை எழுதி இசையமைப் பாளரின்றி AI உதவியுடன் ஒலிப்பதிவு செய்தபோது மகிழ்ந்த எங்களுக்கு கவிதை, கதையை Al ல் செய்யும்போது கோபம் வருகிறது.
எனினும் AI ன் பயணம் இன்னும் பூதாகரமாகத்தான் அமையும் என்பதை எதிர்வு கூறலாம்.
  1. தமிழ் பேசும் கலைஞர்களுக்கான, எழுத்தாளர்களுக்கான அரச அங்கீகா ரங்களும், அனுசரணைகளும் கிழக்கு மாகாணத்தைப் போன்று, மேல் மாகாண வாழ் கலைஞர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை என்று பரவலாகப் பேசப்படும் கருத்தில் எந்தளவு உண்மை இருக்கிறது?
ஆம். இது ஓர் உண்மையான விடயம். வடக்கு கிழக்கு போன்று தமிழ் கலைஞர்களை, எழுத்தாளர்களை அடையாளம் காணமுடியாத பெரும் பான்மை இன மக்கள் இதற்கான நடுவர்களாக நியமிக்கப்படுவதே இதன் முதல் காரணமாகும்.
மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்த கலாபூஷணம் அரச விருது போன்றவை கொழும்பு,  கம்பஹா போன்ற மாவட்டங் களில் தமிழ், முஸ்லிம் கலைஞர்களை அடையாளம் காணாது  (புறக்கணித்து என்ற சொல்லை உபயோகிக்கவில்லை) சில ஆண்டுகளாக விருது வழங்கி எமது வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறார்கள்.  தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் விண்ணப்பித்தாலும் கூட அவற்றை வாசித்துப் பார்க்க பொறுப்பான ஒருவருமே இல்லை என்பது வேதனையானது.
இவ்வாறுதான் இன்னும் பல விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. AI பற்றி பேசும் இந்த யுகத்திலும் இவ்வாறான தவறுகள் நடைபெறுவதை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும்?
கிழக்கு மாகாணத்தில் வீடு தேடிச் சென்று கலைஞர்கள் கௌரவிக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இங்கே விண்ணப்பித்தவர்கள் கூட கண்களில்படாமல் இருப்பது வேதனை தருகிறது.
  1. இலங்கையைப் பொறுத்தவரை இலக்கியக் குழுமங்களின் வளர்ச்சியும், அவற்றின் பங்களிப்பும் எப்படி அமைந் துள்ளன?
அன்று முதல் இன்றுவரை எம் நாட்டில் இலக்கியக் குழுமங்கள் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றன. அதன் மூலமாகத்தான் நாம் எம்மிடையே பல இலக்கியவாதிகளை அடையாளம் கண்டிருக்கிறோம்.  இன்றும் அவ்வாறான பல அமைப்புகள் இயங்கி தங்களாலான பங்களிப்புகளை செய்து வருகின்றன.   இடைநடுவில் செயலிழந்த சில அமைப்பு களும் இருக்கின்றன.  காலத்தின் ஓட்டத்தில் அவையெல்லாம் தவிர்க்க முடியாதவை.
  1. சமூக சீர்கேடுகளைத் தடுப்பதில் ஓர் எழுத்தாளனின் பணியும், பங்களிப்பும் எவ்வாறு அமைய வேண்டும்?
ஓர் எழுத்தாளனின் கடமையாக அது இருக்கிறது. வெறும் சுவைக்காக மட்டும் எழுதிவிட்டுப் போகக் கூடாது. தமது எழுத்தின் மூலம் சமுதாயத்தில் காணப்படும் குறைகளை திருத்த முடியுமாறு ஓர் எழுத்தாளன் எழுதுகிறான் என்றால் அவனை வெற்றிப் பெற்ற எழுத்தாளன் எனலாம். வாசிக்கும் வாசகர்களை தடம்மாற வைக்கும் எழுத்துகளை எழுதுபவர்கள் சிலவேளை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ஆகலாம். எனினும் அவர்கள் பாவத்தின் பங்காளர்களாகத்தான் இருக்க முடியும்.
  1. பண்டைய கால இலக்கியம் என்பதை சற்றும் திரிபடைந்து விடாமல், எதிர்காலத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க என்ன செய்யலாம்?
நூற்றுக்கு நூறு அவ்வாறு செய்தல் சாத்தியப்படும் என்று கூற முடியாது. தலைமுறைக்கு தலைமுறை சிந்தனை மாறுபடுகிறது. புதிய தலைமுறைக்கு பழைய தலைமுறையினரின் செயல் நகைப்புக்கிடமாகக்கூட இருக்கலாம்.
அதனால் இலக்கியத்தை அவ்வாறே கடத்துதல் நடைமுறை சாத்தியமற்றது. எனினும் பழம் பெரும் இலக்கியங்களின் பெருமைகள் கட்டாயம் இளம் தலை முறையினருக்கு எத்தி வைக்கப்படல் வேண்டும். அதனையும் தெரிந்து கொண்டு படைக்கப்படும் நவீன இலக்கியம் பலம் மிக்கதாய் அமையும்.
கலாபூஷணம் அரச விருது பெற்றபோது
தமிழகத்தில் திராவிடர் இயக்கப் பேரவையால் நடத்தப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் கவிதை வாசித்தல்
  1. இன்றைய சமூகத்தினரிடையே மொழிப்பற்று, இலக்கிய ஈடுபாடு என்பன மேம்பட என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?
தமிழுக்கு அமுதென்று பேர் என்று வெறுமனே சொல்லிக் கொண்டிருக்காமல் நாம் எமது மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். தமிழை பிழையற எழுதும் சமூகத்தை உருவாக்க வேண்டும்.
இன்று தமிழ் பேசும் மக்கள் உலக ளாவிய ரீதியில் கால் வைத்திருக்கி றார்கள். அவ்வாறு செல்பவர்கள் தங்கள் தாய் மொழி தமிழ் என்பதை மறக்கக் கூடாது. இன்னொரு நாட்டுக்கு புலம்பெயரும்போது அந்நாட்டு மொழி யினைக் கற்பதுவும், தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதுவும் தவறில்லை. என்றாலும் தாய் மொழியாம் தமிழை எந்த வேளையிலும் கைவிடக் கூடாது.
வெளிநாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்களில் சிலர் தமிழ்ப் பற்றோடு வாழ்ந்தாலும் பலர் தமிழை மறந்தே வாழ்கின்றனர். அவர்களது பிள்ளைகள் தமிழை பேசுவதை விட்டும் மறந்து வாழ்கின்றனர். பிறநாடுகளில் பரந்து வாழ்வதன் மூலம் தமிழை இன்னும் இன்னும் வளர்க்க உறுதுணை புரிகின்ற வாய்ப்பை நாம் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்.
பண்டைய எகிப்து பிரமிட்டில் எமது தமிழ் எழுத்துகள் இருப்பதை நாம் அண்மையில் அறிந்தோம்.  அதனைப் பார்த்தபோது எனக்கு தோன்றியது இதுதான், அன்று எகிப்தில் முத்திரை பதித்த தமிழ் மகனும் தமிழில் பேசுவதைத் தவிர்த்திருப்பான்.  அவன் ஒழுங்காக தமிழ் பேசியிருந்தால் இன்று எகிப்திலும் தமிழ் பேசு மொழியாகி இருக்குமே, என்று
  1. இதுவரை நீங்கள் பெற்ற விருது கள், பரிசுகள், கௌரவங்கள் பற்றி சொல்லுங்கள்!
2002ம் ஆண்டு அரச விருதான கலாபூஷணம் விருது
இலங்கை அரசின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உலக  இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் போது “படைப்பாளர் விருது” 
அகில இன நல்லுறவு ஒன்றியம் வழங்கிய “கவிமணி” பட்டம். 
இசைக்கோ என்.எம்.நூர்தீனின் தலைமையில் இயங்கிய முஸ்லிம் கலைஞர் ஒன்றியம் வழங்கிய “கவிமாமணி”
ஜே.எம். பாஸித்தின் ஸ்கை தமிழ் வழங்கிய ‘துணிந்தெழு’ விருது
மேலும் பல கலை இலக்கிய அமைப்புக்கள்  பாராட்டி கௌர வித்துள்ளன.
தினகரன் வாரமஞ்சரி செந்தூரம், தமிழனின் தமிழ் முரசு,
டொக்டர் ஞானசேகரனின் ‘ஞானம்’,  அஷ்ரப் சிஹாப்தீன் வெளியிட்ட ‘யாத்ரா’,
வஃபீரா வஃபீயின் முத்தமிழ் கலசம் ஆகியன என்னை அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளன.
  1. ஒரு மூத்த எழுத்தாளராக வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எல்லா மூத்த எழுத்தாளர்களும் சொல்வதைத்தான் நானும் சொல்ல விழைகிறேன்.  நிறைய வாசியுங்கள்; தரமானவற்றை இனங்கண்டு வாசியுங்கள். அவை உங்களை வளப்படுத்தும்.  ஒருசில வரிகளை எழுதும்போதே ‘மகாகவி’ பட்டம் வழங்கும் முகநூல் குழுமங் களை நம்பாதீர்கள். அவை உங்களுக்கு. வழிகாட்டுவதற்கு பதிலாக உங்களை தவறான பாதையில் அழைத்துச் செல் கின்றன.  வெறுமனே பட்டங்களால் உங்களை அலங்கரிக்க எண்ணாதீர்கள். அவை மாயை என்று தெரிந்து கொள்ளுங்கள். நிறைய வாசித்து விட்டு நீங்கள் எழுதும் உங்கள் எழுத்துகளில் வலிமை சேர்வதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.  மூத்த எழுத்தாளர்களை மதித்து நடவுங்கள். சிலர் உங்களை அலட்சியம் செய்யலாம். உங்கள் எழுத்து கள் மூலம் நீங்கள் யாரென்று நிரூபியுங்கள்.
  1. தமிழ்நெஞ்சம் பற்றிய உங்கள் கருத்துக்களை நம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!
பிறநாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமிழைப் புறக்கணிக்கிறார்களே என்ற என் போன்றோரின் மனக்குறையை தீர்க்கும் ஊடகமாக, பிரான்ஸிலிருந்து வெளிவரும் ‘தமிழ்நெஞ்சம்’ திகழ்கிறது. உறுதியுடன் தமிழ்ப் பணியாற்றும் ‘தமிழ்நெஞ்சம்’ போற்றுதற்குரியது. உலகெங்கும் வாழும் தமிழில் ஆர்வமுள்ள எழுத்தாளர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் அருமையான பணியை அது செய்து வருகிறது. எமது இலங்கை எழுத்தாளர்களுக்கும் உரிய களமமைத்து அது செய்து வரும் சேவை மகத்தானது.
‘தமிழ்நெஞ்சம்’ ஆசிரியர் திரு. அமின் பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும். மிகச் சுவையான மரபுக் கவிதைகள் படைக்கும் ஆற்றல் உள்ளவர். அவரது வெண்பாக்களுக்கு நான் ரசிகன்.
திரு. அமின் அவர்களின் ‘தமிழ்நெஞ்சம்’ இன்னும் இன்னும் வீறுநடை போட மனதார வாழ்த்துகிறேன். என்னை நேர்கண்ட திருமதி வஃபீரா வஃபீக்கும் பிரத்தியேக நன்றி.
ஆழமான கருத்துப் பகிர்வில் அழகிய சிந்தனை முத்துக்களை உதிர்த்த உங்களுக்கு தமிழ்நெஞ்சம் சார்பில் நன்றிகளும், நல்வாழ்த்துகளும்!