தவறு யார் செய்தாலும் அது தவறே…


பெப்ரவரி – 2026 / 104 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

கரந்தை புலவர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். பள்ளி ஆசானாகவும் அதைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றினார். யாப்பெருங்கலக் காரிகையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஏகபோக ஆற்றல் இருந்தும் கவிதை எழுத விரும்பாதவர். ஆயினும் யாராக இருந்தாலும் தமிழில் ஒரு தவறு என்றால் கொம்பு சீவியக் காளை போல உடனே ஓட வந்து தவறுகளைச் சுட்டிக் காட்டி மண்டியிட வைப்பதில் இவருக்கு இணை இவரே.

நேர்கண்டவர்: திரு ஏ.டி.வரதராசன்

1.           ‘சங்கிலி சுப்பிரமணியன்” என்பது அடைமொழியோடு கூடிய பெயராகத்  தெரிகிறதே  தங்கள் முழு பெயர் என்ன?

தந்தை பெயர் சங்கிலி. முன்னெட்டுத் தாங்கி பெயர் வடிவமைப்பது தொழில் நுட்பக் கால வழக்கமாதலின் அவ்வாறு எழுதப்படுகிறது. மற்றபடி “என் தந்தை என் நோற்றான் கொல்” என்று சொல்லிக் கொள்ளும்படியாக என்னிடம் ஏதுமில்லை. 

2.           தங்களின் பணி, மற்றும் குடும் பத்தைப்  பற்றி சுருக்கமாகச் சொல்லவும்

1963 – இல் பள்ளியிறுதி வகுப்பு. கரந்தைப் புலவர் கல்லூரி என் தாய்வீடு. என் தமிழ் குடியிருக்கும் கோயில். தனி முயற்சியில் முதுகலை, ஆய்வுப் பட்டங்கள். ஆனால் அவை அத்தனையும் வெறும் அட்டைகள். தெருத்தெருவாக நாளிதழ்கள் போட்டுத் தண்டல் செய்யும் தொடக்கக் காலப் பணி. தஞ்சை நாட்டார் திருவருள் கல்லூரியில் மதிப்புறு பேராசிரியர் எனும் இறுதிக்காலப் பணி. எந்தப் பணியும் சிறக்கவில்லை. நானும் சிறக்கவில்லை. என் இயல்பு சிக்கலானது. பிறரால் எளிதில் ஏற்றுக் கொள்ள இயலாதது. மகன்கள் இருவர், வளர்ப்பு மகள்கள் மூவர். அனைவரும் கற்றவர். ஒரு மகளுக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

3.           தமிழ் மீது எப்படி ஈடுபாடு வந்தது?

“பழந்தமிழ் இலக்கணங்களிலும் இலக்கியங்களிலும் பெரும்புலமை பெற்றவர்” என்னும் என்னைப் பற்றிய மதிப்பியல் ஒரு மாயை! எனக்குத் .தமிழ் கற்றுத் தந்த ஆசான்கள் கலைஞரும் கண்ணதாசனுமே! உரைநடையிலும் கவிதையிலும் தமிழை எப்படிக் கையாளவேண்டும் என்பதை இந்தத் தமிழுலுகத்திற்குக் கற்பித்துச் சென்ற மாபெரும் பேராசிரியர்கள் அவர்கள். தன்னுடைய வெப்பத்தையும் தண்மையையும் தமிழ்த்தாய் உணர்ந்த தருணங்கள் அவை. தமிழுக்கு மீசை முளைக்க வைத்தவர் கலைஞர். அவளுக்குத் தலைவாரிப் பூச்சுட்டிவிட்டவர் கண்ணதாசன்!

4.           யார்  தவறு  செய்தாலும் தவறுகளைத் தைரியமாகச் சுட்டிக் காட்டுகிறீர்  தமிழ் மீது இத்தனைக் காதல்  ஏன்?

தவறான பார்வை.  நான் போலிகளைத் தோலுரிக்கிறேன். என்னினும் வல்லார் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். திறனாய்வில் கூடப் போலிகள் வந்துவிடலாம். ஆனால் படைப்பில் போலிகள் நுழைந்து இன்றையக் கவிதை உலகம் போலிகளால் நிரம்பி வழிகிறது.  “இயற்சீர் வெண்டளை” என்பதற்குப் பதிலாக ‘உறழ் தளை” என்று சொல்கிறவனை நான் பிறவிப் பகையாகப் பார்க்கிறேன். யாப்பமைப் பாடல்களை எழுதியவனையெல்லாம் “மரபுப்பாமணி” என்றெல்லாம் சிலாகிப்பதை என்னால் எந்தப் பிறவியிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

5.           தனித்தமிழைப்  பற்றி தங்கள் கருத்து என்ன?

தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கத்தையும் தொல்காப்பிய விதிகளையும் சரியாகப் புரிந்து கொள்ளாத பலரின் கைகளில் அது சிக்கித் தவிக்கிறது. எடுத்துக்காட்டாக மறைமலை அடிகளாரின் உரைநடைப் போக்கை யாராவது பின்பற்ற இயலுமா? தமிழின் தூய்மை கெட்டுவிடக் கூடாது என்பதில் எனக்குப் பெருங்கவலை உண்டு. அதற்காக மெய்ப்பை, குமுகாயம், துமுக்கி என்றெல்லாம்  கவிதையில் நுழைப்பதால் வரும் அழகியல் கேட்டைச் சுட்டிக் காடடுவது என் கடமை. தனித்தமிழால் உரைநடை சிறக்கலாம். ஆனால் கவிதை நிச்சயம் அழகு பெறாது. துரை மாணிக்கமே முயன்று தோற்றது!

6.           பொது ஊடகங்கள் தமிழை வளர்க்கிறதா இல்லையா எப்படி?

‘இல்லை” என்று உறுதியாகவும் சொல்லலாம். உரக்க முழங்கலாம்.  மாறாகக் கெடுக்கிறார்கள். ‘மறை” என்றால் எதிர்மறைதான். நேர்மறை என்கிறார்கள். இதனை உண்மை என்று நம்புகிற தமிழ்ப் பேராசிரியர்கள் அப்படியே மேடையிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திரையில் காணப்படும் தொடர்களில் ஏகப்பட்ட பிழைகள். தொலைக்காட்சிகளின் பெயர்களே தமிழில் இல்லையே!

7.           பழம்பெரும் புலவர்களில் தங்கள்  மனம் கவர்ந்தவர்  யார்? ஏன்?

சங்கச் சான்றோர்கள் அனைவரும் வணக்கத்திற்குரியவர்கள். இருப்பினும் கடந்த அறுபது ஆண்டுகளாக என்னோடு வாழ்ந்து உள்ளங்கவர் கள்வனாக உலாவி வரும் திருவள்ளுவரே என் மனங்கவர்ந்தவர்.

8.           தாங்கள்  இளமையில்  ரசித்த  சிறந்த  காதல்  பாடல் எது?

உங்கள்  வினா திரைப்படல் என்பதாக நானே கருதிக் கொண்டு விடையிறுக்கிறேன். நன்றாக நினைவிருக்கிறது. 1960 அக்டோபரில் வெளிவந்த ” மன்னாதி மன்னன் ” படத்தில் வரும் “கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ?” என்ற பாடல்தான். காதலுண்ர்ச்சி இல்லாத எவரையும் கூட அது கண்கலங்க வைத்துவிடும். அது இளமைக்காலம் இல்லை. பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு படித்த காலம்.

9.         தவறுகளைத்  தேடித்தேடி சுட்டிக்  காட்டுகிறீர்,  ஆனாலும்  இதுதான்  தவறுகளே  இல்லாத நூல்  என்று  தாங்கள் சிபாரிசு  செய்யும்  நூல்  எது  ஏன்?

கவிதை நூல் படைப்பின் வெற்றி படைப்பாளன் உணர்ச்சி மற்றும் கருத்தியல் ஆகியவற்றின் வெளிப்பாட்டு உத்தியைப் பொருத்தது. இதில் தோன்றும் மாறுபாடு தவறு காணுவதாகாது. என் பார்வையில் திருக்குறள்தான் தவறே இல்லாத நூல்.

10.         தற்கால எழுத்தாளர்களுக்குத்   தாங்கள் சொல்லும்  அறிவுரை  என்ன?

எழுத்தாளர்கள் பலவகைப்படுவார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் தகுதி உறுதியாக எனக்கில்லை. கவிதையிலும் அது பற்றிய திறனாய்விலும் ஒரு அரை நூற்றாண்டை நான் செலவிட்டிருப்பதனால் கவிஞர்களுக்குச் சொல்லக் கூடியது ஒன்றுண்டு. கவிதை தற்போது நோய்வாய் பட்டிருக்கிறது. அதற்கு மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு தேவை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்பதுதான்.

11.         முகநூல்  விருதுகளைப் பற்றி  தங்கள் கருத்து என்ன?

முகநூல் குழுமங்கள் பல இதனை ஒரு பகுதி நேரத் தொழிலாகவே நடத்துகிறார்கள். வேதனையாக இருக்கிறது. இத்தனை ஆயிரம் நூல்கள் வெளிவந்தும், இத்தனை இலட்சம் கவிதைகள் வெளிவந்தும் சுரதாவிற்குப் பிறகு யார் எழுதிய கவிதையும் மேடை ஏறாதது ஏன்? கருத்துக்குள் நிலைத்திருக்க வேண்டிய கவிதை காதோடு நின்று போனதற்குக் காரணம் என்ன? இது பற்றிச் சிந்தித்தால் ஒரு வேளை விருதுகளுக்கு விடுப்பு கிட்டலாம்.

12.         புதுக்கவிதை, மரபுக் கவிதை  இவை  இரண்டில்  எது சிறப்பு?  ஏன்?

இந்த நிரலே உங்கள் பார்வையை வெளிப்படுத்துகிறது, மரபு முன்பும் புதுமை பின்பும் வந்திருக்க வேண்டும். யாப்பை மட்டும் அளவு கோலாக வைத்துக் கொண்டு மரபுக்கவிதை என்பது அறியாமை. புதுக்கவிதை என்பது தமிழ்மீது வலிந்து திணிக்கப்பட்ட கவிதை வல்லாண்மை. அதனால்தான் அது தற்போது தற்கொலை செய்து கொண்டு ஹைக்கூவுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. இதுவும் விரைவில் தற்கொலை செய்து கொள்ளும். சாவு தண்டவாளத்திலா ஏரியிலா? சுனாமியிலா என்பதுதான் என் எதிர்பார்ப்பு. எனினும் பரிதாப சாவு உறுதி!

13.         கவிதை,  கட்டுரை, சிறுகதை, நாவல் இவைகளில்  தமிழின்  வளர்ச்சிக்கு எது  பொருத்தமானது? ஏன்?

எல்லாமே பொருத்தமானவையே. எனினும் நான் கவிதைக்கு வாழ்க்கைப் பட்டிருப்பதால் நான் அதனையே முன்னெடுக்கிறேன். உணர்ச்சிக் கொந்தளிப்பு, எளிமை, அழகியல், சுருங்கிய வடிவநேர்த்தி, சுருக்கென்னும் கருத்தியல் பதிவு, அங்கதம், ஒலிநயம் என அனைத்தும் கொண்ட இலக்கிய வடிவம் கவிதையே என்பது என் கருத்து. அது இடி அமீன் கையில் சிக்கிய உகண்டா போலச் சிக்கித் தவிக்கிறது என்பதுதான் விலக்க முடியாத சோகம்.

14.         பழம்பெரும் புலவர்களில்  காதலைத்  துல்லியமாகச்  சொல்லும்  செய்யுள் எது?

சங்கச் சான்றோர்கள் செய்த அத்தனையும் துல்லியமான உணர்ச்சி 

வெளிப்பாட்டுக்கு உரிமையானவையே. எனினும் இந்த அறுபதாண்டு

காலத்தில் என் நெஞ்சில் நிறைந்த காதல் பாடல் இதுதான்.

“சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன

நலம்பெறு கையில் என் கண் புதைத்தோயே!

பாயல் இன் துணை ஆகிய பணைத்தோள்

தோகை மாட்சிய மடந்தை

“நீயலது உளரோ என் நெஞ்ச மர்ந்தோரே!”

கொங்கு தேர் வாழ்க்கை என்னும் சில வரிப் பாடலுக்கு அறிஞர் மு.வ. அதே பெயரில் ஒரு திறனாய்வு நூலை எழுதியிருக்கிறார். இந்தப் பாட்டும் அந்தச் சிறப்பிற்கு உரியது. ஐங்குறுநூற்றில் குறிஞ்சித் திணையில் வரும் கபிலர் பாட்டு அது

15.         “வள்ளுவர் மறையும் வைரமுத்து கறையும்” எனும் தங்களின் கட்டுரையைத்  தொடர்ந்து வாசித்து  வருகிறேன்.  அப்படி என்றால் திருக்குறளுக்கு  இன்று வரை எழுதிய உரைகளில்  தங்களைக் கவர்ந்தது  யாருடைய  உரை? ஏன்?

ஐயமே வேண்டாம். ஆசிரியர் பரிமேலழகர் உரையே! அறுபதாண்டுகளாக என் தோழமை அவரோடுதான்!

16.         யார் எதை  எழுதினாலும்  இதைவிடப் பழம்பெரும்  புலவர்கள் எழுதியது  தான் சிறப்பு  என்று இன்றுவரை  விமர்சனம்  எழுகிறது.   ஏன்  அந்தப் பழம்பெரும்  புலமைக்கு   இணையாக இனிமேல் யாரும் வரமுடியாதா?  வரக்கூடாதா?

வரக்கூடாது என்பதன்று. வர இயலாது. அவர்கள் ஓலைச் சுவடியிலிருந்து திரிந்த வடிவங்களைப், புள்ளியல்லாத மெய் எழுத்துக்களைத் தமிழாக எண்ணிப் போராடித் தமிழ் கற்றவர்கள். பல நூல் கற்று ஒரு நூல் படைத்தவர்கள். நாம் ஒரு நூலைக் கண்டு பல நூலை எழுதி வெளியிடுகிறோம். அவர்களுக்குக் கவிதை ஒரு உந்துதல். நமக்குக் கவிதை விருதுகளுக்கான நுழைவுத் தேர்வு. உணவுவிடுதி சமையற் கூடத்துச் சரக்கு மாஸ்டர் கூட இன்றைய மிக உயர்ந்த விருதுக்கான தேர்வுக் குழுவில் இடம் பெற்று விடுகிறான். வாழ்க்கையைப் பரபரப்பாக ஆக்கிக் கொண்ட பிறகு இலக்கியப் பயிற்சிக்கு அடிப்படைத் தேவையான பொறுமை, சகிப்புத்தன்மை, ஒப்பீட்டு உணர்வு, இலக்கணப் புலமை, பல் துறை ஞானம், இடைவிடாச் சிந்தனை இவற்றைப் பெற இயலாது. இது என் கருத்து.

17.         ஆத்தீகம் நாத்திகம் இவை இரண்டில்  எது தேவை? ஏன்?

ஆரியத்தின் அடிவருடுவதுதான் ஆத்திகம் என்றால் அது என் தமிழ்மண்ணுக்குத் தேவையே இல்லை. எதனையும் அறிவினால் பகுத்து நோக்குவதுதான் நாத்திகம் என்றால் என் தாய்த்தமிழ் நாட்டிற்கு அது அவசரத் தேவை என்பேன்.

18.         தற்போதைய ஆட்சி முறை பற்றி  தங்கள் கருத்து என்ன?

“வணிகம் செய்ய வந்தவன் அரசியல் செய்தான் அன்று. இன்று அரசியல் செய்வதாகச் சொல்லிக் கொண்டு வணிகம் செய்கிறான்” வைரமுத்து சொன்னதைவிட நான் சிறப்பாகச் சொல்லிவிட முடியாது.

19.         தங்கள் மனைவியின் சிறப்புகளில் ஏதேனும் ஒன்றை இங்கே பகிரவும்

“இடும்பை தீர்ப்பவள் என் மனை! அவள் என் குடும்ப விளக்கு”

20.         தங்களைப்  பேட்டி  காணும்  தமிழ்நெஞ்சம்   பற்றி  ஓரிரு  வார்த்தைகள் சொல்லவும். அந்த இதழோடு மட்டுமன்று எந்த இதழோடும் எனக்கு அறிமுகம் கிடையாது. தமிழ்க்கவிதைகளைத் தவிர வேறு யாரோடும் எனக்கு அறிமுகம் கிடையாது. தம்பி துரை வசந்தராசனின் நேர்காணலை அந்த இதழில் படிக்கும் நல்வாய்ப்பினைப் பெற்றேன். அந்த இதழில் கவிதை கைவரப் பெற்றவர் பலர் எழுதிய கவிதைகளையும் அறிவர் பலரின் நேர்காணல்களையும் நான் படித்திருக்கிறேன். அத்தகைய சிறப்பான இதழில் என்னைப் பற்றிய இந்தத் தங்களுடைய நேர்காணல் ஒரு கண்ணேறாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு.          

Related Posts

நேர்காணல்

ஐயா மோகன்

ஒரு சிற்றூரில் ஏட்டுக்கல்வி அறிவில்லாமல் மூட நம்பிக்கையில் பற்றுக் கொண்டு வாழும் குடும்பத்தில் பிறந்த எனக்கு "மூக்கன்'' என்று பெயரிட்டனர். கற்ற நண்பர்களும், பெரியவர்களும் எனக்கு "மோகன்'' என்று பெயரைத் திருத்தம் செய்தார்கள். அன்றைய நிலையில் நானும் ஏற்றுக் கொண்டேன். "மோகன்'' என்பது வடசொல்லாயிற்றே. பெருவாரியாக என் தந்தையின் பெயர் "அய்யாவு'' என்பதில் ல்அய்யால் என்ற பகுதியை மட்டும் முன் நிறுத்தி "அய்யா.மோகன்'' என்றும், யான் தமிழாசிரியராகப் பணியாற்றியக் கரணியத்தால் "புலவர் அய்யா. மோகன்'' என்றும் பெயராயிற்று.

நேர்காணல்

வஃபீரா வஃபி

நான் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவள். எனது பெற்றோர் இந்திய தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டாலும், சிறுவயதிலேயே வியாபார நிமித்தம் குடும்பத்துடன் இலங்கைக்கு குடிபெயர்ந்தவர்கள்.

பாடசாலைக் காலத்தில் சாரணியர் இயக்கத்திலும் அங்கம் வகித்து, பல சமூக சேவையிலும் பங்களிப்பு செய்துள்ளேன்

2022 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் எனது கன்னி நூலான "புள்ளியில்லாக் கோலம்" நூலை வெளியிட்டுள்ளேன்.

நேர்காணல்

திரு சங்கரபாண்டியன்

கவிஞர் வைரமுத்து அவர்களின் ஒவ்வோர் உரையிலும் ஏதேனும் ஒரு புதிய சேதியை அறிமுகம் செய்வார் உதாரணமாக, ஒன்று, ஒரு நூலக விழாவில் பேசும்போது, ஆதிகாலத்தில் களிமண்ணில் செய்த சிலேட்டில் படைப்புகளைச் சேகரித்து முதன்முதலாக நூலகம் அமைத்தவர் யாரெனத் தேடி அந்த மூலவரின் சிறப்பை அழுத்தமாக அவ்விழாவில் அறிமுகம் செய்து விடுவார். இப்படி எந்த மேடையாயினும் தன்னுடைய உரைக்கான தேடலை இன்றுவரை அவர் நிறுத்தவே இல்லை, மற்றும் உணர்ச்சியும் உச்சரிப்பும் குரல்வளமும் அவையோரைத் தன்பால் ஈர்க்கும் சக்தியாக இருக்கின்றன.