வாழ்க்கைச் சக்கரம் பலகாதம் சுழன்று
காதோரம் நரைத்தட்டி காய்ப்புகளேறி வடுவாய்…
உள்ளிருந்து உறுத்தும் புண்களை ஆற்றிட
நெஞ்சகக்கூட்டின் புதையுண்ட இளமை சுவடுகளை
நினைவேடுகளாய் புரட்டி அகழ்வாராய்ந்தான்
ஓரமாய் நனைந்துக் கிடந்தன இதய அஞ்சல்கள்….

மௌன சாம்ராஜ்யத்தில் மண்டியிட்டுக் கிடந்த
சலனமற்ற நிறைதெப்ப மனதில்
சட்டென வீழ்ந்த கூழாங்கல் நினைவுகள்
நெற்றிப் பொட்டில் துடிப்பாய் தெறிக்க
ததும்பும் தடாக இருவிழிகள் கசிந்து
கன்னங்கள் தடையின்றி வடிகாலாயின

தூரெடுக்கப்பட்ட ஆழ்மன கிணற்றில்
வேரொடு சுகந்தமான அவள் நிகழ்வுகளுடன்…
பாராயணம் செய்த அஞ்சலவள் வரிகளை
ஆராதனை அம்சமாய் வருடிட
தோரணமாய் கைக்கோர்த்து அவனை
பேரண்டத்திற்கு அப்பால் இழுத்துச் சென்றன

அரூபமாய் ஒளியாண்டில் பயணித்து
காலங்களுக்குள் பின்னோக்கி ஓடினான்
விதிகளை மீறி மதியவளுடன் உலவிட
காதல்தேசம் தணிக்கையின்றி விழித்திரையில் படமானது
சத்தமின்றி மோதிய முத்த யுத்தத்தில்
மாய்ந்துக் கிடந்த காட்சிகள் ஒளியானது

கார்பிளந்த மரத்திடை நுழைந்து
ஆப்பசைத்த குரங்காய் உளம் நய்ந்தது
வார்த்த சொற்றொடர் விம்மி எழுந்து
கம்மியக் குரலில் கேவி அழுதது
பஞ்சீர்த்த நீராய் அவள் நினைவுகள்
நெஞ்சுக்குள் சுரந்து மனதை கனத்தது

அதோ…..
ஆருயிர் துணைவியின் அன்பு ஆதிக்கக் குரல்
அஞ்சல்களை அடிமனதில் அவசரமாய் புதைத்தான்
நரைத்த மீசைக்குள் அவள் நயனத்தை மறைத்தான்
அனிச்சையாய் அவன் உதடுகள் புன்னகைத்தன
தன்னிச்சையோ என துணைமகள் அணைக்க
தாம்பத்திய சங்கீதம் சாரீரம் பிசகாது இசைத்தது…..!

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்