1. உங்களை பற்றிய அறிமுகத்தை கூறுங்கள்.

1997 ஜனவரி மாதம் 30ஆம் திகதி இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகமை எனும் ஊரில் பிறந்தேன்.

எனது தந்தையின் பெயர் முஹம்மத் ஹூசைன், தாயின் பெயர் சித்தி மர்சூனா . எனது உடன்பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர் .அதில் நான் ஏழாமவன். உடன்பிறப்பில் மூன்று பேரும், தந்தையும் இறைவனின் அழைப்பை ஏற்றார்கள்.

எனது ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர்தரம் வரையிலும் ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் கல்லூரியில் கல்வி கற்றேன்.

உயர்தரப் பரீட்சையின் பிற்பாடு மேற்படிப்புக்களை தொடர முடியாத குடும்ப சூழ்நிலையினை கருத்திற்கொண்டு எனது பத்தொண்பதாவது வயதில் வேலையின் நிமித்தம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இல் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளனாக சேர்ந்தேன்.

அல்ஹம்துலில்லாஹ். சுமார் எட்டு வருடங்களை கடந்து இந்த வெளிநாட்டு வாழ்க்கை சென்று கொண்டு இருக்கின்றது.

நேர்கண்டவர் தமிழமின்

ஜனவரி 2025 / 200 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.
ஏட்டுலா கனவாக்கத்தின் இரண்டாவது நூலான திக்ரா ஹனீபா எழுதிய வாப்பாக்கு நூல் வெளியீட்டின் போது...

தமிழ்நெஞ்சம் Flip Book ஜனவரி 2025

  1. இலக்கியம், சமூக சேவை மற்றும் மனிதவள மேலாண்மை விடயத்தில் உங்களின் தற்போதை ய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இவ்வாறான துறையில் நீங்கள் பயணிக்க தூண்டுகோலாக இருந்த காரணிகள் பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

நிச்சயமாக. என்னுடைய பாடசாலை காலத்தில் இருந்தே கதை, கட்டுரை, நாவல் போன்ற புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் அதிகமாகவே இருந்துவந்ததுடன், டயரி எழுதும் பழக்கமும் இருந்தது . அன்றாடம் வாழ்வில் நடைபெறுகின்ற சிறிய நினைவுகளாக இருந்தாலும் டயரில் எழுதும் பழக்கம் எனக்குள் இருந்து கொண்டே வந்தது. வேலையின் நிமித்தம் வெளிநாடு  வந்ததோடு நானும் இயந்திர மனிதனை போல் இயங்க ஆரம்பித்து விட்டதால், டயரி எழுதும் பழக்கத்தை தொடர முடியாமல் போனது. அவ்வப்போது விடுமுறை நாட்களில் சில நேரம் உறவுகள் இல்லாத தனிமையிலும் அறுதலையும் நம்பிக்கையையும் என்னுள் ஏற்படுத்திக் கொள்ள சில வரிகளை அந்த டயரியில் எழுதி வருவேன். முன்னைய காலங்களில் மூக வலைதளங்களில் நான் எழுதும் கவிதை, கட்டுரைகளை பதிவிடுவதை விரும்பவில்லை. காலம் உருண்டோட வேலைப்பளுக்களும் அதிகமாகி பொறுப்புக்களும் தலைக்கு மேல் வந்ததால் கையில் உறவாக என்னுடன் இருந்த அந்த டயரியும் காணாமல் போனது. அதன் பிறகு தொலைபேசி மூலம் சில நேரங்களில் வாட்சப் குழுமங்களில் மனதிற்கு தோன்றும் விடயங்களை அவ்வப்போது பகிர்ந்தும் வருவேன்.

காலங்கள் கடந்து செல்ல 2023 இறுதியில் தான் பொறுப்புக்கள் குறைந்து, வேலையின் நேரங்களில் மாற்றங்கள் ஏற்பட மனம் நிறைவான ஒரு தருவாயில் இருந்த போது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு உறவின் வேண்டுகோளுக்கு பிற்பாடு மீண்டும் இலக்கியத்துறையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். அதன் பிறகு என் எழுத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வர அதற்கான ஒரு அங்கீகாரமும் கிடைத்தது. அது மட்டுமின்றி இலக்கிய துறைக்கு என்னால் முடியுமான ஒரு தொண்டை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் என்னுள் வந்தது.

கடல் கடந்து இருந்தாலும் என் தனிமையினை இல்லாமலாக்கி சமூகத்துடனான ஒரு இணைப்பில் இருக்கவும் இலக்கிய துறை பெறும் பங்காற்றியது  என்றால் மிகையாகாது.

  1. இளம் வயதிலே இலக்கியத்தின் பக்கம் உங்களின் சழூக பயணத்தை முன்னெடுப்பதற்கான காரணம் என்ன?

எனது வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தில் உதவியவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். அவர்களை கட்டாயமாக நினைவுபடுத்த வேண்டும். இறைவன் அவர்களுக்கு நற்கூலியையும் வழங்க வேண்டுமென நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன். அன்று அவர்கள் எனக்கு உதவும் போது நான் பிரார்த்திப்பது ஒன்று தான். ‘ இறைவா! நான் சிறந்த ஓர் நிலையை அடைந்த பின் என்னால் இந்த சமூகம் பிரயோசனம் அடைய வேண்டும். இந்த சமூகத்திற்கு என்னுடைய பங்களிப்பு பெறும் ஓர் பங்காற்ற வேண்டும்’  என்பதே என் ஆசையும் பிரார்த்தனையாகவும் இருந்தது. அந்த வகையில் நான்  இன்று இறைவனின் அருளால்   ஒரு சிறந்த நிலையினை அடைந்து இருப்பதால். எனக்கு மிகவும் பிடித்த துறையான இலக்கியதுறையினை தெரிவு செய்து இதன் மூலம் சமூகத்திற்கு என்னால் முடிந்த முழு பங்களிப்பை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் என்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியினை கொண்டு இறைவனின் துணையுடன் இந்த சமூகப்பணியினை சிறப்பாக செய்து வருகிறேன்.

  1. ஏட்டுலா கனவாக்கம் அமைப்பின் மூலமாக நீங்கள் வெளியீடு செய்யும் இலக்கிய படைப்புகள் மற்றும் அந்த வெளியீடுகள் மூலமாக நீங்கள் எதிர்பார்க்கும் நீண்டகால அடைவுகள் என்ன?

இலைமறை காய்களாக ஈழத்து மண்ணில் மறைந்திருக்கும்  சிந்தனைத் திறன் மிக்க இளம் எழுத்தாளர்களின் இலட்சியக்கனவாம் புத்தக்கனவை நனவாக்கும் ஒரு செயற்திட்டம் தான் ஏட்டுலா கனவாக்கம் என்ற அமைப்பு. இந்த அமைப்பினால் இலக்கியத்துறைக்கு என்னால் முடியுமான ஒரு பங்களிப்பினை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எனது தலைமையில் உருவாக்கப்பட்டதே  இந்த ஏட்டுலா கனவாக்கம் என்ற அமைப்பு.

இன்றைய நவீன உலகில் சமூக வலைதளங்களில் எழுத்துத் துறையில் உலாவரும் அதிகமானோர் இருப்பதை நாம் யாவரும் அறிவோம். ஆனபோதிலும், அவர்களில் ஏராளமானோர் இலை மறை காய்களாக சமூகத்தில் மறைந்து  காணப்படுகின்றார்கள் என்பது நாம் காணக்கூடிய மறுக்க முடியாத உண்மையே. அதிலும் குறிப்பாக, எழுத்துத் துறையிலே சாதிக்க வேண்டும் என்றும் தன்னுடைய எழுத்துக்களும் தொகுக்கப்பட்டு ஒரு நூலாக வெளியிடப்பட வேண்டும் என்றும் ஆசையுடன் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய எழுத்துக்களை நூலாக்கம் பெறச் செய்வதென்பது, தனியொரு நபரான தன்னால் மாத்திரம் முடியுமான அத்தனை இலகுவானதொரு காரியமன்று.

எனவே அவ்வாறு சிந்தனைத் திறன் வாய்ந்த எழுந்தாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே இவ் ஏட்டுலா கனவாக்கம் என்ற குழுவுணர்வு தாங்கிய கூட்டு முயற்சியினை ஆரம்பித்துள்ளேன்.

இதன் மூலம் சமூகத்தில் இருக்கும் சிந்தனைத் திறன் மிக்க இளம் எழுத்தாளர்களை உருவாக்கி அவர்களுக்கான அங்கீகாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் அதே வேலை இலக்கியவாதிகளையும் இந்த சமூகம் இலக்கிய துறையில் இழந்துவிடக் கூடாது. தற்காலத்தில் எழுத்தாளர்கள் பலர் இருந்தாலும் இலக்கியவாதிகள் என்று சிறப்புக்குரியவர்கள் அரிதாகவே காணப்படுகின்றார்கள். அந்த வகையில் தற்காலத்திலும் எதிர்காலத்திலும் இலக்கிய துறையில் பல இலக்கியவாதிகள் உருவாக வேண்டும். இதன் மூலம் ஈழத்து மண்ணிலும் ஏட்டுலா கனவாக்க அமைப்பினால் பல இலக்கியவாதிகளை உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய அமைப்பினதும் என்னுடையதுமான எதிர்கால அடைவாக இருக்கின்றது.

  1. உங்களின் தற்போதைய சமூகவியல் முயற்சிகள் நீண்டகாலத்திற்கு கொண்டு செல்வதற்காக நீங்கள் கட்டமைப்பு செய்துள்ள பொறிமுறை பற்றி சற்று கூறுங்கள்.

உண்மையில் என்னை பொருத்தவரையில் இலக்கியத்துறையில் எழுதுவதில் ஆர்வம் இருப்பதைவிட எழுதத்துடிக்கும் இதயங்களை ஊக்குவிப்பதிலே மிகவும் ஆர்வமாக உள்ளேன். அவ்வாறு சிறந்த திறமையான ஆளுமைகளை என் நட்புவட்டாரத்திலும் சேர்த்தும் வைத்து இருக்கிறேன். இலக்கிய குழுமங்களை ஆரம்பித்து அதனையும் சிறப்பான முறையில் நடாத்தியும் வருகின்றேன்.

“மனம் இருந்தால் இடம் உண்டு” என்பது போல என்னுடைய நோக்கம் நிறைவேறவே என்னுடைய எண்ணத்தையும் சீராக்கி முழுமனதுடனும் செயற்பட்டும் வருகிறேன். எனவே நாம் ஒரு துறையில்  சாதிக்கும் போது அதற்கான அங்கிகாரம் நிச்சயமாக கிடைக்கும். மனம் தளராமல் எந்த சூழ்நிலையிலும் இதனை விட்டு தூரமாகமல் இருந்தாலே  இறுதிவரை முறையில் கட்டமைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன்.

  1. உங்களின் சமூக வாழ்வில் நீங்கள் பிரதானமாக எதிர்நோக்கும் சவால்கள் என்ன?

நான் தூரதேசத்தில் பணிபுரிகின்றவன் என்பதால் வேலைப்பளுக்களுக்கு மத்தியிலே இவ்வாறான வேலைத்திட்டங்கள், மற்றும் என்னுடைய தனிப்பட்ட எழுத்தாற்றலையும் வெளிப்படுத்தி வருகின்றேன். இதில் பிரதானமாக எதிர்நோக்கும் சவாலாக நேரமின்மை மாத்திரமே என்னால் சொல்ல கூடியதாக இருக்கின்றது. என்னென்றால் தன் கையே தனக்கு உதவி என்பது போல் உதவிட உறவுகளின்றி தனிமனிதனாக அத்தனை வேலைகளையும் பார்த்துக் கொண்டே தனிமையில் வாழ வேண்டிய வாழ்க்கை தான் வெளிநாட்டு வாழ்க்கை என்பது.

2015 இல்பாடசாலை மாணவத்தலைவனாக
  1. இலக்கியத்துறையில் சமுகத்திற்கு ஆற்றியுள்ள பங்களிப்புகள் பற்றி கூறுங்கள்?

இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களின் எழுத்துக்களை நூல் வடிவமாக்கி இலட்சியக்கனவை நிறைவேற்ற ஏட்டுலா கனவாக்கம் என்கின்ற அமைப்பினை நடாத்தி வருகின்றேன். அதில் இதுவரையில் இரண்டு நூல்கள் வெளியீடு செய்து இருக்கின்றேன்.

  • அக்கரைப்பற்று மூபிதா அமீன் எழுதிய “நிதர்சனத்தின் நிழல்” (06/07/2024)
  • கண்டி / தெல்தோட்டை திக்ரா ஹனீபா எழுதிய “வாப்பாக்கு” (03/11/2024)
  • எதிர்வரும் 2025 பெப்ரவரி மாதத்தில் மூன்றாவது நூல் வெளியீடும் நடை பெற இருக்கின்றது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இரண்டு தசாப்தத்திற்கும் மேலாக இலக்கியத்துறையில் பெரும் ஈடுபாடு இல்லாமல் காணப்படுகின்ற எமது பிரதேசத்தில் அரிதாகி வரும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், எழுத்துத்துறையில் ஆர்வமாக உள்ள அனைவரையும் இனங்கண்டு அவர்களையும் ஊக்கப்படுத்தி சிந்தனைத்திறன் மிக்க எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நன் நோக்கிலும்  ஹெம்மாதகமை பிரதேசத்தில் இலைமறை காய்களாக உள்ள எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும் அதே வேளை இச் சமூகத்திற்கு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு களமாக இருப்பதற்கும்  ஹெம்மாதகமை இலக்கிய மன்றம் எனும் நாமம் தாங்கிய குழுமத்தினை நான் 22.10.2024 அன்று ஆரம்பித்து  சிறந்த ஆளுமைகளை எம் மண்ணுக்கு அடையாளப்படுத்தி வருகின்றேன்.

அண்மையில் தழிழ் நாட்டின் “திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு” உலகெங்கிலுமுள்ள கவிஞர்களை ஒன்று திரட்டி உலக சாதனைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. 1330 குறளுக்கும் 1330 கவிஞர்கள் 1330 கவிதைகள் படைக்க வேண்டப்பட்டது. உலகெங்கிலுமுள்ள 1330 கவிஞர்களுள் ஒருவனாக நானும் பங்கு கொண்டது மட்டும் இல்லாமல் இலங்கையில் இருந்து பல இளம் எழுத்தாளர்களையும் அதில் கலந்து கொள்ள வைத்தமைக்காக இலங்கையின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றிய வாய்ப்பு கிடைத்தது. அதற்காக “குறள் பணிச்செல்வர் விருது” எனக்கு கிடைக்கப்பெற்றது.

ஜே. எம். ஐ நிறுவனத்தினால் வெளீயிடு செய்து வருகின்ற நூறு கவிதைகளும், கவிஞர்களும்  கவிதை தொகுப்பின் இரண்டாம் தொகுதியாக வெளிவந்த விழுதுகள் நூலின் தொகுப்பாசிரியராகவும் செயல்பட்டு ஏராளமான இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தேன்.

“கல்விக்கு என்றும் முதலிடம்” என்ற கருப்பொருள் தாங்கி  சமூகசேவை செய்ய வேண்டும் என்ற நல்நோக்கில் சுமார் ஐந்துவருடங்களாக BBA FOUNDATION என்கின்ற பெயரில் வசதியற்ற ஏராளமானவர்களுக்கு என்னாலான உதவிகளை செய்து வருகின்றேன். அதே வேலை ரமழான் மாதத்தில் போட்டி நிகழ்ச்சிகள், நூல் வெளியீடுகள், ஆளுமைகளை கெளரவிக்கும் விழாக்களுக்கு அதனூடாக அனுசரணையும் வழங்கி வருகின்றேன்.

  1. இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆளுமையுள்ள இளைஞர் யுவதிகளுக்கும் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

இலக்கிய ஆர்வலர்களுக்கு என்று குறிப்பிட்டு சொல்வதாக இருந்தால் இன்று இலக்கியத்துறையில் சாதிக்க வேண்டும் என்று ஏ ரா ளமான இளம் எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள் .அவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களுக்கான சரியான வழிகாட்டுதல்களை செய்வோமாக இருந்தால்  ஈழத்து மண்ணிலும் சிறந்த ஆளுமைகளை உருவாக்க முடியும்.

ஏனென்றால் இங்கு “உன்னால் முடியும்!! நீ முயற்சி செய்!! உன்னுடன் நான் இருக்கிறேன் என்று கூறி உற்சாகப் படுத்துவதற்கு யாரும் இல்லை என்பதனாலே  சிலரின் கனவுகள் வெறும் கற்பனையாகிப் போகின்றன. சாதிக்க துடிக்கும்  மனங்களின் பிணி பரிசு அல்ல , உத்வேகம் தரும் உயிரோட்டமான வார்த்தைகள். அவற்றை அவர்களிடம் சொல்லிப் பாருங்கள் சமூகத்தில் மாபெரும் புரட்சிகளை தோற்றுவித்து விடுவார்கள்”.

உருவாகி இருப்பவர்களை ஊக்கப் படுத்தி க் கொண்டடுவதை விட உருவாக துடிப்பவர்களை ஊக்கப்படுத்த முயற்சி செய்யுங்கள். அனுபவம் வாய்ந்த இலக்கியத்துறையில் ஏரா ளமானவர்கள் இருந்தாலும் போதியளவு வழிகாட்டுதல்கள் இளம் எழுத்தாளர்களுக்கு இல்லாமை  இன்றுவரை ஒரு குறையாகவே காணப்படுகின்றன.

அதுபோலவே இன்றைய நவீன காலத்தில் இளம் எழுத்தாளர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக அவர்களது திறைமைகளை வெளிக்காட்டி வருகின்றார்கள். அதனை அவர்களை அடையாளப்படுத்தும் ஒரு தளமாகவே பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். எனவே உங்களிடம் இருக்கும் திறமைக்கு மதிப்பளியுங்கள்.  ஏதோ ஒரு சந்தர்பத்தில் அது உங்கள் வாழ்வில் கைகொடுத்து தலைநிமிர்ந்து வாழவைக்கும். நம் திறமையின் வெற்றி தோல்வி நம் கையில்  சந்தர்ப்பம் வரும் போது அது தானாக திறக்கப்படும்.

“வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று எதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டாம். இறைவன் நாடினால் அதிலிருந்து புதியதொரு தொடக்கதை ஆரம்பித்து வைப்பான்.

உங்களால் முடியாது ஒன்றும் இல்லை நீங்கள் முயற்ச்சிக்காமையே தவறாகும். எதுவாக இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள். அது கிடைத்துவிட்டால் வெற்றி..! கிடைக்காவிட்டால் அனுபவம் என்று நம்பிக்கையை ஆழமாக விதையுங்கள்.

வாழ்க்கையில் சோதனைகளும்,பிரச்சினைகளும் வரும் போது தான் நாம் யார் என்பதை நாமே உணர்கின்றோம். எதுவும் இவ்வுலக வாழ்க்கையில் நிரந்தரமில்லை..! எல்லாம் சில காலம் தான்.

ஆகவே எந்த சூழ்நிலையிலும் கற்பவனாகவே இருந்து வாருங்கள். அதுவே உங்கள் தரத்தை மேன்மேலும் வளர செய்யும்.

  1. தங்களின் பணிகளுக்கு துணையாக செயலாற்றும் தோழர்களைப்பற்றிச் சொல்லுங்கள்?

“நன்றி சொல்ல பழகிகொள்ளுங்கள் அது உங்களை நல்ல மனிதநேயம் உள்ள மனிதனாக மாற்றும் பண்புகளில் ஒன்றாகும்”  என்ற கூற்றுக்கிண ங்க என்னுடைய எல்லா செயற்பாடுளின் போதும் எனக்கு துணையாய் இருந்தவர்களை நினைவுபடுத்தி நன்றி தெரிவிப்பது எனது வழக்கமான செயல்களில் ஒன்றாகும்.

அந்தவகையில் இன்று இந்த இடத்தில் சிறந்த ஆளுமையுடன் சமூகத்தில் ஒருவனாக இருப்பதற்கு பெறும் துணையாக இருந்தவர் பெயர் குறிப்பிட விரும்பத்தக்க ஒரு நல்ல நண்பர் தான் என்பதில் நான் பெருமிதம் கொள்ளகிறேன். மீண்டும் இலக்கியத்துறைக்கு  வருவதற்கு என்னை வழிகாட்டி எல்லா நேரத்திலும் உதவியாக இருந்து சிறந்த இலக்கிய ஆளுமைகளை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து எனக்கான ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் ஏற்படுத்தி தந்த அந்த நல்ல உள்ளத்திற்கு முதற்கண் நன்றி தெரிவிப்பது மட்டும் இல்லாமல் என்னுடைய சேவையில் முழுமையான பங்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்  என்று நான் எப்பொதும் பிரார்த்தனை செய்து வருகின்றேன்.

அதுபோல என்னுடன் இனைந்து உறவுகளாக துணைகரம் நீட்டுகின்ற ஏட்டுலா கனவாக்கம் குழும உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். பொருளாதார ரீதியாக என்னுடைய பங்கு இருந்தாலும் நூலுருவாக்கம் செய்து அதனை வெளியீடு செய்கின்றவரை அனைவரினதும் ஒத்துழைப்பு பெரும் துணையே.

அந்த வகையில் ஏட்டுலா கனவாக்கத்திற்கு வருகின்ற அனைத்து நூல்களையும் திறன்பட திருத்தம் செய்து நூலுருவாக்கத்திற்கு பெறும் பங்காற்றுகின்ற என் அன்புக்குரிய ஆசான் தமிழ் மண் ஈன்றெடுத்த முத்து தமிழ் நெஞ்சம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் அமீன் முஹம்மட் அவர்களுக்கு நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களுடன் இணைந்து கவிதைகளை திறன்பட ஒழுங்கமைத்து திருத்தம் செய்து நூலுருவாக்கம் செய்ய என்னுடன் துணை நிற்கின்ற ஹாஸ்மியா தாஹா மற்றும் அதீகா மசூர் அவர்களுக்கும் இப்பதிவில் நேச நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய நூல்களை கவர்ச்சிகரமாகவும் நேர்த்தியாகவும் சிறந்த முறையில் வடிவமைப்பு செய்து ஏட்டுலா கனவாக்கத்தின் அனைத்துவகையான வடிவமைப்புக்களையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து தருகின்ற என் அன்புக்குரிய சகோதரி ஷகீலா உமர்டீன் அவர்களுக்கு இத்தருணத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன்.

அடுத்து இந்த நூலை அச்சுட்டு செய்வதற்காக உதவியாகவும் நிகழ்வுகளின் போது நான் இல்லாத குறையினை நிவர்த்தி செய்து விழாவிற்கு தலைமை தாங்கி நடாத்தி தருகின்ற மூதூர் ஜே.எம்.ஐ  நிருவனத்தின் பணிப்பாளர் J.M.I இஹ்ஸான் அவர்களும், நிகழ்வை நேரலையாக அனைவரும் காண வேண்டும் என்பதற்காக முக நூல் வாயிலாக நேரலை வழங்கி, ஊடக அனுசரணையும் வழங்குகின்ற என் அன்புக்குரிய நண்பன் Rj Media வின் பணிப்பாளர் முஹம்மத் இன்ஷாப் அவர்களுக்கும் என் நேச நன்றியினையும் தெரிவித்தவனாய்.

பஹ்ரியா பாயிஸ், ரஜா முஹம்மத் அவர்களுக்கும் இத்தருணத்தில் என்னுடைன் இணைந்து குழுமத்தில் பல வேலை திட்டங்களை செய்கின்றமைக்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹெம்மாதகமை இலக்கிய மன்றத்திலும் எமது ஊரினை பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமான தோழமைகள் எல்லாச்சந்தர்ப்பத்திலும் துணையாய் இருக்கின்றார்கள் .அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மிக முக்கியமாக இலக்கிய நட்புவட்டாரத்தில் இருக்கின்ற அதிகமானவர்களை  நான் இன்னும் நேரில் சந்தித்தது கூட இல்லை. இருந்தாலும் எனக்காய் எல்லாமுமாய் எப்போதும் உதவிக்கரம் செய்பவர்களாகவே இருக்கின்றனர்.

இன்னும் பெயர் குறிப்பிட்டு சொல்பவர்களாக இருந்தால், ஏட்டுலா கனவாக்கத்தின் முலம் வெளியீடு செய்கின்ற நூல்களுக்கு குறிப்பு எழுதி அதற்கான அங்கீகாரத்தை எல்லாம் வெளியீடுகளின் போதும் செய்து தருகின்ற கலா பூசணம் பாலமுனை பாரூக் ஆசிரியருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இலக்கியத்துறையில் எல்லா செயற்பாடுகளிலும் உதவியாக இருக்கின்றவர்களாக முஸ்னி முர்ஷித், கவிதாயினி நதீர வசூக் ஆசிரியை, அமானா ஸஹ்ரான் இளம் எழுத்தாளர், இன்னும் பெயர் குறிப்பிட விரும்பத்தக்க உறவுகள், தோழமைகள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  1. தமிழ்நெஞ்சம் பற்றிய தங்களின் கருத்துகளைச் சொல்லுங்கள்

இலக்கிய உலகில் பல எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும்..

தன்னுடைய வயதுமுதிர்ந்த நிலையிலும் தனது உழைப்பையும் திறமையும் இன்னும் வெளிக்காட்டிக்கொண்டு.. இலக்கிய உலகிற்கு உதவிக்கொண்டு.. பல இளம் ஆளுமைகளுக்கு வாய்ப்புகளையும் வழங்கிக் கொண்டு  பல நூல்கள், சஞ்சிகைகள்  வெளிவரவும் பின்புலமாக இருக்கின்ற மதிப்புக்கும் மரியாதைக்குரிய என் அன்பின்  ஆசான் தமிழ் மண் ஈன்றெடுத்த தமிழ் முத்து அமின் ஆசிரியரின் தலைமையில் சும்மார் ஐம்பத்தி மூன்று வருடங்களாக தமிழ்நெஞ்சம் சஞ்சிகை வாசகர்களாகிய நமக்கு இலக்கிய விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றது என்றால் மிகையாகாது.

நான் இலக்கியத்துறைக்கு வந்த பிற்பாடு என்னுடைய சிந்தனை வரிகளுக்கு முதல் அங்கீகாரம் தந்து சஞ்சிகையில் என் வரிகளை பிரசுரித்து அடையாளப்படுத்தியது தமிழ்நெஞ்சம்.

மாதா மாதம் ஒரு ஆளுமையினை உலகிற்கு அறிமுகப்படுத்தி இலக்கியத்துறைக்கு பெறும் பங்காளியாக தன் பயணத்தை தொடர்ந்தும் பயணித்து கொண்டு இருக்கின்றது தமிழ்நெஞ்சம்.

பிறக்கின்ற புத்தாண்டை வரவேற்க எனக்கான ஒரு அங்கீகாரத்தையும் தந்து இம்மாத ஆளுமை பகுதியில் என்னை அடையாளப்படுத்திய தமிழ்நெஞ்சம் மென்மேலும் சிறப்புற வேண்டும். 

வரிகளை கொட்டித்தீர்த்து உன் புகழ்பாட வேண்டும். நன்றிகள் சொல்ல வார்த்தைகள் தேடி  அலைகிறேன்.

உம் சேவைகளும், உம் எழுத்துக்களும் இப்பாரினில் இன்னும் பரவட்டும்

இந்த வையகமே புகழ் பாடட்டும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »

நேர்காணல்

உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்

 நேர்கண்டவர் :

தமிழ்செம்மல் 
இராம வேல்முருகன் வலங்கைமான்

 உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?

           என் சொந்த ஊர் –

 » Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்  »