மின்னிதழ் I பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும்
பூதலமே எதிர்வரினும்
புகலென்றும் கண்ணணுக்கே! 

கருவில் கலந்தாள் ககன விரிவாள்
திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் – தருவாள்
உருவால் வடிவாள் ஒலியால் இசையாள்
கருத்தாழ்த் தமிழைக் களி!

என,

உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன்.

வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

இனி உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்:

நேர்காணல் தங்க அன்புவல்லி 

ஜூலை 2024 / 104 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.
பாவலர் தென்றல் கவி தமிழ்ச்சிட்டு, தங்க அன்புவல்லி இவர்களுடன் பாவலர் கண்ணதாச முருகன்

கண்ணதாச முருகன் என்ற உங்கள் பெயருக்கான விளக்கம் தாருங்கள்

பாரதியின் துணைவியார் பெயர் செல்லம்மாள். அப்பெயரையே சுமந்த எனது தாய் தீவிரமான முருக பக்தை. குமரி மாவட்டத்தில் உள்ள குமார கோவிலுக்கு மாதம் ஒருமுறை விரதம் இருந்து சிவ மைந்தனாகிய முருகனைச் சென்று வணங்கி வருவதை தான் உடல்நலிவு அடைந்தக் காலம் வரை தொடர்ந்து வழக்கமான கடமையாகப் செய்து வந்தவர் அந்த பக்தியின் காரணமாக உளப்பூர்வமாக விரும்பி எனக்கு வைத்த பெயர் முருகன்.

அதன்படி ஆரம்ப காலங்களில் முருகன் என்றும் குமரி முருகன் என்றும் வலம் வந்த என்னை முதன் முதலாக கவிஞரே என்று சென்னை வானொலியில் இளைய பாரதம் பிரிவின் நிலைய இயக்குநராக இருந்த புலவர் காலம்சென்ற திரு. இளமுருகு அவர்கள் அழைத்ததால் கவிஞர் முருகன் என்று குறித்துக் கொண்டேன். தற்போதைய கண்ணதாச முருகன் என்ற பெயரை பொறிக்க வைத்தவர் பெரியவர் திரு. சந்தான கோபால கிருஷ்ணன் அவர்கள் தான். முகநூலில்  எனது கவிதைகளைக் தொடர்ந்து படித்து வந்த  தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த  ஐயா அவர்கள் தான் உங்கள் பெயரை ஏன் கண்ணதாச முருகன் என்று  வைத்துக் கொள்ளக் கூடாது  என்று வினவினார். முகநூலில் கவிஞர் முருகன் என்று பதிவிட்டு வந்த எனக்குள் அந்த கேள்வி ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. இன்றுவரை கவியரசு அவர்களின் பாடல்களின் மீது தீராத பிரமிப்பும் பற்றுதலும் கொண்டிருக்கும் எனக்கு கண்ணன்  ஊட்டி வைத்திருந்த பக்தி  உணர்வும் சேர்ந்து என்னை அந்த மந்திரக் கேள்விக்குள் இழுத்துச் சென்று பல நாள்கள் யோசிக்க வைத்தது. அதன் பிறகு ஒருநாள் விதித்தபடி தானே எல்லாம் நடக்கும் அல்லாது இக்கேள்வி ஏன் எழ வேண்டும் என்று தீர்மானமாக எனக்குள் எழுந்த முடிவு தான் கண்ணதாச முருகன் என்னும் பெயருக்கானக் காரணம். அப்பெயரைக் கொண்டு எனது எண்ணங்களை வரிசெய்து வைக்கத் தொடங்கினேன். அதன் பிறகு மலேசியக் கவிஞர் தந்தையாக நான் மதிக்கும் கவிக்கோ சிமா இளங்கோவன் அவர்கள்  தென்றல் பத்திரிகையில் அந்த காலத்தில் வெளிவந்த வெண்பாக்களோடு எனது பாடல்களையும்  கவியரசு அவர்களின் பெயரோடு பெயரியல் காரணங்களையும் பலமுறை ஒப்பிட்டு குறிப்பிட்டு சொன்னபோது தான் இப்பெயர் மாற்றம் பொருத்திப் போனதை உணர்ந்தேன். இப்பெயருக்காகப் பெருமையும் அடைந்தேன்.

மொத்தத்தில்

கண்ணதாச தாசன் நான் – தமிழ்
கவிதைகளின் நேசன்நான்
தன்மானம் உள்ளோன் நான் – தமிழ்
தன்மானம் உள்ளோன் நான்!

வெண்பா முதற்கொண்டு அனைத்துப் பாக்களையும் எழுதுகிறீர்கள் நீங்கள் புலவர் பட்டம் பெற்றவரா?

வாய்ப்பு கிடைக்க வில்லை. குடும்பச் சூழல் காரணமாக பலருக்கும் கிட்டிய  பட்டப்படிப்பு கல்லூரிப் படிப்பாக இல்லாது பிற்காலத்தில் பட்ட படிப்பாகத்தான் பெற வைத்திருக்கிறது.

எந்தக்கல்லூரியில்?

கல்லூரிவாசலில் எனது காலடி பட்டது புகுமுக வகுப்புக்காக மட்டுமே.கல்லூரி தற்போது நேசமணி கல்லூரி என்று அறியப்படும் மார்த்தாண்டம் கிறித்தவக் கல்லூரி.

2017 கலைஞர் நினைவேந்தல் நிகழ்வு. முன்னாள் அமைச்சர் திரு. முல்லை வேந்தன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற போது

தங்கள் தொழில், ஊர் முதலிய தன் விவரம் தாருங்கள் ..

கன்னியா குமரி மாவட்டத்தில் உண்ணாமலைக்கடையைச் சார்ந்த முடியாம் பாறை விளை என்ற கிராமத்தில் பிறந்து அங்கேயே உயர்நிலைப்பள்ளி வரைப்படித்து புகுமுக வகுப்பும் படித்த பின் கல் மண் சுமந்து தறிப்பாவுக்கு கஞ்சி எடுத்துத் தந்தும் விவசாயம் சம்பந்தப்பட்ட  சிறு சிறு வேலைகள் செய்து பின்னர் மளிகைக்கடை பாத்திரக்கடை என்று பணிபுரிந்த நான் பின்னாளில் உறவுகளின் வற்புறுத்தலால் விருப்பமின்றி சென்னைக்கு வந்து அங்கே மருந்துக்கடைகளிலும் பணியாற்றினேன். எத்தனை உருண்டாலும் ஒட்டுகிற மண்தானே ஒட்டும். முயற்சித்தும் எவரொருவர்  ஆதரவும் இன்மையால் ஏதும் ஒட்டாமல் முன்னேற்றம் தேடி திருப்பூருக்கு வந்து பனியன் உற்பத்தி தொழிற்சாலைகளில்  வேலை பார்த்துவிட்டு  உழைப்புக்கு மிஞ்சி எதுவும் இல்லை மலையே ஏறினாலும் எல்லோராலும் ஒன்றுபோல் உச்சிவரைச் செல்ல இயலாது என்பதை உணர்ந்தும் ஓடிக் கொண்டே இரு..எங்கும் தேங்கி விடாதே என்ற வாக்கின் அடிப்படையில் பனியன் துணி நூல் விற்பனைப் பிரதிநிதியாகவும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி விட்டு தற்போது நூல் தயாரிக்கும் நிறுவனத்தின் தரகு அடிப்படையிலான விற்பனைப் பணியில்  ஈடுபட்டிருக்கிறேன்.  வாழ்க்கை எங்குதான் அழைத்துச் செல்லுமோ என்று தெரியாமல் இன்னமும் கடலிடைந் துரும்பாக மிதந்து கொண்டிருக்கிறேன்.

தங்கள் குடும்பம் பற்றி?

அப்பா : திரு. பாலைய்யன்
அம்மா : திருமதி. செல்லம்மாள்
இருவரும் இன்று உயிருடன் இல்லை.

தற்போது நான் எனது இணையாளாகிய துணையாள் லைலா இருவர் மட்டுமே இணைந்த குடும்பம் எனது. குடும்பம் பற்றி பெரிதாகச் சொல்லும்படி ஒன்று இல்லை என்றாலும் கூட எனது துணைவியாரை எனது பிரார்த்தனையின் பலனாக தனியான ஆசைகள் எதுவுமற்ற என்னைப் பேணுவதற்காக மட்டுமே பிறப்பெடுத்த கண்ணனின் வருகையாகவே எண்ணுகிறேன்

தாங்கள் வெளியிட்ட / வெளியிவிருக்கும்நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்

நான் இன்னும் தமிழ்த் தாய் விரும்பி ஏற்றுக் கொள்ளும்படியான படைப்புகளை படைக்கவில்லையோ என்னவோ பல தடைகளால் எழுதி வைத்த காற்றே தமிழ் பேசு, கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கும் அகர முதலி விருத்தம், திருமகள் திருமகன் துதி, என்குர(ற)ல்(ள்)அந்தாதி, காலமுள், கோப்பைக் காதலும் காலைத் தேநீரும் எனது விருத்த விருந்து, இப்படிக்கு காதல் ( துளிப்பாக்கள்) மூன்றுயோ முன்னூறு, வெண்பா வழியில் என்பா, அந்தாதிக் கண்ணன் அந்தாதிக்  களிப்பா  (500 பாடல்கள் அடங்கிய அந்தாதி கண்ணன் பக்தி பாடல்கள்) போன்ற தலைப்புகளில் எல்லோரும் விரும்பும் படியாக விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன்  காலத்தின் கட்டளைக்காகக் காத்திருக்கிறேன்.

முகநூல் கவிதைகளில் சமூகக் கொடுமைகளைச் சாடும் போக்கு தீவிரமாகத் தெரிகிறது அதைப் பற்றி கூறுங்கள்.

கவிதைகளில் கொலை வாளினை எடுப்பதும் சமுதாய புரட்சி  மற்றும் சீர்திருத்த வரிகளை வடிப்பதும் சிறப்பு தான்.

இது நல்லதுக்கும் தான். தாழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை கரையேற்றி விடும் அக்கரையிலும் தான்.ஆனால் பேசுகிறவர்களும் எழுதுகிறவர்களும் தங்கள் வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடிப்பவர்களா என்றால் இல்லையென்றே கூற வேண்டும்.எழுதுவதில் இருக்கும் வேகம் அவர்கள் செயலில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.மேலும் பெரும்பாலான பெரும் புலமையுடைய கவிஞர்கள் கூட சமுதாயத்தைச் சாடுகிறேன்  மனிதர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று நடுநிலைப் பார்வையற்ற கண்மூடி  தவறுகள் அடங்கிய ஒரு சார்பு மனப்பான்மை கொண்டதால் அவர்களிடம் கிணற்றில் கிடக்கும் கல் போன்ற அறிவிலித்தனமே மிகுந்திருப்பதைப் பார்க்கிறேன்.இது மிகவும் வருத்தமாக உள்ளது.  எதிர்காலத்தில் இவற்றைப் படிப்பவர்கள் இவைதான் முன்பு நடந்த உண்மைகள்  என்று தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு என்பது எனது கவலையும் கூட.

ஊலழள விழாவில்
ஊலழள விழாவில்

தாங்கள் மிகவும்  விரும்பி கொண்டாடும் கவிஞர் யார்? காரணம் கூறுங்கள்..

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;

என்ற பூங்குன்றன்

“இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி,
இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் இன்றி,
மற்று ஓர் துயர்வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்,
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்,
கால் வண்ணம் இங்குக் கண்டேன்!”

“நதியின் பிழை அன்று;
நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
பயந்து நமைப் புரந்தாள்.
மதியின் பிழை அன்று;
மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை;
நீ இதற்கு என்னை வெகுண்டது?”

“வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
திரு மேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடன் இன்றி, உயிர் இருக்கும்
இடன் நாடி, இழைத்தவாறோ?
கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
மனச் சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி?’

என்று சுவையளித்த கம்பரும்,

 “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு!”

எனத்தொடங்கி

“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்!”

என்று உலகளந்த வள்ளுவரும் அடங்கிய, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்கணக்கு, பதினெண் மேல்கணக்கு என்று பலவுமோடு  காப்பியங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், நீதி நூல்கள் இவற்றொடு அரியது, பெரியது, இனியது போன்ற ஔவையார் பாடல்களும்

“பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்!”.

எனப்பல பாரதியார் பாடல்களும்

“பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே

என்று தனக்காக மட்டுமன்றி  ஊருக்காகவும் அழுது புலம்பிய சித்தர்கள் பாடல்களும் என்று வாழ்வியலைச் சுவையாக நிறைத்து தமிழ்த் தாய்க்கு பல்வேறு அணிகளை தங்கள் பாடல்களால் அணிவித்த புலவர்களின் பெரும் பட்டியல் இருந்தாலும்

 “ஆண்டவன் ஒருநாள் கடைவிரித்தான்
ஆதில் ஆயிரம் ஆயிரம் பொருள்குவித்தான்
அவரவர் நிலைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்
பெண்களே அழகை வாங்க வந்தார்
ஆண்களே ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கிக்கோண்டார்
புலவர்கள் பொய்யை வாங்கிக்கொண்டார்
குருடர்கள் பார்த்திட விழிகேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர்கேட்டார்
ஒருசிலர் மேலுக்கு விலைகேட்டார்
விலை ஏன்ன வென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விவையாய்த் நந்தார்
அன்பை வாங்கிட எவரும் இல்லை!”

என்ற பாடலைப்போல

அனைத்துக் கவிஞர்களையும்  உள்ளடக்கி ஒற்றை ஆளாய் சுவையாய்ச் சாறு பிழிந்து எளிமையாக தந்த கவியரசரே எனது முழு விருப்புக்குரிய கவிஞராக எண்ணுகிறேன்.

 ஆம்! கலையரசி அலையரசி மலையரசி இவர்களோடு கண்ணன் அருள் பெற்ற கண்களையும் கண்ணனையும் நேசித்த கவியரசர் கண்ணதாசனே எனது பெருவிருப்பாவார்.

பொற்கயல் கவிக்குழும விழாவில்
தமிழன்னை தமிழ்ச்சங்கம்

பொதுவாக கவிதைகளின் போக்கில் ஒரு கருத்து பரவலாகத் தெரிகிறது சமூக அவல நிலைச் சாடுதல் அது மட்டும் போதுமா?  தீர்வுகள் வேண்டாமா?

கவிஞனின் பணியைக் கவிஞன் செய்கிறான்.ஆனாலும் தங்கள் வாழ்விலும் சொல்லுக்கேற்றச் செயலைச் செய்ய வேண்டும். அதற்குமேல் அவற்றைக் களைய அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். பொது மக்கள் அதற்கு செவி சாய்த்து நடத்தலும் வேண்டும். அப்படி இருந்தால்தான் தீர்வுகளை நோக்கிப் பயணம் செய்ய முடியும். அதிலும் “ஓடப்பர் எல்லாரும் ஒப்பப்பர்” ஆகிவிட்டால் சமுதாய ஏற்றத்தாழ்வும் ஒழியும் என்று எண்ணுகிறேன்.

நம் கவிதைகளில் வழி நாம் விரும்பும் சீர்திருத்தங்கள் வந்துவிடுமா?

இதற்கு பதில் முந்தய பதிலிலேயே இருக்கிறது

தாங்கள் வெண்பாக்களில் அழுத்தம் திருத்தமான சொல்லாட்சி காணப்படுகிறது சிறப்பு வாழ்த்துகள் .. வெண்பா மீது சிறப்பு கவனம் செலுத்தக்காரணம்?

எனது படைப்பைப் பற்றிய உங்களின் பார்வைக்கு நன்றி. திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் திரு. பொன்னடியான் அவர்களோடு ஒருமுறை உரையாடும்போது  ‘இலக்கணம் கற்றுக் கோண்டு உங்களூக்கு எது வசப்படுமோ அதன்வழியில் கவனம் செலுத்துங்கள்’! என்று கூறினார். அவர் கூற்றின்படி ஏற்கனவே அசை சீர் தெரிந்திருந்ததால் தமிழின் உச்சியாகிய  வெண்பாவில் தான் மரபுக் கவிதையை எழுதி கற்க ஆரம்பித்தேன்.  நான் ஒரு பறவை மாதிரி என்று நினைத்து உச்சியிலேயே அமர விரும்பி அதனில் அமர்ந்தும் விட்டேன்.

வெண்பாவில் இருக்கும் கட்டுப் பாடுகள் சொல்ல வந்ததை சுவாரஸ்யமாக குறிப்பிட்ட எல்லைக்குள் செறிவோடு அசை சீர் தளை அடி  பிறழாது வைக்க கட்டளையிடும் கற்புடை ஆணை இவை பிடித்துப் போனதால்  அதனில் கவனம் செலுத்தினேன்.. செலுத்துகிறேன்..

 உச்சி வசப்பட்டதால் மரத்தின் மற்ற பாகங்களெல்லாம் எளிதில் எட்டுகின்றன.

தங்கள் கலை / கவிப் பயணம் பற்றி

9 வயதில் ஓரங்க நாடகத்தில் ஆரம்பித்து பல நாடகங்கள் நடித்ததும், ஆலையங்களில் பக்தி பாடல்கள் பாடியதும்,  நான் மற்றும் திரு.மணி அவர்களும் இணைந்து பெரியவர்களுக்கு இணையாக மார்கழி பஜனை கோஷ்டி ஆரம்பித்து வீடு வீடாகச் சென்று பல சிறுவர்களை இணைத்துப் பாடி மகிழ்ந்ததும், பல மேடைகளில் திரைப்பாடல்களைப் பாடி பரிசில்கள் பெற்றதும் என்று  பல எனது வாழ்விடை  இருந்தாலும் இது கவிதைத் தளம் என்பதால் அவற்றை பற்றி மட்டும் கூற ஏண்ணுகின்றேன்.

எனக்கு சிறு வயதிலிருந்தே திரை இசைப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதுவும் கவியரசர் பாடல்கள் என்றால் காந்த ஈர்ப்பு. 

12- 13 வயது கால கட்டத்தில் பெரிதாக படிப்பறிவில்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறு கிராமத்துச் சிறுவனுக்கு கவிதை என்பது அன்னியமாகத்தான் இருக்கும். எனக்கும் அப்படியே.ஆனாலும், தீபாவளி வாழ்த்து அட்டையில் நண்பர்களுக்கு கைப்பட ஏதாவது வாழ்ந்தாக எழுதித் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்படி எழுதியதில் முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்ட  வரிகள் எனது நினைவில் இன்னும் இருக்கிறது.

 அந்த வரிகள்

“வந்தது இன்று தீபாவளி
தந்தது வரிசை தீபஒளி
புத்தாடை கட்டி மகிழ்ந்திடுவோம்
பட்டாசாய்ச் சிரிப்பை உதிர்த்திடுவோம்
உறவுகளோடு இணைந்திடுவோம்
இறைவனை வணங்கி அருள்பெறுவோம்!”

இதனைக் கவிதை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் சற்று மகிழ்வைத் தருகிறது..என்னோடு ஒரு  கவிஞனும் பிறந்து இன்று அடையாளம் காட்டப் பட்டிருக்கிறானே என்று.

சிறு வயதிலேயே அம்புலிமாமா கோகுலம் கல்கண்டு ஆனந்த விகடனோடு தினத்தந்தி என்று பத்திரிகை வாசிப்பு. ஊக்குவித்தவர் பாண்டியன் சைக்கிள் கடை வைத்திருந்த மறைந்த திரு. சவுந்திர பாண்டியன் மாமா.

சற்று வளர்ந்தபிறகு  வீட்டுக்கு மிக அருகில் இருந்த காந்தி வாசகச் சாலையில் அனைத்து விதமமான பத்திரிகளுடன் அப்போது பிரபலமாயிருந்த அனைத்து வார மாத சஞ்சிகைகளையும் படிப்பதில் ஆர்வம் ஏற்படுத்திக் கொண்டேன்.

சென்னை வந்த பிறகு எனக்கு கிடைத்த நட்புகளின் மூலமாக பாரதியார் கண்ணதாசன் கம்பராமாயணம் தேவாரம் திருவாசகம் திவ்ய பிரபந்தம் என்று அறிமுகம் ஏற்பட்டது.கூடவே, அது அகநாநூறு புறநானூறு என்று விரிந்த போதுதான் நான் கவிதைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்தேன்.

அதன்காரணமாக, இலக்கணம் அறியாது எதுகை மோனை இல்லாது சங்ககாலப் பாடல் சாயலிலேயே எனது கவிதைகளின் விரல்களை ஊன்றிக் கொண்டு தத்தக்கா பித்தக்கா என்று சிறுவனாய் நடையிட ஆரம்பித்தேன்.

அப்போது,  நான் இருந்த பகுதியில் வசித்த  நண்பர் திரு. நீலவண்ணன் மற்றும் சக்திவேலோடு இணைந்து நாடகங்கள் எழுதி நடித்தபோது ஒருபாடலாவது நாடகத்தில் முக்கியமான இடத்தில் வைக்க வேண்டும் என்று நாடகத்துக்கு இசை அமைத்த நண்பரோடு பாடல் எழுத முயற்சித்தேன்.

பல நூல்களைப் படித்ததாலோ, திரைப்பட பாடல்களை உள்வாங்கியதாலுமோ என்னவோ பாடல் எழுதுவது 19, 20வது வயதிலேயே கைவசமானது. அதன் காரணமாக கவிதை எழுதுவதில் மேலும் ஆர்வம் அதிகமாக.பத்திரிகைக்கு எழுதிப் பார்க்கலாமே என்று பருவம் அணில் நண்டு என்று சில சிற்றிலக்கியங்களுக்கு அப்போதைய புதுக்கவிதை சாயலில் சில கவிதைகளை எழுதி வெற்றியும் பெற்றேன்.

பிறகு மாலை முரசு பத்திரிகையில் சனிக் கிழமைகளில் வரும் முரசுமலர் பகுதிக்கு எழுதிப் பார்க்கலாம் என்று தோன்ற ‘எனது பயணம்’ என்ற தலைப்பிட்டு ஒரு திங்கள்கிழமை ஒரு கவிதையை அன்றைய புதுக் கவிதை சாயலில் எழுதி அனுப்பிவிட்டு சனிக்கிழமைக்காகக் காத்திருந்தேன்.வந்தது சனிக்கிழமை இந்த வாரம் என்ன வந்திருக்கிறது என்று பார்க்கலாம் என்று ஆர்வமுடன் பார்த்தபோது இன்ப அதிர்ச்சி. சற்று நேரம் உண்மையில் நம்ப முடியாமல் உறைந்திருந்தேன். ஆம் எனது பாடல் மாலை மூன்று என்னும் வெகுஜனப் பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது. அதற்கான சன்மானமாக ரூ. 60 அடுத்த. மாதமே வந்து சேர வசப்பட்ட வானத்தை விட்டுவிடக் கூடாது இன்னும் எழுதலாம் என்று என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டு மேலும் பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினேன்.

அவற்றில் சில பத்திரிகைகளில் வெளியானதும் உண்டு. அந்த காலகட்டத்தில்  நான் பணி புரிந்த மருந்துக்கடையின் பங்குதாரர்  திரு.  ஞானப்பிரகாசம் அவர்கள் தான் கிறித்தவக் பாடல் அடங்கிய ஒலி நாடா வெளியிட இருப்பதாகவும் தானே இசை அமைத்து பாடல் எழுதுவதாகவும் சொன்னபோது நான் ஒரு பாடல் எழுதித் தருகிறேன் என்று கிட்டத்தட்ட அவரிடம் கெஞ்சியும் அடம் பிடித்தும்

‘கானாவூரில் கல்யாணத்தை
மகிமையாலே நிறை செய்தீரே’

என்று ஒரு பாடலை எழுதிக் கொடுத்தேன்.

நாலைந்து நாள்களுக்கும் பிறகு கடைக்கு வந்த அவர் அப்பாடலை என்னிடம் பாடிக்காட்டி சரி நன்றாகத்தான் வந்திருக்கிறது. ஆனால் உனது பெயரில் பாடல் வெளிவராது என்ற போது சற்று ஏமாற்றமாக இருந்தாலும் வேறு வழியின்றி சரி என்றதும் இன்னொரு பாடலை எனது மெட்டுக்கு எழுது என்றார்.

‘ஏசுவே ஏசுவே
ஏழை எமக்கு இரங்குவீரே’

என்று ஒரு பாடலையும் அன்றே அங்கேயே எழுதிக் கொடுத்தேன்.மீதிப் பாடல்களையும் அவர் இசைக் கோர்ப்பு முடித்த பிறகு ஒருநாள்  ஒலிநாடா ஒலிப்பதிவு கூடத்துக்கு அழைத்துச் சென்றார். முதன் முதலில் ஒலிப்பதிவு கூடத்தில் அல்ல அல்ல  பனிஇசைத் தோப்புள் நுழைந்தேன்.

அடுத்து அகில இந்திய வானொலி சென்னை  இளைய பாரதம் பிரிவில்  கவிஞர் இளமுருகு அவர்களால் அறிவிக்கப்பட்ட கவிதைப் போட்டியில் பங்கு பெற

‘மனிதர்குலவிடிய வெள்ளி’

என்ற தலைப்பில்

‘உழைப்பின் வெகுமதிகள்
வியர்வை என்னும் சீதனங்கள்’ 

என்ற ஆரம்ப வரிகளைக் கொண்டூ  எழுதி அனுப்ப அக்கவிதை முதல் பரிசு பெற்ற கவிதையாக அறிவிக்கப்பட்டு  10 நிமிட நெடிய கவிதையாக முதன் முதலாக எனது குரலில் படித்து கவிஞர் என்ற அடைமொழியுடன் ரூ 600  சன்மானமும் பெற்றேன். இது  நல்ல  விமர்சனங்களோடு ரசிகர்களால் நல்ல பாராட்டும் பெற்றது.

அடுத்து எனது முதல் கவியரங்கம்
தமிழெனும் அருவியிலே என்ற தலைப்பில்

சென்னை நங்கைநல்லூர் நேரு உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர்  திரு. பெரியண்ணன் அவர்கள் தலைமையில் ராஜ்குமார் சுலோச்சனா மெட்ரிக்குலேசன் பள்ளியில் வாசிக்கப்பெற்று பாராட்டும் மரியாதையும் பெற்றுக் கொடுத்தது

அடுத்து கவிஞர்  திரைப்படப் பாடலாசிரியர் திரு. பொன்னடியான் அவர்களால் நடத்தப் பெற்ற கடற்கரைக் கவியரங்கங்களிலும் பங்கு பெற்று அங்கேயே கவிதை எழுதி அங்கேயே பாடி கவிஞர் அவர்களால் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்ற பாராட்டும் பெற்றிருக்கிறேன்.

அவர் சொன்ன மரபைக் கற்றுக் கொண்டு கவிதை எழுதுங்கள் என்றதை மனதில் வைத்தேன். ஆனால் யாரிடம் கற்றுக் கொள்வது என்று தெரியவில்லை.

அப்போது, நாங்கள் சென்னையில் ‘எவர் யுவர்ஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி 10, 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச பயிற்சி மையம் ஏற்படுத்தி நான் தமிழ்ப் பாடம் எடுத்து வந்த காலத்தில் பாடம் கற்க வந்த 12 ம் வகுப்பு மாணவர் திரு. இராகேசு அவர்களிடமிருந்து  மரபில் கவிதை எழுதுவதற்கான பயிற்சியைச் பெற்றேன்.

ஆம்! மாணவனாக வந்த தமிழன்னையே எனக்கு மரபில் கவிதை எழுத கற்றுத் தந்தாள் என்றே எண்ணுகிறேன். எல்லாவிதமான கவிதைகளையும்.அதன் பிறகு எழுதத் தொடங்கினேன்.

அடுத்து சென்னை மடிப்பாக்கம் மாடர்ன் சீனியர் மெட்ரிக்குலேசன் பள்ளியின் ஆண்டு விழாவுக்காக குறவன் குறத்தி பாடுவதாக…

‘கொல்லிமலை காட்டுக்குள்ள.. தில்லாலங்கடியோவ்’

என்று ஆரம்பித்து

எனக்கு பிடித்த வரிகளாக

“ஊசி பாசி விற்று நாங்க பொழைப்போமுங்க
ஊசிப் போன ஏண்ணத்தோட வாழ மாட்டோங்க”

‘”உடையைப் பார்த்து தள்ளி மட்டும் வைக்காதீங்க
நல்ல மனசோட மனுசனா ஏற்றுக் கொள்ளுங்க”‘

என்று தொடர்ந்த இசைப்பாடல். பள்ளி நிர்வாகத்தினராலும் சிறப்பு விருந்தினராலும் மாணவர்களாலும் பெரும் பாராட்டையும் சிறப்பையும் வாங்கித் தந்தது.

அடுத்து அகில இந்திய வானொலியில் தொழிலாளர் நிகழ்ச்சிக்காக

“மலரட்டும் புதிய சமுதாயம் மலரட்டும்
சோர்வில்லாமல் உழைப்பு தொடரட்டும்..”

என்ற வரிகளோடு,

திரு. அனுராக் வின்சென்ட் இசையமைப்பில் இடம் பெற்ற பாடல் நிலையத்தாராலும் நிகழ்ச்சி அளிப்போராலும் மிகுந்த பாராட்டும் அங்கிகாரமும் பெற்றுத்தந்தது.

குறிப்பாக இப்பாடல் எல்லோராலும் விரும்பப் பட்டு நிலையத் தொழிலாளர் நிகழ்ச்சிகளில் கிட்டத் தட்ட ஓராண்டு காலத்திற்கு முகப்புப் பாடலாகவும் ஒலிபரப்பப் பட்டது.( இசைக்காக அந்தப் பாடல் எழுத எடுத்துக் கொண்ட நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே) அதன்பிறகு தோடர்ந்து வந்த ஆண்டுகளில்

“ஆகாயம் போல் விரிஞ்சு கடலம்மா – எங்க
ஆதாரம் நீதானே மீனம்மா
பொழுதெல்லாம் ஒன்னோட கடலம்மா – எங்க
பொழைப்புக்கும் உயிர் நீதான் எங்கம்மா”

என்ற பாடலும்

“உண்மைகள் என்றும் உறங்காது
உழைப்பவர் கைகளும் ஓயாது
உரிமைகள் மண்ணில் இல்லை என்றால்
உரியவர் என்பதன் பொருள் ஏது “

என்ற பாடலும்

தொடர்ந்து நான்கு பாடல்களும் மெல்லிசைப் பகுதியில் இடம் பெற்றன.

அதன் பிறகு சென்னை தொலைக்காட்சியில் மெல்லிசைப் பிரிவுக்கும்  இரண்டு பாடல்கள் எழுதினேன்.

இடையில் நான் ஆசிரியராக இருந்து பொறுப்பாசிரியராக திரு வரா. கிரிதரன்  அவர்களோடு திரு.அனந்த பத்மநாபன் மற்றும் திருமதி. ஸிரீஜா அவர்களோடு  சுமார் 60 முதல் 70 வாசகர்களைக் கொண்ட உதயம் என்ற முழுக்க முழுக்க கையினால் மட்டுமே எழுதப் பட்ட  மாதாந்திர கையெழுத்து பத்திரிகையை  சுமார் ஒன்றரை ஆண்டுகள் நடத்தினேன். அதில் நான் தொடராக எழுதிய உறவுகள் பற்றிய ஒவ்வொரு கவிதையும் கூட மிகவும் வரவேற்புக்குரியதாக அமைந்தது.

இவற்றிற்கு பிறகு

1996 – 97 ஆம் ஆண்டு  பொங்கல் சிறப்பு தொகுப்பு நிகழ்ச்சியாக சென்னைத் தொலைக் காட்சியில் ‘நாதஸ்வர ஓசையிலே’ என்ற நிகழ்ச்சியை இயக்கி இருக்கிறேன்.

அந்த கால கட்டத்தில் ,

அந்த ஆண்டிலேயே தொலைக்காட்சிக்காக, திரைத்துறையில் கலைஞர் என்ற தொகுப்பின் துவக்கக் கவிதையை எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

அதில் இலட்சிய  நடிகர் எஸ்எஸ்ஆர் அவர்கள் மற்றும் கலைஞரின் படங்களில் பணிபுரிந்த கலைஞர்களும் நடிகர்களும பங்கு பெற எஸ்எஸ்ஆர் அவர்கள் பங்குபெற்ற பகுதிக்கு இணை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறேன்.

இவற்றிற்கு பிறகு காலக் கோளாறோ எனது கோளாறோ  நீண்ட கவிப் பயணத்திற்கு இடைவெளி விழ  2015 க்குப்  பிறகு முகநூலில் வழியாக எனது பயணம் மீண்டும் தொடங்கியது.

அப்போது  எனது நண்பர் ஒருவர் நிறுவனராக இருக்க நான் தலைவராகவும் இணைந்து ஒரு முகநூல் தளத்தைத் தொடங்கினேன். 

அதனைத் தொடர்ந்து வந்த  கால கட்டங்களில் பல  குழுக்களின் கவியரங்கங்களில் பங்குபெற்று வந்தேன். அவற்றில் குறிப்பிடும் படியாக திரு. திருச்சி சிவா எம்.பி மற்றும் பல்லடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. நடராஜன் அவர்கள் பங்குபெற்ற நிகழ்வுகளிலும்  திரு.தென்னவன் ஐயா திருமதி அன்புவல்லி அம்மா கவிக்கோ துரை வசந்தராசன், தமிழ்ச் செம்மல் திரு. கருமலைத் தமிழாளன், பொய்கை பாண்டியன் ஐயா போன்றோர் பங்கு பெற்ற மேடைகளில் கவிதை பாடியதைப் பெருமையாக ஏண்ணுகிறேன். அதே சமயம் எங்கள் குழுமத்தில் நடந்த  ஆண்டுவிழா வரவு செலவு கணக்கில்  நண்பரின் வெளிப்படைத் தன்மை இன்மையைக்  கேட்டதால் அதனை அவர் மனதில் வைத்துக் கொண்டு சிறுகச் சிறுக விலக்கி வைக்கத் தொடங்கியதாலும் என்னால் நடத்தப் பெற்ற ” “மூன்றுயோ” போட்டிக்கும் தடையாக இருந்ததாலும்  முழுமையான ஒதுங்கிக் கொண்டு அப்போதைய கால கட்டத்தில் கிட்டத் தட்ட எல்லாக் குழுக்களும் வசூல் வேட்டையை மனதில் வைத்தே நடந்ததாலும் எந்தக் குழு பிடிமானமும் இல்லாமல் எந்தப் போட்டிக் குழும போட்டிகளிலும்  பங்குபெறாமல் நியாயமாக நடக்கும் ஓர்றிரண்டு குழுக்களின் நிகழ்வுகளில் மட்டும்  பங்கு பெறுவதாக முடிவெடுத்து ஒதுங்கி இருக்கிறேன்

இடையில் முகநூல் குழுமங்களில் போட்டிகளில் பங்கு பெற்று வந்த கவிஞர்களில் பெரும்பாலோர் அசை சீர் கூட அறியாமல் இருப்பதைக் கண்டு வெதும்பி தமிழ் மொழியைக் காப்பாற்றி வைத்திருக்கும்  இலக்கண மரபில் அதன் கற்பாக இருக்கும்   வெண்பா மட்டுமாவது அறிந்து கொண்டு அவர்கள் வழியில் கவிதை எழுதட்டுமே என்பதற்காக போட்டி மனப்பான்மையோடு ஏழுதுவதற்காக புதுமையாக இருக்கட்டுமே என்று ‘மூன்றுயோ’ என்ற கவிவரி வடிவத்தை பல இடையூறுகளுக்கு மத்தியில் அறிமுகப் படுத்தி  சுமார் 40 – 50  கவிஞர்களை  வெண்பா எழுதவைத்ததை தமிழன்னைக்கு செய்த சிறு சேவையாக எண்ணி மகிழ்ந்திருக்கிறேன்.

மேலும், கலைஞர் மரணமடைந்த போது நடந்த புகழஞ்சலி நிகழ்ச்சிகளின் போது தருமபுரி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் உயர்திரு. முல்லை வேந்தன் அவர்கள் முன்னிலையில் பட்டிமன்ற நடுவராக அறியப்பட்ட திரு. மாசிலாமணி அவர்கள்   தலைமையில் கலைஞர் புகழஞ்சலிக கவிதை பாடியிருக்கிறேன்.

இன்னும் நிகழ்வுகள் பல  இருந்தாலும்முக்கியமான சிலவற்றையே இவற்றில் குறிப்பிட்டிருக்கிறேன்.

தாங்கள் மரபில் மட்டுமல்லாது புதுக்கவிதை ஹைக்கூ முதலியவற்றில் முத்திரைப்பதித்தவர் என்பதை அறிவோம் சில கவிதைகளைப் பரிமாறுங்கள்

வெண்பா

ஆமேய்த்தப் புல்லிசையென் ஆன்மாவும் மேய்க்காதா
பூமேய்ந்த பூந்தாளென் பூவுளமும் – நாமேய்த்துக்
கோமேய்ந்த கோகுலனே கோல்மேய்த்த
எ(உ)ன்பாவும் நீமேய்(ந்)த்து வையமேய நீட்டு!

அந்தாதி நேரிசை வெண்பா

விடியும் ஒருநேரம் வெல்வாய் உலகம்..
முடியும் வரையாடு முற்றாய் – மடிதல்..
முடியார்க்குள் மோதும் முனையளவு சேரும்..
படியாகும் பின்னோர்க்காய்ப் போ.! 

போகின்ற போக்கினிலே ஆறது போகலாம்
போகின்ற போக்கறிந்து போதற்சீர் – நாகிழித்து
வேகின்ற வாழ்வெதற்கு வேயாத
கூரையே சாகினுமுன் பின்னோர்க்காய்ச் சா!

இன்னிசை வெண்பா

 எரியும்  நெருப்போ எரியிடம் நோக்கா
திரியும் நதிதன் திரியிடம் நோக்கா
விரிவளி போக்குள வீதியை நோக்கா
விரிமன நோக்கதோ வேறு!

வெண்பாக்கள்

வண்ணப்பா உண்ணப்பா வண்டப்பா அண்டப்பா
கண்டப்பா எண்ணப்பா கண்ணப்பா – ஒண்டப்பா
தொண்டப்பா ஒண்ணப்பா தூண்டப்பா தீண்டப்பா
பண்பப்பா நண்ணப்பா பா!

கொடுப்ப தெனவே குழைந்த மனதை
கெடுக்க மறிக்கும் கிடைகள் – தடுப்பார்
அடுத்தவர் துன்பம் அறியா மிருகம்
சொடுக்கும் சிதைகளின் தீ.!

வேண்டுவர் தேடி விடைதரும் யாவுமிங்கு
தூண்டிடும் ஆசைத் தொகைக்கிரை – யாண்டவர்
தீண்டிடும் யாவிலும் தீததே மிச்சமெனில்
வேண்டுவர்க்கு ஏதிலுள வாழ்வு.?

விருத்தம்

தெரிஞ்சுக்கோ

மண்ணை நம்பி வாழுகின்ற
மனிதன் நாமே ஒத்துக்கோ!
கண்ணில் தெரியும் காட்சியெல்லாம்
கயிற்றின் கண்ணி பாத்துக்கோ!
எண்ணம் எல்லாம் மலையுரிக்கி
எரியும் குழம்போ.. மாறிக்கோ!
அண்ணம் தொட்ட அன்னமெல்லாம்
அருமை உழைப்பு தெரிஞ்சுக்கோ!

கன்ன மிட்டு வருவதெல்லாம்
காதல் தானா கேட்டுக்கோ!
கன்ன மிட்டு கொள்வதென்றால்
கண்ணை மூடி ஓடிக்கோ!
உன்னை என்னை ஒன்றுசேர்த்து
ஊரில் பொதுமை நாட்டிக்கோ!
சன்னல் பார்வை வாழ்க்கையில்லை
சார்ந்த வீதி எண்ணிக்கோ!

காற்ற டிக்கும் திசைமிதக்கும்
காய்ந்த சருகைக் கண்டுக்கோ!
சாற்று கின்றேன் வாழ்வினுண்மை
சருகில் உண்டு படிச்சுக்கோ!
ஆற்றில் எறும்பு விழுந்துவிட்டால்
ஆற்றுக் கென்ன சுமையுண்டோ!
ஆற்ற லுள்ள மனிதனேநீ
ஆறு போல ஒழுகிக்கோ!

 ‘ஙா’ எழுத்தில் தொடங்கும் விருத்தம்

 ஙாவென விளித்திடும் பிஞ்சு
ஙாவெனில் பசியென அஞ்சு
ஙாவிளிக் கமுதளி நன்று
ஙாவது தேனிசை அன்று
ஙாவது மழலையின் கேட்பு
ஙாவொலி பசியதன் கூப்பு
ஙாவொலி அன்னையர்க் கீர்ப்பாம்
ஙாவறல் உயிர்களின் காப்பாம் !

” ஙி’ எழுத்தில் தொடங்கும் விருத்தம்

 ஙியெனவே இளித்தலும் ஏனாம்
ஙியெனவே பழித்தலும் ஏனாம்
ஙியெனுவோர் உறவுறல் ஏனாம்
ஙியெனுவோர் வழிவிழி ஏனாம்
ஙியெனலால் வரும்பொருள் ஏனாம்
ஙியெனலால் பெறும்பெயர் ஏனாம்
ஙியெனலோ அறிவதன் மாறாம்
ஙியெனலும் மனுக்குல ஊறாம்!

” ஞ ” எழுத்தில் தொடங்கும் விருத்தம்

ஞமனென(துலாக்கோல்) நீதிகள் செய்க
ஞப்தியில்(அறிவதில்) உலகினை ஆள்க
ஞமனையும்(யமனையும்) இளகிடச் செய்க
ஞலவலின் (மின்மினி) எரிதலும் ஓய்க
ஞமலியின்( நாயின்) உருட்டலும் தீர்க
ஞயமுடன்(நயமுடன்)புலமது வாழ்க
ஞமனியின்(துலாக்கோல்) சார்புகள் வீழ்க
ஞலருதல்(முழங்குதல்) வெற்றியில் சேர்க!

 துளிப் பா அந்தாதி

எட்டிப் பார்க்கிறேன்
முகம் தெரியவில்லை
பழையக் கிணறு.!!!

கிணற்றிலிருந்து இரவில்
மெதுவாக மேலேறி வருகிறது
வாளியில் நிலவு.!!!

நிலவு நிறைந்து இருக்கிறது
இரசிக்க முடியவில்லை
மழை நிரப்பியக் குடிசை.!!! 

துளிப்பா

நொறுங்கியக் கண்ணாடி…
சிதறிப் போனது…
வானம்.!!!

சமகாலக்கவிஞர்களில் தாங்கள் மதித்துப் போற்றும் கவிஞர்கள் யார் யார்?

இந்த கேள்விக்கு நிறைய பேர்  வரிசை கட்டி நின்றாலும் ஒரு சிவரைக் குறிப்பிடுகிறேன்.

  1. வாழும் ஔவை என்று போற்றப்படும் திருமதி. அன்புவல்லி அம்மா
  2. நிகழ்காலக் கம்பர் கவிக்கோ. விக்டர்தாஸ்
  3. இலக்கணம் பிறழா மலைக் கோட்டைக் கவி. அதன் ஐயா
  4. படிவங்களால் பாடல் சொல்லும் கவிக்கோ துரை வசந்தராசன்
  5. சமுதாயப் பாடல்களை அள்ளித் தரும். கவிஞர். வெற்றிப் பேரொளி
  6. சமகாலப் புலவர்களைப் புகழ்ந்து பாட்டெழுதி முகநூல் வழியாக இலக்கண வகுப்பு நடத்தும் தமிழ்ச் செம்மல். இராம. வேல்முருகன்
  7. சொக்கவைக்கும் சுவையால் தமிழ் சொக்கட்டான் ஆடும் கவி வித்தகர் திரு.பொற்கைப் பாண்டியன் மற்றும் தனித் தமிழ்ச் செம்மல் திரு. பாலு கோவிந்தராஜன் மலையரசன்
  8.  ஓவியக் கவி காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற கவிதாயினி  திருமதி அருணா செல்வம்
  1. புதுக்கவி வரிசையில் புதுமை புகுத்தி மலைக்க வைத்த மறைந்த பேராசிரியை கவிதாயினி.கிறிஸ்டினா சகோதரி
  2. 250 புத்தகங்களுக்கு மேல் எழுதி வியப்பூட்ட வைத்த பேராசிரியை. கவிதாயினி. முனைவர். மரிய தெரசா
  3. அனைத்து வகைப் பாக்ளையும் மரபு மாறாமல் தனித்துவத்தோடு எழுதுவதோடு மட்டுமல்லாது தனது பள்ளி மாணாக்கர்களை வெண்பாவிலேயே கேள்வி பதில் எழுப்பும் வண்ணம் செதுக்கிக் கொண்டிருக்கும் பாவலர் இமானுவேல்
  4. மலேசிய மண்ணின் பழம்பெரும் கவிவித்தகர். கவிக்கோ. சிமா இளங்கோ
  5. கவிஞர்களுக்கென்று நேரம் ஒதுக்கி இங்குள்ள பல பெருஙகவிஞர்களுக்கும் ஐயமற இலக்கணப் பயிற்சியளித்து கிட்டத்தட்ட 50 பேரை ஆளுக்கு 500, 1000 என்று விருத்தம் எழுதவைத்த பிரான்ஸ் வாழ் கவிமணி பாட்டரசர்

இதற்கு மேல் கவிச்சிங்கம். சித்தார்த் பாண்டியன் கவிஞர். மன்னை மணிமாறன், கவிஞர். பொன்மணி தாசன் மணிமேகலை ராஜன் இப்படி 100 பேருக்கு மேல் அடுக்கிக் கொண்டே போகலாம்.

வளரும் கவிஞர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?

உங்கள் கவிதைகள் சிறப்பாக இருக்க நிறைய படியுங்கள். ஆழ்ந்து படியுங்கள் அதுவும் கம்பனை, இளங்கோவை, மணிமேகலையை வள்ளுவரை, ஔவையை,  நக்கீரரை, ஒட்டக் கூத்தரை,  புகழேந்தியாரை, இரட்டைப் புலவர்களை, காளமேகத்தை,ஆழ்வார்களை, நாயன்மார்களை0 குமரகுருபரரை முத்தொள்ளாயிரம் போன்ற சங்க இலக்கிய நூல்களை  சித்தர்களை,  பாரதியாரை, கண்ணதாசனை, மு. மேத்தாவை  வலம்புரி ஜானை, வாலியை, நா. முத்துக் குமாரை, வைரமுத்துவை என்று நிறைய படியுங்கள். தேடித் தேடிப் படியுங்கள். ஆம்! கற்க கற்கத்தான் கற்பனை வரும். எழுத எழுதத் தான் கவிதையும் வரும். அதற்காக உங்கள் பார்வையில் அகலம் செய்யுங்கள் சுற்றுப்புறத்துக்கு

காது கொடுங்கள். அன்னையாய் உருகுங்கள். தந்தையாய் கண்டிப்பு கொள்ளுங்கள்.

படைத் தலைவனாய் வீரியம் கொள்ளுங்கள்.அரசனாய் ஆண்டியாய் என்று எண்ணிப் பழகுங்கள்.  மண்ணிலிருந்து நீரூற்று புறப்படுவதைப் போல ஆகாயம் பறக்கும் பறவையின் பார்வைபோல  எல்லாவற்றையும் சுத்தப்படுத்தும் நெருப்பு போல  பழைமையிலிருந்து புதிதாகப் பிறந்ததைப் போல  யோசியுங்கள். உங்களுக்கு என்று ஒரு பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தைப் படிப்பது போல் தமிழ் இலக்கணத்தை

ஐயுற கற்றுத் தெளியுங்கள். நிறைய எழுதிப் பழகுங்கள். அதுதான் உங்கள் உயரத்தை நிர்ணயிக்கும்.உங்கள் படைப்புகளை வெளியிடுமுன் உங்களுக்குள் அவற்றை சலவை செய்யுங்கள் தாய் தந்தையை வணங்குங்கள். தெய்வத்திடம் உருகி நிற்பதைக் போல தமிழ்த் தாயிடமும் உருகி நில்லுங்கள். அப்படி இருந்தால் உங்கள் எண்ணம் போல் உங்கள் ஆர்வம் போல நீங்களும் உங்கள் படைப்புகளால் வெள்ளையடிக்கப்பட்ட கட்டிடம் போல பளிச்சிடுவீர்கள். கோபுரம் போல் எழுந்து நிற்பீர்கள். வேர்களை ஊன்றுங்கள். கிளைகளில் கனியாகுங்கள். விதையாகுங்கள். உங்கள் எதிர்கால வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகுங்கள். வெற்றிக்கு உழையுங்கள் பணியுங்கள். வென்ற பின் கர்வம் தொலையுங்கள்.உங்கள் உச்சத்தை நீங்களே தீர்மானித்து ஆட்சிபுரிய என் இனிய வாழ்த்து.

முகநூல் பற்றி…

முகநூலைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நவீன கையடக்க உலகத்தில் நன்மை தீமை இரண்டும் கொட்டிக் கிடக்கும்  கிடங்கு இது.. இங்கிருந்து அள்ளி எடுக்க நினைப்பவர்கள் அல்லது தூக்கி எறிய நினைப்பவர்கள் தங்கள் மனதையே எடுக்கிறார்கள் அல்லது வீசுகிறார்கள். அதனால் கவனமாக இருக்க வேண்டிய இடம் முகநூல்.ஆனால் இதுவே உலகமில்லை. இங்கே கலகமே நிறைந்து இருக்கும்.அவரவர்  எல்லை எது.என்பதில் தெளிவு கொள்ள வேண்டும். இதில் போலிகள் நிறைய உண்டு. அதனால் கவனமாக அசலை மட்டுமே அசலாக்க வேண்டும்.இல்லையேல் நிறைய வட்டி கட்ட வேண்டி வரும்.ஒவ்வொருவரும் தங்கள் குடும்பம் உறவுகள் நேரில் தோன்றும் நட்புகள் இவர்களுக்கு முதலிடம் தந்து இந்தக் கிடங்கில் தேர்ந்தேடுத்த முத்துக்களை மட்டுமே அணிகலன் ஆக்கிக் கோள்ள வேண்டியது அவசியம் என்பதே எனது. மொத்தத்தில் கூட்ட வேண்டியதைக் கூட்டி கழிக்க வேண்டியதைக் கழித்தால் முகநூல் நமக்குக் கிடைத்த காலத்தின் விஞ்ஞானக் கொடை என்றே கருதுகிறேன். கூடவே நிறைய கவிஞர்களையும் கவிதாயினிகளையும் தமிழுக்கு தந்திருக்கிறது.

 தமிழ்நெஞ்சம் பற்றி தங்கள் கருத்து?

முன்னணிக் கவிஞர்களின் கவிதைத் தோரணங்களால் அலங்கரிக்கப் படும் அழகிய ஆலையம். நவீன உலகில் தமிழுக்கு மணியாரமிடும் மின்னணு அவதாரம். தமிழ் நாட்டை விட்டு வெளிநாட்டில் இருந்தாலும் பூரண தமிழ் பற்றால்  நடத்தும் பாவலர் திரு. அமின் ஐயாவையும் அவர்களின் தமிழ்நெஞ்சத்தையும் பாராட்டி வணங்கி தமிழ்நெஞ்சம்  நீடு வளர்ந்து தமிழ் உள்ளங்களில் தமிழ் உணர்வை உயர்த்திச் சிறக்க வாழ்த்துகிறேன்.

நெஞ்சார்ந்த நன்றி அம்மா. தமிழால் மூத்த தங்களோடு எனது வாழ்வின் மற்றும் எனது  தமிழ்ப் புறத்தின் பகுதியையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கும் இதுவரைஅவற்றைப் பொறுமையாக கேட்டுப் பதிந்தமைக்கும்.

இறுதியாக என் தமிழ் சமூகத்துக்கு என் ஆதங்கக் கேள்வியோடு இந்த நேர்காணலை தங்களை வணங்கி முடிக்கிறேன்

ஊருக்குள் ஆயிரமாய் ஊர்வணங்கும் கோவிலுண்டு
வேருரைக்கும் தெய்வமுண்டு வேண்டலுண்டு  பேருரைக்கும்
பூசையுண்டு தேருமுண்டு பொங்கலுண்டு ஆங்கெலாம்
ஆசையுடன் மூத்தவெம் அன்னைத் தமிழ்த்தாய்க்கும்
பூசைவைத்து தாள்வணங்கிப் பூரிக்கும் நாளென்றோ
தேசையுடை எந்தமிழா செப்பு!

நன்றி. வணக்கம்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »

நேர்காணல்

உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்

 நேர்கண்டவர் :

தமிழ்செம்மல் 
இராம வேல்முருகன் வலங்கைமான்

 உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?

           என் சொந்த ஊர் –

 » Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்  »