மின்னிதழ் நேர்காணல் I கவிச்சிங்கம் தங்கபாண்டியன்

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ…

மார்ச் 2024 / 116 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.
  • தங்கள் இயற்பெயர் என்ன? ஏன் சித்தார்த் பாண்டியன் என்று எழுதுகிறீர்கள்?

என் இயற்பெயர் பாண்டியன்தான். ஆனால் தங்கப்பாண்டியன். சித்தார்த் பாண்டியன் என்பது என் புனைப்பெயர். இலக்கிய உலகுக்குள் காலடி எடுத்து வைத்த தருணத்தில் தங்கப்பாண்டியன் என்னும் பெயரில் எழுதுவதை விட வேறு பெயர்களில் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் ஆலோசனை கூறினார்கள். ஆனாலும் நான் இயற்பெயரை உதறி விட விருப்பமில்லாது இருந்தேன். ஆகவே பாண்டியன் என்னும் அடையாளத்தை அப்படியே வைத்துக் கொண்டு தங்கத்தை மட்டும் கொஞ்சம் மாற்றம் செய்யலாம் என்று எண்ணினேன். சரி தங்கத்திற்கு மாற்றாக அவ்விடத்தில் எதை வைக்கலாம் என்று சிந்தித்தேன். அப்போது எனக்கு மிகவும் பிடித்த புரட்சியாளராகிய புத்தபெருமான் அகக் கண்களில் தோன்றினார். யானும் தங்கம் இருக்கும் இடத்தில் தங்கத்தை விட விலைமதிப்பற்ற  புத்தரை வைப்பதே ஏற்றமுடையதாக இருக்கும் என்று முடிவு செய்து அவரின் பெயரை வைத்தேன். அதிலும் அவரது இளமைக்கால பெயராகிய சித்தார்த்தன் என்பதே என்னை ஈர்த்தது. ஆகவே சித்தார்த் பாண்டியன் என்று புனைந்து கொண்டேன்.

தமிழ்நாட்டரசின் தூய தமிழ்ப் பற்றாளர் - 2022 விருது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கும் பட்டம்
வலங்கைமானில் நடைபெற்ற வள்ளலார். 200 கவியரங்கில் கவிச்சிகரம் அமுதன், தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன், கவி வித்தகர் பொற்கைப் பாண்டியன் ஆகியோருடன்
  • தங்கள்சொந்தஊர்எது? எங்கேஉள்ளது?

எனது சொந்த ஊர்  சங்கம் கண்டு தமிழ் வளர்த்த மதுரை தான். மதுரையின் புறநகர்ப் பகுதியான சோழவந்தான் அருகே திருமால்நத்தம் என்ற கிராமத்தில் தற்போது வசித்து வருகிறேன். இயற்கை எழில் சூழ்ந்த மருதநிலப் பகுதியை உள்ளடக்கிய பகுதி இது என்பதும் மகாத்மா காந்தியடிகள் மதுரை வந்த போது எங்கள் ஊர் வழியே நடந்து சென்று இப்போதைய காந்திகிராமத்தை அடைந்தபோது தான் தனது பழைய ஆடைமுறையை விடுத்து இப்போதைய எளிய கதராடை உடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி கிராமத்தில் இவ்வாண்டு (2024) தமிழ் மதுரை அறக்கட்டளை தமிழர் திருநாளை ஒட்டிக் கொண்டடிய "பண்பாட்டுப் பொங்கல் விழா " வில் ஒரு காட்சி
  • தங்கள் தந்தையார் பெயரால் விருது வழங்குவதன் நோக்கம் என்ன?

என்னை இவ்வுலகுக்கு ஈந்த இறைவன் என்பதையும் தாண்டி என் தமிழ் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் முதற் காரணமாகவும் முக்கியக் காரணமாகவும் இருந்தது என் தந்தையின் ஊக்கம்தான். அவர் அதிகம் படிக்காதவர். உழவுப் பணி செய்து வந்தவர். உழவையும் வயலையும்  அவர் நேசித்த அளவு வேறு எவரும் நேசித்து நான் பார்த்ததில்லை. சிறு வயதில் நான் எழுதும் ஒரு சில கவிதைகள், கதைகளை அவருக்குப் படித்துக் காண்பிப்பேன். அதை மிகவும் ஈடுபாட்டுடன் கேட்பது மட்டுமின்றி அவருக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லிக் கேட்பார். முதன்முதலாக நான் ஆறாம் வகுப்பு பயிலும் போது மாநில அளவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற போது அவர் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதைப் பலரிடம் கூறி பெருமை கொண்டார். பின் கல்லூரி காலம் வரை எனது படைப்புத் திறனை வளர்ப்பதில் பெரிதும் முனைப்புக் காட்டினார். நான் ஆறாம் வகுப்புகளில் படிக்கும் போதே தினமலர் வெளியிட்ட சிறுவர் மலர், மற்றும் பூந்தளிர் போன்ற இதழ்களை வீட்டிலேயே வந்து தருவதற்கு பணம் கட்டி ஏற்பாடு செய்தார். இப்படியெல்லாம் செய்த அவருக்கு யான் இப்போது தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அறியப்பட்ட ஒரு கவிஞராக இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் பேறு வாய்க்கவில்லை. ஏனெனில் கடந்த 2016ல் என் முதல் நூல் வெளியாவதற்கு முன்பே அவருக்கு மறதி குறைபாடு வந்து விட்டது. கடந்த 2021 ல் அவர் காலமான போது ஏறத்தாழ என்னைத் தவிர மற்றவர்களை முழுவதுமாக மறந்து விட்டார். இப்படியாக பல இடர்ப்பாடுகளுக்கிடையில் என்னை வளர்த்து ஆளாக்கி என் தமிழையும் வளர்த்து உருவாக்கியவருக்குச் செய்யும் ஒரு காணிக்கையாக அவர் பெயரில் சிறந்த ஆளுமைக்குக்கு விருது வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இது தந்தையின் மீது மரியாதை கொள்ள வேண்டிய எடுத்துக்காட்டாகவும் வருங்காலச் சந்ததிகளுக்கு அமையும் என்பதால் இதை முன்னெடுத்து வருகிறேன். ஒரு கூடுதல் செய்தி என்னவென்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த பட்டிக்காடா பட்டணமா என்ற திரைப்படத்தில் எனது தந்தை ஒரு காட்சியில் தோன்றியுள்ளார். இது அவருக்கு கலைத்துறையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது என்பதற்கு ஒரு சான்றாகும். மேலும் ஒவ்வொருவரும் தம் பெற்றோருக்கு இது போல் மரியாதை செய்ய வேண்டும் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.

2023 ல் திருச்சியில் உலகத் தமிழ் கவிஞர் பேரவை வழங்கிய கலைஞர் விருதைப் பெற்ற நிகழ்வில் .
  • தமிழ் மதுரை அறக்கட்டளையின் முதன்மை நோக்கங்கள் யாவை?

தமிழ் மதுரை அறக்கட்டளை தமிழ் மொழியின் வளர்ச்சியையும் அதன் மூலம் தமிழர்களின் பண்பாட்டு கலை மற்றும் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பது மற்றும் மீட்டுருவாக்கம் செய்வது, தமிழ்க் கல்வி மற்றும் தமிழ் வழியே பிற மொழி இலக்கியங்களை கற்பிப்பது மற்றும் கற்றுக்கொள்ளச் செய்வது, தமிழை உலகளாவிய அளவில் தமிழரல்லாத  அனைத்து மொழி பேசுவோரும் கற்கச் செய்வது, நாட்டுப்புறக் கலைகளுக்கு புத்துயிர் கொடுப்பது, படைப்பாளர்களை , இலக்கியச் செயல்பாட்டாளர்களை கண்டறிந்து அவர்தம் பணியைச் சிறப்பித்து விருதுகள் வழங்குவது போன்ற அடிப்படை நோக்கங்களை கொண்டது. இதற்காக தமிழ் மதுரை அறக்கட்டளை தனக்கென ஒரு “சங்கப்பலகை”யைத் தோற்றுவித்துள்ளது. இதன் மூலமாக மேற்கண்ட நோக்கங்களை சீராக நிறைவேற்றி வருகிறது.

கவி வித்தகர் பொற்கைப் பாண்டியன் அவர்களுடன்
வாழும் அவ்வை என அன்போடு அழைக்கப்படும் பாவலர் அன்புவள்ளி தங்கவேலன் அம்மையார் அவர்களுடன்
திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் விக்டர்தாஸ் அவர்களுடன்
  • இதுவரை தங்கள் பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் எத்தனை?

தமிழ் மதுரை அறக்கட்டளை தனது சங்கப்பலகையின் மூலமாக கண்டறியும் சிறந்த படைப்புகளையும், பொருளாதார அடிப்படையில் பின் தங்கியுள்ள படைப்பாளர்களின் படைப்புகளையும், மாணவர்களின் படைப்புகளையும் வெளிக்கொணரும் நோக்கில் 2021ம் ஆண்டு முதல் தமிழ் மதுரை பதிப்பகத்தை தோற்றுவித்து செயல்படுத்தி வருகிறது. 2021 முதல் 2023 வரை ஏறத்தாழ 30 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 5 நூல்கள் வெளியிடுவதற்கான  அச்சுப் பணிகள் நடந்து வருகிறது. வருடந்தோறும் குறைந்தது ஒரு மாணவரையாவது படைப்பாளியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்கி வரும் நிலையில் இதுவரை 6 மாணவப் படைப்பாளர்களின் நூல்களை வெளியிட்டுள்ளது. தமிழ் மதுரைப் பதிப்பகத்தின் செவ்விய செயல்பாட்டினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை 2023 க்கான கருப்பு கருணா சிறந்த செயல்பாட்டாளர் வருது என்னும் விருதை நமது பதிப்பகத்திற்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது. அத்துடன் அதே அமைப்பு ஆண்டு தோறும் வழங்கும் அசோகமித்ரன் படைப்பூக்க விருது மற்றும் தஞ்சை பிரகாஷ் வளரும் படைப்பாளர் விருது ஒவ்வான்றிலும் தலா இருவருக்கு தமிழ் மதுரை பதிப்பகம் வெளியிட்ட நூல்களுக்காக அந்தந்த நூலாசிரியர்களுக்கு வழங்கியுள்ளது கூடுதல் பெருமையாகும்.

தமிழ்நாட்டரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்றமையை ஒட்டி மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் மதுரை மாநகரத் துணை மேயர் உள்ளிட்ட ஆளுமைகள் கவிஞர்கள் நினைவுப் பரிசு வழங்கும் காட்சி
தொன்மைமிகு மணப்பாறை தமிழ் மன்றம் வழங்கிய இலக்கியக் குரிசில் விருது பெறும்போது
  • அதிரல்குறித்துஒருசிலவார்த்தைகள்.

சங்கப் பலகையின் மூலம் கவியரங்கம் , பட்டிமன்றம், உரையரங்கம் போன்ற நிகழ்வுகள் அரங்கங்களிலும், மெய்நிகர் நிகழ்வாக இணைய வழியிலும் ஏராளமாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் அதை மக்கள் அனைவருக்கும் கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஒரு ஊடகம் இருப்பின் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினோம். இதனால் பல புதிய படைப்பாளர்களுக்கு எழுத வேண்டும் என்ற எண்ணம் உண்டாகி புதிய படைப்புகள் தோன்றுவதற்கு வழிவகை உண்டாகும். இக்காரணத்திற்காக “அதிரல்” என்ற திங்கள் இதழை தொடங்கினோம். இது கடந்த 2023 ஏப்ரலில் துவங்கப்பட்டது. இலக்கிய விரும்பிகள், வாசகர்கள் மத்தியில் அதிரல் நல்ல வரவேற்பை பெற்று வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. நூல் மற்றும் உள்ளடக்கம் இரண்டிலும் தரம் குறையாமல் அதே நேரத்தில் விலை குறைவாக வழங்குவதே இதன் நோக்கமாக வைத்துள்ளோம். இதனால் இதழை வெளிக்கொணர்வதில் சில இடர்ப்பாடுகளைச் சந்தித்து வருகிறோம் என்றாலும் விட்டு விடாமல் வெற்றியைத் தொடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

  • ஏன்கல்லூரிமாணவர்பக்கம்செல்கிறீர்கள்?

கல்லூரி மாணவர்கள் என்பவர்கள் வெறும் கல்வி கற்கும் பருவத்தில் மட்டும் உள்ளவர்கள் அல்ல. அவர்கள் விரைவில் இந்நாட்டின் பல நிலைகளிலும் பொறுப்பை ஏற்கப் போகிறவர்கள். அது குடும்பத் தலைவர், தலைவிகளாக , பல் துறை வல்லுனர்களாக, நாட்டின் தலைமைகளாக என இந்நாட்டை வழிநடத்தப் போகும் சிறப்புக்குரிய வர்கள். தலைமைப் பொறுப்புகளில் அமரப்போகிறவர்கள். அவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் தாய் மொழிப் பற்றும், தமிழ் மொழி வன்மையும் ஊட்டப்படுகிறதா என்றால் அது தேவையான அளவிற்கு இல்லை என்பதே கள ஆய்வின் வழி உண்மையை உணர்ந்தவர்களின் பதிலாக இருக்கும். இப்போதுள்ள பல மாணவர்களுக்கு தமிழை சரியான உச்சரிப்புடன் வாசிக்கக் கூடத் தெரியவில்லை. ஒற்றுப் பிழையின்றி எழுதத் தெரியவில்லை. தமிழர்களின் திணை வழி மரபு, வாழ்வியல், பண்பாடு குறித்து சரியான புரிதல் இல்லை. இவைளெல்லாம் களையப்பட்டாலன்றி இந்நாட்டின் மேன்மையும் வளர்ச்சியும் பற்றிய கனவுகள் ஒரு போதும் வெற்றி பெறப் போவதில்லை. ஆகவே வருங்காலச் சமுதாயத்தின் ஒற்றுமையைப் பேணுவதன் பெருஞ்செயலை நாம் செய்ய வேண்டி உள்ளது. அதற்கு கல்லூரி மாணவர்களிடம் சென்றே ஆக வேண்டும். அவர்களின் மனதில் தமிழ் என்ற உணர்வு நின்றே ஆகவேண்டும். அதை அவர்களுக்குப் புரியச் செய்யும் பெரும்பணியில் வென்றே ஆக வேண்டும்.

  • இக்காலமாணவர்களிடம் தமிழ்மீது ஆர்வம்உள்ளதா?

நிச்சயமாக உள்ளது. ஆனால் அதை தம் உயிராகக் காக்க வேண்டிய முக்கியத்துவத்தை அவர்களுக்குப் புரிய வைக்கத் தான் ஆட்கள் இல்லை. ஆர்வம் இருப்பதை விட அவசியத்தை உணர்த்த வேண்டும். இதுவே இன்றைய தேவை. தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல, நமது அடையாளம் என்பதையும் நம் அனைவரின் தொப்புள் கொடி இணைப்பு என்பதையும் உணர்த்த வேண்டும். அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை உணர்வாக மாற்ற வேண்டியது நமது கடமையாகும்.

தேனியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கண்காட்சியைத் தொடங்கி வைத்த என் கையால் நூலை வாங்கிக் கொண்ட வாசகர்களில் ஒருவர்
  • கவிச்சித்தர்வீரபாண்டியத்தென்னவர்பற்றி..

கவிச்சித்தர் என்று தாங்களே சொல்கிறீர்கள் அல்லவா அது தான் ஐயா தென்னவனார் அவர்கள். அவர்களுடன் எனக்கு பல்லாண்டு பழக்கமெல்லாம் கிடையாது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயணித்துள்ளேன். 2018 ல் எனது வெளிச்சத்தில் ஒரு கனவு என்ற நூல் வெளியிட்ட நேரத்தில் கவிஞர் இரா. இரவி அவர்கள் மூலமாக ஐயாவிடம் அறிமுகமானேன். எனது கல்லூரி காலத்திற்கு பிறகு இலக்கிய உலகில் நான் மீண்டும் நடை போடத் தொடங்கியது அது முதல் தான். அவருடைய கவியரங்கமே பொது வெளியில் எனது முதல் கவியரங்கம். நான் கவிதை வழங்கும் போதே எங்கே மீண்டும் சொல்லுங்கள் என்று இரண்டு மூன்று அடிகளைத் திரும்பச் சொல்லும்படி பணித்து கேட்டுச் சுவைத்து மகிழ்ந்தார். அப்போதே அங்கே இருந்த  கவிஞர்கள் மத்தியில் நமது கவிஞர் பேரவைக்கு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு சிறப்பான கவிஞர் கிடைத்துள்ளார் என்று கூறி என்னைத் தட்டிக் கொடுத்தார். தொடர்ந்து கவியரங்குகளுக்கு வாருங்கள் உங்கள் கவிதை இன்னும் வண்ணமுறும். மேலும் சிறப்படைவீர்கள் என்று கூறி வாழ்த்தினார். அந்தப் பெருமகனார் தான் எனக்கு “கவிச்சிங்கம்” என்ற அடைமொழியை வழங்கி அடையாளப் படுத்தியவர். பொதுவாக விருதுகளையும் பட்டங்களையும் போட்டுக் கொள்வதில் பெரிய விருப்பம் காட்டாத எனக்கு அவர் வழங்கிய “கவிச்சிங்கம்” என்னும் பட்டத்தைப் போட்டுக் கொள்ளும் போது மட்டும் ஒரு வித மகிழ்வும், பெருமிதமும் ஏற்படுகிறது என்பதை யான் மறைக்க விரும்பவில்லை. வரலாற்றில் சித்தார்த் பாண்டியன் என்று யான் நிலைத்திருக்கும் காலம் வரை கவிச்சிங்கம் என்பது அவரையும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். வாள்வீச்சு போன்ற குரல் வீச்சும் கவி வீச்சும் கொண்ட ஒரு ஆசுகவியுடன் பயணிக்க காலம் எமக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியதற்காக தமிழுக்கு கட்டாயம் நன்றி செலுத்துகிறேன். அவர் போன்ற கவிஞரை, மேதையை, மனிதரை வருங்காலம் இனி ஒரு போதும் பார்க்கப்போவதே இல்லை என்பதே அவருடைய சிறப்புக்கு சான்று கூறும் வார்த்தைகளாக இருக்கும்.

  • கவிச்சிகரம் பொற்கைப்பாண்டியன் பற்றி ..

மதுரையின் கவிதைப்  படையில் தென்னவனார் உடைவாள் என்றால் இவர் குறுங்கத்தி . உடைவாளை உருவி சண்டையிடும் போது அனைவருக்கும் தெரியுமாறு மின்னி ஒளி வீசிச் சத்தமிடும். ஆனால் குறுங்கத்தி அப்படியல்ல எங்கிருந்து பறந்து வரும் ,எப்படிப் பாயும் , எவ்விடத்தைக் குடையும் என்று யாருக்கும் தெரியாது. கத்தி பாய்ந்த பிறகுதான் தான் குத்தப்பட்டதே எதிரிக்குத் தெரியும். அதைப் போல தென்னவனார் மரபு வழியில் மட்டுமே நின்று கவிதை புனைவதில் விருப்பம் கொண்டவர். ஆனால் எனது அப்பா பொற்கைப் பாண்டியனார் அவர்கள் எல்லா கவிதை வடிவங்களிலும் புகுந்து விளையாடுபவர். குறுங்கத்தியும் வீசுவார். கூர்வேல் கொண்டும் தாக்குவார், மரபு மாறாச் சுரிகை கொண்டும் சுழற்றுவார். இவற்றுக்கலாம் மேலாக சந்தம் கொண்டு சரித்திரம் படைப்பவர். சங்கத்தமிழினை வரும் சந்ததியினர் பற்றிக் கொள்ள வேண்டும், அதன் மேல் வேட்கையை இளையோர் மனதில் பற்ற வைக்க வேண்டும் என்னும் தனியாத தாகம் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக என்னை தனது இலக்கிய வாரிசு என்றும் அன்பிற்குரிய மூத்த மகன் என்றும் வாய் நிறைய மட்டுமல்ல மனம் நிறைய வாழ்த்தி மகிழ்பவர்.  என்னைப் பொறுத்தவரை மதுரையின்  கவிதை அழகிக்கு இரு கண்கள் உண்டென்றால் அதில்  ஒரு கண் தென்னவனார் அவர்கள்.  இன்னொரு கண் என் தந்தை பொற்கையார் அவர்கள் தான்.

  • முருகுபாண்டியம்எழுதியஅனுபவத்தைப்பகிர்ந்து கொள்ளமுடியுமா?

இரண்டு புலவர்கள் ஒற்றுமையாக இருந்து பார்த்ததுண்டா என்ற கேள்வியை யாரிடமாவது முன் வைத்தீர்கள் என்றால் நிச்சயமாக இல்லை என்றே பதில் வரக்கூடும். இரண்டு புலவர்கள் இருக்கும் ஊரில் ஒரு காவல் நிலையம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூட நகைச்சுவையாக கூறுவார்கள். அந்த அளவிற்கு கவிஞர்கள் மத்தியில் புலமையிற் சிறந்தவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவுவது கடினம். ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கும்படி இக்காலத்திலும் இரண்டு புலவர்கள் இருக்கிறோம் என்பதை மெய்ப்படுத்துவதற்காகவே முருகு பாண்டியம் என்னும் நூல் எழுதப்பட்டது. இந்த நூலை என்னுடன் இணைந்து எழுதியவர் தமிழ்ச் செம்மல் இராம.வேல்முருகன் அவர்கள். எப்போதும் என் மீது மாறாத பாசம் கொண்டவர். (அவர்மீது நானும் தான்,) கவிஞர்களுக்குள் அவ்வப்போது அந்த கால கட்டத்தில் சில கருத்து மோதல்கள் இருந்த சூழலில் இது போல் அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்து இலக்கியங்கள் படைக்க வேண்டும் என்று செயலால் சொன்ன நூல் தான் முருகு பாண்டியாம். இது அந்தாதி வடிவில் எழுதப்பட்டது. அது மட்டுமல்ல, விருத்தத்தில ஒரு முழுநீள நீதி நூலாக யாக்கப்பட்டது. எங்கள் இருவரின் பெயரையும் இணைத்து அதையே நூற்பெயராக வைத்துள்ளோம். வரலாற்றிலும் யாம் பிரிவின்றி வாழவேண்டும் அல்லவா. அதற்காகத்தான்.

வலங்கமானில் நடைபெற்ற வள்ளலார் - 200 கவியரங்கம்
ஈரோடு, திண்டலில் உள்ள வி. இ.டி. கல்லூரியில் தமிழ் மதுரை அறக்கட்டளை அன்பளிப்பாக வழங்கிய ஐயன் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து வணங்கிய தருணம்
முத்தமிழறிஞருக்கு மலர் அஞ்சலி
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை கடந்த திசம்பரில் தமிழ் மதுரை அறக்கட்டளையின் கீழ் இயங்கும் "தமிழ் மதுரை பதிப்பகத்திற்கு " சிறந்த செயற்பாட்டாளர் விருது வழங்கி கௌரவித்த போது
தமிழ் மதுரை அறக்கட்டளையின் "சங்கப்பலகையும் " தஞ்சைத் தமிழ் மன்றமும் இணைந்து 2021 ல் மதுரையில் நடத்திய மாபெரும் கவியரங்கம்
  • வள்ளுவர்மேல் ஏன் பாசம்கொண்டுள்ளீர்கள்?

வள்ளுவர் மேல் யார் தான் பாசம் கொள்ளாமல் இருக்க முடியும். அவர் மீது அதிகப் பாசம் கொண்டிருப்பதற்கு காரணம் அவர் எனது தாத்தா என்பது தான். எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே அவர் பாட்டன்தான். ஒரு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழலை சற்று எண்ணிப் பாருங்கள். அப்போது இன்று இருப்பது போல் வாகனப் போக்குவரத்தோ, தொழில்நுட்ப கட்டமைப்போ இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் உலகத்தைப் பற்றிய பொதுப் பார்வை ஒரு மனிதருக்கு இருந்திருக்கிறதென்றால் பெரும் வியப்பல்லவா. உலகு என்று தொடங்கி உலகோர் அனைவருக்குமான நெறிகளை வகுத்துத் தந்திருக்கிறார். அனைத்து மனித குலத்துக்குமான வாழ்வியல் முறைமையை சுருங்கச் சொல்லி விரித்துரைத்திருக்கிறார்.ஒரு மனோதத்துவ வல்லுநர் செய்ய வேண்டிய வேலையை ஒரு புலவர் செய்திருக்கிறார். அப்படி இருக்கும் போது அவரை கொண்டாட வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் இருக்கிறதல்லவா. “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் யாங்கனுமே கண்டதில்லை, வெறும் புகழ்ச்சியில்லை” எனும் பாரதிப் பாட்டனின் வரிகள் நமக்கு உண்மையை உணர்த்துகிறதல்லவா. அதனால் என்னைப் பொறுத்தவரை முன்னோரை போற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. அந்த வகையில் வள்ளுவத் தாத்தன் நமது அடையாளம், நம் தமிழின் அடையாளம், தமிழரின் பெருமை. அந்த அடையாளத்தை அடையாளப் படுத்த வேண்டியது வரலாற்று அவசியம். அது போன்றே நமது பாட்டி ஒளவையையும் நாம் கொண்டாட வேண்டும் என்பதும் நமது அதிமுக்கியத் தேவை.

  • தூய தமிழ்ப் பற்றாளர் விருதுபெற்றது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தூய தமிழ்ப் பற்றாளர் விருது – 2022 பெற்றது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. காரணம், உண்மையாகவே தமிழுக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் உழைப்பை நல்கும் ஒருவருக்கு இது போன்ற ஊக்குவிப்பு தருவது அவர்களுடைய பணியை இன்னும் சீரும் சிறப்புமாக செவ்வனே செய்வதற்கு வழிவகுக்கும். தமிழுக்கு உழைத்து என்ன கண்டீர்கள் என்பது போன்ற தான வெற்று கேள்விகளுக்கு இடமளிக்காது. அரசின் அங்கீகாரம் என்பது தமிழர்களின் ஏகோபித்த அங்கீகாரம் என்றே பொருள்படும். அரசு என்பது மக்களின் ஒருங்கிணைந்த மையப்புள்ளி என்னும் போது, அதன் மூலம் கிடைக்கும் விருது என்பதும் மக்களின் விருதாகவே கருதப்பட வேண்டும். எண்னற்ற அமைப்புகள் விருதுகள் வழங்கினாலும் அரசின் விருதைப் பெறும் போது ஒரு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கத் தான் செய்கிறது. அதிலும் மற்ற அரசு விருதுகள் விருதாளரின் தமிழ்ப்பணிகளுக்கான சான்றுகளின் அடிப்படையில் மட்டும் வழங்கப்படும் போது இவ்விருது தனிப்பட்ட திடீர் அலைபேசி உரையாடல் சோதனையையும் உள்ளடக்கியுள்ளது எனும் போது உள்ளபடியே இன்னும் ஒரு படி மேலானதாகிறது. ஆகவே  தமிழக அரசின் தூய தமிழ்ப்பற்றாளராக அடையாளப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியே. இது எனது தமிழ்ப் பணியை மேலும் ஊக்கப்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

  • விருது என்பது என்ன?

விருது என்பது என்னைப் பொறுத்தவரை ஒருவரின் உண்மையான பொதுநலப் பணிக்கு அதாவது சமூகப்பணிக்கு வழங்கப்படும் பெருமிதம் மற்றும் ஊக்குவிப்பாகும். அது அவர்கள் பணியாற்றும் துறையில் மேலும் சிறப்பாக பணியாற்றிட உந்துதலைத் தரும். இதனால் சமூகம் முன்னேற்றம் பெறும். புதிய புதிய சிந்தனைகளும் செயல்களும் சாதனைகளும் உருப்பெறும். வரலாற்றில் நாடு முதன்மை பெறும்.

  • விருது தற்போது வழங்கப் படுகிறதா? கேட்டுப் பெறப்படுகிறதா?

அது எனக்குத் தெரியவில்லை. நாட்டில் பல்வேறு விதமான கருத்துகள் உலா வருகின்றன. ஆயினும் இக்குற்றச்சாட்டு அரசு முதல் அமைப்புகள் வரை அனைத்து மட்டத்திலும் இருந்து வருகிறது. அதே சமயம் ஒருவருக்கு ஒரு விருது கிடைக்கும் பொழுது அவ்விருதுக்கு அவர் முற்றிலும் தகுதியானவர் தானா என்பதை அதே துறையில் இயங்கும் மற்றவர்களால் எளிதாக கணித்து விட முடியும். அப்போது அவ்விருது  உண்மையாகவே ஏற்றுக் கொள்ளக் கூடிய, தகுதியுடைய ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால், சிறப்பானதெனத் தகுதிபெறும் அல்லது விமர்சனங்களைச் சந்திக்கும். இருப்பினும் விருதுகள் வழங்கப்பதில்லை. கேட்டு வாங்கப்படுகின்றன என்பதிலும் உண்மை இல்லாமல் இருப்பதில்லை. அப்படி ஒரு நிலை இருந்தால் அது களையப்படுவதே வருங்காலத்து வளர்ச்சிக்கு நல்லது.  எனினும் யான் விருது பெற்ற போது முற்றிலும் தகுதியானவர்களுக்கே அது வழங்கப்பட்டிருக்கிறது என்பதை காண் முடிந்தது. காரணம் அதில் மூத்தவர்களுடன் எனக்குத் தெரிந்த தமிழ்த் தொண்டாற்றும் மிக இளையவர்களும், மாணவர்களும் கூட அடங்கியிருந்தனர். இது பாராட்டுக்குரியதாகும்.

  • திரைப்பட நடிகரான அனுபவம் எப்படி இருந்தது?

அது ஒரு சிறப்பான அனுபவம் என்றே சொல்ல வேண்டும். பெரும்பாலும் நடிகர்களையும் அவரது நடிப்பினையும் திரையிலேயே பார்த்து மகிழ்ந்த நமக்கு நம்மையே ஒரு நடிகராக திரையில் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவுகோல் இருக்காது. உண்மையில் சேந்தன் திரைப்படத்திற்கு பாடல் எழுதவே ஒப்புக் கொண்டேன். ஆனால் இயக்குனர் தங்களுக்குப் பொறுத்தமாக ஒரு பாத்திரம் இருக்கிறது நடியுங்கள் என்றார். ஆனால் நானோ முதலில் நடிப்பதற்கு மறுக்கவே செய்தேன். ஆயினும் இயக்குனர் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். தங்களுக்கு இப்பபாத்திரம் மிகவும் கனகச்சிதமாக இருக்கும் என்று வற்புறுத்தினார். அது உண்மைதான் ஒரு காவல்துறை ஆய்வாளராக என்னை நானே திரையில் பார்க்கும் போது ஒரு கனம் மிரண்டு தான் போனேன். நாம் தான் நடித்துள்ளோமா என்ற ஐயம் கூட ஏற்பட்டது. திரைப்படம் என்பது ஒரு மாய உலகம் என்பதையும் தாண்டி அது மற்றொரு உலகம் என்பதை உணர்ந்தேன். ஏன் இன்று வரை பலர் திரைப்படக் கனவுடனேயே திரிகிறார்கள் என்பதை அப்போது உணர்ந்தேன். சேந்தன் வெளிவரும் போது நிச்சயம் நீங்களும் அதை உணர்வீர்கள். இலக்கிய உலகம் தாண்டி கலை உலகில் இன்னொரு பயணத்திற்கு வாய்ப்பு வழங்கிய சீதளாதேவி சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கும் இயக்குனருக்கும் நன்றி தெரிவித்தே ஆக வேண்டும்.

  • இதுவரை தாங்கள் எழுதியுள்ள நூல்கள் எத்தனை? சொல்லமுடியுமா?

இதுவரை பத்து நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் ஏந்தி உலகாள்வோம் , வெளிச்சத்தில் ஒரு கனவு, தமிழ் கொண்டு புரட்சி செய், முருகு பாண்டியம், சித்திரக்கூடு, சொல்வண்டி , கவியரங்கக் கவிதைகள், பெரிய புராணத்தில் இயற்கை வருணனை, படையல் மலர்கள்,ரதி மூலம். இதில் பெரிய புராணத்தில் இயற்கை வருணனை என்பது ஆய்வு நூல், வெளிச்சத்தில் ஒரு கனவு ஒரு கற்பனைக் கவிதைப் புனைவு. மற்றவை கவிதைகள். இதில் சித்திரக்கூடு என்னும் நூல் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் முதுகலைத் தமிழ் முதலாமாண்டு மாணவர்களுக்குப் பாடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • எதிர்காலத் திட்டம் என்ன?

 நிறைய இலக்கியங்கள் படைக்க வேண்டும். இலக்கியங்கள் படைப்போருக்கு உதவிகள் புரிய வேண்டும். புதிய படைப்பாளிகளைக் கண்டறித்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும். ஆவணக் காப்பகம் ஒன்று தொடங்கி பல்வேறுபட்ட கலை, இலக்கியப் பண்பாட்டு ஆக்கங்களையும் அடையாளங்களையும் ஆவணப் படுத்த வேண்டும். தமிழ் வழிக் கல்வியை உறுதிப்படுத்தி மக்களை அதை நோக்கி ஈர்க்கும் வகையில் சில திட்டங்கள் உள்ளது. அதை நெறிப்படுத்தி நடைமுறைப் படுத்த வேண்டும். வள்ளுவர் சிலைகள் அமைப்பதை தொடர்ந்து பல இடங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். இன்னும் பல திட்டங்கள் எண்ணத்தில் உள்ளது, அவை அனைத்தும் செயல் வண்ணத்தில் காண வேண்டும். உயர்ந்த ஒற்றை இலக்குடன் செயல்பட்டு தமிழுக்கு உலகின் உயர்ந்த மொழி என்னும் மகுடம் கிடைக்கச் செய்ய வேண்டும். இவற்றை வென்றெடுக்க எங்கள் உயரிய செயல்களுக்கு பெருந்தன்மையுடன் தன்னலம் கருதாமல் உதவும்  நல்லவர்கள் செல்வந்தர்கள் புரவலர்களாக முன்வர வேண்டும்.

  • வளரும் கவிஞர்களுக்கும் இளைஞர்களுக்கும் தங்கள் அறிவுரை என்ன?

கவிஞர்களுக்குச் சொல்லும் முன் இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் இன்றைய சூழலில் “விட்டொழிக்க வேண்டிய விடங்களை விட்டொழித்து, கெட்ட டொழிக்க வேண்டிய கேடுகளின் கட்டொழித்து, நட்டெடுக்க  வேண்டிய நலம் பல நட்டு வைத்து , தொட்டெடுக்க வேண்டிய வெற்றியை தொடர்ந்தெடுக்க வேண்டும். ”  கல்வி என்பதும் ஒழுக்கம் என்பதும் இரு விழியாகப் பேண வேண்டும். பெற்றோரை பேணுதல் என்னும் கடமையில் தவறக்கூடாது. நாட்டையும் வீட்டையும் ஒன்று போலக் காண வேண்டும், அங்கனமே பேண வேண்டும். இந்த நற்செயல்களை இளைஞர்கள் வென்றெடுப்பதற்கு தேவையானவற்றை கவிஞர்கள் தங்கள் கவிதையிலே சுட்ட வேண்டும். இப்போதெல்லாம் ஒரு கவியரங்கத்தில் கலந்து கொண்டு 18 அடிகளில் ஒரு கவிதை புனைந்து அரங்கேற்றி விட்டாலே கவிமாமணி, கவிச்சக்கரவர்த்தி என்னும் விருதுகள் எல்லாம் வழங்கப்பட்டு விடுகிறது. பத்தாயிரம் பாக்கள் யாத்த கம்பனின் பட்டத்தை வெறும் பத்தடிக் கவிதை பெற்றுத் தந்து விடுகிறது. ஆகவே வளரும் கவிஞர்கள் தற்போது வழங்கப்படும் விருதுகள் கண்டு தன்வயம் இழந்து விடக்கூடாது. இன்னும் இன்னும் உயரம் இருக்கிறது என்னும் எண்ணம் கொண்டு எழுதுதல் வேண்டும். மூத்த கவிஞர்களிடம் கருத்துக்களைப் பகிர்ந்து ஐயங்களைத் தீர்த்துக் கொண்டு முன்னேற வேண்டும். புதுக்கவிதைகள் புணைபவராகவே இருப்பினும் மரபின் கூறுகளை சற்றாவது அறிந்து கொள்ள வேண்டும். சங்க இலக்கியங்களையும், சரித்திரச் சான்றுகளையும் கொஞ்சம் தொட்டுப் பார்க்க வேண்டும். நிறையப் படிக்க வேண்டும், அப்படியே நிறையப் படைக்க வேண்டும். நாடு நலம் பெறும் ஒன்றே நம் சிந்தனையாய் வெளிப்பட வேண்டும்.

  • தமிழ்நெஞ்சம் இதழ் குறித்த தங்கள் பார்வை ..

தமிழ் நெஞ்சம் உண்மையிலேயே தமிழர்கள் நெஞ்சம் தான். தமிழுக்கும் தமிழர்கட்கும் கொஞ்சநஞ்சமின்றி அரிய  தொண்டினை பல்லாண்டுகளாக ஆற்றி வருகிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் இதழானாலும் தமிழகத்தில் எல்லோர் நெஞ்சங்களிலும் தமிழையும்  மகிழ்ச்சியையும் தவழ விடுகிறது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் படைப்பாளர்களின் படைப்புகளை உலகெங்கும் கடவுச்சீட்டு இல்லாமல் பயணிக்க வைக்கிறது. உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புப் பாலமாகிறது. பல அறிஞர்களை உலகமெங்கும் அறிமுகம் செய்து அடையாளம் காணச் செய்கிறது. சுருங்கச் சொன்னால் “வஞ்சமில்லா நெஞ்சமும் துஞ்சலில்லா தொண்டதும்  ; விஞ்சுதமிழ் நெஞ்சமது ஆம் “ என்பேன். இதன் ஆசிரியர் அமின் அவர்கள் மரபுக் கவிதைகள் இயற்றுவதில் வல்லவர். அது போன்றே தமிழ் நெஞ்சத்தையும் வல்லமையுடன் நடத்தி வருகிறார். வாழ்க.

நன்றி , வெல்க தமிழ்.


1 Comment

MADHAVAN · மார்ச் 1, 2024 at 15 h 54 min

Feel great at varied views expressed

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »

நேர்காணல்

உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்

 நேர்கண்டவர் :

தமிழ்செம்மல் 
இராம வேல்முருகன் வலங்கைமான்

 உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?

           என் சொந்த ஊர் –

 » Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்  »