நேர்கண்டவர் –  கவிஞர் மாலதி இராமலிங்கம்

கடல் கடந்தும் நம் தமிழர்கள் கோலேச்சிய வர்கள்தான் என்பது புதிய செய்தி இல்லை. வாழ்வியல் முறையில் முதன்மையாகத் தம்மைச் செதுக்கிக் காண்பித்தவர்கள் நம் முன்னோர் என்பதும் புதியது இல்லை. ஆனால், உலகத்தார் வியக்கும் வண்ணம் நம் மூத்தோர்கள் விட்டுச் சென்ற தமிழ் எச்சங்கள் இன்றும் புதிது புதிதாய் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. போலவே, அயலகத்தில் வாழும் நம் தமிழ் வேர்கள், புலம் பெயர்ந்தோர்கள், தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வரிசையில், நம் “தமிழ்நெஞ்சம்” இதழுக் காக, ஒரு நற்றமிழ் பற்றுடை ஆளுமையான ஒருவருடன், நேர்காணலைத் திறன்பேசியின் வழியே கண்டோம். இதோ, விடுத்த வினாக் களும் கொடுத்த அறிமுகமும் கொட்டிய அனுபவங்களும்!

“வணக்கம் ‘கவிக்கிறுக்கன் தேவ கோட்டை முத்துமணி அவர்களே…  மனம், மொழி, மெய் என்று தமிழையே சிந்திக்கும் தங்களுக்குக் காற்றலை வணக்கம்!”

இந்தோனேசிய பண்பாட்டு விழாவில் முத்துமணி.
ஜூன் – 2026 / 100 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்

“வணக்கம்! தமிழுக்கும் தமிழ்நெஞ்சம் அனைவருக்கும் அன்பு  வணக்கம்!”

“முதலில், தங்களைப் பற்றி நம் “தமிழ்நெஞ்சம்” வாசகர்களுக்காக ஒரு அறிமுகத்தை வழங்குங்கள். தங்களின் வேரிடமும் வேற்றிடமும் கூறுங்கள்!”

“என் உயிர்வேர், தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான தற்போதைய சிவகங்கை சீமையில் உள்ளது. அதுவே என் தாய்மடி! இந்த வேரிலிருந்து இளைஞனாகி  வேற்றிடமான அயலகம் செல்லும் இடைக்காலத்தில், செட்டி நாட்டுப் பகுதியிலே மிகவும் தொன்மை வாய்ந்த தேவகோட்டை நகரில் கல்லூரிக் காலம் முடிந்து, தமிழக அரசின் போக்கு வரத்துத் துறையில் 6 ஆண்டுகள் பணி புரிந்தேன். அதன் பின் செலவின மற்றும் தணிக்கை (COST AND WORKS ACCOUNTANT) மேல் படிப்பை முடித்தேன். பின்,  இந்தோனேசியாவில் 1988ஆம் ஆண்டு முதல் வேற்றிட வாழ்வு தொடங்கியது. இங்கு பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை நிதி நிலைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்.

தற்போது இந்தோனேசியாவின் தலை நகர் ஜகார்தாவில் வசிக்கிறேன். பணி நிமித்தமாகக் கடந்த 4 தசாப்தங்களாக இந்தோனேசியாவில் (பல நகரங்களில்) வாழ்ந்து வருகிறேன்.

அவ்வப்போது, என் தாய்மண்ணைத் தொட மறப்பதில்லை. ஏனெனில், குடும்ப மும் உறவும் கூடும் தேவைகளுக்காக என்று என் வருகையை அவாவுடன் எதிர்நோக்கும் சொந்தமும் இருப்பதால் தொப்புள் கொடியின் பிடிப்பு இருக்கிறது. இறுகுகிறது!”

“மகிழ்ச்சி! தங்களின் தமிழடையாளப் பெயர்க்காரணத்தைப் பற்றிக் கூறுங்க ளேன்”

“தமிழ் மேல் நான் கிறுக்காய் இருப்பதனாலும், நான் எழுதுவது வெறும் கிறுக்கல்களே என  எண்ணுவதாலும் முத்துமணி என்னும் நான், என் பெயரைக் ‘கவிக்கிறுக்கன் முத்துமணி’ என்றும், பிறந்த மண், தேவகோட்டை நகரை மறக்காமல் என்னை ‘கவிக்கிறுக்கன் தேவகோட்டை முத்துமணி’ என்று அழைத்துக்கொள்வதில் மகிழ்கிறேன். இவ்வாறே, தமிழடையாளம் பெற விழைகிறேன்.”

“தமிழார்வம் கூடிய தங்களின் அனுபவங்கள் இளம் வயதில் எப்படி இருந்தன? அதைத் தங்களின் நடையிலேயே சொல்லுங்களேன்.”

ஒரு கூட்டு புழுவாய் இருந்த என்னை ஒரு வண்ணத்துப் பூச்சியாக மாற்றியது இளம் வயதில் நான் பிறந்து வாழ்ந்த ஊருதான். அந்த ஊர்ல தான் எனக்கு தமிழ் கிடைத்தது. அதாவது, இப்படிச் சொல்லுவாங்க!

“தாவரங்கள் கூட

தமிழே உன்னை

‘தா’வரங்களெனும்

தேவகோட்டை!”

அந்த மாதிரி சைவமும் தமிழும் ஒரு சேர வளர்க்கின்ற நகரத்தார் இருக்கின்ற பகுதி அந்த நகரத்தார்களோடு நான் அதிகமாக பழகுனதுனால தான் அவங்களுடைய வாடை எனக்கும் கிடைச்சிருக்கு. கலை உலகத்துப் பிரமுகர்கள் நிறைய அந்த ஊரில் இருந்து வந்திருக்காங்க. சைவமும் தமிழும் ஒன்று சேர்ந்தது. பிரிக்க இயலாதது. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே தேவகோட்டை தான். நிறைய கோவில்களும் குளங்களும் அமைந்த ஊர். அதே மாதிரி அந்த காலத்திலேயே பள்ளிகள் நிறைய உண்டு. தாளாளர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாது மக்களுக்கு அந்த கல்வி போய் சேரணும் அப்படின்றது அது ஒரு கடமையாச்சு செஞ்ச ஊர் அந்த ஊர். அதனால எல்லா கோவில் பக்கத்துலேயும் ஒரு பள்ளி இருக்கும்.

நான் படிச்சதெல்லாம் கருதாவூரணி பிள்ளையார் கோவில் அருகில் இருக் கும் சைவ பிரகாச வித்யாசாலை, அதே மாதிரி செயின்ட் ஜான்ஸ் பள்ளி, அதுக்கப்புறம் சிவன் கோவில் பக்கத்துல திருவேங்கடமுடையான் நடுநிலைப்பள்ளி. அதுக்கப்புறம் மேல் நிலைக்கு தே பிரித்தோ உயர்நிலைப் பள்ளி. அதன் பின்னர் அண்ணாமலை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில். அவரும் ஒரு நகரத்தார் தான். சின்ன ஊரில் கூட அந்த ஊர் மக்கள் கல்வி கற்க வேண்டி அந்த மாதிரி கல்வி சார்ந்த நிறைய இடங்களைத் திறந்தது தான் காரணம். ஆகவே நான் என்னுடைய பெயரைத் தனியே சொல்வதை விட ‘தேவகோட்டை’ என்ற பெயரை எனக்கு முன்னாடி சொல்லிக்கொள்வது தானே நன்றி உணர்வு. ரொம்ப நன்றி! இந்த கேள்விக்கு என்னுடைய ஊரை பற்றி நான் உங்களோட பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.”

இந்தோனேசியாவில் மத்திய சாவ கத்தில் “டியங்’ பள்ளத்தாக்கு 4/5ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில் துறவர் களின் பகுதியாய் விளங்கிய கோவில் தொகுப்பின் ஒரு பகுதி (Photo1989)
DE BRITTO HIGHER SECONDARY SCHOOL, DEVAKOTTAI 1911

“தங்களின் பெயரின் மூலமாகத் தாங்கள் ஒரு கவிஞர் என்பதைக் காட்டி யுள்ளீர்கள். தங்களுக்குக் கவியார்வத்தை முதலில் ஊட்டியது யார்?”

“என் தாயும் தாய் மண்ணுந்தான்! என் தாய் பாண்டி அம்மாள், தந்தை வண்ணங்கன்.

என் தாய் படித்தவள் இல்லை. ஆனால், வட்டில் சோறிடுவதில் தொடங்கி வாழ்வின் அத்தனையிலும் அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அனைத்திலும்  தமிழ் வாசம்தான். என் தாயின் மிகச் சாதாரணமான உரையாடல்களே பாடலின் இலக்கணத் தைக் கொண்டதுபோல இருக்கும். தாயின் மொழியே தமிழை என்னுள் முதலில் கவியார்வத்தை ஊற்றெடுக்க வைத்தது.”

“தாய் முதலில் கொடுத்தத் தமிழைத் தொடர்ந்து, அடுத்த நிலையைச் சொல் லுங்களேன்.”

“நல்ல கேள்வி! தாயை அடுத்து, கவிதை எழுதக்கூடிய ஆர்வம் பிறந்ததற்கும் அந்த தேவகோட்டை தான் காரணம். எண்பது வருடமாக கந்தர் சஷ்டி விழா நடத்திட்டு இருக்காங்க. அது கந்தன் என்ற சைவம் அல்லது தெய்வீக சம்மந்தமான விழாவாக இருந்த போதிலும் அதுல சுற்றி சுற்றி பார்த்தீர்கள் என்றால் கலை, இலக்கியம் மற்றும் தமிழ் தான்.

கந்தர் சஷ்டி விழாவுக்கு வராத பிரமுகர்கள் கிடையாது. அப்படி வராதவங்க பிரமுகர்களே கிடையாது. செல்வி ஜெயலலிதா முதற்கொண்டு வந்திருக்காங்க. பட்டிமன்றம் என்பது எங்க ஊர்ல தான் பெயர் பெற்றது. ஏன்.. எங்கள் பகுதியில் தான் உருப்பெற்றது என்று கூடச் சொல்லலாம். கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அய்யாவில் தொடங்கி, குன்றக்குடி அடிகளார், கி.ஆ.பெ. விஸ்வநாதன், நீதிபதி மு.மு.இஸ்மாயில் இவர்களை எல்லாம் நான் சின்ன பையனாக இருந்த பொழுதே மிக மிக அருகாமையில் இருந்து அவர்களது உரை வீச்சை அவதானித்து இருக்கிறேன்.

அதிலும் அந்த கந்தன் விழா ஒரு லயத்தோடு, ஒருநாள் முழுக்க பட்டி மன்றம், ஒரு நாளைக்கு இலக்கியப் பேருரை, ஒரு நாள் கவியரங்கம், ஒரு நாள் வழக்காடு மன்றம் என்று ஒவ்வொரு நாளும் நடந்துகிட்டே இருக்கும். அப்போ அந்த சின்ன ஊருல அந்த சின்ன வயதில் அது பெரிய விதையாக இடம் மனதில் விழுந்தது. அதிலும், கவிதைகள், அந்த எதுகையையும், மோனையையும் காதுல கேட்க கேட்க எனக்கும் அதே மாதிரி சொல்லி பார்க்கணும்னு ஆசை இருந்தது. அதை வளர்த்து விட்டவர் என்னுடைய பள்ளி ஆசிரியர் திரு. தாமஸ் அவர்கள். அப்ப ஏழாவது வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது இலக்கிய மன்றங்கள் நடத்துவாங்க. திராவிட முன்னேற்ற கழகம் நாவன்மையால் நல்ல தமிழ் பேசி முன்னணிக்கு வந்த காலம்.

அறிஞர் அண்ணாதுரை அவர் களின் பேச்சு வன்மை அதை ஒட்டி கலைஞர் கருணாநிதி அவர்கள் பேசிக் கொண்டிருப்பது, நாவலர் நெடுஞ் செழியன், மதியழகன் இவர்களது தமிழை எல்லாம் காதுல கேட்க கேட்க அந்த தமிழின் தொனி மனசுக்கு என்னமோ செய்ற மாதிரி இருந்தது. இதெல்லாம் சேர்ந்து முதன் முதலில் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, என்னுடைய வயது 13 வயதிற்கு நினைக்கிறேன், அந்த வயதிலேயே நாம் முதலில் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டேன்.”

இளைஞனாக இருக்கையில் கவியரங் கங்களிலும் பங்கேற்க வாய்ப்பளித்தது என் தாய்த்தமிழ்!

இந்தோனேசிய பண்பாட்டு விழாவில் முத்துமணி.
முத்துமணி எழுதிய நூல்

“ஒரு புலம் பெயர் தமிழராய் இருந்து நீங்க சந்திக்கும் அயலகச் சூழல் எவ்வாறு உள்ளது?”

“புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர் கள், ஒரு வேளை, ஐரோப்பிய நாடு களுக்கோ அல்லது அமெரிக்கா போன்ற மேல் நாடுகளுக்குச் செல்லும் பொழுது அவர்களுக்குச் சவால்களைச் சந்திக்க நேரிடலாம். கீழ்த்திசை நாடுகளைப் பொறுத்தவரை நமது அகண்ட பாரதம் 2000 ஆண்டுகள் அல்ல; அதற்கும் முன்னரே தொடர்பில் இருந்து இருக்கிறது. நான் வாழும் இந்த இந்தோனேசியா மொத்தம் பதினெட்டாயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்டது. பல்வேறு மொழிகள் ஆயிரத்துக்கும் மேல் இன்னும் வழக்கில் உள்ளன. இதன் பெரிய தீவுகளான நிலப்பரப்புகள் தான் நமது பண்டைய தமிழில் சாவகம், புட்பகம், சொர்ணத்தீவுகள் என்று அழைக்கப்பட்டு இருந்தன. ஆக, நமக்கு இந்தோனேசியா பல்லாயிரம் ஆண்டுகளாக பரிச்சயமான பகுதி தான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது தமிழர்களின் காலடிச் சுவடுகள் பதிந்த பூமி இது.

நாட்டின் தலைநகரான ஜகார்தாவில் தான் வசிக்கிறேன்.  இந்தப் பகுதி தான் ஜாவா என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னர், ஜாவாவின் பல்வேறு பகுதிகளில் வசித்து இருக்கிறேன். இந்த ஜாவா மொழியில் சாவா (சாவகம்) என்றால் வயல் மற்றும் வயல் வெளிகள் நிறைந்த பகுதி என்று பொருள். அப்படியே நம்ம தமிழகத்தின் கிராமங்களில் வாழும் உணர்வையே, நெல் நிறைந்த இந்த வயல் வெளி நமக்கு அளிக்கும். இயற்கையாகவே மொழி ஆர்வம் மிக்கவனாக இருப்பதால், ஒவ்வொரு முறை அறிந்த வார்த்தைகள் காதில் விழும் போதெல்லாம் இந்த மொழியின் வேர்ச்சொற்களை மனம் ஆய்ந்து, தமிழில் தொடர்புடைய சமமான சொற்களைத் தேட ஆரம் பிக்கும். மலாய் மொழி தான் தேசிய மொழியாக பயன்படுத்தப்படுகிறது. தற்சமயம் இந்தோனேசியா மொழியில் அமைந்துள்ள வேர்ச்சொற்களை ஆய்ந்து தமிழில் அதன் தொடர்பு வார்தையைத் தேடி ஒரு அகராதி அமைக்க முயன்று வருகிறேன். அது சிறப்புற உருவாக இறையருள் துணை புரிய வேண்டும்.

இங்கு, சமக்கிருதக் கலப்பும் நிறை யவே இருக்கிறது. அன்றைய அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாக, இந்தத் தீவுக்கூட்டங்கள் இருந்திருக்க வேண்டும். அனுமன் வழிபாடு, இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் இன்றும் எழிலோடு விளங்குகின்றன. ஆகவே இவர்களின் கலாச்சாரம் நமது கலாச்சாரத்தை ஒட்டியே இருக்கிறது.

இன்றைக்கு இங்கே நிறைய தமிழர் கள்,  பாரதத்தின் மற்ற பகுதிகளில் இருந்து பணிக்காகவும், தொழில் புரியவும் வந்தவர்கள் பலர் வாழ்கின்றனர். நான் இங்கே வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றைய கால கட்டத்தில் இவ்வளவு புலம் பெயர்ந்தோர் இங்கு இல்லை.

அன்றும் சரி;  இன்றும் சரி; நம் தமிழர் index.html இந்தியர் மீது அளவற்ற மரியாதை வைத்து இருப்பவர்களாக இந்தோனேசியர்கள் இருப்பதை உணர முடிகிறது. அதனால், நான் இங்குச் சவால்கள் இன்றிச் சுமூகமாக வாழ்கிறேன்.”

“அயலகத்தில் தங்களின் தமிழ்ப்பணி யைப் பற்றிச் சொல்லுங்கள்!”

“இங்கே நம் நாட்டில் இருந்து பணி புரிய வருபவர்கள் எல்லோருமே அவரவர் துறையில் வல்லுநர்கள். அப்படி மொழி வாரியாக பார்த்தால், தமிழர், தெலுங்கர், மலையாளிகள், வட மாநிலத்தவர் என்று இருக்கிறார்கள். மொழி வாரியாக அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றில் தமிழர் அமைப்பான “இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம்” பெருவாரியான உறுப்பி னர்களைக் கொண்ட பெரிய அமைப் பாகும்.

இது பல்லாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு, பின்னர், பல்வேறு காரணிகளால் இடையில் கொஞ்சம் செயல் பாடின்றி இருந்து மீண்டும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பொலி வுடன் புத்துயிர் பெற்று நல்ல முறையில் இயங்கி வருகிறது. இதில் என் பங்கு (குழுவாக 3 ஆசிரியர்களுடன் சேர்ந்து) இங்குள்ள குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தருவது ஆகும்.

ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலை என்று இரண்டு பகுதிகளாக வகுப்புகளைப் பிரித்து ஒவ்வொரு ஆண்டிற்கு 3 பருவங்கள் என்ற வகையில் தமிழ் கற்றுத் தருகிறோம். மேலும், தேர்வு வைத்துத் தேர்ச்சி அடைந்த மாணாக்கர்களுக்குச் சான்றிதழ் வழங்கு கிறோம். அத்துடன், பல்வேறு வகைகளில் அவர்களுக்குத் தமிழ் கற்றுக்கொள்ள ஊக்கம் அளித்து வருகிறோம்.

பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழி யாக இருப்பதனாலும், புலம் பெயர்ந்த காரணத்தால் தமிழ் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போவதாலும் தமிழின் எண்ணும் எழுத்தும் அவர்கள் கண்களில் படுவதற்கு வாய்ப்பு இன்றிப் போய் விடுகிறது. அந்தக் குறையை எங்கள் தமிழ்ப்பள்ளி தவிர்த்து அனைத்துத் தமிழர் குழந்தைகளும் தாய் மொழியைக் கற்றுக்கொள்ள வகை செய்கிறது.”

“குழந்தைகளுக்குப் பயிற்றுவித்தல் மட்டுமன்றி வேறு என்ன இந்த அமைப் பின் மூலம் நடக்கிறது?”

“இது தவிர, கலை நிகழ்ச்சிகளாக ஆண்டுக்கு 4 நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். அவற்றில் ஒன்று, தமிழக கிராமியக் கலை நிகழ்வு.  இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வண்ணமே இது நிகழ்த்தப்பட்டாலும் தமிழகத்தில் இருந்து நலிந்த கிராமியக் கலைஞர்களை இங்கே வரவழைத்து சிறப்பிக்கிறோம். இது எங்களுக்கு மனநிறைவை அளிக்கிறது. இது தவிர ஒரு இசை நிகழ்ச்சி, ஒரு இலக்கியப் பேருரை நிகழ்ச்சி மற்றும் இங்கே இருப்பவர்களின் திறமையை வெளிக்காட்டும் வண்ணம் ஒரு நிகழ்வு என்று ஒரு சமுதாயமாக அவர்களை ஒன்று கூட்டி வென்று காட்டும் முயற்சியில் ஈடுபடுகிறது இந்த அமைப்பு.

மேலும், “இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம்” மூலம்  ஆண்டு தோறும் தமிழில் மலர் வெளியிடுகிறோம். அந்த மலரின் தலைமைப் பொறுப்பு ஆசிரியராக 15 ஆண்டு காலமாக கடமை ஆற்றி வருகிறேன்.”

“நீங்கள் தனிப்பட்ட முறையில்  செய்யும் தமிழ் ஆக்கங்களை எவ்வாறு பதிவிடுகிறீர்கள்?”

“இணைய வழியிலும், அச்சு நூலாகவும் என் படைப்புகள் இருக்கின்றன.

தமிழ் ஆர்வம் மிகுதியாலும் கவிதைக் காதலினாலும், இந்தோனேசியாவில் உள்ள தமிழின் தொன்மையையும், தமிழர்களின் தொடர்புகளையும், மத, இலக்கிய, கலாச்சாரப் பரவுதல்களையும் நான் இங்கு, நேரடியாகத் தேடுகிறேன். அது குறித்து, என் வலையொளி மற்றும் வலைப்பக்கங்களில், முகநூல் பக்கத்தில் மிகுந்த ஆய்வுகளுக்குப் பிறகு பதிவேற்றி வருகிறேன். இந்தோனேசிய மொழியில் தமிழ் மொழியின் வேர்ச்சொற்களை ஆய்ந்து ஒரு பட்டியலே உருவாக்கி வருவது குறித்து முன்னர் சொன்னேன் அல்லவா? அதையும் செய்கிறேன்.

நான் வாழ்ந்த தேவகோட்டை நகரைப் பற்றி வரலாறு பூர்வமான நிகழ்வுகளைப், பெருந்தொடராக எழுதி வந்து, பின்னர் அவற்றைத் தொகுத்து, ‘வேர்களைத் தேடிய விழுதுகள்’ என்ற நூலாக வெளியிட்டு உள்ளேன். அது என் முதல் நூலாக்கம். நான் பிறந்த மண்ணிலே அதைச் சிறப்பாக வெளியிட்டேன். என் வேரிடத்தே வ(ள)ரும் தலைமுறைகளுக்கு அது ஒரு ஆவணமாகத் திகழும் வண்ணம் அமைந்துள்ளது என்பதை இங்குக் குறிப்பிடுவதில் மகிழ்கிறேன்.

அடுத்து, ‘விதைக்குள் உறங்கும் விருட்சங்கள்’ என்ற தலைப்பில் என் கவிதை நூலும் வெளி வந்து இருக்கிறது. பல்வேறு பணிகளுக்கிடையே என்னை ஆற்றுப்படுத்தும் தமிழோடு, எனக்குள் ஊறும் கவிதைத் தாகத்திற்கு வடிகாலாய் நான் வடிக்கும் கவிதைகளைத் தொகுத் துள்ளேன். அது மின்னூலாகவும் மின்ன வையில் கிடைக்கிறது. வெவ்வேறு இடத்தில் வாழும் என் தமிழுறவுகளுக்குக் கிட்டும் வகையில் அதனைப் பதிவேற்றம் செய்துள்ளேன்.

மேலும், ‘தினமலர்’ பத்திரிகையின் மாணவர் பதிப்பாக வெளிவரும் ‘பட்டம்’ இதழ்களில், மாணவர்களுக்காக, தெற் காசிய நாடுகளின் தமிழ்த் தொடர்புகளை எழுதி வருகிறேன்.

மரபுப்பா, புதுக்கவிதை என்ற வகையி லும் கட்டுரை வடிவிலுமாக, குரல் பதிவுகளாக என்பதோடு அல்லாமல் தமிழ் குறித்த இணைய வழி உரையாடல் நிகழ்வுகளிலும் பங்கேற்கிறேன்.”

“ஐயா கடைசியாக ஒரு கேள்வி தமிழ் நெஞ்சம்  பற்றி என்ன நினைக்கிறீங்க?”

நல்ல கேள்வி. தமிழ்நெஞ்சம்…. அந்தப் பெயரே ரொம்ப அருமை…. அதாவது யாரும் ஒரு உறுதிமொழி எடுக்கும் பொழுதோ அல்லது நான் பொய் சொல்லவில்லை என் நெஞ்சப்படி பேசுறேன்னு சொல்லும் பொழுதோ   நெஞ்சில் தான் கைவைத்துப்  பேசுவாங்க.  அப்படி தமிழ் எல்லோருடைய நெஞ்சத்தி லும்  இருக்கிறது என்று  சொல்லாம சொல்ற மாதிரி ‘தமிழ்நெஞ்சம்’ என்று பெயர் சூட்டி  இருக்கீங்க. அதுவும் இன்றைய காலகட்டத்தில் இல்லை. 1972 ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வரும்  உங்களுடைய தமிழ் பணி  எல்லா தமிழ் நெஞ்சத்திலும் பதிந்து தொடர்ந்து நடக்க ணும்னு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி வணக்கம்

“மகிழ்ச்சி! தாயகத்தையும் தமிழையும் நேசிக்கிறீர்கள்; அதே சமயத்தில் சென்ற இடத்திலும் தமிழை வெல்லச் செய்கிறீர் கள்! சிறப்பு!

தங்களின் தமிழ்ப்பணி சிறக்க, உலகெங்கும் உள்ள தமிழுள்ளங்களின் சார்பாகவும் “தமிழ்நெஞ்சம்” இதழின் சார்பாகவும் தங்களை வாழ்த்துகிறோம்! நன்றி! வணக்கம்!”