I மின்னிதழ் I நேர்காணல் I விஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி, தம்பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டு தமிழ்ப்பணி செய்திருப்பாரா? ஜி யு போப் நான் ஒரு தமிழ் மாணவன் என்று வெளிப்படையாக அறிவித்திருப்பாரா? ஒரு தேம்பாவணியும் சீறாப்புராணமும் நமக்குக் கிடைத்திருக்குமா?  கவிக்கோ அப்துல் ரகுமான் கவிஞர் மு மேத்தா கவிஞர் இன்குலாப் போன்ற இசுலாமியக் கவிஞர்களை நம் தமிழ்தானே வாரி வழங்கியிருக்கிறது.

அவ்வரிசையில் இம்மாதம் நாம் நேர்காணல் செய்துள்ள கவிஞரும் வருகிறார். இவரது கவிதைகள் காதற்சுவை தமிழ்மொழிச் சுவை அங்கதச் சுவை என பல்வேறு சுவைகளைக் கொட்டும் வகைகளில் எழுதப்பட்டிருக்கும். அருகில் ஒரு அகராதி வைத்துக் கொண்டுதான் படிக்க வேண்டும் எனுமளவுக்குப் பழஞ்சொற்களைக் கையாளுவதில் வல்லவர். பாகுபாடின்றி எழுதும் கவிஞர். பவானியாற்றங்கரையில் வசிக்கும் கவிஞர் சையத் யாகூப்  அவர்களை நம் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ…

ஏப்ரல் 2024 / 128 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

  • வேங்கைமார்பன் என்ற பெயரின் இரகசியம் என்ன?

ஒரு தமிழ்ப் பாவலரை, அடியேனை தமிழ்ப் பெயராலும் உலகத்திற்கு அறிமுகம் செய்யலாம் என்று ஒரு புனைப் பெயரை தேர்வு செய்தேன். மதம், குலம் ஏதும் கலவாதப் பெயராக இருக்கும் பட்சத்தில் மத நல்லிணக்கம் கொண்டு  அனைத்து மதத்தையும் சமமாகப் பாவிக்கும் எனது எழுத்துக்களுக்கும் பொருந்தட்டும் என்ற எண்ணம். அதன் வெளிப்பாடு “வேங்கை மார்பன்”

  • தாங்கள் பிறந்த ஊர் மற்றும் பெற்றோர் குறித்து..

நான் பிறந்தது ரம்மியமான இயற்கை சூழல் அமைந்த மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், நெல்லை மாவட்டத்தில் அமைந்த “பணகுடி” என்னும் சிற்றூர். தந்தை காவல் துறையில் பணிபுரிந்த,  இறையச்சம் கொண்ட சாமானியர். தாயார் இல்லத்தரசி. நடுத்தர குடும்பம்.

  • தங்கள் இளமைக்காலக் கல்வி மற்றும் பட்டங்கள் குறித்து.

பள்ளி இறுதி வகுப்பு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் “திலகர் வித்தியாலயம்”.  தமிழில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி. கணிதம் இளங்கலை படித்தது நெல்லையில் அமைந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில், முற்றும் ஆங்கில வழிக் கல்வி.

  • கவிதை எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?

ஆரம்ப காலத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பற்று அதிகம். கணிதம் விருப்ப பாடமாக அமைந்தாலும் ஆங்கில இலக்கியம் மற்றும் புதினங்கள் நிறையவே படித்தேன். அதே சமயம் தமிழ் இலக்கிய இதிகாசங்களையும் விட்டு வைக்கவில்லை. பிடித்த எழுத்தாளர் நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், தி. ஜானகிராமன். பாரதியார் பாடல்கள் மேல் காதல் அதிகம். ஆனால் நான் கவிதை எழுத தூண்டியது நிச்சயம் செந்நாப் போதார் வள்ளுவர்தான். எதற்கு எடுத்தாலும் திருக்குறளை கோடிட்டுக் காட்டுவேன். அந்தச்

சொற்கள் மனதில் எப்போதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். கேட்டால் வேடிக்கையாக இருக்கும். நான் முதன் முதலில் பத்திரிகையில் எழுதியது அஞ்சலி கவிதைதான்.  முகநூலில் எளிமையான தமிழில் உரைநடை கூட கவிதை எனும் பெயரில் பதிவுகளாய் வந்து கொண்டு இருப்பதைப் பார்த்தவுடன் நாமும் ஏன் முயற்சி செய்யக் கூடாது என்று தோன்றியது. முதலில் கவித்துவமாக பின்னூட்டங்கள் போட ஆரம்பித்தேன். பின்னர் சில கவிஞர்கள் கொடுத்த ஊக்கத்தில் “நிலாமுற்றம்” என்ற குழுமத்தில் எழுத ஆரம்பித்தேன். இன்று உங்கள் முன் “வேங்கை மார்பனாக” நிற்கிறேன்.

ஓசூரில் நடைபெற்ற கவியரங்கில் திரு ஆவடிக்குமார் அவர்களிடம் விருது பெற்றபோது...
கவிஞர் ரூபா அன்ரன் சுவிஸ், ஓசூர் மணிமேகலை ஆகியோருடன்...
  • கவிதை என்றால் என்ன என்று கருதுகிறீர்கள்?

கவிதை என்பது வெறும் உதடுகள் படிக்கக் கூடாது. படிப்பவரின் சிந்தையை உரசிச் செல்ல வேண்டும். கவிதை என்பது ஆற்று வெள்ளம் போல் ஓட வேண்டும். நான்கு எல்லைக்குள் அணையாக அடக்கக் கூடாது. கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று நன்னூல் சொல்கிறது .

“சில சொற்களில், பலவிதமான பொருள்களை, சிறப்பான ஒரு கண்ணாடியில், துல்லியமாக காட்டுவது போல திடமாக, நுட்பமாக சிறப்பாக சொல்வது கவிதை”

பாடல்

“சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்”

கவிதையிலி சொல்லாட்சியும் இருக்க வேண்டும். தனித்துவம் இருக்க வேண்டும்.

  • கவிதை எழுதும்போது யாரை முன்மாதிரியாக வைத்து எழுதுகிறீர்கள்?

கவிதை எழுத யாரையும் முன்மாதிரியாக வைக்க வில்லை.  எனக்கு மாதிரி நானே தான்

  • அரபி உருது இந்தி ஆங்கிலம் எனப் பிறமொழிகள் அறிந்துள்ளதாகத் தெரிகிறதே. அதில் உள்ள இலக்கியங்களைப் படித்துள்ளீர்களா?

தமிழ் ஆங்கிலம் இந்தி உருது ஆகிய 4மொழிகள் தெரிந்தாலும் தமிழ் ஆங்கில இலக்கியங்கள் தான் அதிகம் படித்து இருக்கிறேன். இந்தி உருது கலந்த திரைப்பாடல்கள் அதிகம் தினந்தோறும் கேட்பேன். அநேகமான பாடல்கள் இலக்கிய தரத்தையும் விஞ்சும் அளவில் இருக்கும்.

  • ஆங்கிலக் கவிதைகள் எழுதுவீர்களா? ஏதாவது ஒன்றைச் சொல்லமுடியுமா?

அறிவு முதிர்ச்சி அடையும் முன்னர் ஆங்கிலத்தில் கவிதை என்ற பெயரில் சில பல எழுதினேன். பாதுகாத்து வைக்கவில்லை.

  • தமிழ்க் கவிதைகளை ஏன் நீங்கள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யக் கூடாது?

என்னைப் பொறுத்த மட்டும் மொழிமாற்றம் செய்யுங்கால் மூலத்தில் உள்ள சுவை மொழிமாற்றக் கவியில் வருவதில்லை. பொருள் இருக்கும். சிறந்த வரிகள் கூட மிக சாதாரணமாக தெரியும். பிரத்தியேகமாக அந்தந்த மொழிக்கு கவித்துவமான சொற்கள் உண்டு. இணைச் சொல் தேடுவது கடினம். இரண்டு மொழியிலும் தேர்ந்த கவிஞராக இருந்தாலும் ஒப்புமை செய்வது சிரமம். சூர்ப்பனகை வர்ணனை கம்பகாதையில்

“பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்”

இதையெல்லாம் மெருகு குறையாமல் மொழி மாற்றம் செய்ய ஷேக்ஸ்பியர் காலத்திற்கு செல்ல வேண்டும்.

கிருட்டிணகிரியில் ஒரு கவியரங்கில் விருது பெற்றபோது
கவிஞர் இராம வேல்முருகனுடன் ஒரு நிகழ்வில்
நிலாமுற்றம் ஆண்டு விழாவில் கவிஞர் முத்துலிங்கத்திடம் விருது பெற்றபோது அருகில் முத்துப்பேட்டை மாறன்
பல்லடத்தில் நடந்த கவியரங்கில் மற்ற கவிஞர்களுடன்
சந்ரோதய விழாவில் விருதுபெற்றபோது
கவியரங்கில் மற்ற கவிஞர்களுடன்
கவிமுகில் விருதுபெற்றபோது
  • நீங்கள் எழுதும் கவிதைகளில் ஏராளமான புழக்கத்தில் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவது ஏன்?

நான் அதிகம் பழைய இலக்கியம் தேடிப்பிடித்து படிப்பதுண்டு. கவிதை எழுத ஆரம்பிக்கு முன்னர் நெடுநல்வாடை, திருப்புகழ், தேவாரம், திவ்விய பிரபந்தம் என்று சிறிது நேரம் படிப்பதுண்டு. நினைவில் உள்ள சொற்கள் தாமாகவே வந்து விழும். கம்பனை கொஞ்சம் அதிகமாக படிப்பேன் அவ்வப்போது.

  • தமிழ்ச் சொல்வளத்தை எவ்வாறு பெருக்கிக் கொள்கிறீர்கள்?

அதிகம் படிப்பதுதான் காரணம். மற்றவர்கள் கவிதைகளையும் விரும்பிப் படிப்பேன். படிக்க படிக்க சொல் வளம் பெருகும். படித்த சொற்களை பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் நமக்கே மறந்து போகும்.

  • தங்களுக்குப் பிடித்த 5 கவிஞர்களைக் கூற முடியுமா?

கண்ணதாசன்,
மருதகாசி,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
வாலி,
முத்துக்கூத்தன்

  • தற்காலக் கவிஞர்களில் உங்களைக் கவர்ந்த கவிஞர்கள் இரண்டொருவரைக் கூற இயலுமா? ஏன்?

திரையில் விக்டர் தாஸ், வைரமுத்து, முத்துக்குமார். முகநூலில் பொன்மணி தாசன், மன்னை மணிமாறன், கமல சரசுவதி, இராம வேல்முருகன் வலங்கைமான், பட்டுக்கோட்டை ராஜா, இம்மானுவேல் ஆலன்ஸ் இத்யாதி..

சென்னையில் 1000 கவிதைகள் நூல் வெளியீட்டுவிழாவில் கவிஞர்கள் ஞானி, சரஸ்வதி பாஸ்கரன் ஆகியோருடன்
பெயரனுடன் கவிஞர் சையத் யாகூப்
  • இதுவரை தாங்கள் எழுதியுள்ள நூல்கள் ஏதாவது உள்ளதா?

இப்போது தான் முதல் நூல் தயாராகிக் கொண்டு இருக்கிறது. முன்னர் சந்தர்ப்பம் இணைந்து வரவில்லை.

  • முகநூல் ஒரு இருபுறம் கூர்மையுள்ள கத்தி என்பது உண்மையா?

ஆம், இருமுனைக் கத்தி போல் தான் முகநூல். ஒரு முனை அறிவு விருத்தி, திறமையை வெளிக் கொணர எளிமையான ஊடகம். மறுமுனை நேரத்தை அபகரிக்கும் முதலை. அளவோடு அறிவோடு பயன்படுத்த அட்சயப் பாத்திரம்.

  • கவிதை எழுதும் கலையை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர் யார்?

கவிதையை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. புதுக்கவிதை வந்தபிறகு எப்படி எழுதினாலும் ஒரு பாணி. ஆனால் கருவுக்கும் சொற்களுக்கும் ஆரம்பத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் எழுதி வந்தேன். ஓரிரு முறை தஞ்சைத் தமிழ் மன்றம் நடத்தி வரும் தமிழ்ச் செம்மல் இராம வேல்முருகன் வலங்கைமான் அவர்கள் மேலோட்டமாக சில குறிப்புகளைச் சொல்ல அதை   கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அவருக்கே அது ஞாபகம் இருக்காது. தமிழ்ப் பணி என்றால் எனக்கு ஞாபகம் வருவது அவர் பெயர்தான்.

  • அல்லாவையும் இராமனையும் பற்றி ஒரு கவிதை தரஇயலுமா?

வேறு தலைப்பு கொடுங்கள். இப்போது அரசியல் வட்டாரத்தில் இதை ஒத்த கருத்து பெரும் பிரச்சினைய கிளப்பி உள்ளது.

  • எதிர்காலத் திட்டம் என்ன?

எனது படைப்புகள் அதிகம் காதல் கவிதைகளாக இருக்கும்,  காரணம் எனக்கு கொடுக்கப் பட்ட தலைப்புகள் அப்படி. இனிவரும் நாட்களில் சமூக சீர்திருத்த கவிதைகளுக்கு முதலிடம் கொடுத்து பிற்கால சந்ததிக்கு பயன்படுமாறு எழுத திட்டம்

  • இளைஞர்களுக்கும் வளரும் கவிஞர்களுக்கும் தாங்கள் கூறும் அறிவுரை யாது?

வளரும் கவிஞர்கள் முதலில் எழுத்துப் பிழை இல்லாது எழுதப் பழக வேண்டும். நாம் எழுதும் நான்கு எழுத்துக்கள் நான்கு பேருக்காவது பின்னாளில் பயன்படப் போகிறது, ஆகையால் சிறிதேனும் தமிழை வளர்க்கும் எண்ணத்தோடு எழுதப் பட வேண்டும். வெறும் எதுகை மோனை இயைபு மட்டும் இருந்தால் போதும் என்று உரைநடையாகவோ அல்லது கன்னாபின்னாவென எழுதாமல் கட்டுக்கோப்போடு எழுத வேண்டும்.

  • தமிழ்நெஞ்சத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ் நெஞ்சம் பத்திரிகை பலராலும் பேசப்பட்டு வருகிறது.  சாமானியர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து ஒரு நடுநிலை பத்திரிகையாக வளர்ந்து வருகிறது. தமிழ் பணியில் ஒரு முக்கிய பங்கு ஆற்றி வருகிறது. மென்மேலும் வளர்ச்சி அடையவும் புகழ் பெறவும் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஈரோட்டில் குறள்நெறிக்கவிஞர் விருது பெற்றபோது


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »

நேர்காணல்

உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்

 நேர்கண்டவர் :

தமிழ்செம்மல் 
இராம வேல்முருகன் வலங்கைமான்

 உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?

           என் சொந்த ஊர் –

 » Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்  »

நேர்காணல்

தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்

நேர்கண்டவர் :
தமிழ்நெஞ்சம் அமின்

மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?”

ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார்.

 » Read more about: தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்  »