கவிஞர், நூல் விமர்சகர், கதாசிரியர், ஹைக்கூ கவிஞர்,, கைவினைக் கலைஞர், நூலாசிரியர், எழில் கொஞ்சும் இயற்கையைப் படமெடுக்கும் ஒரு இதழாசிரியர்,  புகைப்படக் கலைஞர் என பன்முகத் திறமைகளுடன் பயணிக்கும் வஃபீரா வஃபி


டிசம்பர் – 2025 / 80 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

உங்களைப் பற்றி

நான் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவள். எனது பெற்றோர் இந்திய தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டாலும், சிறுவயதிலேயே வியாபார நிமித்தம் குடும்பத்துடன் இலங்கைக்கு குடிபெயர்ந்தவர்கள்.

பாடசாலைக் காலத்தில் சாரணியர் இயக்கத்திலும் அங்கம் வகித்து, பல சமூக சேவையிலும் பங்களிப்பு செய்துள்ளேன்

2022 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் எனது கன்னி நூலான “புள்ளியில்லாக் கோலம்” நூலை வெளியிட்டுள்ளேன்.

பலரது தொகுப்பு நூல்களிலும், மின்னிதழ்களிலும் எனது  கவிதைகள் ஹைக்கூ, தன்முனை, குறுங்கவிதைகள் மற்றும் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் பயணிக்கக் கற்றுக் கொண்டிருப்பதால், கவலைகளை மனதின் சுமையாக்கிக் கொள்ளாமல் அவற்றைப் புன்னகையுடன் கடக்க என்னைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதனால், எந்தவித  சவால்களையும் எதிர்கொண்டு  வாழ்க்கையை  வெற்றி கொள்வேன் எனத் திடமாக நம்புகிறேன்.

உங்கள் இலக்கிய பயணத்தின் ஆரம்பம் எப்படி அமைந்திருந்தது?

பள்ளி நாட்களில்  பரிசுகளாகக் கிடைத்த அடுக்கடுக்கான புத்தகங்கள், வாசிக்கும் பழக்கத்தை என்னுள் தோற்றுவிக்க, அதுவே வாசிக்கும் ஆர்வத்தை என்னுள் அதிகமாக்கியது. அவைதான் என் கவிதைகளுக்கும் கருவூலம். அத்துடன், என் தாயாரின் கவிதை மற்றும் பாடல்கள் எழுதும் திறமை என்னையும் எழுதத் தூண்டியது.

சிறுவயதிலிருந்தே இலங்கை வானொலியில் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்) பல நிகழ்ச்சிகளில்,  பங்கேற்றிருக்கிறேன். நான் பாடிய பாடல்க ளுக்கு தாயாருடன் சேர்ந்து நானும் சில வரிகளை எழுதியிருக்கிறேன். இப்படித்தான் எனது இலக்கியப் பிரவேசம் ஆரம்பித்தது.

சஞ்சிகை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது? அதன் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!

சிறுவயதிலிருந்தே ஒரு சஞ்சிகை நடத்தவேண்டுமென்ற உந்துதல் என்னுள் இருந்தது. பின்னாளில் சஞ்சிகை வெளியிடுவதற்கு ஊக்கம் தந்தவர் தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள். அதன் விளைவாக, 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதன்முதலாக முத்தமிழ் கலசம்   இலக்கிய வானில் பவனி வர ஆரம்பித்தது. இது இருமாதங்களுக்கொருமுறை வெளிவரும் இலக்கிய சஞ்சிகையாகும். 2022 ஜனவரி மாதம் முதல் அச்சிதழாகவும் வெளிக் கொணர்ந்து, இப்போது ஆறாவது ஆண்டில் வெற்றிகரமாக பயணிக்கிறோம்.

ஆரம்பத்தில் சஞ்சிகை நடத்தப் போகிறேன் என்று சொன்னதும், எள்ளி நகையாடிய நண்பர்களும் உண்டு. அந்த எள்ளல்தான் எனக்குள் திடத்தை ஏற்படுத்தி, இப்பயணத்தைத் தொடர வழிவகுத்தது. காளான்களாகத் தோன்றி மறையும் சில சஞ்சிகைகளுக்கு மத்தியில் கல்வெட்டாக நிலைக்க,  எந்த இடர் ஏற்பட்டாலும், கடினமாக உழைத்து இப் பணியைத் தொடர  வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளேன்.  

சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் என்ற ரீதியில் நேர்மறை சிந்தனையைத் தூண்டி, சமூகத்துக்கு விழிப்புணர்வு கொடுக்கும் விதமாகவே ஆசிரியர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்வதிலும், நேர்மறையான எண்ணங்களை உள்ளடக்கிய ஆக்கங்களை சஞ்சிகையில் சேர்ப்பதிலும் நான் அதிக கவனம் செலுத்துகிறேன்.

எழுத்துக்களால் சமுதாய மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா?

நிச்சயமாக முடியும்.

ஒரு சமுதாயத்தை நேர்த்தியாக வழிநடத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உள்ளது. அவன் எழுத்துக்கள் சமூகத்தின் நாடி பிடித்தறியும் விதமாகவும், சாணை பிடித்த கத்தி போன்று கூர்மையாகவும் இருக்க வேண்டும். அப்போது பாரிய சமூகமாற்றம் நிகழும்.

இலக்கியம் என்று வரும்போது ஒரு எழுத்தாளனது எழுத்துப்பணி எப்படி அமைய வேண்டும்?

எழுத்தாளனின் படைப்பாற்றல்,  இந்த சமூகத்துக்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக அமைய வேண்டும். அவனது படைப்புகள் சமூகச் சீர்கேடுகளை செப்பனிடக் கூடியதாகவும், நம் பண்பாட்டு விழுமியங்களை எதிர்கால சந்ததிக்கும் சிதைவின்றி கடத்தக்கூடியதாகவும், சமூக விழிப்புணர்ச்சியைத் தூண்டி, ஒரு பண்பட்ட சமூக மேம்பாட்டிக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அமைய வேண்டும். ஒரு எழுத்தாளன், தனது எழுத்து வன்மையால் சமூகத்தை நேர்மறையாக சிந்திக்க வைத்து, அதை ஒரு கட்டமைப்புள்ளதாக மாற்ற முடியுமானால், அதுவே அவனுடைய எழுத்தாற்றலின் வெற்றி.

உதாரணமாக, மனிதர்களின் இன்றைய வாழ்வியல் இயற்கையை அழித்து, பல்லாயிரம் இயற்கை அனர்த்தங்களை சந்திக்கும் சவாலை எதிர்நோக்கக் கூடியதாக உள்ளது. தம் எழுத்து வன்மையால் ,  சமூகத்தைக் கூர்தீட்டி, இயற்கைக்கு இசைவான ஒரு வாழ்வியலை நம் சமூகத்தில் ஏற்படுத்த முடியுமானால்,  அதுவே இயற்கை அனர்த்தங்களைத் தவிர்த்து,  ஒரு படைப்பாளியுடைய எழுத்தாற்றலின் மாபெரும் வெற்றியாகவும் அமையும்.  இவைதான் இலக்கியங்களுக்கும் அப்பால்,  வரலாறும் அவனைப்பற்றி பேச வழிவகுக்கும்.

இப்போது பரவலாகக் காணக்கூடிய பாலியல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க எழுத்தாளர்கள் எனும் ரீதியில் நாம் என்ன செய்யலாம்?

ஒவ்வொரு தனிமனிதனும் சுற்றுச் சூழலைக் கூர்ந்து கவனித்தாலே இதுபோன்ற பல தவறுகளைத் தடுத்துவிடலாம். ஆனால் நவீன தொழிநுட்பமானது திறன்பேசிகளை மக்கள் கையில் கொடுத்து, அவர்களை கருத்துக் குருடர்களாக மாற்றியுள்ளது. எங்கு நோக்கினாலும் மக்கள் குனிந்த தலை நிமிராமல், அலைபேசிகளுக்குள் தொலைந்திருப்பது நம்மைச் சூழ நடக்கும் விடயங்களை  நம் மூளை கிரகிக்க விடாமல் தடுப்புச் சுவராகிறது. வீட்டுக்குள்ளேயே திறன்பேசியின் ஆதிக்கம் குடும்ப அங்கத்தவர்களை முடக்கிப் போட்டு, தனித் தனித் தீவுகளாக வாழ வைத்துள்ளது.

தனியொரு மனிதனாக சுற்றுச்சூழல் பற்றிய அவதானமும், ஓர் எழுத்தாளனாக தம் காத்திரமான எழுத்துகளின் மூலம் கொண்டு வரும் விழிப்புணர்வும் இவற்றைத் தடுக்க நிச்சயமாக உதவும்.

வாசிப்பு என்பது எந்த அளவு மனிதனுள் தாக்கம் செலுத்துகிறது?

ஒரு மனிதனின் எதிர்காலப் பாதையை தீர்மானிப்பதே அவன் வாசிக்கும் நூல்கள்தான். மனிதனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் வடிவமைத்து வழிநடத்துவது அவனது வாசிப்பு தான். அதுதான் ஒரு மனிதனை சகலவிதத்திலும் முழுமைப்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது.

உங்கள் ஹைக்கூ நூல் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

 2022 டிசம்பர் மாதம் நான் வெளியிட்ட ஹைக்கூ நூலை வடிவமைத்தவர் தமிழ்நெஞ்சம் அமின் ஆவார். 128 பக்கங்களை உள்ளடக்கிய இந்நூலில் பல விழிப்புணர்வு ஹைக்கூக்களும் இடம்பெற்றுள்ளன.இந்நூலுக்கான அணிந்துரையை கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா எழுதியுள்ளார்.

இப்போது பரவலாக வழங்கப்படும் விருதுகள் பற்றி….

என்னைப் பொறுத்தவரை  விருதுகளைத் தேடி நாம் போகக் கூடாது. அவை  நம்மைத் தேடி வரும் அளவுக்கு நமது ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது பெரும்பாலான இடங்களில் விருதுகள் கொடுப்பதை, பணத்தைப் பெற்றுக் கொண்டு வியாபாரமாக்கி விட்டதால்,  தகுதியற்றவர் கைகளிலும் சிலசமயம் அவை சேர்வதுண்டு. ஆனால் இதில் நேர்மையைக் கடைப்பிடித்து, ஆற்றலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து விருது வழங்கும் விதிவிலக்கான சிலரும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்களாலும், ஒரு சில அமைப்புகளாலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விழா நடத்தப்பட்டு வழங்கும் உயரிய விருதுகளுக்கு, வட்சம் தாண்டியும் விலை நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள் என்பதும் வேதனைக்குரியது.

மொழியாளுமை என்பது ஒரு படைப்பாளியினுள், ஒரு வாசகனுள் எந்தளவு ஆதிக்கம் செலுத்துகிறது?

மொழியாளுமை என்பது ஒரு படைப்பை  நிலைநிறுத்தி படைப்பாளியை அடையாளப் படுத்துகிறது. அங்கு அவர் மொழியைக் கையாளும் விதம் அவரை  மற்றவர்களிடமிருந்து தனிச்சிறப்பு மிக்கவராக வேறுபடுத்திக் காட்ட உதவும்.

எந்த ஒரு படைப்பாக இருப்பினும், பொருந்தும் விதமாக மேற்கொள்ளப்படும் உவமான உவமேயங்களும் வார்த்தை அலங்காரங்களும் அப்படைப்பின் அழகைக் கூட்ட அணி சேர்கின்றன. சமூகப் பிரச்சினைகளாகட்டும்; விழிப்புணர்வு தரும் ஆக்கங்களாகட்டும்;  நறுக்குத் தெறித்தாற் போல் கையாளப்படும் வீரியமிக்க சொற்கள், நிச்சயமாக வாசகனுள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தி பாரிய சமூக மாற்றங்களுக்கும் வழிகோலும்.

ஒரு சஞ்சிகையை நடத்துவதில், அச்சில் வெளிக் கொணருவதில் உள்ள சிக்கல்கள் எவை?

ஒரு சஞ்சிகையானது அச்சில் வருவதில் பொருளாதாரச் சிக்கல் முதன்மையாகிறது. எந்த லாபநோக்கிலும் இதை வெளியிடா விட்டாலும், போட்ட முதலுக்கே மோசம் வரும் தருணங்களையும் நான் கடந்ததுண்டு. ஆக்கம் எழுதும் ஒரு சிலரும், இதழை வாசிக்க ஆசைப்படும் சிலரும் இலவசத்தை எதிர்பார்ப்பதன் விளைவாக, சில இக்கட்டான சூழலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகின்றது. பல வாசகர்களின் புரிந்துணர்வும், ஆதரவும் தொடர்ந்து இப்பணியை செய்ய மனோதிடத்தை தருகிறது. அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

ஒரே ஆக்கத்தை ஒரே சமயத்தில், பல இடங்களுக்கும் அனுப்புவதும் சில வாசகரால் ஏற்படும் சிக்கல்தான். இதில் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். ஒரு சஞ்சிகைக்கோ அல்லது பத்திரிகைக்கோ ஆக்கங்களை அனுப்பி விட்டால் அது வெளிவரும் வரை கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும். இது எம்மைப் போன்ற இதழாளர்களுக்கு  சங்கடம் ஏற்படாமல் தவிர்க்கும்.

சிலர் நாம் அஞ்சலிடும் பிரதிகள் கரம் கிட்டியதைக்கூட சொல்வதில்லை. இதுவும் மனதுக்கு சங்கடம் தரக்கூடியது தான். ஏனோதானோவென ஒரு ஆக்கத்தை எழுதி அனுப்பிவிட்டு தமது ஆக்கம் ஏன் வெளிவரவில்லையென கேள்வி கேட்பது, சஞ்சிகையை முழுதாக வாசிக்காமல் தமது ஆக்கம் வந்திருப்பதை அறியாமல், ஏன் எமது ஆக்கத்தை போடவில்லையென கேட்பது போன்றவையும் சங்கடம் தரும் சிக்கல்களே!

கவிதை எழுதுவது தவிர்த்து வேறெந்த விடயங்களில் ஈடுபாடு அதிகம்?

சிறுகதைகள்,கட்டுரைகள் எழுதுவேன். நூல்களுக்கு வாழ்த்துரைகள், மதிப்புரைகள், விமர்சனங்களும் எழுதி வருகிறேன். பொழுது போக்காக கைவினைப் பொருட்கள் செய்வதுண்டு. அதிலும் குறிப்பாக பயனற்றவை எனத் தூக்கி எறியும் பொருட்களை கலைப்பொருட்களாக மாற்றுவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. எதிர்காலத்தில் ஒரு கண்காட்சி நடத்த வேண்டுமென்பது என் நீண்ட நாளைய ஆசை.

எத்தகைய (கழிவுப்) பொருட்களை கைப்பணிக்காகப் பயன்படுத்துகிறீர்கள்?

அட்டைப் பெட்டிகள், மரவேர்கள், காய்ந்த மரக்கிளைகள், மரத்தூள், மணல், கற்கள், சிரட்டை, காய்ந்த பூக்கள், காய்கள், பாதாம் பிஸ்தா ஓடுகள், ஈச்சம் விதைகள், காய்ந்த பழ விதைகள், பூண்டு மற்றும் மிளகாய் காம்புகள், காலிப் போத்தல்கள், நைலோன் கயிறு, சணல் நூல், சாக்கு, பழுதாகிய சுவர்க் கடிகாரங்கள், மீன் செதில்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், போத்தல் மூடிகள், மரக்கரண்டி, முட் கரண்டிகள், காய்ந்த இலை வகைகள், காய்ந்த பாசி வகைகள், முட்டைக் கோதுகள், காலியான தயிர் சட்டி, பானைகள், ஃபோம் ஷீட்கள், பொப்ஸிக்கல் குச்சிகள் இப்படி பலவகையாய் குப்பையில் எறியும் பல பொருட்களுடன் சிப்பி, ஊரி வகைகளைக் கொண்டும் பல கைவினைப் பொருட்களை செய்துள்ளேன்.

உங்கள் சஞ்சிகைக்கான ஆக்கங்களை அனுப்பும் மின்னஞ்சல் முகவரி?

muththamizh.kalasam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

வெளியான அனைத்து இதழ்களையும் எம் இணையதளமான muththamizh-kalasam.com  இல் பார்வையிடலாம். தரவிறக்கம் செய்தும் வாசிக்கலாம்.

ஒரு எழுத்தாளர்  என்ற வகையில் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நம் எழுத்துகள் பாமரனையும் போய்ச் சேர வேண்டுமானால், அவை எளிமையை அணிந்திருக்க வேண்டும். ஆயினும், எளிமையிலும் அழகியலைப் புகுத்தி, வாசகரின் புருவமுயர்த்தி வியக்க வைக்க முடியும்.  சின்னச்சின்ன வார்த்தைகள், வாணவேடிக்கை நிகழ்த்தும் அற்புதங்களைப்  பல படைப்புகளில் காணலாம். ஒரு எழுத்தாளன் கையாளும் மொழிநடையானது, அவனதுபடைப்பைத் தனித்தன்மையுடன் மிளிரச் செய்யும். மற்றவர்களின் படைப்புகளை நகலெடுக்காமல் தன் சொந்தத் திறமையை நம்பி சிந்தனா சக்தியை முடுக்கிவிட்டால், எம் படைப்புகள் எதிர்கால இலக்கியத்தில் வரலாறு படைக்கும்.

முக்கியமாக சமூகப் பிரச்சினைகளுக்காகவும், உங்கள் எழுதுகோல் குனிந்து நிமிரட்டும். அது உண்மையை தோலுரித்துக் காட்டி, இந்த சமூகத்தில் வேரூன்றிய புல்லுருவிகளைக் களையெடுக்கட்டும்.

இலக்கிய உலகில் நடைபெறும் போட்டிகள் எழுத்தாளர்களுக்கு ஆரோக்கியமானதென நினைக்கிறீர்களா?

ஆற்றலுக்கு முக்கியத்துவம் வழங்கி, பாரபட்சமில்லாமல் வெற்றியாளர்களைத் தேர்வு செய்யும் எல்லாப் போட்டிகளும் ஆரோக்கியமானவையே!

தமிழ்நெஞ்சம் இதழ் பற்றி உங்களுடைய கருத்து?

54 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழுக்கு சேவை செய்யவென்றே நடத்தப்படும் தமிழ்நெஞ்சம் எல்லா வாசக நெஞ்சங்களையும் கட்டிப்போட்டது மட்டுமல்லாமல், முடிசூடா மன்னனாக சாதனை படைத்து வருகிறது. பாரபட்சமின்றி அனைத்து எழுத்தாளர்களுக்கும் களம் கொடுத்து வருவது மனதுக்கு நிறைவாக உள்ளது. இதழாசிரியர் தமிழ்நெஞ்சம் அமின் அவர்களின் இப்பணி தொடர வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்!

வழமையான கேள்விகளைத் தவிர்த்து, சிந்தனைக்குத் தீனியிடும் கேள்விகளை முன்வைத்த உங்களுக்கும் நன்றிகளும் பிரார்த்தனைகளும்!

நேர்காணல் – ஆயிஷா ஷகீலா

Related Posts

நேர்காணல்

சங்கிலி சுப்பிரமணியன்

கரந்தை புலவர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். பள்ளி ஆசானாகவும் அதைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றினார். யாப்பெருங்கலக் காரிகையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஏகபோக ஆற்றல் இருந்தும் கவிதை எழுத விரும்பாதவர். ஆயினும் யாராக இருந்தாலும் தமிழில் ஒரு தவறு என்றால் கொம்பு சீவியக் காளை போல உடனே ஓட வந்து தவறுகளைச் சுட்டிக் காட்டி மண்டியிட வைப்பதில் இவருக்கு இணை இவரே.

நேர்காணல்

ஐயா மோகன்

ஒரு சிற்றூரில் ஏட்டுக்கல்வி அறிவில்லாமல் மூட நம்பிக்கையில் பற்றுக் கொண்டு வாழும் குடும்பத்தில் பிறந்த எனக்கு "மூக்கன்'' என்று பெயரிட்டனர். கற்ற நண்பர்களும், பெரியவர்களும் எனக்கு "மோகன்'' என்று பெயரைத் திருத்தம் செய்தார்கள். அன்றைய நிலையில் நானும் ஏற்றுக் கொண்டேன். "மோகன்'' என்பது வடசொல்லாயிற்றே. பெருவாரியாக என் தந்தையின் பெயர் "அய்யாவு'' என்பதில் ல்அய்யால் என்ற பகுதியை மட்டும் முன் நிறுத்தி "அய்யா.மோகன்'' என்றும், யான் தமிழாசிரியராகப் பணியாற்றியக் கரணியத்தால் "புலவர் அய்யா. மோகன்'' என்றும் பெயராயிற்று.

நேர்காணல்

திரு சங்கரபாண்டியன்

கவிஞர் வைரமுத்து அவர்களின் ஒவ்வோர் உரையிலும் ஏதேனும் ஒரு புதிய சேதியை அறிமுகம் செய்வார் உதாரணமாக, ஒன்று, ஒரு நூலக விழாவில் பேசும்போது, ஆதிகாலத்தில் களிமண்ணில் செய்த சிலேட்டில் படைப்புகளைச் சேகரித்து முதன்முதலாக நூலகம் அமைத்தவர் யாரெனத் தேடி அந்த மூலவரின் சிறப்பை அழுத்தமாக அவ்விழாவில் அறிமுகம் செய்து விடுவார். இப்படி எந்த மேடையாயினும் தன்னுடைய உரைக்கான தேடலை இன்றுவரை அவர் நிறுத்தவே இல்லை, மற்றும் உணர்ச்சியும் உச்சரிப்பும் குரல்வளமும் அவையோரைத் தன்பால் ஈர்க்கும் சக்தியாக இருக்கின்றன.