வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே. அங்கொன்றும் இங்கொன்றுமாக தெறிக்கும் மின்னல்கள் மகிழ்ச்சியை வழங்குவதும் தேடித்தேடி அவற்றைக்காண்பதும் ஒரு சுவை.
தோழியர் ரிம்ஸா டீன் எழுதிய ‘‘மொழி பெயர்க்கப்படாத மெளனம்’’ அவ்வகையான இனிய நுகர்வை வழங்குவது மகிழ்வு மகிழ்வு மகிழ்வு மகிழ்வு.
தலைப்பே பல தாக்கங்களை எழுப்புகின்றன. பேசுகின்ற பேச்சுக்களின் செறிவினை விடவும், பேசாத மெளனத்தின் அர்த்தங்கள் அதிகமல்லவா?? நான் சொல்லியவை முறையே உணர்த்துவன அளவற்றைவை என்று இந்த நூலின் தலைப்பே நம்மை ஆழமாக அழைக்கின்றது.
பெண்ணுள்ளம் கொண்ட மென்மையும் சிறுவோர்ச் சீறும் உக்கிரமும் அடியூற்றாய் இழையோடும் அன்பின் சுவையும் நூல் முழுவதும் ஊசலாடுகின்றன.
நூலை திறக்கும் போதே சான்றோர் களின் வாழ்த்துரை வரிசை சுட்டி அழைக்கின்றது. நூலின் சுவைத்தேர்ந்த தேனீக்களின் முரல்கை மகிழ்ச்சிப் படுத்துக்கின்றது .
பதிப்பாசிரியர் தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் ஒசோ வின் கருத்துருவோடு தொடங்கியுள்ள திறனாய்வு அருமை.
தாயாருக்கு காணிக்கையாக தொடங்கு கின்றது நூல்…. இருவேறு முகம் காணப்படும் மனிதர்களை வாசிக்க முயல்கிற புறப்பாடு நன்று. ‘‘நேரத்துக்கு நேரம் மாறிடும் ஓணான் கூட்டம் போல் நேரம் வந்தால் தன் சுயரூபத்தை மாற்றியே போற்றி வாழும் மனித மாணிக்கங்கள்’’ என்ற எண்ணல் நன்று நனிநன்று.
‘‘முழுமைக்காண கவிதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவே பரீட்சையாய் எழுதுகின்றேன்’’.
‘நானும் எழுதி முடித்திடுவேன் புதுக் கவிதைகளை’
இவை தெறிக்கும் மின்னல் அழகு.
தந்தைக்காக உறவுக்காக எழுதப்பட்ட கவிதைகள் பரிவு எனும் மைதோய்த்து எழுதப்பட்டுள்ளன.
முத்தாய்ப்பாகத் தாய்வீட்டுக்கு விருந்தாளி யாக மகளின் உணர்ச்சி மழை உயிரோட்டமாக நனைகின்றது.
அகதி என்கின்ற கவிதையின் வலி சொல்லி மாளாது.
பள்ளி நாட்கள் பருவம் எய்திய காலம். நட்பின் பட்டாம்பூச்சிப் பருவம், காதலின் வருகை, கணவனோடு கனிந்த குடித்தனம், கருச்சுமந்த தாய்மை, மகளைப் போற்றி வளர்க்கும் அன்னை, மகளை வளர்க்கும் தாய் காட்டும் கடுமை, கனிவின் கற்கண்டு அல்லவா?? தாயுமானவளாக ‘‘நான் உன்னை என் இருவிழிகளுக்குள் அடைகாக்கின்றேன்’’ என்ற உணர்வின் வீச்சு சிறப்பு.
‘‘நீயெனக்கு பொருளல்ல பொக்கிஷமே இதை நீயறியமாட்டாய் பெண்ணே’’ என்ற அன்பின் தெளிவு அழகு.
கருவறை பூக்களாக மகவை மடி சுமக்கும் தாய்மையின் மொழி அழகே அழகு. எதுவும் அழகு.
எனும் அழகுப்பட்டியல் கவிஞரின் இயற்கைத் தோய்வினை எடுத்துக்காட்டும் பேரழகு என்று பல படிநிலைகளைப் பெண்ணியல்கள் பேரழகாக மைதோய்த்து வடித்திருக்கி்ன்றார் தோழியார் ரிம்ஸா டீன்.
எழுத எழுத இன்னும் கவிதை கனியும். எழுத்தின் கூர்மை கூடும் எழுதுக தோழியே வாழிய வாழிய.
நூல் மதிப்புரை : கவிமுகில் தங்க அன்புவல்லி, பட்டுக்கோட்டை தமிழ்நாடு.
நூல் விலை : 350 (இலங்கை ரூபாய்)
பக்கங்கள் : 112
தொடர்புகளுக்கு…
அலைபேசி : +94 777555946
இமெயில்: editor@tamilnenjam.com