நேர்கண்டவர் :
தமிழ்நெஞ்சம் அமின்

 

மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?”

     ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?”

    “நல்லா இருக்கேன் சார். அயல் நாட்டிலிருந்து தமிழ் பத்திரிகை நடத்தி, தமிழ் வளர்த்து, தமிழ் எழுத்தாளர்களை வளர்த்து, தமிழே மூச்சாக நினைக்கும் உங்களுடைய தமிழ் பணிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீங்களே என்னை நேர்காணல் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதே சமயம் சற்று பதட்டமும் இருக்கிறது“

  

செப்டெம்பர் 2024 / 108 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

இலக்கியத் திருவிழாவில் டெல்லி கணேஷ்...
உரத்தசிந்தனை விழாவில் நடிகர் சிவகுமார், மாலன் ஆகியோருடன்...
பட்டுக்கோட்டை பிரபாகரன் அவர்களிடமிருந்து விருது பெற்றத் தருணம்
Mythili Sampath with SPM, Justice Ramasubbramaniam
மைதிலி சம்பத் திருப்பூர் கிருஷ்ணன் மற்றும் ஆளுமைகளுடன்.
VS ராகவன் அவர்களுடன்
யார் கண்ணன் அவர்களுடன்

“நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர்.. பதட்டம் எதற்கு? வாருங்கள், நம் கேள்வி பதிலை ஆரம்பிக்கலாம். உங்களுடைய  இளமைக்காலம் மற்றும் படிப்பு ஆகியவை பற்றி, அப்போது இருந்த சூழ்நிலை ஆகியவை பற்றி சொல்.லுங்கள்.”

“நான் கலை வளர்த்த தஞ்சாவூரைச் சேர்ந்தவள். முதலில் நீங்கள் என்னை எழுத்துக்காக நேர்காணல் செய்தாலும், சிறு வயதில் எனக்கு இசையே முக்கியமாக இருந்ததால் அதைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டி இருக்கிறது. தஞ்சாவூரின் மண்ணுக்கே உரிய  இசைஞானம் எனக்கும் இருந்தது. அங்கு இருக்கும் எல்லா பெண்களையும் போல் நானும் பாட்டு கற்றுக் கொண்டேன். ஒரு ஐந்து ஆறு வருடங்கள் கற்றுக் கொண்டேன். எனக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. திருமணத்திற்குப் பிறகு நான் புகுந்த இடத்திலும் என்னுடைய கணவரின் அக்கா பெரிய பாடகியாக இருந்ததால் என்னால் சங்கீதத்தை விருத்தி செய்து கொள்ள முடிந்தது. எனவே நிரம்ப வருடங்களாக எல்லா தரப்பினருக்கும் எல்லா வயதினருக்கும் பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இன்றும் அயல்நாட்டில் உள்ள தமிழ் மாணவர்களுக்கும் தெலுகு மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். எல்லா தரப்பினரும் என்று நான் சொல்லும் போது கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகள் கூட அதில் அடக்கம்

“அப்படியா? உங்கள் கணவர் என்ன செய்கிறார்?”

“அவர் இந்தியன் பேங்கில் வேலையாக இருந்தார். பணி ஓய்வு பெற்று இப்போது எனக்காக பணி செய்து கொண்டிருக்கிறார்! எழுதுவதுதான் என் வேலையே தவிர அதை தட்டச்சு செய்வது, அனுப்புவது ஆகியவை எல்லாம் அவர் தான் பார்த்துக் கொள்கிறார்..” 

“நீங்கள் ஆரம்பத்தில் இருந்து செகந்திராபாதில்தான் இருக்கிறீர்கள் இல்லையா ?

“முதலில் சென்னையில், அதன் பிறகு சில வருடங்கள் மும்பையில் பிறகு திரும்ப சென்னையில், பிறகு செகந்திராபாத் தான். இங்கு வந்த பிறகு வேறு எங்கேயும் போகவில்லை. பணி ஓய்வும் இங்கேயே பெற்றார். அதனால் இங்கேயே நாங்கள் நிலை கொண்டு விட்டோம்.”

“நீங்கள் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?”

“நான் சிறுவயதில் இருந்தே கையில் கிடைத்த புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து விடுவேன். நிறைய தமிழ் வாராந்திர, மாதாந்திர புத்தகங்கள் தவிர, கையில் கிடைக்கும் ஆங்கில புத்தகங்கள் கூட. எங்களுடைய பள்ளிக்கூடம் மிக நல்ல பள்ளிக்கூடம் அங்கு ஒவ்வொரு குழந்தையின் மொத்த வளர்ச்சியையும் கவனிப்பார்கள். மிக நல்ல லைப்ரரி இருந்தது. அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டேன். ஆக படித்தவை எல்லாம் மனதில் தேங்கி இருந்திருக்க வேண்டும். ஆனால் சின்ன வயதில் எழுதலாம், எனக்கு எழுத வரும் என்றெல்லாம் நினைக்கவில்லை. அதன் பிறகு தான் இந்த ஊருக்கு கவி மாமணி திரு இளையவன் அவர்கள் வந்தார். அப்போது நான் ஒன்று இரண்டு கதைகள் எழுதி வைத்திருந்ததை அவரிடம் காண்பித்தேன். ‘கதைகள் எழுதி இப்படி உள்ளேயே வைத்திருப்பீர்களா? எல்லாம் பிரசுரமாக வேண்டாமா?’ என்று சொல்லி லேடீஸ் ஸ்பெஷல் மாத பத்திரிகையில் என்னுடைய கதைகள் வர ஏற்பாடு செய்தார்.

கொஞ்ச நாட்களிலேயே திரு தீபம் திருமலை அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் ‘நீங்கள் நாவல் எழுதுங்கள். உங்களால் முடியும்’ என்று உற்சாகப்படுத்தினார். என்னுடைய முதல் நாவல் “நெஞ்சின் அலைகள்”. அது நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அந்த தைரியத்தில் “ஐயாறப்பன் வீடு” என்ற நாவலை எழுதினேன் இந்நாவலும் மிகுந்த வரவேற்பு பெற்றது. அது போல் நிறைய நாவல்கள். இதுவரை என் 17 நாவல்கள் வெளிவந்திருக்கின்றன”

“அப்படியா? பாராட்டுக்கள் அம்மா. சிறுகதை தொகுப்புகள் ஆகியவை வெளியிட்டு இருக்கிறீர்களா?”

“ஆமாம். ஐந்து சிறுகதை தொகுப்புகள். அவற்றில், கிட்டத்தட்ட 120 கதைகள் உள்ளன.. ஐந்து கட்டுரை தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்பு புத்தகங்கள் ஆகியவையும் வெளிவந்திருக்கின்றன, கட்டுரை தொகுப்புகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் “ சப்தகிரி” மாதப்பத்திரிகையில் ஆன்மீக கட்டுரைகள் அவ்வப்போது எழுதி வருகிறேன். அவையும், மற்றும் இங்குள்ள சங்கீத சபாக்களில் ஆண்டு விழா மலர் போடும்போதெல்லாம் அவற்றிற்கு எழுதுகிறேன். அவையும் மற்றும் பொதுக்கட்டுரைகள் எல்லாமே இருக்கும் ராமானுஜரை பற்றியும் நிறைய எழுதி இருக்கிறேன்”

 “உங்கள் நாவ.ல்களைப் பற்றி விரிவாக சொல்ல முடியுமா?”

“என் நாவல்களின் சிறப்புத்தன்மை என்று  சொன்னால் ஒரு நாவலை போல் ஒரு நாவல் இருக்காது. என் எல்லா நாவல்களுமே வேறு வேறு கருத்துக்கள் கொண்டவை. சொல்லப்போனால் உங்களுக்கு அலுப்பு தட்டலாம்.”

“இல்லை அம்மா! சொல்லுங்கள்.”

“முதல் நாவலில், கூடப்பிறந்தவர்களுக்குள் நாமே வித்தியாசம் பார்த்து வளர்க்கக்கூடாது என்பது கரு. “பெண் எனும் தேவதை” எனும் அடுத்த நாவலில் சிறு வயதில் பெண்கள் வழி தவறிப் போகக்கூடாது. என்பது மையம். இதில் நான்கு முடிவுகள் கொடுத்திருந்தேன். உங்களுக்கு இந்த முடிவு பிடிக்காவிட்டால் இதை கடந்து போங்கள் இந்த முடிவு பிடிக்காவிட்டால் அதை கடந்து போங்கள் என்பது போல்.. முடிவை. வாசகர்களிடம் விட்டுவிட்டேன் அந்த எண்ணம் மிகுந்த பாராட்டை பெற்றது.

அடுத்த நாவல் “ஐயாறப்பன் வீடு” ஐந்து குடும்பங்கள் ஒருவருக்கு ஒருவர் உறவில்லை எனறாலும் ஒருவருக்கு ஏதோ பிரச்னை வந்தால் அவருக்கு தெரியாமலே கூட அடுத்தவர் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பது பற்றியது. அதன் பிறகு சுஜாதாவின் “விலை என்ற சிறு கதையைப் படிக்க நேரிட்டது. அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. அன்று இரவெல்லாம்                         நித்திரை கொள்ளாமல் தவித்தேன். அந்த இரவில் தோன்றியது தான் “மல்லிகை பூ வீடு” என்ற முழு நீள நாவல். என்னுடைய அம்மா ஊர் ஸ்ரீரங்கம். ஆகையால் அவ்வப்போது போவது வருவது என்று சம்பந்தம் உண்டு. அதையும் மனத்தில் நிறுத்திக்கொண்டு சுஜாதாவின் கதாபாத்திரங்களையும் மனதில் வைத்து அந்த நாவலை எழுதினேன். அதற்கும் நிறைய பாராட்டுகள் வந்தன

அதன் பிறகு டாக்டர்கள் சில வேளைகளில் செய்யும் தொழில் விரோத செயல்கள். அது “சின்ன ரோஜா பூவே” யாக உருவெடுத்தது. ரொம்ப சின்ன குழந்தைகள் மேல் நடக்கும் பாலியல் வக்கிரங்கள். அது “வாராது போல வந்த…” நாவல். முக்கியமான கதை “நீ அன்றோ என் ரதி” பெண் முகத்தில் ஆசிட் வீசினான் என்று அடிக்கடி கேள்விப்படுகிறோம். இந்த ஆசிட் வீசிய ரவுடியை யாராவது எப்படியாவது சிறையில் போடுகிறார்கள். தண்டனை கொடுக்கிறார்கள் ஆனால் அந்த ஆசிட்டினால் கோரமான முகத்தோடு நடமாட வேண்டிய பெண் வாழ்க்கை முழுவதையும் எப்படி கழிப்பாள்? அந்தக் கருத்தினை பெரியதாக்கி எழுதியது தான் அந்த “நீ அன்றோ என் ரதி” என்ற புத்தகம். இதுபோல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் கைத்தொழில் மேம்படுத்தி ஒரு நாவல். பள்ளிக்கூடம் நடத்துவது எப்படி என்று ஒரு நாவல். இரண்டு வருடங்களுக்கு முன் லேடிஸ் ஸ்பெஷல் மாத பத்திரிகைக்காக வருடம் முழுவதும் மாதம் ஒரு வியக்கத்தக்க பெண்மணியை பற்றி எழுதி வந்தேன். நல்ல வரவேற்பு இருந்தது”.

“எப்படி எல்லாம் எழுதி இருக்கிறீர்கள் ?! மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா. கதைகள் எல்லாம் அப்படி என்றால் நிறைய பரிசுகள் கூட வந்திருக்கும், இல்லையா?”

“ஆமாம், சார்!  நிறைய பரிசுகள் வந்திருக்கின்றன. பெரிய பத்திரிகைகளில் இருந்து எல்லாம் பரிசுகள் வந்திருக்கின்றன ஆரம்பத்தில் “நம் உரத்த சிந்தனை” மாதப்பத்திரிகையில் தான் என்னுடைய ஐந்து சிறுகதைகள் தொடர்ந்து பரிசு வாங்கியது. அதன் பிறகு நிறைய நாவல்களுக்கு அவர்களே பரிசு கொடுத்தார்கள். தொடர்ந்து மூன்று வருடங்கள் என் நாவலுக்குத்தான் பரிசு வந்தது அதன்பிறகு சிறந்த நாவலாசிரியர் என்று ஒரு விருது கொடுத்தார்கள். அதை நடிகர் சிவகுமார் கையால் கொடுக்க வைத்தார்கள். அது என்னுடைய வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி அளித்த தருணம். சிறுகதை தொகுப்பிற்கும் பரவலாக பரிசுகள் வந்திருக்கின்றன. எனக்கு வந்த பரிசுகளில் கலைமகளில் “விடுதலை விடுதலை விடுதலை” என்ற என்னுடைய சிறுகதைக்கு பரிசு வந்து 2014ல் இலக்கியச் சிந்தனையில் அது இடம்பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி தந்தது.    “

“ மகிழ்ச்சி அம்மா ! நீங்கள் உங்களுக்கு கிடைத்த பாராட்டுகளைப் பற்றி சொல்ல முடியுமா?”

“சொல்லலாம் சார். குறிப்பாக சொல்வதென்றால் கனடாவில் இருந்து ஒருவர் போன் செய்து ‘வயணமாக சாப்பிட்டான் என்று சொல்லி இருக்கிறீர்களே, அம்மா! அப்படி என்றால் என்ன?’ என்று கேட்டார். அந்த ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அவருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாம், அதனால் அதை கேட்டார். சட்டமாக, சம்பிரதாயமாக சாப்பிடுவது என்று சொல்வார்களே, அது என்று அவருக்கு புரிய வைத்தேன். அப்புறம் திருவனந்தபுரத்திலிருந்து ஒரு கிறிஸ்தவ ஃபாதர் ஃபோன் செய்து ஒரு கதையை மிகவும் பாராட்டினார். சிங்கப்பூரிலிருந்து ஒரு அம்மாள் ‘தன்னுடைய அம்மா வயதானவர். பாரிச வாயு வந்து ஒரு கை தான் விளங்குகிறது. அந்த கையில் எப்போதும் “மல்லிகை பூ வீடு’ நாவலை வைத்திருப்பார். அந்த கதை அவரை மிகவும் கவர்ந்து விட்டது’ என்று சொன்னார். ஏனென்றால் அவர்கள் ஸ்ரீரங்கமாம். அது போல் எல்லாவற்றையும் விட மனநிறைவை கொடுத்தது எது தெரியுமா? கோயம்புத்தூரில் இருந்து ஒரு அம்மா போன் செய்தார்கள். அவருடைய பையன் ஏதோ ஒரு குற்றம் செய்து சிறையில் இருந்தான். அவன் பரோலில் வந்த போது சொன்னானாம். “‘ஐயாறப்பன் வீடு நாவலை எனக்கு அங்கே படிக்கக் கொடுத்தார்கள். அதை படித்ததில் இருந்து இனிமேல் மனதால் கூட எவருக்கும் தீங்கு நினைக்க கூடாது, மிகவும் மாற வேண்டும் என்று நான் என்று மனதில் சபதம் எடுத்துக் கொ,ண்டேன், அம்மா!” என்று சொன்னானாம். சொல்லிவிட்டு அந்த அம்மா பெரியதாக அழுதுவிட்டார்கள். எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன. ஏதோ ஒரு இடத்தில் சமூகத்தில் ஒரு சின்ன சீர்திருத்தம் நம்மால் ஏற்பட்டது என்றால் நமக்கு சந்தோஷம் தானே!. என்னுடைய கதைகள் எந்த அளவு யாரையாவது சென்று அடைந்தால் திருப்தியாவேன் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமானால், என்னுடைய உறவினர் ஒரு பெண்மணி. வயதானவர். மல்லிகை பூ வீடு நாவலில் ஸ்ரீரங்கத்தில் ஒரு வீட்டை வர்ணித்திருந்தேன். அவருக்கு சின்ன வயதில் ஸ்ரீரங்கத்தில் ஒரு வீடு இருந்ததாம். அவருக்கு அதிக விருப்பம் இல்லாமலே அந்த வீட்டை விற்று விட்டார்களாம். அவருக்கு கொஞ்சம் வயதானதினால் உள்ள தடுமாற்றம் இருந்தது ஒரு நாள் பார்த்தால், ஒரு மொண்டாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு அந்த வீட்டைப் பற்றிய வர்ணனை இருந்த பக்கத்தை முழுவதுமாக அழிக்க பார்த்திருக்கிறார். அவரை எந்த அளவு அந்த வர்ணனை தொட்டிருந்தால் அப்படி செய்வார், சொல்லுங்கள்! இதெல்லாம் தான் ஒரு எழுத்தாளருக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பவை என்று நான் நினைக்கிறேன்

இன்னொன்று தூத்துக்குடியில் முடி திருத்தகம் வைத்திருக்கும் முத்து என்பவர் என்னுடைய “இளம் பெண்ணின் நாட்குறிப்பு” என்ற ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட முழு நீளக் கதையைப் பற்றி பேசினார். அவர் வைத்திருக்கும் முடி திருத்தகத்தில் ஜனங்கள் படிப்பதற்கு என்றே ஒரு சின்ன நூலகம் நடத்துகிறார். அந்த நூலகத்தில் இந்த கதையும் வைத்திருக்கிறார். தனக்கு மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் இந்த கதையை கண்டிப்பாக படிப்பேன் எந்த பக்கம் கிடைத்தாலும் அதை படிப்பேன்” என்று சொன்னார். இந்த விஷயத்தை அவர் பிரதமர் மோடியிடம் “மன் கி பாத்” நிகழ்ச்சியில் சொன்னார், தற்செயலாக நான் அதை டிவியில் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது”

உரத்தசிந்தனை விழாவில்
கம்பர் விழாவில் சாந்தா தத் , ராஜம் கிருஷ்ணன்
தெலுங்கானா தமிழ்ச்சங்க விழாவில்

அதில் அப்படி என்னம்மா விசேஷம்?”

“அது நாஜிகளால் யூதர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்பது பற்றிய உண்மைக் கதை ஒரு 13 வயது பெண் அன்றாடம் தன்னுடைய வீட்டில் நடந்த மற்றும் அந்த குழந்தைக்கு தெரிந்தவர்களுக்கு நடந்த எல்லா கஷ்டங்களையும், அவர்கள் அனுபவித்த துன்பங்களையும், எப்படி எல்லாம் கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்தது என்பதையும் அதில் எழுதி இருக்கிறாள். அந்த புத்தகம் எத்தனையோ முறை மொழியாக்கம் செய்யப்பட்டாலும் என்னுடைய மொழியாக்கத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இவை எல்லாம் தவிர, “சப்தகிரியில் நான் எழுதும் ஆன்மீக கட்டுரைகளுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு. எங்கெங்கிருந்தோ தெரியாதவர்கள் எல்லாம் போன் செய்து வாழ்த்துவார்கள்.” இப்பொழுது என்னுடைய புத்தகங்கள் அமேசானில் கூட கிடைக்கிறது. நிறை காலாண்டு இதழில் ஸ்ரீ இராமானுஜரை பற்றிய இதழுக்கு ஆசிரியராக இருக்கும் வாய்ப்பை எனக்கு நல்கினார் இளையவன் அவர்கள் அது எனக்குக் கிடைத்த பெரிய பேறாகவே பாவிக்கிறேன்.

“ உங்கள் சேவை பிரமிக்க வைக்கிறது. இங்கு ஹைதராபாத்தில் உங்களுடைய தமிழ் பணிகள் என்னென்ன?”

“இங்கும் பல தமிழ் சங்கங்கள் உள்ளன. ஆரம்பத்திலிருந்து நான் எல்லா சங்கத்திலும் உறுப்பினராக இருக்கிறேன். ஹைதராபாத் மாநகர் தமிழ்ச் சங்கம்,  நம் ஊர் உரத்த சிந்தனையின் எழுத்தாளர் சங்கத்தின் கிளை, ‘நிறை இலக்கிய வட்டம், திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம், தெலுங் கானா தமிழ் சங்கம், தமிழ் ஐக்கிய சங்கம் ஆகிய அனைத்திலும் நான் உறுப்பினர். கலாச்சார அமைப்புகளிலும் உறுப்பினர். எனக்கு மேடைப்பேச்சு என்பது மிகவும் பிடிக்கும், இந்த சங்கங்களில் நான் இருப்பதால் எனக்கு அதற்கான வாய்ப்பு அடிக்கடி கிடைக்கிறது. அதுவும் “நிறை” உரத்த சிந்தனை இரண்டிலும், தெலுங்கானா தமிழ் சங்கத்திலும் நிறைய உரைகள் நிகழ்த்தி இருக்கிறேன். பட்டிமன்றங்களிலும், கருத்தரங்கங்களிலும் பேசியிருக்கிறேன் ஆங்கிலத்தில் சொற்பொழிவு என்றால் ரோட்டரி கிளப், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றில்  ஒரு மணி நேர சொற்பொழிவு நடத்தி உள்ளேன். இதெல்லாம் எனக்கு மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கொடுப்பவை. ஏனென்றால் பள்ளிக்கூட நாட்களிலேயே நான் பேச்சுப் போட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டவள் தான். அந்த ஒரு ஆர்வம் இன்றும் தணியவில்லை. அதற்கெல்லாம் எனக்கு நிறைய நினைவுப் பரிசுகள் கிடைத்துள்ளன.

எனக்கு நாடகத்திலும் ஒரு சுவை உண்டு யாமறிந்த மொழிகளிலே என்று மொழி குழப்பத்தை வைத்து ஒரு நாடகம் எழுதி நானும் அதில் நடித்தேன். அது ஹைதராபாத் மாநகர் தமிழ் சங்கத்திற்காக எழுதப்பட்ட  ஒரு முழு நீள நகைச்சுவை நாடகம். பக்தி டிவியில் ஆண்டாளின் வாரணமாயிரம் பற்றி ஒரு மணி நேரம் தெலுங்கில் விளக்கம் கொடுத்துள்ளேன். விசுவின் அரட்டை அரங்கத்தில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டேன். கல்யாண மாலையிலும் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டேன். கலைஞர் டிவியில் “இன்றைய விருந்தினர்” பகுதியில் மற்றும் பெப்பர்ஸ் டிவியில் “படித்ததில் பிடித்தது” ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.

காஞ்சி முத்தமிழ் நூல் வெளியீட்டு விழாவில்
குமுதம் சிநேகிதி லோகநாயகி அவர்களுடன் மைதிலி...

“உங்களுக்கு கிடைத்துள்ள விருதுகள் பற்றி சொல்லுங்கள்.

“.உரத்த சிந்தனையிலிருந்து “புதினச் சிற்பி”, நிறையும் லேடீஸ் ஸ்பெஷலும் சேர்ந்து “ஸ்பெஷல் லேடீ” அவார்ட், அதன் பிறகு நிறையில் இளையவன் ஐயா அவர்கள் தாய், தந்தை நினைவாக கொடுத்த விருது, கோயம்புத்தூர் “வசந்த வாசல்” இருந்து “பல்சுவை வித்தகர்” என்னும் விருது, இன்னும் சிலவும் கூட கிடைத்துள்ளன.” சமீபத்தில் திருவள்ளுவர் தமிழ் சங்கத்தில் எழுத்துச் சிற்பி என்று ஒரு விருதளித்தார்கள்

பொதுவாக உங்கள் நாவல்களில் சிறப்பு அம்சம் என்று நீங்கள் கருதுவது எது?”

“முன்பே சொன்னேன் ஒன்றைப் போல் ஒன்று இருக்காது இன்னொன்று எதிலுமே  இப்போது வரும் சீரியல்களில் நாம் காண்கிறோமே அது போல் கல்யாணத்தை நிறுத்துவது, கொலை செய்ய முனைவது, யாராவது கர்ப்பமானால் கலைக்க மருந்து கொடுப்பது, இதுபோன்ற சம்பவங்கள் நிச்சயமாக இருக்காது. ஏதோ ஒரு திருப்பத்திற்காக ஒருவர் வில்லத்தனமான வேலையை செய்யலாம். அதுவும் கூட இல்லாமல் இயல்பாகவே நடக்கும் கதைகளும் உண்டு. ஆகையால் அந்த மாதிரியான சூழ்ச்சி, சதி உள்ள கதைகளை நான் எழுதுவதில்லை.

“உங்களுடைய எழுத்துப் பணிக்கு உங்கள் கணவர் உறுதுணையாக இருக்கிறார் என்று முதலிலேயே சொன்னீர்கள். உங்களுடைய மற்றுமுள்ள குடும்ப உறுப்பினர்கள் கூட ஆதரிக்கிறார்களா?”

“ஆமாம் நிச்சயமாக. என்னுடைய கணவர் என்னை உற்சாகப்படுத்துவது போல் அனைவருக்கும் கணவன்மார் அமைந்தால் எத்தனையோ பெண்கள் இன்னும் கூட முன்னுக்கு வருவார்கள் என்பது என் அபிப்பிராயம். அது தவிர, என்னுடைய மகன் கணினியில் வல்லவர் ஆகையால்  கணினியில் எனக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பார். தவிர என்னுடைய மருமகளும் நான் எழுதுவதற்காக எத்தனை நேரம் எடுத்துக் கொண்டாலும் உற்சாகப்படுத்துவார். ஆக எனக்கு குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்பு இருக்கிறது.

இப்போது என்னுடைய வண்ணத் தேரில் வசந்தம் என்ற புதினத்தை ஜூலை 14ஆம் தேதி நம் உரத்த சிந்தனையின் இந்த ஆண்டு விழாவில் வெளியிடுகிறார்கள்.”

ஆசிரியர் அமின் :நன்றி அம்மா ! உங்களைப் பற்றி நிறைய சொன்னீர்கள். உங்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி.

மைதிலி சம்பத்:  மிக்க மகிழ்ச்சி சார் ! எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தங்களுடைய இச்செயலுக்கு நாங்கள் அனைவருமே நன்றிக் கடன் பட்டுள்ளோம். வணக்கம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சுவிஸ் நாட்டுத் தமிழச்சி

வணக்கம்

தங்கள் பூர்வீகம் இலங்கை எனத் தெரியும். இலங்கையில் எந்தப் பகுதியில் தங்கள் குடும்பம் இருந்தது?

இலங்கை யாழ்மாவட்டத்தில் உள்ள கோப்பாயில்  வசித்தோம்.

எப்போது புலம்பெயர்ந்தீர்கள்?

 » Read more about: சுவிஸ் நாட்டுத் தமிழச்சி  »

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »