வேப்பமர தண் நிழலில்
உதிர்ந்த மலர் வெளிர் கம்பளம் விரிக்க
வான் சொரியும் பன்னீர் துளியால்
தேன் சுரந்து வண்டுகள் கிறங்க
மார் முலைக்குள் முகம் புதைத்த
மதலையின் மணி பால் பற்கள்
தூர் பதிந்த வெண் முத்தாய்
வேர் பிடித்து உயிர் துளிர்க்கும்
ஏர் உழவன் சால் இறைக்க
விழித்த பயிர் நீர் குடிக்க
போர்களத்துச் சிப்பாய் போல்
மார்விறைத்து தோள் உயர்த்தும்
அங்கே…….
சேற்றிடை அலர்ந்த செங்கமலம்
நாற்றிடை நயனமாய் நற்றமிழ் இசைக்க
போற்றிட போட்டியாய் இளம் குதிரொன்று
காற்றுடன் கதைப்பாய் புதிர் உரைக்க
ஓரக்கண் ஓடை நாரையாய்
ஒய்யாரக் கொண்டை ஓங்காரி
ஏறிட்டுப் பாராமல் எசப் பாட்டோனை
தூண்டிலிட்டாள் கரும் கடைக்கண்ணால்
எட்டிப் பாய்ந்த பார்வை ஈட்டி
ஒட்டி உறவாடி உயிர் கூட்டி
வெட்டிவேர் வாசம் வசியம் மூட்டி
தட்டி அறைக்குள் காதலில் இணைந்தது
கன்னி முறிவு காட்டுத் தீயாய் பரவி
திண்ணைப் பேச்சிற்கு தீனியானது
மசக்கையால் மங்கை மாங்காய் கடித்தது
மாதர்குலத்திற்கு வாய்ப்பரப்பாய் போனது
விதைநெல்லுக்கு உரிமைக்காரன்
வேற்று சாதியாய் போனதால்
பதைபதைத்த விளைநில உறவுகள்
நாற்றைப் பிடிங்கிடக் கூடியது
வதைப் பேச்சிற்கு ஈடு கொடுத்து
சிதைக் கருவை நிறுத்தி வைத்தாள்
கதைப் படித்து காதல் ருசித்தவன்
சதையாய் வந்து கைப்பற்றுவான் என்று
சாதிச் சண்டைக்கு சரித்திரம் படைத்த ஊர்
ஓதிய சாத்தான் உயிர்ப்பலி கேட்க
சதியால் நலிந்த வாலிபத்தைக் கொன்று
நாதியற்ற நடுச் சந்தியில் வீசியது
பனை உரமாகி வெறித்த மனங்கள்
தினை மனிதமற்று சபித்து சாடியது
சினை சுமந்த சிற்றிளம் கதிரோ
வினை அறியாது கதறித் துடித்தது
காவல் தெய்வங்கள் வார்த்தையில் தேற்றின
காக்கிச் சட்டைகள் வழக்கை மாற்றின
காதல் தோல்வி தற்கொலையென சாற்றி
கதிக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றின
கொண்டாடி அவள் வாழ்ந்திடவில்லை
பெண்டாட்டியாய் முறையுடன் சிதைமூட்ட
மன்றாடி மண்டியிட்டு அனுமதி கேட்டாள்
மறுதலித்தன மானுடம் மரித்த மிருகங்கள்
மங்கள வாழ்வை பறிகொடுத்த
செங்கமலம் செந்நீர் கொதித்தது
கொங்கனலாய் சாதியை எரிக்க
கங்கணம் கட்டி சீறி எழுந்தாள்
பிணத்திற்கு இல்லை சாதியென உதறி
மனதிற்கினிய சவத்தை மணந்தாள்
உணர் விழுங்கிய மலைப்பாம்புகள் மலைக்க
கனற் கைம்பெண்ணாய் அவன் குடி வாழ்ந்தாள்!