குவளையில் கொஞ்சம்
தமிழை ஊற்றுங்கள் – எந்தன்
தாகம் தீரப் பருக வேண்டும் !
அறுசுவை விருந்தெனத்
தமிழை அள்ளி – பசிதீர
உண்டு நான் திழைக்க வேண்டும் !
செந்தமிழ்க் காற்றே
மூச்சுக் காற்றாய் – எந்தன்
சுவாசப்பையை நிரப்ப வேண்டும் !
பைந்தமிழ் நூற்று
ஆடையை நெய்து – எந்தன்
உள்ளம் பூரிக்க அணிய வேண்டும் !
மகுடமாகச் சங்கத்தமிழை
சிந்தை மகிழ்ந்து – என்
சிரசில் ஏற்றிச் சுமக்க வேண்டும் !
விளை நிலத்து நெல்மணி போல்
முப்பொழுதும் என் நாவில் – தமிழ்
நிறைவாய் விளைய வேண்டும் !
நடக்கின்ற சாலை எல்லாம்
தமிழ் மலர்ந்து மலர்ந்து – மணம்
பரப்பிடல் வேண்டும் !
இருள் குலைத்து ஒளி பரப்பும்
நிலவாகத் தீந்தமிழ் – என்றென்றும்
என் வாழ்வில் ஒளிர வேண்டும் !