மின்னிதழ் நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது. 11 சிறுகதை, கவிதை, சிறுவர் பாடம், இலக்கிய மலர் வெளியீடு மற்றும் விமர்சன கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் விரியும் இவரின் இலக்கிய பரப்பு இவரின் இலக்கிய முதிர்ச்சியின் அடையாளமாகும்.  கிழக்கிலங்கையில் தனக்கென அடையாளம் பதித்த இலக்கிய ஆளுமை மூதூர் முகைதீன் என்ற புனைபெயர் கொண்ட மீரா முகைதீன் அவர்கள்.

கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களுடன் நேர்காணல் செய்பவர் மூதூர் ஜே.எம்.ஐ
பெப்ரவரி 2024/ 104 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

உங்களைப் பற்றிய விபரங்களை சுருக்கமாகக் கூறுங்கள்.

நான் மூதூரைப் பிறப்படமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவன்  எனது முழுப் பெயர் அபுசாலிகு மீரா முகைதீன். சுமார் நாற்பது வருட காலம் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி இப்பொழுது ஓய்வு நிலையில் இருக்கின்றேன்.பாடசாலையில் படிக்கும் காலத்திலிருந்தே கலை,இலக்கியத்தின் மீது அதீத ஆர்வம் உண்டு.   சுமார் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருவதோடு “மூதூர் முகைதீன் “என்ற பெயரில் நான் எனது ஆக்கங்களை எழுதி வருகின்றேன்.

சமீபத்தில் வெளியான வண்டில் மாமா நூல் முகப்பு
திருமலை மாவட்ட அரசாங்க அதிபரினால் கவிதைப் போட்டிக்கான பரிசினைப் பெற்றுக் கொண்டபோது (2001)
கிழக்கு மாகாண முதலமைச்சரால் முதலமைச்சர் விருது(2010)

நீங்கள் இலக்கியத் துறையில் ஈடுபடுவதற்கு பின்புலமாக இருந்த காரணிகளை கூற முடியுமா ?

பதில்:- எனது சிறுவயதில் இருந்தே நூல்களை தேடி வாசிப்பதில் மிக விருப்பமுடையவனாக  இருந்தேன் பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே   பத்திரிகைகள்,சஞ்சிகைகள் வாசிப்பதில் அதிக அக்கறை காட்டினேன். அதற்கு முக்கிய காரணியாக இருந்தது எனது வீட்டிற்கு அருகாமையில் இயங்கிய இக்பால் சசனசமுக நிலைய நூலகமாகும். இந்த நூலகம்தான் எனது எழுத்துப் பணிக்கு அத்திவாரமிட்டது.  அத்தோடு எனது வாசிப்புக்கு நல்ல  தீனியாகவும் அமைந்திருந்தது. பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே நான் சிறு சிறு துணுக்குகள், விடுகதைகள் போன்றவற்றை அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த பல பத்திரிகைகளுக்கும்,சஞ்சிகைகளுக்கும் எழுதியுள்ளேன்.

எமது பிரதேசத்தில் இலக்கிய முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில் மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக நூல் வெளியீடுகள், நூல் அறிமுக நிகழ்வுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை சிறப்பாக நடாத்தி வருகின்றோம்.

நீங்கள் எவ்வகையான இலக்கியங்களில் ஈடுபாடு காட்டி வருகின்றீர்கள்?

கவிதை, சிறுகதை, பாடலாக்கம், உருவகக் கதைகள்,கட்டுரைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.இதுவரை கவிதைத் துறையிலேயே அதிக ஈடுபாடு காட்டி வந்துள்ளேன்.

இத்துறையில் உங்கள் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்த காரணிகள் என்ன? 

பதில்:-இதில் பல விடயங்கள் உள்ளன. 1970களில் வெளிவந்த தினபதி என்ற பத்திரிகையில் தினம் ஒரு சிறுகதை திட்டம் என்ற ஒரு பகுதியை ஆரம்பித்திருந்தனர். அதில் ஒவ்வொரு நாளும் சிறுகதைகளைப் பிரசுரித்து புதிய எழுத்தாளர்களுக்கு இடம் கொடுத்து ஊக்கப்படுத்தி வந்தனர்.  அந்த வகையில் நானும் ஒரு சிறுகதையை எழுதி அனுப்பி இருந்தேன். அது 1969 ஆம் ஆண்டு பிரசுரமானது.  இதுவே எனது முதலாவது எழுத்துப் பிரசவமாகும் . அதனை தொடர்ந்து சில கவிதைகளையும் தினபதி கவிதா மண்டலத்தில் எழுதி உள்ளேன். 1973 ஆம் ஆண்டு

நான் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு ஆசிரியர் பயிற்சி பெறுவதற்காக செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட்டது அங்கே சென்றதும் எதிர்பாராத விதமாக அந்த பயிற்சி கலாசாலையில் என்னுடன் சேர்ந்து பயிற்சி பெறுவதற்காக இலங்கையில் நாலா

திசைகளிலுமிருந்தும் வந்திருந்த நண்பர்களில் பல எழுத்தாளர்களும் இருந்ததனர்.இதை எனது அதிர்ஷ்டமாகவே கருதுகின்றேன்..  குறிப்பாக அன்பு ஜவஹர்ஷா, திக்குவல்லை கமால், கலைவாதி கலீல், ஜவாத் மரைக்கார்,ஏ. பீர் முகம்மது போன்றோர்களை குறிப்பிடலாம் இவர்களுடனான நட்பு எனது இலக்கிய ஆர்வத்திற்குப் பெரும் உந்து சக்தியாக இருந்து. நாங்கள் அனைவரும் அந்த காலகட்டத்தில் யாழ் நகரில் நடைபெறுகின்ற பல இலக்கிய நிகழ்வுகளில் தவறாது

கலந்து கொள்வோம். குறிப்பாக திக்குவல்லை கமால், அன்பு ஜவஹர்ஷா,ஆகிய இருவருடன் நானும் இப்படியான நிகழ்வுகளில் அதிகம் கலந்து கொள்வதை வழமையாகக் கொண்டிருந்தோம்.

இவர்களுடனான உறவே எனது இலக்கிய பயணத்தில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது எனின் மிகையில்லை. இவர்கள் மூலமாகவே அக்காலகட்டத்தில் பிரபல்யமாக விளங்கிய எழுத்தாளர்களான டொமினிக் ஜீவா, கே. டானியல்,சிரித்திரன் சுந்தா, எச்.எம்.பி .மொஹிதீன் எம்.எச். எம்.ஷம்ஸ், மு. பஷீர் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.

கருத்தாழமிக்க விடயங்களின்றி ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் எழுதி வந்த எனக்கு சரியான திசையை காட்டி மக்கள் இலக்கியத்தின்பால் ஒரு ஈர்ப்பை ஏற்பட வைத்ததும் இவர்களின் நட்பினால் ஏற்பட்ட  விளைவுதான் எனக் கூறிக் கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.எமது நட்பு வட்டம் இன்றுவரை தொடர்வது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கொழும்பு தமிழ் சங்கத்தில் எனது கவிதைகள் பற்றிய ஆய்வு நூல் விடியல் வெளியீட்டு விழாவில் அல்_ஹாஜ் ஹாஷிம்.உமர் நூலினைப் பெறுகின்றார்.
முஸ்லீம் விவகார கலாசார இராஜாங்க. அமைச்சரால் வழங்கப்பட்ட கலாபூஷண விருது (2008)

நீங்கள் இதுவரை வெளியிட்ட நூல்களின் விபரங்களை தர முடியுமா…

முத்து (1976_கவிதை), பிட்டும் தேங்காய்ப் பூவும் (1997 _ கவிதை),   இழந்துவிட்ட இன்பங்கள் (2003_ கவிதை),   ஆசிரியர் பணியை அழகுறச் செய்வோம் (2005_ கட்டுரை),   ஒரு காலம் இருந்தது (2010_ கவிதை),  அபோதம் ( 2016_ உருவாகக் கதைகள்), ஒரு வானில் இரு நிலவுகள் (2018_ கவிதை),  கனாக் கண்டேன் (2020_ பாடல்),  கடலோரப் பாதை (2021_சிறுகதை), சங்கமம் (2021_ கவிதைத் தொகுப்பு),  வண்டில் மாமா (2023_ சிறுவர் பாடல்கள்) ஆகிய 11 நூல்களை வெளியிட்டுள்ளேன் அத்தோடு “ஓசை ” என்ற காலாண்டு கவிதைச் சிற்றிதழின் ஆசிரியராக இருந்து 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை 28 இதழ்களை வெளியிட்டுள்ளேன். இதில்இளைய தலைமுறைக் கவிஞர்களுடன் பல மூத்த கவிஞர்களும் கவிதைகளை எழுதி இருப்பது முக்கிய விடயமாகும்.

தற்போதைய கால கட்டத்தில் நூல் வெளியீடுகள் பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?

இன்றைய காலத்தை பொறுத்தவரை நூல்களை வாசிப்பவர்களின் தொகை மிகவும் குறைந்து கொண்டே வருகின்றன. இதற்கான முக்கிய காரணமாக நவீன தொடர்பு சாதனங்களின் பாவனையே எனப் பலரும் கூறுகின்றனர. மேலும் நூல்களைப் பணம் கொடுத்து வாங்குவோரின் எண்ணிக்கை முன்னரைவிட  மிகக் குறைவடைந்துள்ளன.இதனால் நூல்களினுடைய விற்பனையும் அல்லது அதனை சந்தைப்படுத்துகின்ற வாய்ப்பும் குறைந்துளன.இதன் காரணமாக எழுத்தாளர்கள் நூல்களை வெளியிடுவதற்கும் அஞ்சுகின்றனர்.

இலக்கியத் துறையில் உங்களுக்கு கிடைத்த விருதுகள், பரிசுகள், பாராட்டுகள் பற்றி கூறமுடியுமா?

பதில்:- பல பரிசுகள் விருதுகள் கிடைத் போதிலும் அவை எதனையும் நான் எனது பெயருடன் சேர்த்துக் கொள்ள விரும்புவதில்லை. சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன. அரச மற்றும் நிறுவனங்கள் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற கவிதைப் போட்டிகளில் பலமுறை முதல் பரிசுகளைப் பெற்றுள்ளேன்.மேலும் கலாபூஷணம் விருது,கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, விபவி விருது போன்றவைகளை முக்கியமாகக் குறிப்பிடலாம்

மேலும் பல்கலைக் கழக, கல்வியற் கல்லூரி மாணவர்கள் பலராலும் எனது கவிதைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.கவிதாயினியும், எழுத்தாளருமான வெலிகம றிம்சா முகம்மது அவர்கள் தனது ஊடக டிப்ளோமா பட்டத்திற்காக இன நல்லுறவில் மூதூர் முகைதீனின் கவிதைகள் என்ற விடயத்தை கருப்பொருளாகக் கொண்டு எழுதிய ஆய்வுக் கட்டுரையை ” விடியல்” என்ற பெயரில் ஒரு நூலாக வொளியிட்டுள்ளார்.2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான “மல்லிகை” இலக்கிய சஞ்சிகை எனது படத்தை அட்டைப்படத்தில் பிரசுரித்து கௌரவித்தமையும்

எனது எழுத்திற்கு கிடைத்த விருதுகளாகவே கருதுகின்றேன்.

இலக்கியப் படைப்புகள் ஏதாவது ஒரு நோக்கத்தை முன்வைத்தே எழுதப்பட வேண்டும் என்ற விடயத்தில் தங்கள் கருத்து என்ன?

இலக்கியத்தை காலத்தின் கண்ணாடி என்பார்கள். ஒரு காலகட்டத்தின் நிகழ்வுகளை இலக்கியமாகப் படைக்கும்போது அது எதிர்காலத்தில் வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடியதாக,என்றும் பேசப்படக்கூடிய சிரஞ்சீவி இலக்கியமாக திகழும் என்பதே உண்மை.அந்த வகையில்  நிகழ்கால வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்களை இலக்கியமாக படைக்கும்போது  அவை வாழும் இலக்கியமாக என்றும் விளங்கும். இதை விடுத்து வெறும் வர்ணனைகளையும், இயற்கை ரசனைகளையும் வைத்து ஏழுதப்படும் ஜனரஞ்சக இவக்கியங்கள் மக்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

சமூகத்தில் புரையோடிப் போய் இருக்கின்ற வறுமை,  அறியாமை, அடிமைத்தனம், சுரண்டல் போன்றவற்றை எடுத்துக்காட்டும் வகையில் யதார்த்தங்களை மையமாக வைத்து நடைமுறைப் பிரச்சினைகளைக் கருப்பொருளாகக் கொண்டே இலக்கியம் படைக்கப்பட வேண்டும் அதுவே மக்கள் இலக்கியமாகும்.அந்த வகையில் இன்று பல எழுத்தாளர்கள் சமகால பிரச்சினைகளையும் மக்களின் அவலங்களையும் முன்வைத்து கதைகள்,கவிதைகள்,காவியங்களை எழுதி வருகின்றனர்  இத்தகைய மக்கள் இலக்கியமே என்றும் வாழும்.எனவேதான்  இலக்கியப் படைப்புக்கள் சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற கருத்தில் நான் எப்போதும் உடன்பாடுடையவனாக இருந்து வருகின்றேன்.

இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் செய்தி என்ன ?

இன்றைய காலகட்டத்தில் எழுத்துத் துறையில் பிரவேசிக்க அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். இது வரவேற்கத்தக்கதே. எனினும் இவர்களில் பெரும்பாலானோர் போதிய வாசிப்போ,தேடலோ இன்றி நுனிப்புல் மேய்ந்த நிலையில் எழுத்துலகில் கால் பதிக்க முயற்சிக்கின்றனர். இது மிகவும் தவறான செயற்பாடாகும்.

ஆழமான வாசிப்பின் மூலமே சிறப்பான ஆக்கங்களைப் படைக்க முடியும்.இதனை.இளம் தலைமுறையினர் மனதில் கொண்டால் எழுத்துலகில் சுடர் விட்டுப் பிரகாசிக்கலாம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »

அறிமுகம்

உயர்நீதி மன்றத்தில் ஓர் தமிழ்ப்பற்றாளர்

கவியரங்கமானாலும் பட்டிமன்றமானாலும் தன்னம்பிக்கைப் பேச்சரங்கமானாலும் தனித்த ஒரு முத்திரை பதிப்பவர். சுருக்கெழுத்து தட்டச்சராகப் பணியாற்றிய பணியாளர் இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நேர்முகஉதவியாளர் என்ற நிலைக்கு உயர்ந்தவர். நீதிமன்றப் பணிகள் மட்டுமின்றி தமிழ்ப்பணிகளையும் தளர்வின்றி ஆற்றி வருபவர். கதை கவிதை கட்டுரை என அனைத்துத் துறைகளிலும் பயணித்துவருபவர். கவிதைநூல்களைப் படைத்து ஒரு சிறந்த படைப்பாளியாகவும் திகழக்கூடியவர். உளவியல் நூலக அறிவியல் வணிக மேலாண்மை சட்டம் கலை என பல்வேறு பிரிவுகளில் முதுகலைப்பட்டங்கள் பெற்று பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் கூற்றுக்குச் சான்றாக நடந்து வரும் பெண்மணியார். ஆம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிவரும் கவிஞர் இராஜ பிரபா அவர்களைத்தான் நேர்காணல் செய்ய மதுரை வந்துள்ளோம். இதோ நேர்காணல்.