சிலவேளைகளில் கற்பனைகள்
உண்மைகளைவிட உன்னதமானவை

நான் வகுப்பறைக்குள் நுழைந்தேன்
பெஞ்சுகளில் பேசாமல் அமர்ந்திருக்கும்
பட்டாம்பூச்சிகள் வணக்கம் சொல்லின

கட்டிப்போட்டு பாடம் நடத்தினால்
பட்டுப்போய்விடுமென யோசித்தேன்
அவற்றின் படபடக்கும் கண்கள்
வானுக்கு அழைத்துப் போகச் சொல்லின

பறக்கத் தொடங்கினோம்
கிறக்கமுற்ற வானம் கைகுலுக்கி வரவேற்றது
வானத்தின் வகுப்பில் கணக்குப் பாடம்
நட்சத்திரங்களை எண்ணச் சொன்னேன்
பறித்துக் கோர்த்து மாலையாக்கி மகிழ்ந்தனர்

விடுதலை பற்றிய பாடத்தில்
கூண்டுக்குள் வேண்டாமென
காற்றிடம் பெருவெளி கேட்டோம்
காற்றும் கடை திறந்து பெருவெளி கொடுத்தது
உண்டு மகிழ்ந்தோம்

நிலவின் சாலையில் நடந்தே வந்தோம்
வடை சுட்ட ஆயா காணாது தவித்தோம்
ஆயா சிறையிலிருக்கிறார் என்றான்
வடை சுடும்போது கேஸ் தீர்ந்துவிட்டதாம்
சிலிண்டரைக் கொடுத்துதவிய
ஆம்ஸ்ட்ராங் உயிர்காற்றின்றி
உயிர்விட்டுவிட்டாராம்…
கற்பனைக்கு எல்லையுண்டா அம்மாவென
அகம் சிரிக்க மகிழ்ந்தனர் ஓ…

சிலவேளைகளில் கற்பனைகள்
உண்மைகளைவிட உன்னதமானவைதான்

காலம் எங்களைக் கரைக்க
வானத்திடத்தில் விடைபெற்று
மண்ணிடத்தில் இறங்கினோம்
பசுந்தளிரை உடுத்திய மலைகளையும்
நீலாடை உடுத்திய கடலையும்
கலாய்த்துக் கொண்டே சென்றோம்

எதிர்கொண்டு வரவேற்றார் மனுநீதிச் சோழன்
விதிர்த்த மாணவனொருவன்
இவருக்குத் தண்டனை தரவேண்டும் என
செருக்கை முகத்தில் கொண்டான்
ஏனாம்… அவரைப் போய்…
தன் மகனாக இருந்தாலும்
அவன் அனுமதியில்லாமல்
தேர்க்காலில் இட்டுக் கொன்றது தவறம்மா
ஓ.. என்ன தண்டனை தரலாம்
ஆயிரமுறை பனிரெண்டாம் வாய்ப்பாட்டை
எழுதிவரச்சொல்லுங்கள்…

சிலவேளைகளில் கற்பனைகள்
உண்மைகளைவிட உன்னதமானவைதான்

மணியொலித்து
மீண்டும் வகுப்பறைக்குள் வந்தோம்
எனக்குள் அவர்களையும்
அவர்களுக்குள் என்னையும்
இருத்திய சென் தருணம் விடைபெற்றது
விடைபெற்றோம் விலகாமல்…

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்

புதுக் கவிதை

வா என்னை ஆரத் தழுவிக் கொள்ள..

கற்றவை ஞாபகமில்லை என்கிறாய் பரவாயில்லை நான் இருக்கிறேன் கண்ணே என்கிறேன்.. இவைகள் மட்டுமா இன்னும் சொல்கிறேன் கேள் என் அன்பு மகளே சில பொழுது தாயாகவும் சில பொழுது தந்தையாகவும் சில பொழுது தோழியாகவும் சில பொழுது தாதியாகவும் உனக்காய் மாறுகிறேன்..