I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர், விளையாட்டு அமைப்புகளின் தலைவர், இலக்கியவாதிகளுக்கு விருதும் பரிசும் வழங்கிச் சிறப்பிக்கும் புரவலர் செஞ்சிலுவைச் சங்கப் பொறுப்பாளர் இவ்வாறு சமூகக்காவலர் , இலக்கியப்புரவலர், கல்வியாளர்,  விளையாட்டு ஆர்வலர் என்ற பல்வேறு முகங்கள் கொண்ட ஒரு ஆளுமையாளர் இவரது பெற்றோர் பெயர்களின் முதலெழுத்துகளைச் சொன்னால் அது இவர்தாம் என அடையாளம் கொண்டிருப்பவர் – ஆம் சௌ மா என்றாலே இவர்  நினைவுக்கு வருவார். வாழும் சடையப்ப வள்ளலாகத் திகழ்பவர். மணற்பாறையின் வரலாறு இவரைத் தவிர்த்து எழுதப்பட இயலாது எனும் சிறப்புடையவர்   இத்தகைய சிறப்பு மிக்க பன்முகத் திறனாளரான திருமிகு  மேனாள் ஆளுநர் அரிமா சௌமா இராசரத்தினம் அவர்களை  தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் அவர்கள் செய்த நேர்காணல் இதோ…

ஜூன் 2024 / 100 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.
தஞ்சைத் தமிழ் மன்ற விழாவில் அரிமா அவர்களுக்கு, மொழிக்காவலர் விருது வழங்கிய போது…
செந்தமிழ் அறக்கட்டளை நிகழ்வில் நடிகர் இயக்குநர் பார்த்திபன் மற்றும் எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோருடன்.
தஞ்சைத் தமிழ் மன்ற விழாவில் கவிதைப் போட்டியில் வென்றவர்களுக்குப் பணப்பரிசு வழங்கியபோது.. இராணி லட்சுமி, இலட்சுமணக் குமார், திரைப்பட பாடலாசிரியர் விக்டர்தாஸ், சௌமா இராசரத்தினம், பொற்கைப் பாண்டியன் ஆகியோர்.
திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதி அவர்களுடன்...

சௌமா இராசரத்தினம் என்ற பெயரில் சௌமா என்பதை எதைக்குறிக்கியது ஐயா?

என் பெற்றோரின் பெயர்களின் முன்னெழுத்துகளே சௌமா; சௌ என்பது என் தாயார் பெயரின் முதலெழுத்து. மா என்பது என் தந்தையார் பெயரான மாணிக்கம் என்பதன் முதலெழுத்து. இவ்விரண்டும் சேர்ந்ததே சௌமா. இவ்வாறு எங்கள் பெயர்முன் “சௌமா” என்ற பெயரைச் சேர்ப்பதன் மூலம் எங்கள் பொறுப்புணர்வு கூடுவதாகவும் அந்தப் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு அதிகரிப்பதாகவும் உணர்கிறோம்.

தங்கள் இளமைக்காலக் கல்வி , கல்லூரிக் கல்வி குறித்துச் சொல்லுங்கள் ஐயா

பள்ளிப் படிப்பு மணப்பாறை அரசு பெண்கள் தொடக்கப் பள்ளியில்தான்.  பெயரில் பெண்கள் என்று இருந்தாலும் இருபாலரும் படிக்கும் பள்ளியே. அந்தப் பள்ளிக்கூடம் எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால் அங்கேயே என் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினேன். அதன் பிறகு போர்டு ஐஸ்கூல் எனப்படும் கழக உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அப்போது பதினோறுவருடம் எஸ்எஸ்எல்சி. பள்ளியில் சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்.

அதன் பிறகு பியூசி எனப்படும் கல்லூரிப்படிப்புக்கு முந்தைய படிப்பை திருச்சி தூயவளனார் கல்லூரியில் படித்தேன். பின்னர் பிசப்கீப்பர் கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்தேன். பள்ளிப் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதால் எனக்கு கணிதப் பிரிவில் பட்டம் பயில்வதற்கான வாய்ப்பு எளிதாகக் கிடைத்தது. அங்கும் சிறந்த மாணவனாகவே படித்தேன்.

பள்ளிக் காலத்திலேயே இலக்கிய மன்றச் செயல்பாடுகளில் அதிகமான ஈடுபாடு இருந்ததால் கல்லூரியிலும் அது தொடர்ந்தது. கல்லூரி இலக்கிய மன்றச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் எனது இலக்கிய அறிவை அதிகமாக்கியது.

அதன்பிறகு தொலைதூரக் கல்வியில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம் ஏ பட்டம் பெற்றுள்ளேன்.

இலக்கியம் சமூகப்பணிகள் கல்விப்பணிகள் என்று பல்வேறு துறைகளில் எவ்வாறு தங்களால் பயணிக்க முடிகிறது?

தனியான காரணம் எதுவும் இல்லை; ஈடுபாடே முதன்மையான காரணம் ஆகும். இலக்கிய ஈடுபாடு என்பது நான் முன்பே குறிப்பிட்டது போல பள்ளி கல்லூரி காலத்திலேயே ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர் திரு   அவர்களே இலக்கிய ஈடுபாடு ஏற்படக் காரணமானவர். பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாலும் , கல்லூரியில் படிக்கும்போது ஓய்வு நேரங்களில் நூலகத்திலேயே பொழுதைக் கழித்ததாலும் இலக்கியங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. கம்பராமாயணம் சிலப்பதிகாரம் அண்ணா பெரியார் நூல்கள் உள்பட அனைத்து நூல்களையும் படித்திருக்கிறேன். படிக்காத நூல்கள் எதுவும் இல்லை என்றே சொல்லலாம்

படிக்கும் காலத்திலேயே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அவ்வப்போது சிறுசிறு பணிகளைச் செய்து வந்தோம். இது அரிமாசங்கம் வரை சென்று பெரிய அளவில் தொண்டு செய்ய வழி செய்துள்ளது. சேவை செய்ய வேண்டும் என்ற ஒத்த கருத்துடையவர்கள் அரிமா சங்கத்தில் இருப்பதால் அங்கு பணியாற்றுவது எளிதாகி விட்டது.  மாணவப் பருவத்திலிருந்தே மற்றவர்களுக்கு உதவி வந்ததால் இது எளிதாகி விட்டது.  

கபாடி மற்றும் கால்பந்து பிடித்தமான விளையாட்டு மாநில கபாடி வீரர் தமிழ்நாடு மாநிலத் துணைத்லைவராக இருந்துள்ளேன் தற்போது கொக்கோ அசோசியேசன் திருச்சி மாவட்டத் தலைவராக இருக்கிறேன். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இந்தியக் கலாச்சார நட்புறவு பண்பாட்டுக்கழக மாநிலத்தலைவராகவும் உள்ளேன். நெ து சுந்தரவடிவேலு கவிஞர் வைரமுத்து  போன்றோர் தலைவராகப் பதவி வகித்த அமைப்பான இவ்வமைப்பில் நானும் தலைவராக இருப்பது மகிழ்வைத் தருகிறது.

கல்விப்பணி என்பது என் தந்தையார் தொடங்கிய பள்ளியைத் தொடர்ந்து நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு வந்ததும் அதனை நடத்தி வருகிறேன் . எங்கள் கிராமத்தில் போதுமான கல்வி நிலையங்கள் இல்லாததாலும் கல்வி கற்கும் பொருட்டு மணற்பாறை போன்ற இடங்களுக்கு வரவேண்டியிருந்ததாலும் தாம் பெற்ற கல்வியைத் தம் ஊர் மக்களும் பெற வேண்டும் என்றெண்ணியதாலும் என் தந்தையார் ஒரு பள்ளியைத் தொடங்கினார் . அப் பள்ளி பின்னர் என்பது அண்ணனால் நடத்தப்பட்டது. இப்போது நான் நடத்தி வருகிறேன். பள்ளியிலிருந்து வரும் வருமானத்தை நாங்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் பள்ளிக்கே செலவழிக்க வேண்டும் என்றும் என் தந்தையார் கூறியதால் நாங்கள் இன்றுவரை பள்ளியிலிருந்து வரும் வருமானத்தை எங்கள் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்துவதில்லை.

தொன்மைமிகு மணவைத் தமிழ் மன்றம் குறித்து.

தொன்மைமிகு மணவைத் தமிழ் மன்றம் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு மணவையார் என்று அழைக்கப்படும் அறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா  அவர்களால் தொடங்கப்பட்டது.  மணவையார் தமிழ்மொழிக்கான செம்மொழித்தகுதியை ஆய்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு வழங்கியவர்.  அவருடன் சேர்ந்து  சிறுகதை எழுத்தாளர் ஜெயந்தன் ஐயா இரும்பொறை ஐயா ஆகியோர் இணைந்து இந்த அமைப்பைத் தொடங்கினர் பின்னர் புலவர் காசிநாதன் ஐயா அவர்கள் வழிகாட்டலில் தொடர்ந்து நடத்தினோம். இம்மன்றத்தில் பேசாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அறிஞர் அண்ணா கலைஞர் குன்றக்குடி அடிகளார் போன்றோர் இங்கே பேசியுள்ளனர். இப்போது நண்பர்கள் திரு நவமணிராஜன்  திரு. இந்திரஜித் திரு மணவைத் தமிழ்மாணிக்கம் இவர்களுடன் நானும் இணைந்து தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

பள்ளி மாணவர்களிடம் தமிழ்ப் பற்று உள்ளதா? அல்லது ஏதேனும் ஒரு மொழிப்பாடமாக மட்டும் கடந்து செல்கிறார்களா?

மொழிப்பாடமாகவே கடந்து செல்கின்றனர் என்பது உண்மைதான்.. மொழிப்பற்று என்பதில்லை என்பதும் உண்மைதான். இவர்கள் மட்டுமல்ல இவர்களுக்கு முந்தைய மாணவர்களிடமும் தமிழ்ப் பற்று இல்லை. அவர்களின் பெயரே தமிழில் இல்லை. 99 விழுக்காடு சமஸ்கிருதப் பெயர்கள் இல்லை என்பதால் தமிழ்ப்பற்று இல்லை.எனலாம்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுடன்…
பன்னாட்டு அரிமா சங்க ஆளுநராக…
அரிமா சங்க மேடைகளில் துணைவியாருடன் அரிமா சௌமா இராசரத்தினம்

ஆசிரியர்களிடம் தமிழறிவு எவ்வாறு உள்ளது?

ஆசிரியர்களிடம் தமிழறிவு உள்ளது. தமிழ் அறிவு இல்லையெனச் சொல்லவியலாது. அவர்கள் படித்துள்ளார்கள். 75 விழுக்காடு தமிழாசிரியர்களிடம் தமிழ்ப்பாடத்தை நடத்த மட்டுமே செய்கிறார்கள். ஆனால் தமிழ்ப் பற்று போதுமானது இல்லை. தமிழ்ப்பாடத்தைத் தாண்டித் தமிழ்ப்பற்றை விதைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தாங்கள் எவ்வாறு தமிழை வளர்க்க உதவுகிறீர்கள்?

இலக்கியமன்றங்களை இலக்கியஅமைப்புகளை அரசு பள்ளிகளில் ஏற்படுத்தச் செய்கிறோம். அதன் வழியாக மாணவர்களிடம் பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி கவிதை எழுதும் போட்டி திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி போன்றவற்றை நடத்துகிறோம். அவர்களுக்குப் புத்தகப் பரிசுகள் பங்கேற்புச் சான்றிதழ்கள் போன்றவற்றை எங்கள் செலவிலேயே வழங்குகிறோம். தமிழாசிரியர்கள் தமிழ் ஆர்வலர்கள் உதவியுடன் இதனைச் செயல்படுத்தி வருகிறோம்.

சௌமா இலக்கியவிருதுகள் குறித்து ..

தொடக்கத்தில் செந்தமிழ் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கி எழுத்தாளர் ஜெயந்தன் அவர்கள் உதவியுடன் எழுத்தாளர்களை படைப்பாளிகளைப் பாராட்டி வந்தோம்.

திரு ஜெயந்தன் அவர்கள்  ஓய்வுக்காலத்தில் இங்கேதான் இருந்தார். வாழுங்காலத்தில் படைப்பாளிகள் பாராட்டப்பட வேண்டும் என்பது அவரது நோக்கம். அதனால்தான் அவ்வறக்கட்டளையைத் தொடங்கிச் செயல்படுத்தி வந்தோம்.திரு இளங்குமரனார் அவர்களுக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தோம்.படைப்பாளிகளின் கவிதைநூல்கள் சிறுகதைகள் ஆகியவற்றிற்கு விருது பரிசுகள் கொடுத்தோம். கொரானா காலத்தில் தொய்வு ஏற்பட்டது. அதன்பிறகு சௌமா அறக்கட்டளை ஏற்படுத்தப் பட்டது அதன்வழியாக சௌமா இலக்கிய விருதுகள் என்று வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 20 பேரைக் கௌரவிக்கிறோம். சுமார் 4 இலட்சம் ரூபாய்வரை செலவழித்து விழா நடத்துகிறோம்.

தஞ்சைத் தமிழ் மன்ற விழாவில்

நவீனகவிதை நாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் ஆகியவற்றுக்கு மட்டும் விருது அறிவித்துள்ளீர்கள். ஏன் மரபுக்கவிதைக்கு முக்கியத்துவம் தரவில்லை?

அப்படியொரு எண்ணம் கிடையாது. எனக்குத் தெரிந்து என் நண்பர் திரு கவிதைப்பித்தன் அவர்கள் சிறந்த மரபுக்கவிஞர்.வேறெவருடனும் அதிகத் தொடர்பு இல்லாததாலும் நிறைய கவிஞர்கள் மரபை எழுதாததாலும் நவீனக் கவிதைக்குப் பரிசு என்றோம். உங்களுடன் பழகியபிறகுதான் மரபை இத்தனை பேர் எழுதுகிறார்கள் என்பது தெரியவருகிறது நிறையபேர் மரபுக்கவிதை நூல்களைப் போடவேண்டும். அவ்வாறு செய்தால் மகிழ்வேன்.

திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்கள் எல்லாம் மரபுக்கவிதையில்தானே எழுதப்பட்டுள்ளன. அப்படியிருக்கும் போது ஏன்நவீனகவிதைக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்?

முக்கியத்துவம் தரவேண்டுமென்பது நோக்கம் இல்லை. நவீன கவிதைக்குக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. நினைத்ததை எழுதிவிடலாம். நினைத்து நினைத்தவாறு எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி நவீனகவிதையை எழுத முடிகிறது. ஆனால் மரபு அப்படியன்று.மரபெனில் எதுகை மோனையுடன் எழுதவேண்டும். வார்த்தைகளைத் தேடி எழுதவேண்டும். அதனால் மரபுக்கவிதை எழுதுவோர் குறைவு. எனவேதான் நவீனக்கவிதை என்று குறிப்பிட்டுள்ளோம்.

ஏன் இலக்கியப்பரிசுகள் தரவேண்டும் என்ற எண்ணம் வந்தது?

அதுதான் முன்பே குறிப்பிட்டேனே. திரு ஜெயந்தன் அவர்களின் நோக்கம் ஒரு எழுத்தாளன் ஒரு படைப்பாளி அவர் வாழுங்காலத்திலேயே பாராட்டப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். அதனால்தான் இலக்கியப் பரிசுகள் தருகிறோம்.

அரிமா சங்கத்தில் உங்களால் தொடர்ந்து எவ்வாறு பயணிக்க முடிகிறது.

நோக்கம்தான் காரணம். சமூகத்திற்குச் சேவையாற்ற வேண்டுமென்ற நோக்கத்தை அரிமாசங்கம் கொண்டுள்ளது. உலகமெங்கும் தொண்டு செய்யும் ஒரு அமைப்பு அரிமாசங்கம். எனது நோக்கமும் சங்கத்தின் நோக்கமும் சங்கத்தில் பணியாற்றுவோர் நோக்கமும் ஒன்றாக இருப்பதால் பலதரப்பட்ட நண்பர்களைச் சந்திக்க இயல்வதாலும் நிறைய அமைப்புகளுடன் தொடர்பு கிடைப்பதாலும் அரிமா சங்கத்தில் பயணிக்க முடிகிறது.

நேரமேலாண்மை குறித்து இளைஞர்களுக்கு ஏதேனும் அறிவுரை வழங்க இயலுமா?

எத்தனை மணிக்கு இரவு வந்தாலும் மறுநாள் காலை 9.00 மணிக்கே வீட்டை விட்டுப் புறப்பட்டு விட வேண்டும். நான் காலை 9.00 மணிக்கே வெளியில் புறப்பட்டுவிடுவேன். எத்தனை மணிக்குப் போக வேண்டும் என்று எண்ணுகிறோமோ அத்தனை மணிக்குச் சரியாகப் புறப்பட்டுவிட வேண்டும். விழாவில் நமது பங்கு நமது நேரம் எப்போது சரியாக இருக்கவேண்டுமோ அந்த நேரத்தில் சரியாக இருக்கவேண்டும். செல்ல இயலமுடியாத சூழல் இருப்பின் அதை முன்கூட்டியே கூறித் தவிர்க்க வேண்டும். எங்கு செல்லவேண்டுமென்றாலும் அந்த ஊருக்கு நான் கால் மணி நேரம்  அரை மணி நேரம் முன்னதாகவே சென்று வி டு வே ன். அவர்கள் அழைக்கும்போது சரியாக அரங்கினுள் சென்றுவிடுவேன். நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்தினால் அது நமக்குப் போதுமானதாக இருக்கும்.

அரிமாவில் அறம்செயவிரும்பு என்று தமிழ்ப்பெயரில்தான் இலக்கை வைத்திருந்தேன்

மனிதம் என்றுதான் நோக்கத்தை வைத்திருந்தேன்

அரிமா சங்கத்தின் வழியாக இரத்ததானம் மற்றும் கண் தானம் செய்திருப்பீர்கள் . அதில் மறக்க முடியாத நிகழ்வு ஏதும் குறிப்பிட முடியுமா?

இரத்ததானம் என்பதே மறக்க முடியாத நிகழ்வுகள்தான். மாணவர்கள் 100 , 200 பேர் என்று கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய போது அவை யாவும் மறக்கவியலாத நிகழ்வுகள்தான். ஒருமுறை கர்நாடக மாநிலத்திலிருந்து ஒரு குடும்பம் மணற்பாறை அருகில் விபத்தில் சிக்கி விட்டனர். அவர்கள் அரிமா சங்கம் வழியாக எங்களைத் தொடர்பு கொண்ட போது நாங்கள் அவர்களுக்கு உதவி வழியனுப்பி வைத்தோம். இது ஒரு மறக்கவியலாத நிகழ்வு. மேலும் அரிமாவில் நான் ஆளுநராக இருக்கும் போது அறம்செயவிரும்பு என்றுதான் இலக்கை வைத்திருந்தேன். நோக்கத்தை “ மனிதம்” என்று தமிழில்தான் வைத்திருந்தேன். இதுவும் மறக்கவியலாததுதான்.

தாங்கள் சென்ற வெளிநாடுகளில் தங்களுக்குப் பிடித்த நாடு எது? ஏன்?

மலேசியா சிங்கப்பூர் சீனா போன்ற நாடுகளுக்குச் சென்றுள்ளேன். பிடித்த நாடு என்று எதுவுமில்லை. அமெரிக்கா கனடா போன்ற நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு வந்த போதும் கொரானா காலத்தில் செல்லமுடியாததாகி விட்டது. மேலும் பலநாடுகளில் உள்ள கட்டுப்பாடுகள் எனக்குப் பிடித்தமானதாக இல்லை. எனவே தவிர்த்து விட்டேன். மேலும் நமது நாட்டை விட அங்கே பார்ப்பதற்கு எதுவும் இருப்பதாக நான் எண்ண வில்லை.

எவ்வாறு தங்களால் சுறுசுறுப்பாகப் பணியாற்ற முடிகிறது?

ஹாஹாஹா தங்களைப் போன்றவர்கள் கொடுக்கும் ஊக்கமும் ஒரு காரணம்தான். எந்த ஒரு விசயத்தையும் நாம் விரும்பிச் செய்யவேண்டும். கடமைக்குச் செய்யக் கூடாது. விரும்பிச் செய்யும்போது சுறுசுறுப்பாகப் பணியாற்ற முடிகிறது.

தங்களுக்குப் பிடித்த இலக்கியம் எது? ஏன்?

சிலப்பதிகாரம்தான் எனக்குப் பிடித்த இலக்கியம். ஏனென்றால் அது ஒரு கதைவடிவத்தில் நமக்குப் பிடித்தமான செய்திகளைத் தருவதால் பிடித்து விட்டது. அப்போது வாழ்ந்த மக்கள் வாழ்க்கைமுறை, வணிகர் நிலை மன்னர்கள் செயல்பாடு போன்றவற்றை அழகாகச் சொல்லியிருப்பதும் குடிமக்கள் காப்பியமாக அது இருப்பதும்தான் காரணம். வணிக அங்காடிகள் பற்றியும் மேடை அமைப்புகள் பற்றியும் சொன்ன இலக்கியம். கண்ணகியைப் பெருமைப்படுத்தியதும் மாதவியைச் சிறுமைப் படுத்தாததும் சிலப்பதிகாரம்.  கண்ணகியின் துணிவைச் சொல்லும் அதே நேரத்தில் மாதவியையும் தரம்தாழ்த்தாது படைக்கப் பட்டிருப்பது சிறப்பு.  முத்தொள்ளாயிரம் குற்றாலக்குறவஞ்சி போன்றவையும் எனக்குப் பிடித்தவையே. இவற்றைத் தாண்டி திருக்குறள். திருவள்ளுவரைத்தாண்டி எவரும் எழுத இயலாது என்பது எனது கருத்து

தஞ்சைத் தமிழ் மன்ற விழாவில் ஆசிரியர்களுக்கு அரிமா சௌமா அவர்கள் விருதுகள் வழங்கிய போது…
தஞ்சைத் தமிழ் மன்ற விழாவில் இளங்கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கிய போது…

தங்களுக்குப் பிடித்த கவிஞர்களைப் பட்டியலிட முடியுமா?

பாரதிதாசன் பாரதியார் இருவரும் எனக்குப் பிடித்த கவிஞர்கள். இப்போது உள்ள கவிஞர்களில் நிறைய கவிஞர்கள் கவிதை நூல்கள் போட்டுள்ளனர்.  கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். தமிழ்மணவாளன் முதலாக நவமணிராஜன் வரையிலான கவிஞர்கள் நிறைய நூல்கள் எழுதியிருந்தாலும் அவற்றைப் முழுமையாக என்னால் படிக்க இயலவில்லை.

தமிழ்நெஞ்சம் குறித்துத் தங்கள் கருத்து என்ன?

நீண்ட காலமாக செயல்பட்டு வரும் தமிழ்நெஞ்சம் இதழுக்கு எனது இனிய வாழ்த்துகள். தொடர்ந்து தமிழ்ப்பணியை மேற்கொண்டு வரும் உங்களுக்கும் தமிழ்நெஞ்சத்திற்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இப்படியொரு வாய்ப்பை தந்ததற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..