உங்களைப் பற்றி..

நான் உடுவிலூர்க்கலா. எழுத்தாளர் கவிஞர் சமூக சேவகி, சுயதொழில் முனைவோர் வளவாளர் எனப் பல பணிகளுக்கூடாக பயணிக்கிறேன்.

உங்கள் படைப்புகள் பற்றிச் சொல்லுங்கள்.

கவிதை, சுயதொழில், பெண்ணியம் என 13நூல்கள் வெளியீடு செய்துள்ளேன்.எனது நான்காவது நூல் “சுயம் தரும் சுயதொழில்கள் “சில பாடசாலைகளில் உசாத்துணை நூலாக உள்ளதும், 2023ஆண்டு வெளியீடு செய்த “அரும்புகள் உலகம்” நூல் அரச சாகித்திய விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டதும் மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

இன்னும் 15நூல்கள் எழுதிய நிலையில் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன. அதில் திருக்குறள் விளக்கவுரை முக்கியமானது.

உடுவிலூர்க்கலா” இப்புனைபெயருக்கான காரணம் கூற முடியுமா?

அலங்காரக் கந்தன் அருள் பாலிக்கின்ற புனித பூமியாம் நல்லூர் நான் பிறந்தமண். வாழ வந்த மண்  உடுவில். இங்கு வலிகளும், வளங்களும் என்னுடன் இணைந்தன. அனுபவம் ஆளுமை நிலையைத் தந்தது. அதனால் “உடுவிலூர்க்கலா “என உடுவிலை எனக்குச் சொந்தமாக்கினேன். ஆனாலும், நல்லைமகள், பொன்னி என்னும் பெயர்களிலும் எழுதி வருகிறேன். உடுவிலூர்க்கலா என்பதே என் மிகப்பெரிய அடையாளம்.

ஆகஸ்ட் - 2025 / 128 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

 

TAMILNENJAM FLIPBOOK  Agust 2025

கவிதை என்றால் என்ன? விளக்கம் தாருங்கள்.

விதையாக விழுந்து கருவாகிக் கதையாகி கவி வரிகளில் சந்தம் பாடி நிற்பது கவிதை.

குறுக்கச் செப்பி விளங்க வைப்பதும், மனதிற்கு இதமாவது ம் கவிதை.எதுகையும் மோனையும் தொட்டுரசச் சந்தம் பாடி நிற்பது கவிதை.

மரபுக் கவிதை, புதுக்கவிதை விளக்குங்கள்.

கட்டுபாடுகளோடு ஓசை பயின்று காலமெல்லாம் நின்று நிலைப்பது மரபுக்கவிதை.

இது எங்கள் அடையாளம்.

கட்டுபாடுகளின்றி  எழுந்த மனத்தோடு எழுதிப் பலவேளைகளில் காணாமல் போவது புதுக்கவிதை.

“கவிஞர்” என்று பெயரின் முன்னே போடும் இன்றைய நாகரிகம் வரவேற்கத் தக்கதா?

 முற்றாக மறுக்கிறேன். கவிஞர் என்று பெயர் கொள்ளப் பல நிலைகளைத் தாண்ட வேண்டும்.கல்லாக இருந்து கவிஞர் என்று எழுதாமல் கவித்துவத்தை வளர்த்துக் கொண்டு கல்லின் வேண்டாத பக்கங்களை வெட்டி வீசிவிட்டு அழகிய சிலையாகிக் கவிஞர் என்பதே சிறப்பு.

பெண்ணியத்தின் இன்றைய நிலை என்ன?

18ம் நூற்றாண்டில் ஒரு புள்ளியாகப் போடப்பட்ட பெண்ணியம் 19ம் நூற்றாண்டில் கோலமாக எழில் கொண்டது. இதன் துர்ப்பாக்கிய நிலை என்னவென்றால், அன்று போராடிச் சில உரிமைகளைப் பெற்றார்கள்.ஆனால் இன்றும் போராட வேண்டிய நிலையே உள்ளது. ஆணும் பெண்ணும் பெண்ணியம் பேசுகிறார்கள். வினைத்திறன் பூச்சியமே. பெண்ணியம் தூக்கத்தில் இருந்து இன்னும் எழவில்லை.ஆனால் உயிர்ப்போடு உள்ளது.

கலைமாமணி
பாவலர்மணி

சமூகம் சார் உங்கள் பணிகள்...

இலக்கிய வளர்ச்சிச்சிக்குப் படைப்பாளிகளைத் தட்டிக் கொடுத்து, முன்னோக்கி நெறிப்படுத்துகிறேன்.

சுயதொழில் சார்ந்து நலிவடைந்த, கைவிடப்பட்ட பெண்களை ஊக்குவிக்கிறேன். அரச அரச சார்பற்ற உதவித் திட்டங்களைப் பெற்றுக் கொடுக்கிறேன்.தொழிற்பயிற்சிகள் இலவசமாக வழங்குகிறேன். இதைவிடவும், சட்ட விரோதக் கருவுறல் கருக்கலைப்பு இவருக்கு உள்ளாகும் பதின்ம வயதினரைத் தேடிக் கண்டு பிடித்து நன்னடத்தைக்கு உட்படுத்துவதும், தப்புக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனைகள் பெற்றுக் கொடுப்பதும்

மறுவாழ்வுக்கான சீர்திருத்தப் பணிகள் செய்வதுமாக மறைமுகமாகவும் நேரடியாகவும் செய்து வருகிறேன்.

பெண்ணியத்தைப் பாடுபொருளாகக் கொண்ட நீங்கள், பெண்ணினத்தின் விடிவுக்காக செய்ய இருக்கும் கனதியான செயற்பாடு குறித்து…

செய்ய இருக்கும் அல்ல செய்து கொண்டே இருக்கிறேன். முக்கியமாக என்னுடைய காலத்திலேயே பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். ஆண் என்பவன் மறந்தும் மனைவிக்கு அடிக்கக் கூடாது என்ற இறுக்கமான சட்டத்தை எழுதவிதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு எழுத்துருவில் கொண்டு வரவேண்டும். அதற்காக எழுதிலும் செயலிலும் பாடுபாடுகிறேன். ஆனாலும், உடனடியாக முடியாது. எதற்கும் பெண் சட்டத்தரணிகள் உட்பட அதிகமான பெண்களை இணைத்து முதலில் பேச்சு வார்த்தை ஒன்றை நடாத்த பெருந்திட்டம்  எனக்குள்ளே. முதற்கட் டமாக எங்கள் ஜனாதிபதி வரை கொண்டு சென்றுள்ளேன்.

இன்றுவரை பெண்ணிய வன்முறைகள் தொடர்வதற்கான காரணமாக எதைப் பார்க்கிறீர்கள்?

நல்ல கேள்வி. ஆணோ, பெண்ணோ, பெற்றோரோ, சமூகமோ பழமை வாதத்தில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை.

  • சமூகத்துக்குப் பயந்து இன்றும் (கல்வி கற்றும்)ஆணை இழுத்துப் பிடித்து வாழ்கிறாள் பெண்.
  • அவள் எனக்கு அடிமை அவள் எனக்கு மட்டுமே சொந்தம் என்கிற சுயநலத்தை
  • இன்றும் ஆண் சுவாசிக்கிறான்.
  • சமூகத்துக்குப் பயந்து வன்முறையாளனோடு இனங்கி வாழப்பெண்ணை அனுமதிக்கும் பெற்றோர்.
  • அடங்கி வாழ்: அடக்கி வாழ் என்னும் கருத்துகள் பெண் கல்வியில் ஓங்கியும் சமூகத்தில் ஒலிக்கிறது.

விருதுகள் பற்றிய உங்கள் கண்ணோட்டம்…

விருதுகள் என்பவை அவரவர்களுக்கான அங்கீகாரம். ஆனால், அண்மைக் காலத்தில் கலாநிதிப் பட்டம், சாகித்திய விருது, உலகளாவிய நோபல் பரிசு என்பன மிகச் சாதாரணமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். விலை கொடுத்தும் விருது வாங்குகிறார்கள். என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு விருதாக இருந்தாலும் அதைப் பெற எனக்குத்தகுதி உண்டா என என்னை நானே கேட்டுக் கொள்ள வேண்டும். இன்று விருதுகள் படும்பாடு பெரும்பாடு.

சர்வதேச ஆளுமைப்பெண்

உங்களுக்குக் கிடைத்த விருதுகள் எவை? அதில் உங்களுக்கு அதிக மகிழ்வைத் தந்த விருது எது?

20ற்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்தன. அதிகமானவை அரச விருதுகள்.

  • கலைமமணி
  • வடஜோதி
  • பன்முகக் கவி வேந்தர்
  • எழுமதி
  • சாகித்திய விருது
  • தமிழ்ச் சுடர் விருது
  • சர்வதேச ஆளுமைப் பெண் விருது
  • ஜனாதிபதி கைப்பணிகள் விருது
  • தேசிய கைப்பணிகள் விருது
  • மரபுச்சுடர் விருது
  • பாவலர் பட்டம்
  • பாவலர் மணிபட்டம்
  • செம்மொழிச் சீராளர் விருது
  • வடமாகாணத்தின் சாதனைப்பெண் விருது

இன்னும் பல. இவையெல்லாமே என் உயர் பணிகளுக்கானவை. இருந்தாலும் 2024ம் ஆண்டு வடமாகாணத்தின் சாதனைப் பெண் விருது  அதிகம் அதிகமாக மகிழ்ச்சியையும் கர்வத்தையும் தந்தது

பெண்ணினத் தற்கொலைகள் கொலைகள் இப்போது அதிகம். இவை பற்றிய உங்கள் பார்வை என்ன?

இன்னுமின்னும் அதிகரிக்கும். காரணம், விரல்விட்டு எண்ணக் கூடிய பெண்களைத் தவிர, மிகுதிப் பெண்கள் அழுதுக்கொண்டே காலங்கழிக்கிறார்கள்.

மனதிற்குள் புதைக்கும் வலிகளால் தற்கொலையும், ஆதிக்க வெறியின் அடாவடியால் கொளைகளும் தாராளமாக இடம்பெறுகின்றன. இதில் உள்ள பாதிப்பு பெண்களுக்கும் பெண்களைப் பெற்றவர்களுக்குமே. மேலை நாடுகளில் இளம் பெண்ணை ஒரு வாலிபன் தொட்டாலோ இல்லை வன்முறை செய்தாலோ சட்டம் எதுவும் செய்யாது. ஆனால், கணவன் மனைவியை வன்முறை செய்தால் சட்டம் அதிரடியாகத் தனது பணியைச் செய்யும் ஆனால் இலங்கையிலோ இந்தியாவிலோ கட்டிய மனைவியை கொடுமை செய்தாலும் பார்வையாளர்களாகவே இருப்பார்கள். தட்டிக் கேட்க யாரும் வருவதில்லை. அதன் விளைவே பெண்ணின உயிரிழப்புகள்.

பாலியல் வன்புணர்வுக் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையாக எதை சிபாரிசு செய்கிறீர்கள்?

உடனடி மரணத்தண்டனை. ஒருவருக்கு கொடுத்துப் பாருங்கள். மறந்தும் பெண்களை ஏறெடுத்தப் பார்க்க மாட்டார்கள்.

வடமாகாணத்தின் சாதனைப்பெண்

நீண்ட காலமாகப் பெண்ணிய வன்கொடுமைகளுக்குக் குரல் கொடுக்கிறீர்கள். இதனால் ஏதாவது ஆபத்துகளை சந்தித்ததுண்டா?

இல்லை. உண்மையை எழுதுகிறேன். உண்மைக்காகப் போராடுகிறேன். பெண்ணாக இருந்தும் பெண்களின் துன்பங்களுக்குக் குரல் கொடுக்காமல் போனால் வாழ்வதில் அர்த்தமில்லை.

நடுவராக முகநூலிலும் வடமாகாணத்திலும் வலம் வருகிறீர்கள்.இந்த நடுவர் பணியில் இருந்து உங்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய விடயங்கள் எவை?

முகநூலில் வளர்ந்தவர்களின் பயணம். இங்கு வேறு நடுவர்கள் தமக்குத் தெரிந்ததை எல்லாக் கவிஞர்களும் ஏற்க வேண்டும் என்பதும், பயிற்சித் தளம் என்பதை மறந்து முரணானவற்றை திணிக்க முயல்வதும் அதற்கு நானும் ஒப்புதல் கொள்ள வேண்டும் என நினைப்பதும் எனக்கு வேடிக்கையாக இருக்கும். அத்தோடு, நான் நானாக இருப்பதையும் எனக்கான ஒரு தனித்துவத்தைப் பேணுவத்திலும் அதிக கவனம் கொள்கிறேன். அடுத்து, யாழில் நடுவர் பணியில் என்னைப் பற்றிக் கொள்ளும் கவலை அழகான பிள்ளைகளுக்கு வேற்றுமொழியில் பெயர் சூட்டி இருக்கும். அத்தோடு, சிலர் வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பிள்ளைகளுக்கு உணரச் செய்வதில்லை. இதன் விளைவைப் போட்டிகளில் கண்டு மனம் வலிக்கும்.

“வாசிப்பு அருகி விட்டது”இக்குற்றச் சாட்டை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இல்லை. ஒருபோதும் வாசிப்பு அருகி விடவில்லை. பெற்றோர் தான் பிள்ளைகளில் வழிகாட்டிகள். அவர்கள் வாசிக்கிறார்களா? ஆசிரியர்கள் வாசிக்கிறார்களா? எல்லோருமே கைப்பேசியில் மூழ்கியுள்ளார்கள். அப்படியிருக்க எப்படி பிள்ளைகள் வாசிக்க முடியும்?

விருப்பத்தோடு புத்தகத்தைத் திறந்து வாசிக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர்கள் விரும்பிப் பயன்படுத்துவது கைப்பேசி தானே. எந்த அளவுக்கு அறிவியல் வளர்ந்ததோ அந்தளவுக்குப் பிள்ளைகளின் பலவித வளர்ச்சிகளும் பாதிப்படைகின்றன பெற்றோரால்.

பெண்ணியவாதியாகப்பெண்களுக்கும், இலக்கியவாதியாக இளையோருக்கும் கூறவிரும்புபவை எவை?

பெண்களுக்கு…

பெண்கள் தங்கள் சுயத்தோடு வாழ வேண்டும். யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்கிற மனநிலையோடு மற்றப் பெண்களையும் தட்டிக் கொடுக்க வேண்டும்.

திருமணமாகிக் குடும்பத்தில் பிரச்சனை வந்தால் பெற்றோர், சமூகம் என்று பயந்து தற்கொலையில் மாளாது,  படுகொலைக்கு தலையை நீட்டாது எச்சரிக்கையாக வாழவேண்டும். பிடிக்கா விட்டால் உடனே விலகி விடவேண்டும்.

வாழ்க்கைத் துணையாகவே வந்தோம் உயிரைக் கொடுக்க வரவில்லை என்ற உயர் சிந்தனையோடு பாது காப்பை உறுதி செய்ய வேண்டும்.

நான் அழகானவள், மேன்மையானவள், தனித்து வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையோடு வாழ்ந்து காட்ட வேண்டும். திருமணம் வாழ்வின் முழுமையல்ல, ஒரு சிறு பகுதியே. திருமணம் செய்யாமலும் நிறைவாக வாழ முடியும் என்கிற மனப்பக்குவம் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேண்டும்.

  இளம் சந்ததியினருக்கு… வாசியுங்கள். இலக்கியங்களை வாசியுங்கள். எங்களின் அடையாளமான இலக்கணத்தை தெளிவாகப் படியுங்கள். இலக்கணத்தைப் படித்தால் மரபுக் கவிதை மட்டுமல்ல, எல்லாக் கவிதைகளும் எழுத முடியும். மரபிலக்கணம் தெரிந்த ஒருவரே மொழியில் முழுமைத்துவம் கொள்ள முடியும் என்பது எனது கருத்து. ஆக, மொழியறிவை இளையோர் நிறைவாகக் கற்றுக் கொள்ள இன்றே முயலுங்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

உங்கள் பார்வையில் தமிழ்நெஞ்சம் குறித்து கருத்தைச் சொல்லவும்...

தமிழ்நெஞ்சம் தமிழர் நெஞ்சங்களில் என்றும் நிறைந்திருக்கும்.  நிலைத்திருக்கும். 53 வருடங்கள் தன்னுடைய தொடர்பணியைப் பல இன்னல்களை எதிர்கொண்டும் தமிழினத்திற்காக மாதந்தோறும் அறிவார்ந்த பலவற்றைச் சுமந்து பல பன்முகப் ஆளுமைகளை உலகுக்கு அறிமுகம் செய்து இலக்கிய வரலாற்றிலும், ஊடக வரலாற்றிலும் தனித்துவத்தோடு மிளிர்கிறது.

Related Posts

நேர்காணல்

வட்டாச்சியார் மரபுக்கவிஞரானார்

லோகநாதன் ஜி

விருதுநகர் மாவட்ட வட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர், சமூக ஆர்வலர், சிறந்த தமிழறிஞர், மிகச்சிறந்த மரபுக் கவிஞர் போன்ற பன்முகத் திறமையுடன் இருக்கும்,. ஐயா லோகநாதன் ஜி அவர்களின் சுவாரஸ்யமான பேட்டி இதோ.

 » Read more about: வட்டாச்சியார் மரபுக்கவிஞரானார்  »

நேர்காணல்

மருத்துவ உலகில் ஒரு தமிழ் மாமணி

கவிநிலா மோகன் : –
.
கவிநிலா என்ற இதழ் நடத்திவந்த இதழாசிரியர், நீதிமதி, சுகந்தம், தாமரைப் பூக்கள் போன்ற பத்திரிக்கைகளில் உதவி ஆசிரியர், நடிப்புத் துறையில் மலர்ந்தும் மலராத பூக்கள்,

 » Read more about: மருத்துவ உலகில் ஒரு தமிழ் மாமணி  »

மின்னிதழ்

நிந்தவூர் உஸனார் ஸலீம்

இலங்கயில் மீன் பாடும் கிழக்கு மாகாணத்தில் நிந்தவூரில் பிறந்து , வளர்ந்து, வாழ்ந்து வரும் பிரபலமான பல்துறை ஆளுமைகள் நிறைந்த நிந்தவூர் உஸனார் ஸலீம் அவர்களை “தமிழ் நெஞ்சம்” நூலுக்காக நேர்காணல் செய்வதில் அகம் மகிழ்கிறேன் இவரது கை எழுத்துக்கள் அச்சில் வார்த்தது போல் அழகாக இருப்பது இறைவன் இவருக்கு கொடுத்த அருள் என்றே கூறலாம்.இலங்கை நாட்டில் கலை இலக்கிய துறையில் கூடிய ஆர்வாளர்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்திலிருந்து விடிவெள்ளியாய் பிரகாசிக்கும் நிந்தவூர் உஸனார் ஸலீம் அவர்களை அன்போடு வரவேற்றுக் கொண்டு வினாக்களுக்கு வருகிறேன்.

 » Read more about: நிந்தவூர் உஸனார் ஸலீம்  »