இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம்
பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!
அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.
அஸர் தொழுகையை நிறைவேற்றிய கையோடு பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்கள் விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் பாவேந்தலின் நண்பருமான கவிஞர் எழுகவி ஜெலீல் அவர்களால் அழைத்து வரப்பட்டு விழா மண்டபத்தின் தெற்கே சுமார் இருநூறு மீட்டர் தூரத்தில் மோட்டார் வண்டியில் இருந்து இறங்கினார்.
இலங்கையின் பலபாகங்களிலும் இருந்தும் 25 க்கு மேற்பட்ட இலக்கியக் குழுமங்களும் பிரான்சில் இருந்து தமிழ்நெஞ்சம் மின்னிதழும் பதாகைகளைத் தொங்கவிட்டு பாவேந்தலை வாழ்த்தியிருந்த காட்சி மனதை நிறைத்தது.
அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் பொல்லடிக் குழுவினர் அணிவகுத்து நிற்க, முகநூல் தொலைக்காட்சிகள் நேரலை காணொளி களைப் பரப்பிக் கொண்டிருந்தன. பிரதான வீதியின் இருமருங்கிலும் பாலமுனை மக்கள் திரண்டிருந்த வேளை, வரவேற்புக் குழுவினரால் ஆளுயர மாலை அணிவித்து, விழா மண்டபத்தை நோக்கி “லாயிலாக இல்லல்லாஹு” என்று தொடங்கும் “பைத்” தொலியோடும் பொல்லடியோடும், ஒரு மன்னனைப் போல உடை தரித்தபடி, பாவேந்தல் பாலமுனை பாறூக் அவரது பேரர்களுடன் கைகோர்த்தபடி, காத்தான்குடி வரலாற்றில் ஏடு புகழ் புஹாரி மௌலவி, பாவலர் சாந்தி முகைதீன், கலாஜோதி பௌஸ் மௌலவி மற்றும் பெரும்பாலான கலை இலக்கியவாதிகள் இலங்கை வங்கி அம்பாரை மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தின் உறுப்பினர்கள் புடைசூழ விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளரும் பிரதிப்பணிப்பாளருமான பஷீர் அப்துல் கையூம் அவர்கள் நிகழ்வுகளை நெறிப்படுத்த சுமார் நான்கு பதினைந்தளவில் புனித திருமறையின் “கிறாஅத்”துடன் விழா ஆரம்பமாயிற்று.
தேசியகீதம் தமிழில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.பின்னர் மறைந்த கலை இலக்கியவாதிகளை நினைவேந்தும் பொருட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வையடுத்து தென்கிழக்கின் கவிஞர்கள் முஜாமலா குழுவினரால் வரவேற்புப் பாடல் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து….
வரவேற்பு மற்றும் விழா அறிமுக உரைகளை விமர்சகரும், விழாக்குழுவின் தலைவரும், அ.இ.இ.ஆசிரியர் சங்கத்தின் தேசிய தலைவருமான ஜெஸ்மி எம் மூஸா அவர்கள் மொழிந்தார்.
அவ் வுரையின் பின்னர், பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களுக்கு, முன்னிலை நட்சத்திரமாகப் பிரசன்னமாகி இருந்த முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்கள் பொன்னாடை போர்த்த விழாக்குழுவினர் மாலை அணிவித்தனர்.
அம்பாரை மாவட்ட இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் ஏ.எல்.எம். சாபூர் அவர்களினால் தலைப்பாகை (கிரீடம்) அணிவித்தும் உறுப்பினர்களினால் சால்வை அணிவித்தும் கௌரவிக்கப்பட்ட து.
இது பார்த்து, பாவேந்தல் அவர்களின் மனைவி, மக்கள் குடும்பத்தினர் ஊரவர்கள் உட்பட மண்டபத்தை நிறைத்திருந்த கலை இலக்கியவாதிகள், அனைவரினதும் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பனித்ததற்கு கைக்குட்டைகளை மறந்து அவர்கள் விரல்களினால் துடைத்துக்கொண்ட காட்சியே சாட்சி.
கலை இலக்கிய வரலாற்றில் இதுவரை கண்டிராத கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது இவ்விழா.
இது இலக்கியத்தைக் கொண்டாடிய இதயங்களின் அகம் நிறைந்த ஆத்மார்த்தமான கௌரவமாகவே அமைந்திருந்தது
தொடர்ந்த நிகழ்வுகளில்…
பொன்னேடு பற்றிய நூலாய்வினை எழுத்தாளரும் விமர்சகருமான எம்.அப்துல் றஸாக் எம் ஏ. அவர்கள் வழங்கினார். காத்திரமான அறிமுகப் பதிவாக அமைந்திருந்தது அது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் அவர்களின் பிரதிநிதிகளாக சகோதரர் றிப்கான் அவர்களோடு வருகை தந்திருந்த முன்னாள் திருமலை மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் மஹ்ரூப் அவர்களும் உரையாற்றினார்.
கௌரவிப்புகள், நூற் பிரதிகள் வழங்கல். பாடல் என விழா கூர்மையடைந்து கொண்டிருந்தது .
“மூன்று நவீன காவியங்கள்” மற்றும் “மீளப் பறக்கும் நங்கணங்கள்” நூல்களின் மீதான விமர்சனங்களை பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் நிகழ்த்தினார். பாவேந்தலின் கவியாளுமையை பறைசாற்றிய பேருரை அது.
பின்னர் பாடல், வாழ்த்துப்பா, பாவேந்தல் பாறூக் அவர்களின் தலைமையில் கவியரங்கில் கலந்து கொண்ட கவிஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள்….என நீண்டது விழா!
மீண்டும் பாவேந்தலை ஊர் சேர்ந்து ஒன்றுகூடி ஒரு தொகையினர் முண்டியடித்து பொன்னாடை போர்த்தி,நினைவுச் சின்னங்கள் வழங்கி வாழ்த்தி கௌரவித்தது பார்வையாளர்களை மனம் மகிழச் செய்தது.
கனதியான ஆக்கங்கள் உட்பொதிந்த 290 பக்கங்களைக் கொண்ட “பாவேந்தல் பொன்னேடு” என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது .பொன்விழாவின் சிறப்பம்சம் எனலாம்.
பலதரப்பினராலும் சிலாகித்திப் பேசப்பட்ட இவ்விழா சிறப்பாக அமைய பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நன்றி கூறுவதில் உள்ளம் பூரிப்படைகின்றோம்.
எழுகவி ஜெலீல்,
ஒருங்கிணைப்பாளர்,
பாவேந்தல் பொன்விழாக் குழு..
மற்றும்
தமிழ்நெஞ்சம் ஆசிரியர்கள்