நேர்கண்டவர் :

தமிழ்செம்மல் 
இராம வேல்முருகன் வலங்கைமான்

 உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?

           என் சொந்த ஊர் – திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள உத்தமர் கோவில். ஆனால் நான் பிறந்தது ஆழியாரில் . என்  தாய்மாமாவும் பாட்டியும் ஆழியாரில் வசித்ததால் அங்குதான் நான் பிறந்தேன் .

         அப்பா அரசு மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பற்பல பள்ளிகளில்  பணியாற்றி  (கள்ளகம், கட்டளை, புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணப்பாறை, வையம்பட்டி, செட்டிகுளம், பூதலூர்) பின்னர் மாயனூர் – அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் முதல்வராகவும் உசிலம்பட்டியில் மாவட்ட கல்வி அதிகாரியாகவும் திண்டுக்கல் முதன்மைக் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அம்மா படித்தது எட்டாம் வகுப்பு வரையே என்றாலும் மிகவும் திறமைசாலி.

அக்டோபர் 2024 / 116 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.
தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுடன் சரஸ்வதி பாஸ்கரன்

இளமைக்காலக் கல்வி, கல்லூரிக் கல்வி எங்கே கற்றீர்கள்?

 இளமைக்காலக் கல்வி பன்னிரெண்டாம் வகுப்பு வரை பதின்மூன்று பள்ளிகளில்  படித்தேன். அப்பாவிற்குப் பணிமாற்றல் அரசு செய்யும் போதெல்லாம் எங்களையும் அழைத்துக்கொண்டுதான் செல்வார். வையம்பட்டி, திருச்சி, மணப்பாறை, அறந்தாங்கி, ஆலங்குடி திருவானைக்காவல் ஆகிய ஊர்களில் கல்வி பயின்றேன்.

 பின்னர் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பினை வேதியியலில் முடித்தேன். இளங்கலை வேதியியலில் பல்கலைக்கழக அளவில் முதற்மதிப்பெண் பெற்றதால் முதுகலை பட்டப் படிப்பிற்கான பாடப் புத்தகங்களைப் பரிசாகப் பெற்று வந்த போழ்து என் அப்பாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீரைக் கண்டு இன்னும் நாம் சாதிக்க வேண்டும் என்ற முடிவோடு படித்தேன்.  வேதியியலில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கு முன்பே கொடைக்கானல் புனித பீட்டர் மேனிலைப் பள்ளியில் வேதியியல் முதுகலை ஆசிரியராகப் பணிபுரிந்தேன். பின்னர் என் அண்ணன் பணியாற்றிக் கொண்டிருந்த ஸ்ரீ சங்கரா ஆண்கள்  கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் வேதியியல் துறையில் பணியாற்றினேன். பின்னர் திருச்சியில் திருமணத்திற்குப் பிறகு கலைமகள் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினேன்.

அனுராஜ், வெற்றிப்பேரொளி, இராம வேல்முருகன் ஆகியோருடன் கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
கவியரங்கத் தோழமைகளுடன்

மரபுக் கவிதைகள் பிடிக்குமா? புதுக்கவிதைகள் பிடிக்குமா?

 பொதுவில் எனக்கு மரபும் புதுமையும் உண்மையில் பிடிக்கும். மரபா புதுமையா என்றால் நிச்சயமாக மரபிற்கே முன்னுரிமை. மரபுக் கவிதை எழுதக் கற்றவர்கள் எவ்விதமான கவிதையையும் எழுதும் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்தே தவிர மற்றபடி கவிதை எவ்விதமாக இருந்தாலும் மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும். மக்களிடம் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் கருத்து .

தஞ்சையில் நடந்த இலக்கிய விழவொன்றில்...

தமிழ்நெஞ்சம் Flip Book

துணைவருடன் சரஸ்வதி பாஸ்கரன்
இராம் வேல்முருகன், சாவித்திரி கிருட்டினமூர்த்தி ஆகியோருடன் நடுவில் சரஸ்வதி பாஸ்கரன்

உங்களைக் கவர்ந்த கவிஞர்கள் குறித்து

சங்ககால கவிஞர்கள் முதல் இக்கால கவிஞர்கள் வரை நான் சொல்லிக்கொண்டே போகலாம். உலகப்பொதுமறை இயற்றிய திருவள்ளுவர், மூதுரையும் ஆத்திச்சூடியையும் ஆக்கித்தந்த ஒளவையார், கம்பர், இளங்கோ, சீத்தலைச் சாத்தனார், வீரமாமுனிவர், புகழேந்தி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதே போல இடைப்பட்ட காலத்தில் கவிஞர்கள் எனும் போழ்து பாரதியும் பாரதிதாசனையும் சுரதாவையும் கண்ணதாசனையும் கம்பதாசனையும் பட்டுக்கோட்டையையும் வைரமுத்துவையும்  வாலியையும் குறிப்பிட்டே ஆகவேண்டும் .

 தற்காலத்தில் முகநூல் கற்கும் தளமாகவும் கற்பிக்கும் தளமாகவும் மாறிக்கொண்டே வருகிறது. கற்பிக்கும் ஆசான்களாக எளிமையான பதிவுகளில் இலக்கணத்தைக் கற்பிக்கும் அகன் ஐயா, பைந்தமிழ்ச்சோலை பாவலர் ஐயா, பாவலர் பயிலரங்கம். பாட்டரசர் ஐயா, சந்தவசந்தம் இலந்தை இராமசாமி ஐயா, கவிக்கோ ஞானசம்பந்தன் ஐயா, கவியன்பன் காம் ஐயா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தொற்றுக் காலத்தில் மரபின் மீது ஒரு தாக்கம் ஏற்படத்தான் செய்தது. அந்த வகையில் போட்டிப் பதிவுகளிட்டு நிலாமுற்றம் குழுமத்தின் வாயிலாக விடாது கற்பிக்கும் வகையிலே இலக்கணமும் சான்று பாடலும் அதற்கான விளக்கமும் தந்து மிகச்சிறப்பாக கற்பிக்கின்ற பாவலர்மணி. தமிழ்ச்செம்மல் – இராம.வேல்முருகன் சகோதரர், பா எழுத வா என்ற நிகழ்வில் மரபுக் கவிதைகள் எப்படி எழுதவேண்டும் என்பதைக் கற்பிக்கின்ற கவிமாமணி. கோவிந்தராசன் மலையரசன் சகோதரர் இப்படியாக மரபின் புரட்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொன்மணிதாசன் ஐயா, விக்டர் தாஸ் ஐயா என்று அனைவருமே என்னைக் கவர்ந்த கவிஞர்களே.

 நீங்கள் செல்லுமிடமெல்லாம் உடன்வரும் கணவரைப் பற்றி

 என்னைப் பாதுகாக்கவே என் அன்புக் கணவர் எப்போதுமே என்னுடன் வருவார். ஞாயிறு என்றால் மட்டுமே ஒத்துக்கொள்ளச் சொல்வார். அவருக்கும் விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் என்னைக் கூட்டிக்கொண்டு வருவார். என் கணவர் அன்புள்ளமும் பொறுமையும் என்னை மட்டுமே நேசிக்கும் காதலுள்ளமும் நேர்மையும் நியாயமும் கொண்டவர் .

புதுவையில் நடந்த பிரான்சு கம்பன் விழாவில்
வலங்க்கைமான் கல்லூரியில் தஞ்சைத் தமிழ் மன்றம் நடத்திய விழாவில்...

கவியரங்கம், பட்டிமன்றம் எது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?

 கவியரங்கம் பட்டிமன்றம் இரண்டுமே எனக்கு மிகவும் பிடிக்கும். கவிஞர்களை மட்டுமே கருத்தில் கொண்டால் கவியரங்கம் தான் முன்நிற்கிறது . பேச்சாளர்களைக் கருத்தில் கொண்டால் பட்டிமன்றமும் என் முன்னே எட்டிப் பார்க்கிறது என்பதை என்னால் மறுக்கமுடியவில்லை .

 வேதியியல் படித்த நீங்கள் தமிழின் பக்கம் எப்படி வந்தீர்கள் ?

 சிறுவயது முதலே தமிழின் மீது தீராக் காதல் கொண்டவளாகவே இருந்தேன் . அதற்கு என் பள்ளியும், பள்ளி தமிழாசிரியர்களும் உந்துசக்தியாக இருந்து ஊக்கப்படுத்தி பள்ளிகளில் நடக்கும் எல்லாப் போட்டிக்கும் சென்று வென்று வருவேன். தமிழ்தான் படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் அப்பா முதுகலை தமிழ், முதுகலை ஆங்கிலம், முதுகலை வரலாறு படித்தவர். தான் படித்ததை தன் குழந்தைகள் படிக்கவேண்டாம் என்று சொல்லி வேதியியலில் சேர்த்துவிட்டார். கல்வியியலில் எம் . பில் பட்டமும் வழிநடத்துதல் மற்றும் ஆலோசனை தருதல் பாடத்தில் முதுகலையும் பெற்றேன். ஆறாம் வகுப்பில் எழுதிய கவிதை அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. ஒன்பதாம் வகுப்பில் பள்ளி இலக்கிய விழாவில் முதன்முறையாக கவியரங்கத் தலைமையேற்று சிறப்பாக நடத்தியதாக ஆசிரியர்களும் என் தோழமைகளும் பாராட்ட என்னுள் தமிழ் மரபணு வாயிலாக அப்பாவின் குணத்தோடு ஒத்துப் போவதை எண்ணியெண்ணி அம்மாவும் அப்பாவும் மிகவும் மகிழ்ந்தனர். இன்று வேதியியலும் கல்வியியலும் கற்பிப்பதோடு உளவியல் ஆலோசகராகவும் பயணிப்பதோடு  மரபிலக்கணத்தை எனக்குத் தெரிந்ததை எளிமையாக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி முழுக்க முழுக்க கட்டணமில்லாமல் எந்தவிதமான கருவியும் இன்றி என்னுடைய வாய்மொழி மட்டுமே ஆயுதமாக கொண்டு இற்றைநாள் வரை இணையம் வழியாகவும் வலையொலி வழியாகவும் கற்பித்து வருகிறேன். உலகத்தில் ஐந்து கண்டங்களில் இருந்தும் பன்னிரண்டு நாடுகளில் இருந்தும் மரபுத் தமிழை புலம்பெயர்ந்த தமிழர்கள் புலன்பெயரா வண்ணம் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி கற்றுக் கொள்கிறார்கள் என்பதே மாபெரும் சாதனையாக தமிழன்னை எனக்கென்று இட்ட பணியாக நினைத்து செய்து கொண்டிருக்கிறேன் .

 எழுதியுள்ள புத்தகங்கள்  எத்தனை ? சொல்ல முடியுமா ? 

 நிச்சயமாக சொல்ல முடியும். எட்டு பனுவல்களை வெளியிட்டுள்ளேன் .

1) காற்றினில் தெறித்த கனவுகள்

2) மெளனத்தின் விலையென்ன 

3) ஊஞ்சலாடும் உறவுகள்

4)தாழிசையில் தமிழமுதம் –

5)இரட்டைப் பாமாலை –

6 ) முடிவறியாப் பயணம்  – 

7 ) சித்திரைப் பெண்ணே  வருக  –

8) சர்வதேச விருத்தப் பாமணி பட்டயத் தேர்வு – கருத்தும் கணிப்பும் – மாணாக்கரின் பார்வை –  

 எது இலகுவாக வரும் வெண்பா அல்லது விருத்தம்

 என்னைப் பொறுத்தவரை வெண்பா தான் இலகுவாக வரும். விருத்தமும் இலகுதான். இருப்பினும் வெண்பா மீது மோகம் அதிகம்.வெண்பாவில் போட்டி வைத்து பிழைகளைத் திருத்தம் செய்து வெண்பாவாக மாற்றுகிற போழ்து எனக்கான கற்றல் அதிகமாகிறது. பிறந்தநாள் வாழ்த்தோ திருமணநாள் வாழ்த்தோ எழுதும் போழ்து வெண்பாவில்தான் எழுத விரும்புவேன்.

 பெண்களுக்குப் பொதுவாக இலக்கிய உலகில் பயணம் செய்வது சவாலாக இருக்கும். உங்களுக்கு  எது சவாலாக இருந்தது ?

சிறப்பான கேள்வி. உண்மையில் பெண்களுக்குப் பொதுவாக இலக்கிய உலகில் பயணம் செய்வது சவாலாக இருக்கும். அதே சமயத்தில் யாரிடமும் எல்லையறிந்து பெண்கள் பழகுதல் வேண்டும். இலக்கிய உலகில் பயணிக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எத்தனையோ உண்டு. ஆனால் எந்தப் பிரச்சினையையும்  குடும்ப உறவுகளோடு  கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். எனக்கான சவாலாக இருந்தது வேதியியல் கல்வியியல் உளவியல் படித்து விட்டு தமிழ்மொழி மீது காதலை மட்டுமே கொண்டு கவிதைகளை யாக்கின்ற எனக்கு இலண்டன் தமிழ் வானொலி மற்றும் பாமுகம் தொலைக்காட்சியில் மரபிலக்கணம் பயிற்சி தரும் வகுப்பினை இணையம் வழியாக நடத்துவதற்கு என்னருமைச் சகோதரி. சிவதர்சினி ராகவன் என்னிடம் கேட்ட பொழுது உண்மையில் ஐயமாகவே இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் பாமுக அதிபர் . நடாமோகன் அவரின் துணைவியார் வாணிமோகன் அளித்த ஊக்கமும் முதல் வகுப்பினை சவாலாக ஏற்றுக் கொண்டு இணையம் வழியாக மரபிலக்கணப் பயிற்சியை வகுப்பாக நடத்த ஆரம்பித்தேன். அதன் பின்னர் பயிற்சி வகுப்புகளே என் மனத்திற்கும் உடலுக்கும் மருந்தாகி விட்டது என்பதே மறுக்கமுடியா உண்மை. தற்பொழுது பற்பல தளங்களில் கற்பித்தாலும் பாமுகம் தொலைக்காட்சியில் நடத்திய முதல் மரபு வகுப்பே எனக்கான சவாலாக உணர்கிறேன் .

உங்கள் தங்கை, தங்கைமகன் இருவரும் உங்களுடன் பயணிக்கிறார்களே எப்படி இருக்கும்?

என்னுடன் என்னுயிர்த் தங்கை மற்றும் தங்கையின் மகன் இலக்கிய உலகில் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சியாகவேன் இருக்கும். அதிலும் மரபிலக்கணம் கற்றதில் இருவருமே முதல் ஆசானாக என்னைத்தான் எந்த விழாவிலும் சொல்லுவார்கள். அத்தனை குரு பக்தி இருவரிடமும் உண்டு. நான்தான் தமிழை முறையாக படிக்கவில்லை என்றாலும் என்தங்கை தமிழை முறையாக படிக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு எம். ஏ ( தமிழ் ) பி. எட் படித்துவிட்டு முதுகலை தமிழாசிரியராக காஞ்சிபுரத்தில் பணியாற்றுகிறாள். தங்கையின் மகன் எட்டாம் வகுப்பிலேயே வெண்பா எழுதுவதற்கு என்னிடம் கற்றுக்கொண்டு திருக்குறள் அலகிடுதல் அறிந்து கொண்டு வெண்டளைகள் பற்றி அறிந்துகொண்டு உடனடியாக ஒரு வெண்பாவைத் தளை தட்டாமல் எழுதிக் காட்டினான். எதைக் கற்பித்தாலும் கற்பூரம் போல் பிடித்துக் கொள்வான். நாங்கள் அனைவருமே இலக்கிய உலகில் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் இன்றி பயணிக்கிறோம். இதுதான் எங்கள் குடும்பம்.

 இலக்கியங்களில் உங்களைக் கவர்ந்தது எது ?

 கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் என்னைக் கவர்ந்தது . அதே சமயத்தில் புகழேந்தியின் நளவெண்பா நான் வெண்பா எழுத ஊன்றுகோலாக இருந்தது.

இன்று எழுதுவது மிகவும் இலகுவாகி விட்டதா? கடினமாகி விட்டதா ?

முகநூல் மூலாதாரமாக இருப்பதால் அனைவருமே இன்று ஏதோ ஒருவகையில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. கணினி பயன்பாடும் கைபேசிகளும் உலகப்பரப்பினை சுருக்கி விட்டதால் தமிழ்மொழியே தெரியாதவர்கள் கூட இன்று கற்றுக்கொண்டு சிறப்பான கவிஞர்களாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கவிஞரால் ஒரு நாளுக்கு பத்திலிருந்து பதினைந்து குழுமங்களில் போட்டிக்கான கவிதைகளை எழுத முடிகிறது என்று சொன்னால் இன்று எழுதுவது மிகவும் இலகுவாகி விட்டது என்பதுதான் என் கணிப்பு.

எதிர்கால இலக்கு என்ன ?

மரபுக் கவிஞர்களை உருவாக்குவது. அதிலும் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து இணையம் வழியாக என் இறுதிமூச்சு உள்ளவரை  என்னால் இயன்ற அளவிற்கு  மரபுக் கவிஞர்களை உருவாக்குவதே என் இலட்சியமும் இலக்கும்.

இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன ?

தாய்மொழியில் பேசுவதை ஊக்கப்படுத்துங்கள். தமிழ் தெரிந்த இருவர் தமிழிலேயே உரையாடுங்கள். எல்லா மொழிகளையும் அறிந்து கொள்ளுங்கள். ஆனால் தாய்மொழியை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மதுவையும் போதைப் பொருட்களையும் ஒழிக்கப் பாடுபடுங்கள். தள்ளாடும் இந்தியாவை இளைஞர்களே நீங்கள் நினைத்தால் மட்டுமே காக்க முடியும் என்பதை தீர்க்கமாக உணர்ந்து செயற்படுங்கள். நிறைய நல்ல நல்ல புத்தகங்களைப் படியுங்கள் . தமிழில் கட்டுரை கவிதை கதைகள் எழுதுங்கள் . மனம்போன போக்கிலே போகாமல்நல்லதொரு  இலக்கினை வகுத்துக்கொண்டு பயணியுங்கள் 

தமிழ்நெஞ்சம் குறித்து

அயல்நாட்டில் இருந்து கொண்டு அன்னைத் தமிழை வளர்க்கின்ற ஆலமரம். என்னுடைய முதல் நூலினை வடிவமைத்த சிற்பி. என் தங்கை மகனின் தெவிட்டாத பாவிருந்து நூலினை வடிவமைத்த சீராளர். தொடர்ந்து வெண்பா போட்டியினை நடத்துகின்ற  பாக்களின் விளைவிடம். கருவறையின் இருட்டில் வளர்ந்துவரும் சிசுவிற்கு வெளிச்சப் பூக்களைக் காட்டுகின்ற பாச்சோலை. தொடர்ந்து தமிழ்நெஞ்சம் இதழினை வெளியிட்டு வேட்கையோடு தாய்மொழியை மாந்துகின்ற மாமனிதர். எல்லாச் சிறப்பையும் ஒருவரிடம்  காணும் போழ்து இறைவன் இத்தரைக்குத் தந்த தூதுவனாக எண்ணி வாழ்த்திப் போற்றுகின்றேன்.

என்னை மிகச்சிறப்பாக நேர்காணல் செய்த என்னருமைச் சகோதரர். இராம. வேல்முருகனுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் பேரன்பும் என் சார்பாகவும் என் குடும்பத்தோர் சார்பாகவும் என்னருமை மாணாக்கர் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »

நேர்காணல்

தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்

நேர்கண்டவர் :
தமிழ்நெஞ்சம் அமின்

மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?”

ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார்.

 » Read more about: தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்  »

நேர்காணல்

சுவிஸ் நாட்டுத் தமிழச்சி

வணக்கம்

தங்கள் பூர்வீகம் இலங்கை எனத் தெரியும். இலங்கையில் எந்தப் பகுதியில் தங்கள் குடும்பம் இருந்தது?

இலங்கை யாழ்மாவட்டத்தில் உள்ள கோப்பாயில்  வசித்தோம்.

எப்போது புலம்பெயர்ந்தீர்கள்?

 » Read more about: சுவிஸ் நாட்டுத் தமிழச்சி  »