கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….
இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும் பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.
இவரைப் பேட்டி காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏடி.வரதராசன்
- வணக்கம் ஐயா?
தமிழ்நெஞ்சம் இதழுக்கும், இந்தத் தமிழ்ப்பணியின் தலைமகனார் திரு. அமின் ஐயாவிற்கும், வெண்பா வேந்தருக்கும், என் தமிழ் வணக்கம்.
- கோவை லிங்கா என்பது தங்கள் புனைப்பெயரா? அல்லது தங்கள் முழு பெயர் என்ன?
இல்லை ஐயா. கோவை லிங்கா என்பது எனது புனைப்பெயரே! . எனது இயற்பெயர் சொக்கலிங்கம் என்பதாகும். எனது தாத்தாவின் பெயர். அழைக்கும் பெயரையும் நான்வாழும் கோயமுத்தூர் எனும் கோவையையும் இணைத்து கோவை லிங்கா என்பதைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டேன்.
- தங்களின் பணி என்ன.?
கட்டிட ஒப்பந்ததாரர். (சிவில் காண்ட்டிராக்டர்) புதிய கட்டிடங்கள் வடிவமைத்தலும், உருவாக்குதலுமே எனது முழுநேரத் தொழில். கவிதை எழுதுவதையும் தமிழ் கற்பதையும் எனது பேரார்வத்தின் வெளிப்படாகக் கொண்டுள்ளேன்.
- மரபுக்கவிதை எழுத ஆர்வம் எப்படி வந்தது?
இந்தக் கேள்விக்கு நான் மூன்று காரணங்கள் கூறுவேன்.
முதலாவதாக எனது குடும்பத்தில் தமிழ்ப்புலமை கோண்டோர் பின்புலம் யாரும் இல்லை யென்றாலும் நான் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி மாவட்டம் புலியூர்குறிச்சி எனும் கிராமத்தில் அமைந்திருந்த நூலகமும், எங்கள் ஊரின் மண்ணின் மைந்தரும் எனது உறவினருமான (பெரியப்பா)
தமிழுலகம் போற்றும் தமிழ்ப் பற்றாளர் திரு. புலியூர்கேசிகன் அவர்களின் மேல் கொண்ட ஈடுபாடும்தான் சிறுவயதில் சங்க இலக்கியங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தியவை. அதன்பிறகு மேற்படிப்பு, பணி மற்றும் இல்லற வாழ்க்கைச் சூழல்கள் என்னைப் பலகாலம் ஒதுங்கியிருக்க வைத்தது. முன்று ஆண்டுகளுக்கு முன் கொரோனா காலகட்டத்தின் பிற்பகுதியில் தொழிலில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக முகநூலில் உள்ள கவிதைக் குழுமங்களில் கவனம் திரும்பியது. ஆரம்ப காலத்தில் சில கவிதைகளைப் பாராட்டி வந்த பின்னூட்டங்கைளால் ஆர்வம் அதிகமாகி நிறைய எழுதத் தொடங்கினேன். என்னுள் உறங்கிக் கொண்டிருந்த தமிழ்க்காதல் வெளிப்படத் தொடங்கியது
அப்போதுதான். முகநூலில் மரபுக் கவிதைகளுக்கு இருந்த வரவேற்பைப் பார்த்து நாமும் மரபில் எழுதிப் பார்க்கலாம் என முயன்றபோது எனக்கு வழிகாட்டியாக அமைந்த ஆசான்களின் அறிவாற்றலும் அரவணைப்பும் இரண்டாவது காரணமாக அமைந்தது. முகநூலில் அறிமுகமான என் ஆசான் திரு அகன் என்கிற அனுராதா கட்டபொம்மன், திரு இராம. வேல்முருகன் மற்றும் நான் பெரிதும் மதிக்கும் பாட்டரசர் பாரதிதாசனார் ஆகியோரின் வழிகாட்டுதல்களால் யாப்பிலக்கணத்தை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடிந்தது.
மூன்றாவது காரணம் என்னைப் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் வெண்பா வித்தகர் திரு. ஏடி வரதராசன் ஆகிய தங்களின் அறிமுகத்தால்!. அது எனக்கு வெண்பா மீது மிகப்பெரிய மோகத்தை ஏற்படுத்தியது. யாப்பிலக்கணம் குறித்த பல நூல்களையும் கற்றுத் தெரிந்துகொண்டதும் அவற்றை எழுதிப் பார்க்கும் முயற்சியில் ஓரளவு தேர்ச்சியும் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். முகநூலில் கிடைத்துவரும் பல முன்னோடிகளின் ஊக்கமும் பாராட்டுமே மரபுக் கவிதைகளின்மேல் எனக்கு ஆர்வம் வரக் காரணமாக அமைந்தது எனலாம்.
- தாங்கள் எழுதிய முதல் காதல் கவிதை ஞாபகம் இருக்கிறதா? இருந்தால் பகிருங்கள்
முதல் கவிதை என்று கேட்கிறீர்கள். அது கவிதையா ? மழலையின் கையெழுத்துப் பயிற்சி கிறுக்கலா?
என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எனினும் தாங்கள் கேட்டுக்கொண்டதால் எனக்குக் கவிதையாகத் தெரிந்த அதனைப் பகிர்கிறேன்.
மயிலிறகாய் வருடுகிறாய்!
கண்ணோடு நோக்கிடக்
காந்தமாய் இழுக்கிறாய்!
காதோடு குழலிசையைக்
காற்றில் இசைக்கிறாய்!
கூந்தலை உலவவிட்டு
கூடாரம் அமைக்கிறாய்!
தென்றலென நடைபயின்று
தேகமதை அசைக்கிறாய்!
தேனிலவாய் ஒளிர்கிறாய்!
தேவதையாய் நகர்கிறாய்!.
புன்னகையில் என்னுள்ளே
பூந்தேனைப் பொழிகிறாய்!
புகுந்தென் இதயத்தில்
புகைப்படமாய் நிலைக்கிறாய்!.
விழியென்னும் வேல்கொண்டு
வீழ்த்திடவே செய்கிறாய்.”
மயங்கிடவே செய்தென்னை
மயிலிறகாய் வருடுகிறாய்.
- தங்களுக்கு பிடித்த பழம்பெரும் புலவர் யார்? ஏன்?
பழம்பெரும் புலவர்கள் எல்லோரையும் பிடிக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் மட்டுமல்ல இலக்கிய உலகமே வியந்து பார்க்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் தான் எனக்கு மிகவும் பிடித்த புலவர்.
ஏன் என்று கேட்டால் கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே அதுபோல கம்பனைப் படிக்கப் படிக்கவே நானும் கவிதை என்று ஏதோ எழுதிக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். கம்பன் கவிநயத்தைக் கற்றறிந்தோர் பலர் கூறக்கேட்டு அவர் மீது அளவுகடந்த காதல் ஏற்பட்டது. கம்பன் வரிகளிலேயே சொல்ல வேண்டுமானால் கம்பன் எனும் ஆழியை ஒரு பூனையாகிய நான் முழுவதும் குடித்துவிட ஆசைப்படும் கவிஞன் நான்.
- மரபு கவிதைகளில் தங்களுக்குப் பிடித்த பா வகை எது?
யோசிக்காமல் சொல்வேன் வெண்பா என்று. நான் நிறைய எழுதிக் குவித்ததும் வெண்பா மட்டுமே. அதன் வடிவமும் சீர், தளை கட்டுப்பாடுகளும், ஈற்றடி சொல்லாட்சியும், சொல்லவரும் கருத்தைச் சுருக்கமாகச் சொல்லிவிடும் பாங்கும் மிகவும் பிடிக்கும்.
- அந்தப் பா வகையை அழகாகக் கையாண்ட பழம்பெரும் புலவர் யார்?
அவர் எழுதிய செய்யுளில் உங்கள் மனம் கவர்ந்த செய்யுள் எது?
வெண்பாவில் புகழேந்தி என அழைக்கப்படும் புகழேந்தியின் கற்பனவளமும் சொல்லாட்சிச் சிறப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. கலிதொடர் காண்டத்தின் நளன் தமயந்திக்குக் காட்டும் ஒரு காட்சியை புகழேந்திப் புலவர் கூறும் வெண்பா அவரது கற்பனை வளத்திற்கும் புலமைக்கும் சாட்சியாகும். மலர்கொய்யும் பெண்ணொருத்தியின் முகத்தை தாமரை என்றெண்ணி வண்டுகள் மொய்க்க அவற்றைக் கையாள அவள் கைகளை வீசுகையில் அந்தக் கைகளை செங்காந்தள் என்றெண்ணி வண்டுகள் பாய்வதால் வேர்த்து நிற்பதாக கூறும் பாடல் அது.
மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காணென்றான் வேந்து.
- இதுதான் கற்பனையின் உச்சம் என்பது போல ஒரு செய்யுள் இருந்தால் அதைப்பற்றி இங்கே பகிருங்கள்.
அப்படிக் குறிப்பிட்டு ஒரு செய்யுளை மட்டும் என்னால் சொல்லிவிட முடியாது. சங்கப் புலவர்கள் பலர் அதைச் செய்துகாட்டியுள்ளார்கள் . ஏன் இக்கால கவிஞர்களும் அதில் உச்சம் தொடுகிறார்கள். கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கம்பராமயணப் பாடல்களே நீங்கள் குறிப்பிடும் அந்த உச்ச வரம்பில் இன்றுவரை நின்று கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். சான்றாக ஒன்றைக் கூறுகிறேன்.
சேல் உண்ட ஒண் கணாரின்
திரிகின்ற செங் கால் அன்னம்.
மால் உண்ட நளினப் பள்ளி.
வளர்த்திய மழலைப் பிள்ளை.
கால் உண்ட சேற்று மேதி
கன்றுஉள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு. துயில. பச்சைத்
தேரை தாலாட்டும் – பண்ணை.
கோசல நாட்டில் கயல் விழி மாதர் நடை கண்ட அன்னப்பறவைகள் தாமும் அதுபோல நடைபயில தாங்கள் குஞ்சுகளை தாமரை மலர்களில் தூங்கவைத்துச் செல்கின்றன. சேற்றைப் பூசிய கால்களை உடைய எருமைகள் அந்த அன்னக் குஞ்சுகளைப் பார்த்ததும் தங்கள் கன்றுகளை நினைக்க, நினைத்த மாத்திரத்தில் அவற்றின் மடியிலிருந்து பால் சொரிந்தனவாம் . அந்தப்பாலைக் குடித்து அன்னக்குஞ்சுகள் துயில தேரைகள் அவற்றிற்குத் தாலாட்டு பாடியதாம்..
என்ன கற்பனை பாருங்கள். கம்பனின் ஒவ்வொரு பாடலும் இதுபோல படிப்பவரை வியப்பில் ஆழ்த்தும் கவிதைகளே!.
- தாங்கள் வாங்கிய விருதுகளைப் பற்றி சொல்லுங்கள்.
அங்கீகரிக்கப்பட்ட விருதுகள் என்று இதுவரை நான் பெற்றதில்லை. அதற்கான தகுதியும் பெற்றுவிட்டதாகக் கருதவில்லை. தமிழ் பயிலும் மாணவனாகவே என்னைக் கருதுகிறேன். முகநூல் கவிதைக் குழுமங்கள் பல விருதுகளை அளித்து மரியாதை செய்துள்ளன. அவற்றை என்னை நான் கவிஞனாக அடையாளப் படுத்திக்கொள்ள கிடைத்த ஊட்டமாகவே கருதுகிறேன். மற்றபடி நான் பதிவிடும் கவிதைக்களைப் பாராட்டிச் சக கவிஞர்கள் தரும் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றையும் விருதுகளாகவே பார்க்கிறேன்..
- தாங்கள் நடத்தி வரும் வெண்பா வித்தகம் குழுமம் பற்றி அறிந்திருக்கிறேன். அதன் அடுத்தக் கட்ட நகர்வு என்ன?
ஆம். ஐயா வெண்பா எனும் பாவகையில் பல உத்திகளில் படைத்துப் பார்த்துப் பயிற்சி பெரும் குழுமம் அது. ஆறு பேராகச் சேர்ந்து தொடங்கிய எங்கள் குழுமம் இன்று முப்பது பேர்களுடன் திரு ஏடி வரதராசன் அவர்களின் வழிகாட்டுதலிலும் உள்பெட்டிக் குழுமமாக வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. சொல்லணியிலும் பொருளணியிலும் கிட்டத்தட்ட 240 வகையான உத்திகளில் எங்கள் பாவலர்களின் திறமையான வெண்பாப் படைப்புகள் நாலாயிரத்தைக் கடந்துள்ளது. மற்ற பாவகைகளிலும் பயிற்சி பெற்று வருகிறோம்.சொல்லிலக்கணம் யாப்பிலக்கணம் ஆகியவற்றையும் முறைப்படி கற்று வருகிறோம்.
அடுத்தகட்ட நகர்கவாக எங்கள் தொகுப்புகளை நூலாக்கம் செய்திடவும். மேலும் பல படைப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
- தாங்கள் எழுதிய நூல்கள் யாவை?
நூல்கள் என்று பொதுவாகக் கேட்டிருக்கிறீர்கள். வெண்பாச்சோலை எனும் தொகுப்பு நூல் ஒன்று வெளியீடு கண்ட நூலாகும். இன்னும் அச்சின் மணம் ஏறாத ஆறுநூல்கள் என் கணிணி சேமிப்பில் உள்ளது. வரும் பிப்ரவரி மாதத்தில் இரண்டு நூல்கள் வெளியிட முடிவு செய்துள்ளேன். அனைத்தும் மரபுக் கவிதை சார்ந்த நூல்களே!.
- கவிதை என்றால் என்ன?
இந்த கேள்விக்கு ஓரிரு சொற்களில் பதில் சொல்ல வேண்டும்.
கற்பவர் மனத்தில் கவிஞன் விதைக்கும் விதையே கவிதை என்பேன். அது அவருக்குள் வளர்ந்து உணர்வுகளைத் தூண்டுமாயின் அந்தக் கவிதை வெற்றிபெறும்.
- எழுத்தாளர்களுக்கு தாங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களில் சிலரது எழுத்துக்களே வெளிச்சம் பெறுகிறது. அந்த சூட்சுமம் அறிந்து அவற்றில் உள்ள பொருண்மையும் கையாளும் திறத்தையும், தனித்தன்மையையும் கண்டுணர்ந்து பயிற்சி பெற்றால் கதையோ?, கவிதையோ? கவரும் வகையில் அமையும் என்பது எனது கருத்து.
- எழுத்தாளர்களுக்கு தாங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களில் சிலரது எழுத்துக்களே வெளிச்சம் பெறுகிறது. அந்த சூட்சுமம் அறிந்து அவற்றில் உள்ள பொருண்மையும் கையாளும் திறத்தையும், தனித்தன்மையையும் கண்டுணர்ந்து பயிற்சி பெற்றால் கதையோ?, கவிதையோ? கவரும் வகையில் அமையும் என்பது எனது கருத்து.
- என்ன வருத்தி நீ கவி செய்யினும் முன்னோர்கள் செய்ததன்றி நூதனம் ஒன்றுமில்லை….
இந்த வாக்கியத்தைப் பற்றி தங்கள் கருத்து என்ன? .
ஏன் நம்மால் முன்னோர்கள் அளவுக்கு எழுத முடியாதா ?
அவ்வாறு பொத்தாம் பொதுவாகக் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. நிச்சயம் முன்னோர்களை விட சிறப்பாகப் படைக்கமுடியும். அதனால்தான கவிதை வடிவங்களிலும், கதை வடிவங்களிலும் பல பரிணாம வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். மகாகவி பாரதி செய்தவை அத்தனையும் முன்னோரைத் தாண்டிய நூதனங்கள் தானே?
- இக்கால பாவலர்கள் எந்தெந்த கவிதை நூலை வாசிக்கலாம்?
தமிழ் இலக்கிய உலகம் கோடிக்கணக்கான சிறந்த படைப்புகளைக் கொண்ட பொற்களஞ்சியம். அவை அத்தனையும் கற்றுமுடிக்க இன்றைய காலகட்டத்தில் எந்தப் பாவலக்கும் வாழ்நாள் போதாது. என்னைக் கேட்டால் திருக்குறள் என்கிற ஒரு நூலை முழுவதுமாகக் கற்றுத்தேர்ந்தால் அவன் முக்கால்வாசி தமிழ் கற்றவனாவான். பிற பெரும்புலவர்களின் சிறந்த படைப்புகளின் ஆய்வு நூல்களைத் தேடிப் படித்தாலே நிறைய செய்திகள் அறிந்துகொள்ள முடியும் என்பது எனது கருத்து.
- இலக்கணம் பின்பற்றாத புதுக்கவிதை பற்றி தங்கள் கருத்து என்ன?
மரபைப் பின்பற்றாத புதுக்கவிதைகள் காலத்தின் கட்டாயமே. எளிதாக அனைவரையும் சென்றடையும் வகையில் அவை வெற்றி பெற்றதால்தான் இன்று பரிணாம வளர்ச்சியாக நவீன கவிதை, ஹைக்கூ, தன்முனை எனப் பல முகங்களைக் கொண்டுள்ளது. எந்த வடிவமாக இருந்தாலும் படிப்பவரின் மனதைத் தொட்டால் அது கவிதைதான். பல கவியுலக பெரும்பாவலர்கள் மரபை விடுத்துப் புதுக்கவிதையில் சொலித்துக் கொண்டிருப்பதே அதன் பெருமையைச் சாற்றும்.
- எந்த பா வகையில் காதலைச் சொன்னால் அழகாக இருக்கும்?
இது ஒரு சிக்கலான கேள்வியாகக் கருதுகிறேன். ஓவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான பாவகையில் காதலைச் சொல்கிறார்கள். அத்தனையுமே அழகாய்த்தான் உள்ளன. பாவகையை விட பாடலில் காட்டும் உவமைகளும் சொல்லாட்சியுமே கவிதையையும், காதலையும் அழகாக்கும்…
- உங்கள் மனைவியைப் பற்றி உங்களுக்கு பிடித்த பா வகையில் ஒரு கவிதை சொல்லுங்கள்..
ஒரு பெண்மீது ஆணுக்கும், ஆண்மீது பெண்ணுக்கும் ஏற்படும் காமம் தாண்டிய நேசிப்பெனும் காதல் இல்லாமல் போயிருந்தால் இந்த உலகில் கவிதையே பிறந்திருக்காது என்பது எனது நிலைப்பாடு. அந்த வகையில் நானும் எனது மனைவியை மிகவும் நேசிக்கிறேன். இல்லற வாழ்வில் என்னோடு இணைபிரியாது பயணிக்கும் என் மனைவியைக் குறித்து நீங்கள் கேட்டவுடன் எழுதிய வெண்பா இதோ…
காதல்மை யூற்றிக் கவியெழுத வைத்தவள்!
சோதனையில் என்றன் சுமைதாங்கி! – சீதனமாய்
இன்பத்தை ஊட்டவந்த இன்னொருதாய்! என்வாழ்வின்
புன்னகை பூக்கும் புலம்!
- எனது இத்தனைக் கேள்விகளில் எந்தக் கேள்வி அழகானது…. ஏன்?
நான் எழுதிய முதல் காதல் கவிதையைக் கூறக் கேட்டீர்கள். அதுவே எனக்கு அழகான கேள்வியாகத் தோன்றியது. ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பைக் குறித்த கேள்வியைவிட வேறு எந்த கேள்வியும் இவ்வளவு மகிழ்ச்சியைத் தராதே!.
- தமிழ்நெஞ்சம் மாத இதழ் பற்றி ஒரு வெண்பா பாடுங்கள்….
நிச்சயமாக ஐயா!. தமிழ்நெஞ்சம் மின்னிதழை மாதம்தோறும் தவராமல் பதிவிறக்கம் செய்து படித்து வருகிறேன். திரு. அமின் ஐயா அவர்களின் உழைப்பும் , தமிழ்ப்பணியும் அளப்பரியது.
தமிழ்நெஞ்சம் குறித்த எனது வெண்பா இதோ..
அமினார் எனுமிந்த அச்சாணி கொண்ட
தமிழ்நெஞ்சத் தேரில் தமிழ்த்தாய் – இமிழிசைத்(து)
ஊர்கோலம் போவாள் உலகெங்கும் கோமகளாய்ச்
சீர்கோலம் பூண்டே சிறந்து!.
- நன்றி ஐயா🙏💕
இந்த மாபெரும் அங்கீகாரத்தை எனக்கு அளித்த ஐயா திரு. அமினார் அவர்களுக்கும், தமிழ்நெஞ்சம் மின்னிதழுக்கும், தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
நன்றி.
தமிழ்நெஞ்சம் Flip Book