- விழி கொண்டு
மலரும் காதல்
மொழி கொண்டு
நகரும் கவிதை.
- மறந்திடாமல்
சொல்ல நினைத்த
கவிதையொன்று
தொலைந்து போனது.
- இமைகளின்
அனுமதியின்றி
உறக்கம் தழுவுவதில்லை
விழிகளை.
- கிளையைப் பிரிந்த சருகு
சில கணங்கள்
நீந்திப் பழகுகிறது
காற்றில்.
- வீட்டில்
வளர்ப்பு நாய்
எச்சிலிலையில் ஏதுமில்லை
பாவம் தெருநாய்.
- நிறைவுற்றது பயணம்
வழக்கம் போல்
வீதியில் விட்டுவிட்டாய்
பிரியமின்றி தவிக்கிறேன்.
- இருட்டிலிருக்கிறேன்
உற்றுப்பார்
நிழலாய் தெரியலாம்
நான்.
- சுடறேற்ற
பயம் போயிருக்கும்.
அறையினுள் தனியாய்
தவிக்கும் இருட்டுக்கு.
- சிறிது நேரத்தில்
அவளின் வருகை.
அப்போது நான் அவளாக
அவள் நானாவேன்.
- நிரம்பி விட்டாய்
இன்னும் ஊற்றாதே!
வழிய வழிய
மண் தின்னும் உன்னை.
- உன் நினைவுகளைத் தவிர
உன்னுடையதென்று
ஏதுமில்லை
என்னிடத்தில்…!
- அகலில்
நெய்யாய் இருக்கிறேன்
திரியாக வா
காதல் சுடராகி ஒளிர்வோம்.
- கெட்டும்
நெத்தும்
வேண்டாம்
உற்றார் வீடு.
- நீ ஏறுகிறாய்
நான் இறங்குகிறேன்.
இருவரும் சந்திக்குமிடம்
சமதளம்.