மரபுக் கவிதை

உழவுத் தோழன்… (மண்புழுக்கள்)

மண்மகள் மடியில் உழன்றாடி
மழைமேகத் துளியில் உடல்நீராடி
மக்கியத் தழைகளில் விருந்தோம்பி
மண்ணைப் பொன்னாக்கும் அபரஞ்சி

வளை உருளையாய் நீள்கொண்டு
தசை நார்களால் இடம் பெயரும்
இனம் நிலைக்க கிளைடெல்லம்
இடை துண்டாயின் மீள்கொள்ளும்

ஏர்முனை துணையாய் முன் உழுது
வேர்முனை சுவாசம் சீராக்கி
போரடிக்கும் களத்தை மிருதாக்கி
நீரோட்டம் பயத்திடும் மண்ணுயிரி

மரித்த மண்ணை உயிர்த்திடும் சஞ்சீவி
களிமண் குழைவை முறித்திடும் காஞ்சுகி
வேர்காய்ப்பை தணிக்கும் பஞ்சக்கிருதி
கார்பொழிவில் மண்ணரிப்பை தடுக்கும் பஞ்சமி

ஆண்பெண் அற்ற அர்த்தநாரீ
அகிலம் காக்கும் சுவீகாரி
அரை இருபக்கச் சமச்சீர் உடலி
அயனவன் படைப்பில் கொடையாளி

உழவனின் உண்மை உதவிக்கரம்
உக்கிரமாய் உயர்த்தும் மண்ணின் தரம்
உகமகள் ஊழியனாய் உச்சவரம்
உச்சிட்ட உண்டையாய் மண்புழுஉரம்

பாரதத்தின் மண்புழுக்கள் பலநூறு ரகம்
அறுவகையே பயன்தரும் மண்புழுஉரம்
முறையாய் காப்பின் மண்வளம் பெருகும்
மூன்று போகமும் மகசூல் அரும்பும்

வளைதசைப் புழுக்களைப் பெருக்கிடுவோம்
மண்புழுஉரங்கள் உற்பத்தி செய்திடுவோம்
பொன்பொருள் சந்ததிகளுக்கு சேர்ப்பதைவிட
மண்வளம் குன்றாது வளம் காத்திடுவோம்!

 » Read more about: உழவுத் தோழன்… (மண்புழுக்கள்)  »

புதுக் கவிதை

எனக்குப் பிடித்த தனிமையுடன்….

வெகுநேரம் மௌனத்துடன்
பேசிக் கொண்டே இருக்கின்றேன்
எனக்குள்ளே தொலைந்து தொலைந்து
என்னையே நான் தேடுகிறேன்

எனக்குள்ளே வினாக்கள் தொடுத்து
இதமான விடையை எழுதுகிறேன்
மனக் கணக்கு போட்டு போட்டு
சாதக விடியலைக் காண்கின்றேன்

கண்களுக்குள்ளே கனவுகள் பதித்து
கவிதைகள் நூறு படைக்கின்றேன்
கதைகளுக்குள்ளே ஆழ்ந்து மூழ்கி
கதாப்பாத்திரங்களுடன் உறவாடுகின்றேன்

கடந்துபோன ஞாபகங்களை
இதய ஏட்டில் புரட்டுகிறேன்
காயப்பட்ட நிகழ்வுகளுக்கு
மறதியை மருந்தாய் பூசுகிறேன்

மாய உலகில் சஞ்சரித்து
மறுமையைக் காணத் துடிக்கின்றேன்
ஆருயிரான ஆன்மாக்களுடன்
அளவளாவி மகிழ்கிறேன்

ஆத்திரத்தில் உதிர்த்த வார்த்தைகளை
சொல்லாட்சியில் அழிக்கின்றேன்
அறியாது செய்தப் பிழைகளுக்கு
மனசாட்சியிடம் மண்டியிடுகின்றேன்

எனக்குப் பிடித்த ஏகாந்தத் தனிமை
என்றும் என்றும் என்னுடனே
பிணக்குக் கொண்டுப் பிரிந்தாலும்
திணித்து எனக்குள் வாழ்ந்திடுவேன்!

 » Read more about: எனக்குப் பிடித்த தனிமையுடன்….  »

புதுக் கவிதை

சாதிக்கு சிதை மூட்டிய செங்கமலம்!

வேப்பமர தண் நிழலில்
உதிர்ந்த மலர் வெளிர் கம்பளம் விரிக்க
வான் சொரியும் பன்னீர் துளியால்
தேன் சுரந்து வண்டுகள் கிறங்க

மார் முலைக்குள் முகம் புதைத்த
மதலையின் மணி பால் பற்கள்
தூர் பதிந்த வெண் முத்தாய்
வேர் பிடித்து உயிர் துளிர்க்கும்

ஏர் உழவன் சால் இறைக்க
விழித்த பயிர் நீர் குடிக்க
போர்களத்துச் சிப்பாய் போல்
மார்விறைத்து தோள் உயர்த்தும்

அங்கே…….

 » Read more about: சாதிக்கு சிதை மூட்டிய செங்கமலம்!  »

மரபுக் கவிதை

தென்றல்விடு தூது!

தென்றல் அவள் மேலாடை

தென்றல் அது தாலாட்ட
மேலெழுந்த அவள் நூலாடை
முக்காடாய் அவன் முகம் வருட

வசியம் செய்யும் அவள் வாசம்
சுவாசமாய் அவன் நாசிபுக
முழுதாய் அவளை முழுங்கிவிட
அனுபவக் காற்றை தூதுவிட்டான்

எடுத்திடவோ கொடுத்திடவோ
காதல் மட்டுமே அவன் கையிருப்பாய்
மறுத்திடவோ ஏற்றிடவோ
நாணம் மட்டுமே அவள் தவிப்பாய்

மண்ணில் திரியும் நிலவுமகள்
கண்ணுக்குள் அவனைக் குவிக்க
இடை புகுந்த துணைக் காற்று
எட்டப்பனாய் காட்டிக் கொடுத்தது

நடுவில் படர்ந்த நடைதூரம்
நாலடிக்குள் சுருங்கி அருங்கி
தடைத் தகர்த்து இடைத் தூர்ந்து
இடைப் பற்றியது மன்மதக் கரம்

உடைப்பற்றிய ஊதக் காற்று
மடைத்திறப்பிற்கு கற்பூரம் காட்டி
விடைத் தெரியா இனபத் தவிப்பிற்கு
படையல் போட்டு பசியாற்றியது!

 » Read more about: தென்றல்விடு தூது!  »

புதுக் கவிதை

அகழ்வாராய்ச்சி!

வாழ்க்கைச் சக்கரம் பலகாதம் சுழன்று
காதோரம் நரைத்தட்டி காய்ப்புகளேறி வடுவாய்…
உள்ளிருந்து உறுத்தும் புண்களை ஆற்றிட
நெஞ்சகக்கூட்டின் புதையுண்ட இளமை சுவடுகளை
நினைவேடுகளாய் புரட்டி அகழ்வாராய்ந்தான்
ஓரமாய் நனைந்துக் கிடந்தன இதய அஞ்சல்கள்….

 » Read more about: அகழ்வாராய்ச்சி!  »

மரபுக் கவிதை

தற்காப்புக் கலையே பிரணவமாகும்..!

நசையெலாம் நனவாய் நிகழ்த்திட
—– அசைமலர் அடர் நந்தவனத்தே
பூசை கொள் தலைவன் வருகைக்காய்
—– ஆசையால் அலர்விழி காத்திருந்தாள்
கண்ணனவன் கழற் கூடிடுவான்
—– முன்னமவன் செப்பிய வாக்கால்
கன்னம் வைக்கும் கைச்சிறையில்
—–

 » Read more about: தற்காப்புக் கலையே பிரணவமாகும்..!  »

கவிதை

காற்றாடியின் இலட்சியப் பயணம் …

உள்ளத்தில் உரத்தை ஏற்றியது உறுதி கொண்டு விண்ணை நோக்கியது உற்சாகக் குருதி உடலை கிளர்ந்தது நம்பிக்கை ஒளி கொந்துதலால் தும்பிக்கை பலம் உந்துதலால் எம்பி எம்பி உயர எழுந்தது எதிர்படு இடர்களை கடந்தது எதிர்நோக்கு உச்சியை எய்தது

கவிதை

பொங்கலோ பொங்கல் ..!

ஏர் தந்த சீதனத்தை பார் கண்ட எளியவர்க்கு கார் கொண்ட உள்ளத்தால் சீர் கொண்டு பகிர்ந்தளித்து பொங்கிடும் அவர் புன்னகையில் புதுப் பொங்கல் சமைத்திடுவோம் !!!