வாணி தாசன் புகழ் வாழ்க…
.
பாரதி தாசன் போற்றும்
பைந்தொடை மாண வன்நீ
சீரசை அணிகள் கூட்டும்
சிந்தையின் தேன வன்நீ
காரது பெய்யும் போதுங்
காற்றது வீசும் போதும்
சாரணர் போல பாட்டு
சரித்திடும் வான வன்நீ
.
பாமரன் படித்துப் பார்த்துப்
பாங்குடன் புரியும் வண்ணம்
பூமணம் வீசு கின்ற
புலமையின் உச்சம் பெற்று
சாமரம் வீசும் பாட்டால்
சரித்திரம் படைக்க அந்த
நாமகள் உனக்கு மட்டும்
நல்வரம் தந்தா ளாசொல்
.
செந்தமிழ் மட்டும் அன்றி
சிறப்புடன் பிரஞ்சு மற்றும்
அந்தவூர் தெலுங்கு மேலும்
ஆங்கிலப் புலமை பெற்று
தந்தவை எல்லா நூலும்
தரமென புகழும் வண்ணம்
சிந்திடும் சிந்தை கொண்ட
சிகரமும் நீதான் ஐயா
.
பாட்டினில் நாட்டுப் பற்றும்
பழகிடும் மொழியின் பற்றும்
ஏட்டினில் எழுதி வைத்த
எம்பெரும் புலமை வாய்த்தத்
தீட்டிய கத்தி போல
திசையெலாம் சாதி தன்னை
மூட்டிய தீயாய் நீக்கி
முழுவதும் சீரும் செய்தாய்
.
நண்பனாய் தாச னுக்கும்
நற்றமிழ் அணிக ளுக்கும்
விண்ணொளிர் கவிதை தந்து
வியத்தகு கவியே நிற்கும்
அன்பனே உன்னைப் போற்ற
அருந்தமிழ் பத்தா தையா
இன்பனே உன்னைப் போற்ற
இனும்மொழி வேண்டு மையா
தமிழ்நெஞ்சம் அமின்