2) சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு சுருக்கமாகச் சொல்லுங்கள்.
சித்த மருத்துவம் என்பது நிரந்தரமான தீர்வை தரக்கூடியது. சித்த மருத்துவம் ஒவ்வொரு நோய்களுக்கும் முழுமையான தீர்வை தரக்கூடியது. இது சற்று நீண்ட காலம் சாப்பிட வேண்டிய தேவைக்குறியது. நோயினுடைய தன்மை பொறுத்து தான் சாப்பிட வேண்டிய காலம் அமைகிறது. ஆங்கில மருத்துவம் என்பது உடனே தீர்வு தரக்கூடியது ஆனாலும் நிரந்தரமாக குணப்படுத்தாது. ஆனால் சித்த மருத்துவம் என்பது நிரந்தர தீர்வையும் முழுமையான நலனும் தருவதனால் சற்று காலதாமதம் ஆவது என்பது இயற்கை. அதேபோல சில நோய்களுக்கு உடனடி தீர்வும் உண்டு. சித்த மருத்துவத்தில் உடனடி தீர்வு உள்ள மருந்துகளும் உள்ளன.
3) பக்க விளைவுகள் அல்லாத போதும் சித்த மருத்துவத்தைப் பெரும்பாலானோர் பின்பற்றாததற்குக் காரணம் என்ன?
பக்க விளைவுகள் இல்லாத சித்த மருத்துவத்தை பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதில்லை என்பதை விட, பின்பற்றுகிறார்கள் என்பது தான் உண்மை. உடனடி தீர்வை நோக்கி சென்ற நோயாளர்கள் அந்த உடனடி தீர்வு நிரந்தரம் இல்லை என்பதோடு, அந்த உடனடி தீர்வு வேறொரு பிரச்சனையை உடலில் உருவாக்குவது என்று அறிந்த பிறகு சித்த மருத்துவத்திற்கு வருகிறார்கள். அப்படி வருபவர்கள் முழுமையான மருத்துவம் செய்து கொள்கிறார்கள். இதில் சித்த மருத்துவத்திற்கு வருகிறவர் கள் குறைவு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முற்காலத்தை விட இப்பொழுது சித்த மருத்துவத்தை நோக்கி மக்கள் ஏராளமான பேர் வருகிறார்கள் என்று தான் என்னால் கூற முடியும்.
4) தங்கள் அனுபவத்தில் ஆகப் பெரிய நோயை குணப்படுத்தியது உண்டா? என்ன நோய்?
நீங்கள் பெரிய நோய் என்று கூறுகிறது அனைத்தும் நீண்ட காலம் தீர்வு இல்லாமல் இருக்கின்ற நோய்களையே!
ஆங்கில மருத்துவர்கள் ‘ஃபேட்டி லிவர்’ என்று சொல்லுகின்ற காமாலை நோயை முழுமையாக பலருக்கும் குணப்படுத்துகிறோம். தோல் நோய் என்று சொல்லுகின்ற மேகநோய். அது பலருக்கும் குணப்படுத்தியுள்ளோம். வயிற்றுப் புண்ணை நிரந்தரமாக குணப் படுத்துகிறோம். சிறுநீரகத்தில் ஏற்படும் சிறுநீரகக் கல் யூரியா கிரியேட்டின் போன்ற நோய்களை குறிப்பிட்ட விகிதாச் சாரத்திற்கு கொண்டு வந்து ஏறாமல் சமனில் வைத்திருக்கிறோம். நீண்ட கால நோய் அனைத்திற்கும் பல்வேறு விதமான நோய்களுக்கும் எனது 30 ஆண்டுகால மருத்துவத்தில் நிறைய குணப்படுத்தி இருக்கிறேன். என்னிடம் சிகிச்சை பெற்ற மக்களே இதற்கெல்லாம் உதாரணமாக இருக்கிறார்கள்.
5) காலம் காலமாக நீரிழிவு நோய் களுக்கு நிரந்தர தீர்வு இல்லையே…? இதற்கு காரணம் என்ன?
காலங்காலமாக நீரிழிவு நோய்களுக்கு நிரந்தர தீர்வு இல்லையே என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீரழிவு என்பது ஒரு நோயில்லை என்று கூறுவார்கள். ஏனென்றால் நீரழிவு சுகர் கம்ப்ளைன்ட் என்பார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கிறது என்று நமக்கு அறிவுறுத்துவது தான் சர்க்கரை. இது இன்சுலின் குறைபாட்டினால் வருகிறது என்று கூறுகிறார்கள். சர்க்கரை நம் உடலுக்கு தேவை. சர்க்கரை இல்லை என்றால் மனிதன் வாழ முடியாது. நீரிழிவு என்பது அந்த சக்கரை ரத்தமாக மாற்றப்பட முடியாத நிலை என்று கூறுகிறார்கள். அப்படியானால் நாம் அதற்கு தகுந்த முறையில் உணவு முறைகளை மாற்றி அமைத்துக் கொண்டாலே அது கட்டுப் பாட்டிற்கு வந்துவிடும். இதற்கு இயற்கை உணவு முறை மற்றும் இயற்கை மருத்துவம் மிகச் சிறந்த தீர்வை தருகிறது. இந்த சர்க்கரை நோயாளிகள் நோயின் தன்மையையும் மருத்துவத்தையும் அறிந்து உணவு முறையில் கடைபிடித்து கொள்ளலாம். ஆகையினால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது உணவில் மிக எளிதில் செய்யலாம். மேலும் அவர்கள் முழுமையாக அதிலிருந்து விடுபட வேண்டுமானால் அவர்களும் தன்னை சித்தர் நிலைக்கு உயர்த்திக் கொண்டு, ஒரு சித்தர்களைப் போல தன்னுடைய வாழ்வை வாழ்வாரேயானால் நீரழிவு நோய் என்ன!? எல்லா நோய்களும் உடனே நீக்கப்பட்டு, இந்த உடல் காயகல் பாக்கப்பட்டு நோயின்றி பல ஆண்டுகள் வாழலாம் என்று சித்தமருத்துவமும் சித்தர்களும் கூறுகிறார்கள். அப்படி ஒப்பிடும் பொழுது எந்த நோயும் ஒரு சித்தனுக்கு பெரிய செய்தி அல்ல. இவைகள் எல்லாம் ஒரு சித்தன் நினைத்தால் சாதாரணம். எனவே சாதாரண மக்களுக்கு இது பலவீனம் என்று தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
6) முற்காலத்தை விட இப்போது நோய்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ள தாகப் புள்ளி விவரங்கள் சொல்கிறது இதற்கு காரணம்… ஆங்கில மருத்துவமே என்பதைத் தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
முந்தைய காலத்தை விட இப்போது நோய்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுவது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், ஒரு 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு தாலுகாவில் ஒரு பெரிய நகரத்தில் எத்தனை மருத்துவமனைகளும் எத்தனை மருந்தகங்களும் இருந்தன? இப்போது வளர்ந்துள்ள மக்களுக்கு நீங்கள் அதே விகிதாச்சாரத்தை எடுத்துக் கொண்டா லும், எத்தனை மருந்தகங்களும் எத்தனை மருத்துவமனைகளும் இருக்கிறது என்று எண்ணி பார்த்தால் அது பெருக்கல் விருகத்தை விட அதிகமாகவே இருக்கிறது. எனவே முந்தைய காலத்தை விட நோய்கள் குறைவாக இருக்கிறது என்ற புள்ளி விவரம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பல மடங்கு நோய்கள் அதிகமாகி இருக்கிறது. அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை.
7) மன நோய்களை சித்த மருத்துவம் குணமாக்குமா?
தமிழ் மருத்துவத்தில் பித்தம் அதிக மாவது தான் பித்து அல்லது மனநோய் என்று கூறி இருக்கிறார்கள். இதற்கு உடலில் உள்ள உஷ்ணத்தை குறைப்பதற்கான சர்பகந்தா, பேய்பீர்க்கம் விதை போன்ற மருந்துகள் இருக்கிறது. ஆனால் இந்த துறை அவர்களை உடனிருந்து தங்க வைத்து பல மாதங்கள் பயிற்சி அளித்து குணப்படுத்த வேண்டிய ஒரு சூழல் இருப்பதினால் அப்படிப்பட்ட தகுதி இல்லாதவர்கள் மருத்துவர்கள் அதை எடுத்துக் கொள்வ தில்லை. பிற மருத்துவர்கள் அதை எடுத்து செய்கிறார்கள். சிறப்பாகவும் செய்கிறார்கள். இன்றைய கால சூழ்நிலையில் தமிழ் மருத்துவர்கள் மனநோயை அதிகம் எடுத்துக் கொள்வ தில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கும் மருந்து உண்டு. எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. குறிப்பாக மனம் கெட்டுப் போனால் உடல் கெட்டுப் போகிறது என்பதை தமிழ் மருத்துவர்கள் அருள், இறக்கம் போன்ற உயர்ந்த செயல்களை செய்து வந்தால் அவர்களுக்கு மனநோய் வராது என்ற அடிப்படை உண்மையை சொல்லுகிறது. நாம் எல்லோரும் இரக்கமுள்ளவர்களாக அன்புள்ளவர்களாக தயவு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை தமிழ் மருத்துவத்தில் இருக்கிறது. தமிழ் மருத்துவம் இன்று அதில் அதிக கவனம் செலுத்தவில்லை. மனநோயாளிகளை பராமரிக்க கூடிய தகுதி உள்ளவர்கள் இல்லை என்பதை காரணம் என்று நான் கூறுகின்றேன்.
8) ஒருவருக்கு சர்க்கரை அளவு குறைகிறதா கூடுகிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்ளலாம்?
சர்க்கரை நோயாளர் ஒருவர் சர்க்கரை நோயோடு நெடுநாள் இருப்பாரேயானால் அந்த நோயாளருக்கே தெரியும் இப்பொழுது சர்க்கரை நோயுடைய அளவு கூடி இருக்கிறதா? குறைந்திருக்கிறதா? என்று. சர்க்கரை அளவு கூடும் பொழுது அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசித்தல், அரிப்பு போன்ற புற அறிகுறிகள் தோன்றும். அப்படி தோன்றினாலே அவர்கள் சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து அதை குறைத்துக் கொள்வார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு இது இயல்பாக தெரியும். குறி குணங்கள் எந்த புள்ளிவிவரங்களை விடவும் சிறந்தது என்பது தமிழ் மருத்துவத்தில் சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
9) கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவைத் தெரிந்து கொள்ள ஆங்கில மருத்துவத்தில்…… இரத்தப் பரிசோதனை உள்ளது…. ஆயினும் இந்தக் கணக்கைச் சித்த மருத்துவம் எவ்வாறு கணிக்கும்?
தமிழ் மருத்துவம் இந்த முறையிலான நோயறியும் தன்மையை முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை. புள்ளி விவரங்கள் (பாயிண்ட்) ஒரு நோயின் தன்மையை கண்டுபிடிப்பது என்று கூற முடியாது. அளவு என்பது ஒரு மனிதனுக்கு மனிதன் வேறுபடும். ஒரு மனிதன் உடல் நானூறு புள்ளி இரத்த சர்க்கரையை தாங்கிக் கொள்கிறது. இன்னொரு மனிதனுக்கு இருநூறே தாங்க முடியாது. இந்த அளவீடு பார்ப்பதனால் அது ஒரு நோயை குணப்படுத்தக்கூடிய தகுதி என்று கூற முடியாது . ஆனால் தமிழ் மருத்துவத்தில் குறிகுணம் என்று இருக்கிறது. அந்த குறி குணமே கூடல், குறைவை சொல்லிவிடும்.
உதாரணமாக ஆங்கில மருத்துவர்கள் ஃபேட்டி லிவர் என்று சொல்வதை, தமிழ் மருத்துவம் காமாலை என்று கூறுகிறது. இதற்கு புள்ளி விவரமோ அல்லது விஞ்ஞானமோ தேவையில்லை. ஆதிகாலத்தும் சரி இன்றும் சரி தமிழ் மருத்துவத்தில் நாடி தெரிந்தவர்கள் அனைத்து நோய்களையும் துல்லியமாக கணிப்பார்கள். இதில் அளவு மற்றும் புள்ளிவிவரம் என்பது தமிழ் மருத்து வத்திற்கு தேவையில்லை. மாறுபடும் அந்த குறிக்குணமே அவருடைய அளவு மற்றும் தன்மையை காட்டிவிடும். ஆகையால் எங்களுக்கு புள்ளிவிவரம் என்பது குறிக்குணமே. ஆகையினால் புள்ளி விவரம் அது கூடுவது குறைவு என்பதை குறிகுணத்தை வைத்து கண்டுபிடித்து விடுவோம்.
10) அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமல் இருக்க ஆங்கில மருத்துவத்தில் மயக்க மருந்து உள்ளது…. சித்த மருத்துவத்தில் இதுபோன்ற வழிகள் உள்ளனவா?
மளிகைக் கடைக்காரரிடம் சென்று சாப்பாடு கேட்கக்கூடாது! உணவகத்திற்கு சென்று மளிகை கேட்கக் கூடாது! அறுவை சிகிச்சையின் பொழுது வலி தெரியாமல் இருக்க ஆங்கில மருத்துவத்தில் மருந்து உள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள். தமிழ் மருத்துவத்தை பொருத்தவரை சரியாக மருந்தை உட்கொண்டால் அவர்களின் நோய் அறுவை சிகிச்சை நோக்கி செல்லாது. அறுவை சிகிச்சைக்கு தீர்மானித்த நோய் களை கூட சித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை தடுத்து விடுவார்கள். எனவே அறுவை சிகிச்சை செய்து தடுப்பதற்கான முறைகள் எத்தனையோ தமிழ் மருத்து வத்தில் இருக்கிறபொழுது, நீங்கள் அறுவை சிகிச்சை செய்வதே தேவை இல்லை. நாங்கள் அறுவை சிகிச்சையை தடுத்து விடுவோமே! ஆகையால் வலியில் லாமல் என்று கேட்டதற்கு எனது பதில் அறுவை சிகிச்சையை தடுப்பதற்கு வழி இருக்கிறது என்பதே. தமிழ் மருத்துவம் முழுக்க அறுவை சிகிச்சை தடுக்கும். எல்லா நோய்களுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமல் வாழ முடியும். தமிழ் மருத்துவம் குழந்தையை கிள்ளுவதில்லை அதனால் குழந்தையை கத்(தி)த வைக்காது.
11) தைராய்டு நோய்க்கு என்ன உணவு முறை மேற்கொண்டால் நல்லது?
தைராய்டு ஒரு நோயல்ல. அது கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பினுடைய கூடுதல் குறைச்சலால் வருவது. தைராய்டு சுரப்பியால் வருகின்ற பிரச்சினைகளில் உடல் உஷ்ணமடைந்து உடல் மெலிந்து கொண்டே போகின்ற தைராய்டு பிரச்சினை என்று ஒன்று உண்டு. அதற்கு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பன்னீர் திராட்சை மிகச் சிறப்பாகப் பலன் தருகிறது.
அதே போல பெண்களின் தூர நாட்கள் தாண்டித் தாண்டி வருவதனால் ஒருவித தைராய்டு பிரச்சனை உண்டாகிறது. அதனால் உடல் எடை கூடுகிறது. அப்படி எடை கூடுகிற தைராய்டு பிரச்சனைக்கு, உடல் குளிர்ச்சியை தடுக்கின்ற வெற்றிலை பாக்கு முறையாகப் மென்று சாப்பிட்டு வந்தால், உடல் உஷ்ணம் ஏறும். உடல் எடை குறையும். இது அனுபவம். உடல் எடை பெருக்கின்ற தைராய்டு உடலினருக்கு பப்பாளி பழம், சுண்டை வற்றல் குழம்பு ஆகியவை நோயை கட்டுப்படுத்தும்.
12) குழந்தைகள் பிற்காலத்தில் நீரிழி வால் அவதிப் படாமல் இருக்க என்ன உணவுகள் மேற்கொள்ளலாம்?
குழந்தைகள் இனி வருங்காலத்தில் நீரழிவு நோயில் ஆட்படாமல் இருப்பதற்கு நம் முன்னோர்கள், நம் பாட்டன், பூட்டன் சாப்பிட்ட உணவு முறையையும் அந்த கலாச்சாரத்தையும் பின்பற்றினால் இந்த நோய் அனைத்தும் 90% குறைந்து விடும் மகிழ்ச்சியாக வாழலாம். சிறுவர்களுக்கு வரும் சர்க்கரை வியாதிக்கு தமிழ் மருத்துவம் செய்வதில்லை.
13) தூக்கமின்மை ஏற்பட்ட காரணம்?
உடல் குளிர்ச்சி அடைந்தால், தூக்கம் நன்றாக வரும். உடல் சூடு ஆவது தான் தூக்கமின்மைக்கான பெரும் காரணம். எல்லா வகை மருந்துகளும் உடலை குளிர்விக்க செய்வதன் மூலம் தான் தூக்கத்தை வர வைக்கிறது. எனவே உடலை குளிர்ச்சி செய்யும் உணவும் மருந்தும் தூக்கத்தை வரவழைக்கும்.
14) நீரிழிவு நோய் வந்த பிறகு எந்த உணவையும் தைரியமாகச் சாப்பிட முடியவில்லை…. உதாரணமாக இனிப்பு, எண்ணெய்ப் பலகாரம் போன்றவை…. இதற்கு வேறு வழியே இல்லையா?
பசி நேரத்தில் பழங்களை சாப்பிடுவதி னால் சர்க்கரையின் அளவு ஏறாது. ஆனாலும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கின்ற பொழுது மருத்துவர் சொல் கிறதை கேட்பது மிகவும் அவசியம். நல்லது.
விரும்புவதை சாப்பிடுவது என்றால் நோய் வந்த பிறகு எப்படி சாத்தியம்? பள்ளம் இருக்கிறது என்று தெரிந்த பிறகு இந்த பள்ளத்தில் பைக்கை விடுவதற்கு வழி இல்லையா என்று கேட்பது போல் இருக்கிறது!
15) வெறும் சைவம் மட்டுமே உண்பவர் களுக்கும்… உணவு சம்பந்தப்பட்ட நோய் கள் வருகிறதே… இது எப்படி?
நோய் வருவதற்கான காரணம் அனேகம். தமிழ் மருத்துவம் வினைகளே பிணிகளுக்கு காரணம் என்று கூறுகிறது. சூழ்நிலைகளே நோய்களுக்கு காரணம் என்று கூறுகிறது. பாரம்பரியமே நோய் களுக்கு காரணம் என்று கூறுகிறது. இப்படி வினை, பாரம்பரியம், சூழ்நிலை என்று பல்வேறு காரணங்கள் இருக்கின்ற பொழுது, நாம் உணவை மட்டும் வைத்து நோய் வருகிறது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
16) உங்களின் குரு யார்…. அவரைப் பற்றி ஒருசில வார்த்தைகள்?
நான் பல துறைகளில் ஈடுபாடு உடையவன். எனது பல்வேறு துறை களுக்கும் குரு உள்ளார்கள். உதாரணமாக, நான் தமிழ் கவிதையில் ஈடுபாடு உள்ளவன். என் கவிதைக்கு தத்தனூர் தமிழ்மணி என்று ஒரு ஆசிரியர் எனக்கு குருவாக அமைந்தார். மருத்துவத்தில் மேகரை சதாசிவ ஐயாவும் திருச்சி சித்த மருத்துவ சங்க செயலாளர் மாரிமுத்து ஐயா அவர்களும் என்னுடைய குரு ஆவார்கள். ஆன்மீகத்தில் எனக்கு விழுப்புரம் அருட்பா கோவிந்தசாமி ஐயா என்பவர் குரு. யோகம், தியானம் இவற்றிற்கு கள்ளக்குறிச்சி அருகில் மண்மலை முனைவர் சண்முகம் அவர்கள் எனது குரு. இப்படி பல்வேறு விதமான குருக்கள் எனக்கு உண்டு.
17) சைவத்தில் நாம் குறைத்துக் கொள்ள வேண்டிய உணவு எது? ஏன்?
உங்கள் கேள்வியை நான் இப்படி எடுத்துக் கொள்கிறேன். நாம் உண்ணும் உணவை அருசுவைகளாக பிரிப்பார்கள். இந்த அறுசுவைகளும் நமது உடலில் வாத, பித்த, கபமாக பரிணமிக்கிறது. இந்த வாத, பித்த, கப அளவுகள் கூடினாலும் குறைந்தாலும் நோய் வரும். புளிப்பும் துவர்ப்பும் வாதம். கசப்பும் கைப்பும்(உப்பு) பித்தம். இனிப்பும் கார்ப்பும் கபம். இச்சுவையுள்ள உணவுகளை கூட்டலாம் குறைக்கலாம். ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்ற வள்ளுவர் பெருந்தகை உடைய அடிகளை நினைவு கூறுகிறேன்.
18) உங்களைப் பேட்டி காணும் “தமிழ்நெஞ்சம்” மாத இதழைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்…
தமிழ்நெஞ்சம் ஐம்பது ஆண்டு 50 ஆண்டுகள் தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது என்பதை நான் அறிவேன். அந்த வகையில் இந்த இதழுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்தினையும் நன்றியை யும் தெரிவித்துக் கொள்கிறேன்.
19) சித்த மருத்துவக் குறிப்புகள் செய்யுள் வடிவில்தான் இருக்கும்… அவற்றில் உங்களுக்குப் பிடித்த செய்யுள் எது? யார் இயற்றியது? எந்த நோய்க்காக இயற்றியது?
‘அகத்தியர் நேத்திரவிதி 500’ என்ற நூலில், கண் நோய்கள் 96-கும் மிகச்சிறந்த மருந்தை பாடல் வடிவில் கூறியிருக்கிறார். அதில் ஒரு பாடல்
“இந்துப்பு திப்பிலி இயல்பீத ரோகிணி
நந்திப்பூச் சாற்றில் நயந்தரைத் திட
அந்தகன் கண்ணிற்கு அருந்ததி காணுமே”
இந்தப் பாடலின் பொருள்: இந்துப்பையும், அரிசித் திப்பிலியையும், பீதரோகிணியையும் தனித்தனியே சம அளவு எடுத்து ஒன்று கலந்து, அதை நந்தியாவட்டைப் பூச் சாறை விட்டு கல்வத்தில் நன்கு அரைத்து, கண்களுக்கு சொட்டுச் சொட்டாக விட்டு வர, கண் நோய்கள் தீரும். குருடனும் பார்வைப் பெறுவான். வடதுருவத்தில் உள்ள மிகச்சிறிய அருந்ததி நட்சத்திரத்தையும் காண்பான்.
இது, என்னைக் கவர்ந்த மிகச்சிறந்த சுருக்கமான பாடல்.