கவிநிலா மோகன் : –
.
கவிநிலா என்ற இதழ் நடத்திவந்த இதழாசிரியர், நீதிமதி, சுகந்தம், தாமரைப் பூக்கள் போன்ற பத்திரிக்கைகளில் உதவி ஆசிரியர், நடிப்புத் துறையில் மலர்ந்தும் மலராத பூக்கள், நேர்க்கோட்டு நியாயங்கள், வேலை காலியில்லை போன்ற மேடை நாடகங்கள் நடத்தியவர். மேலும் தஞ்சை மாவட்ட நடிகர் சங்க உறுப்பினர்.. டாம் டூம் கல்யாணம், வீணையடி நீயெனக்கு போன்ற படங்களில் பாடலாசிரியர்.. மேலும் மகத்தான மருத்துவர் இப்படி பன்முக மன்னன் திரு கவிநிலா மோகன் அவர்களின் சுவாரஸ்யமான பேட்டி இதோ உங்களுக்காக.
நேர்கண்டவர் ஏ டி. வரதராசன்
நிலா மோகன் என்பது தங்கள் பெயரா அல்லது புனைப் பெயரா ?
எனது பெயர் நடனசிகாமணி சந்திரமோகன் ( ந. சந்திர மோகன்) எனது புனை
பெயர் கவிநிலா மோகன் கவி நிலா என்ற கவிதை இலக்கிய மாத இதழை மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அரசு வேலை கிடைக்கும் வரை நடத்தினேன் அந்த ஞாபகமாக
தமிழ்நெஞ்சம் Flip Book செப்டெம்பர் 2025
கவிஞர் நிலாமோகன் மருத்துவர் நிலாமோகன் இவை இரண்டில் எந்த புனைப்பெயர் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? ஏன்?
நிலாமோகன் Mbbs: மருத்துவராக சந்திர மோகன் இலக்கியவாதியாக… கவி நிலா மோகன்.
இலக்கியமும் மருத்துவமும் இரண்டு கண்களாக தொடர்கிறேன். நிலாமோகன் Mbbs: மருத்துவத்தில் புனைப்பெயர் இல்லை. நிலாமோகன் Mbbs: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் MBBS படித்த போது அரசு பதிவு பெற்ற மதுரை பாண்டியன் கவிதைப் பயிற்சி கல்லூரியில் படித்து கவிஞர்
பட்டம் பெற்றேன் என் தந்தை என்னை இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக உருவாக்க ஆசைப்பட்டார். இலக்கிய மோகத்தால் தமிழ்மீது கொண்ட காதலால் அந்த ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. அதனால் என் மகனை எலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணராகவும் என் மகளை மகப்பேறு அறுவைச் சிகிச்சை நிபுணராகவும் உருவாக்கினேன்.
தாங்கள் முதலில் எழுதிய காதல் கவிதை ஞாபகம் இருக்கிறதா? இருந்தால் பகிரலாமே…
வாலிபத்தில்
தினம் தினம் தீபாவளி
வயசுக்கு வந்தாச்சு
இரவெல்லாம்
வெடிச் சத்தங்கள்
ஏக்கம் வழிந்தாச்சு
கண்ணின்
பார்வையெல்லாம்
ஊசி வெடிகள்
பருவம் பத்திக்கிச்சு
மனசெல்லாம்
பூப்பூத்த மத்தாப்புகள்
காதல் வந்தாச்சு
பேச்செல்லாம்
எப்போதும்
சரவெடிகள்
காதல் வளர்ந்தாச்சு
உதிரும்
சிரிப்பெல்லாம்
தரைச் சக்கரங்கள்
காதல் உறுதியாச்சு
ஊரெல்லாம்
பேச்சுகள்
எங்கும்
வானவேடிக்கை
காதல் பரவியாச்சு .
ஒரு செய்தியை மனதில் பதியும் படி சொல்வதற்கு சிறப்பான பா வகை ஹைக்கூவா அல்லது தமிழ் பா வகைகளா? ஏன்?
ஒரு செய்தியை மனதில் பதியும்படி சொல்வதற்கு சிறப்பானவைதமிழ் பாவகைகளான வெண்பா விருத்தம், ஆசிரியப்பா போன்றவை தான் ஹைக்கூ கவிதையில் கண்ட காட்சியை மனதில் பதியும்படி சொல்லலாம் எல்லாவற்றையும் இதில் சொல்ல முடியாது.இயற்கையை மட்டுமே பேசக்கூடியது சிறந்த ஹைக்கூ என்பார்கள் முன்னோடிகள். உண்மையைசொல்லும் கற்பனை ஏற்காது உவமை உருவகம் ஏற்காதுகவிதைக்கு பொய்யழகு ஹைக்கூவிற்கு மெய்யழகு.சுண்டக்காய்ச்சிய மொழிநடை என்பார்கள்.விரிவாக எழுதகூடாது… வார்த்தை சிக்கனம் வேண்டும்.
சமூக குடும்ப அவலங்களை ஏற்றத்தாழ்வுகளை மனித உணர்வுகளை உணர்ச்சிகளை இதில் கூறினால் அது ஹைக்கூ கிடையாது. அதற்கு பெயர் சென்ரியு. ஆகவே ஒரு செய்தியை ஆழமாக அழகாக சொல்வதற்கு ஏற்றவை தமிழ் பாவகைகளே. இதை உறுதியாக அறுதியிட்டுக் கூறுகிறேன்.
வாழும் ஹைக்கூ ஆசான் ஹைக்கூ பேரருவி பேராசிரியர் முனைவர் ஈரோடு தமிழன்பன் ஹைக்கூ பற்றி கூறுகிறார்…
இயற்கையின் மீது இயற்றப்பட்டால்தான் அது ஹைக்கூ. இயற்கை இருக்க வேண்டும்… இயற்கையின் அடையாளம் இருக்க வேண்டும்.
மக்களைப் பற்றி மக்கள் வாழ்க்கையைப்பற்றி எழுதுகிறபோது அது மாறிசென்ரியுவாகிறது
உதாரணமாக கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ போட்டியில் வெற்றி பெற்ற என் கவிதை….
பெளர்ணமி வெளிச்சம்
கொடிக் கயிற்றில் தொங்கும்
சொட்டுச் சொட்டாய் நிலவு
தனித்தமிழ் வேண்டுமா, வேண்டாமா? சாத்தியமா சாத்தியம் இலல்லையா? உங்களைக் கவிஞராக பரிணமிக்கச் செய்தது எது?
தனித்தமிழ் கண்டிப்பாகவேண்டும். அதனால் தான் குழந்தைகளுக்கு தூயதமிழில் பெயர் சூட்டுங்கள்
வணிக சந்தையில் கடைகளுக்கு பிறமொழி கலப்பின்றி பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று வலியுறுத்திகூறுகிறோம்
வளரும் குழந்தைகளுக்கு தமிழிலேயேஉரையாடி மகிழுங்கள் என்று பொதுவெளியில் கோரிக்கை வைத்து ஊக்கப்படுத்துகுறோம் .
பிறமொழிக் கலக்காத தூய தமிழ் மொழி நடையில் பேச வேண்டும் எழுதவேண்டும் என்று தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கிய தமிழைஆங்கிலத்தை வடமொழியை சிறப்பாக கற்றுத் தேர்ந்த தமிழ்ஆய்வாளர் மறைமலையடிகள் விரும்பி உயர்தனி செம்மொழியாம் தமிழை வளர்த்தார். அதே வழியில் செல்லத்தான் எனக்கும் ஆர்வம். மருத்துவராக இருப்பதால் சிலநேரங்களில் அது. சாத்தியமற்றுப் போகிறது.சாத்தியம் சற்றுக் குறைவு தான்.
இருந்தாலும் எல்லாவழிகளிலும் முயற்சியை விடாமல் தொடர வேண்டும்
கவிஞராக பரிணமிக்க செய்தது தனித்தமிழ் தான்எந்த மரபுக்கவிதையாக இருந்தாலும் எதுகைக்காக மோனைக்காக தமிழ் வார்த்தைகளை தேடித்தேடி கற்று கவிதைக்குள் கொண்டு வருகிறேன்.
சிறப்பான கவிதையை உருவாக்கவும் வெற்றி பெற்ற கவிஞராக ஒளிரவும் கண்டிப்பாக தனித்தமிழ் தேவை தான்.
தனித்தமிழ் ஒன்றால் மட்டுமே தமிழைத் தூக்கி நிறுத்த முடியும்.
” என்ன வருத்திநீ கவிசெய்யினும் முன்னோர்கள் செய்ததன்றி நூதனம் ஒன்றுமில்லை ” என்பார்கள் அப்படி என்றால் நாம் நம் முன்னோர்களை நம்மால் மிஞ்ச முடியாதா? அல்லது மிஞ்சக் கூடாதா?
என்ன வருத்திநீ கவி செய்யினும் ………. நூதனம் ஒன்றுமில்லை என்று கூறினார்கள்.
இன்றைய கவிஞர்களை உற்சாகப்படுத்தி எழுத வைக்க கூறி இருக்கலாம் அன்று கவிஞர்கள் கவிராயர்கள் புலவர்கள் கவிதை எமக்குத் தொழில் என்று வாழ்ந்தார்கள் இன்று அப்படி இல்லை.
மிஞ்ச முடியாதா என்ற கேள்விக் கணை ஒவ்வொரு கவிஞரையும் துளைக்கும். ஆத்மார்த்தமாக தவநிலையில் முழுமூச்சாக இறங்கி எழுதும் கவிஞர்கள் இருக்கிறார்கள்
மிஞ்சக் கூடாதா… இந்த கேள்வி ஆச்சரியமாக இருக்கிறது.
கூடாது என்ற கட்டுப்பாட்டை யாராலும் எந்தக் காலத்திலும் போட முடியாது.
மிஞ்ச முடியும் ஒருநாள் அதுவும் நடக்கும்.
அவரவர் மொழிப்புலமையை ஆழ்ந்த இலக்கண அறிவைப் பொறுத்தது.முயன்றால் முடியாதது எதுவுமில்லை. காலம் விரைவில் பதில் சொல்லும்.
தமிழின் மொழியாளுமை முழுதாகத் தெரிவது, கவிதையிலா, கட்டுரையிலா, கதைகளிலா…?
தமிழின் மொழியாளுமை முழுமையாகத் தெரிவது கவிதைகளில் தான் என்னைப் பொறுத்தவரை.
அதுவும் மரபுக்கவிதைகளில் அதிகமாக தேவைப்படும் அனைவராலும் எதிர்பார்க்கப்படும்.
புதுக்கவிதைகளில் நவீனக் கவிதைகளில் ஓரளவு மொழியாளுமையை காட்டுவார்கள்.
கதைகளில் யதார்த்தம் தெளிந்த நீரோடை போல் கதை சொல்லும் திறமை தேவைப்படுகிறது புனைவு ஒப்பனை தேவையில்லை புராண சரித்திர கதைகளுக்கு கொஞ்சம் மொழியாளுமை கற்பனை கவிநடைவேண்டும்.
கட்டுரைகள் பயணக் கட்டுரை வாழ்வியல் கட்டுரை ஆன்மீகக் கட்டுரை எதுவானாலும் மிகைப்படுத்தாத உண்மை நிலையை செய்தியை ஒளிவுமறைவின்றி தெளிவாக புரியும்படியாக எளிமையாக சொல்லக்கூடிய படைக்கும் திறன் முக்கியம்.
அதிக மொழியாளுமை மரபுக்கவிதைகளுக்கு மட்டுமே தேவை என்பதுஎன் அனுபவக் கூற்று.
படிக்கும் பழக்கத்தைப் பற்று. என்ற ஈற்றடிக்கு ஒரு வெண்பாவும், “வெண்பா” என்ற தலைப்புக்கு ஒரு ஹைக்கூவும்…
அடிக்காது கற்பிக்கும் ஆசானில் கற்று
துடிக்கும் இளமையில் தேர்ந்த_ அடியாய்
விடியாத வாழ்வில் வெளிச்கத்தை ஏற்ற
படிக்கும் பழக்கத்தைப் பற்று.
ஹைக்கூ
நேரிசை வெண்பா
உள்ளத்திலிருந்து பொங்கி வழிகிறது
கவிதை வெள்ளம்
தாங்கள் எழுதிய நூல்கள் மற்றும் விருதுகளைப் பற்றி சொல்லுங்கள்
எழுதிய தனி நூல்கள்…
புதுக்கவிதை நூல்கள் 2
ஹைக்கூ கவிதை நூல்கள் .12
தன்முனைக்கவிதை நூல்கள் .4
மரபுக் கவிதை நூல்கள் 1
நான் தொகுத்த நூல்கள் 9
நான் பெற்ற விருதுகள் நூற்றுக்கு மேல்
சமீபத்தில் பெற்ற இரண்டு சிறப்பு விருதுகள்
தமிழ்மகுடம் விருது
தமிழ் மாமணி
எழுத்தில் அடுத்து நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?
அடுத்து தமிழில் சாதிக்க நினைப்பது 50 புத்தகங்கள் வெளியிடவேண்டும் என் நூல்களுக்காக ஒரு ஆய்வரங்கம் ஒருநாள் நிகழ்வாகநடத்த வேண்டும்
அடுத்து தமிழக அரசு வழங்கும் தமிழ்ச்செம்மல் விருதைப் பெற வேண்டும் என்பது என் வாழ்நாள் இலட்சியம்
கவி எழுத தேவை கற்பனையா? மொழி ஆளுமையா?
கவிதை எழுத கற்பனையும் வேண்டும் மொழி ஆளுமையும் வேண்டும்.
கற்பனை இல்லாமல் கவிதை வாழாது…..
மொழி ஆளுமை இல்லாமல் கவிதை சிறக்காது.
சரியான விகிதத்தில் இரண்டும் இரண்டறக் கலக்க வேண்டும்
கவிஞர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?
கவிஞர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் பெரிய கவிமேதையல்ல
கவிஞர்களே நிறைய தேடித்தேடி படியுங்கள்.
எப்பொருள் பற்றியும் எப்போதும் கற்பனை செய்யுங்கள்.
சுயமாக சிந்தித்து சமுதாய சிந்தனையோடு மக்களுக்காக எழுதுங்கள்.
உள்ளத்தில் தோன்றுவதைக் கவிதையாக்கி உலகிற்குச் சொல்லுங்கள்
கவிதை எமக்குத் தொழில் என்று எந்தக் காலத்திலும் சொல்லாதீர்கள்
நிம்மதி அமைதி இல்லாமல் கவிதை எழுதவேமுடியாது… அதற்காக
வாழ்வதற்கு அடிப்படையாய் ஆதாரமாய் நிரந்தர வருமானத்திற்காக ஒரு தொழில் வேண்டும்
உங்கள் தனித்தன்மையை இழக்காமல் காலம் முழுவதும் எழுதிக் கொண்டே இருங்கள்…
இது அறிவுரை அல்ல அனுபவப் பேரு
இனி …
கவிதை என்பது.…
உள்ளத்தில் உதிப்பது கவித்துவமானது. காலத்தால் அழியாதது… காலம் கடந்தும் நிற்கும் .
கவிஞன் என்பவன்…
சமூக சிந்தனையோடு மக்களுக்காக பாடுபவன்.
காதல் என்பது…
எந்தக் காலத்திலும் கலையாத மானிட உணர்வு.
பிடித்த பழமொழி…
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு
நட்பு…
ஒருமித்தக் கருத்துடன் மனங்கள் கலந்து விட்டுக் கொடுத்து ஒருவருக்கு ஒருவர் உதவி வாழ்வது
எது ஆச்சரியம்…
குழந்தைகளைக் கொன்றுவிட்டு கணவனுக்கு துரோகம் செய்வது
எது அவமானம்…
தமிழனாக இருந்து கொண்டு ஒரு தமிழனுக்கு உதவாமல் இருப்பது
எது உயர்ந்த செல்வம்…
கல்வி தான் அழியாத உயர்ந்த செல்வம்
பிடித்த உணவு…
வள்ளலார் வழியில் வாழ்வதால் முருகனை வழிபடுவதால் சித்தர்களைப் பின்பற்றுவதால் சைவ உணவே பிரதானமாய் பிடித்தது.
பிடித்த ஊர்…
சித்தர் பூமியான திருவண்ணாமலையே எனக்கு பிடித்தமான ஊர்…
கிரிவலம் செல்லும் போது மலையே சிவனாய்காட்சிக் கொடுப்பதால்.
பிடித்த நிறம்…
பச்சையும் மஞ்சளும்
கடவுள் என்பது…
நம்மை இயக்கும் சக்தி நம்மைக் காக்கும் மகாசக்தி .
காமம் என்பது…
ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படைத் தேவை
அளவுக்கு அதிகமானால் ஆபத்து இல்லாவிட்டால் அதுவே துன்பம்
தினமும் வெறுப்பது…
நியாயமற்ற செயல்
தினமும் நினைப்பது…
சித்தர்களின் தலைவர் என் அப்பன் முருகப்பெருமானை .
தினமும் கொடுக்க நினைப்பது…
அன்ன தானம்
தினமும் எடுக்க நினைப்பது…
நல்லோரின் ஆசியை இறைவனின் பேரருளை
இறப்பு என்பது…
இவ்வுலகை விட்டு மறைவது (இறைவன் கையில்)
பிறப்பு என்பது…
பூமிக்கு வருவது (மனிதன் கையில்)
மனிதன் மாறுவதால் இதுவும் கைமாறி விட்டது
தமிழ் நெஞ்சம் இதழைப் பற்றி …
உலகத் தமிழர்களை இணைக்கும் ஒப்பற்ற தமிழ்ப்பணி.
தாய்த் தமிழை வளர்க்கவும், தூய தமிழை ஆராதிக்கவும், தமிழ் கவிஞர்களை ஆதரிக்கவும் உதயமானது இந்த தமிழ்நெஞ்சம் மாதஇதழ் .
ஆசிரியர் இதழை ஓவ்வொரு மாதமும் சிறப்பான வடிவமைப்புடன் புதிய செய்திகளுடன் உலக கவிஞர்களின் பலவிதமான உன்னதக் கவிதைகளுடன் கொண்டு வருகிறார்.
கவிஞர்களை கொண்டாடும் இதழ்.கவிதைகளை ஊக்கப்படுத்தும் இதழ். மொத்தத்தில் இலக்கியம் பேசும் அர்த்தமுள்ள இதழ்.
பொன்விழா கண்ட இந்த இதழ் நூற்றாண்டு காண இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன் ..