தொடர் எண் 8
ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில்
தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது
காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம்
நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.
நன்மைகளும் பெற்றிடலாம் நாட்டினிலே வேளாண்மை
ஒன்றுபடச் செய்திடவே ஊரெல்லாம் மேன்மையுறும்
நன்றாக நாமுழைத்தால் நம்நாடு வல்லரசாம்
முன்னோர்கள் எண்ணியதை மூச்சாகக் கொள்வீரே.
மூச்சாகக் கொள்வீரே முன்னேற்றம் நம்கையில்
வீச்சாக வேளாண்மை வெல்லட்டும் இல்லாமை
பேச்சினிலே மட்டுமன்றிப் பேராண்மை கொள்வாயே
ஏச்சுகளைத் தூக்கியெறி இன்றேதான் நல்நாளே.
நல்முறையில் காலத்தில் நாம்செய்யும் நெற்பயிர்கள்
பல்லுயிர்கள் காத்திடவும் பல்லாண்டு வாழ்ந்திடவும்
இல்லையென்று சொல்லாமல் ஈயென்றால் ஈந்திடவும்
கால்பதித்துச் சேற்றினிலே காண்போமே நல்வளமே.
நல்வளமும் கண்டிடவும் நல்மழையும் பெய்திடவும்
பல்வளமும் மேன்மையுற பாடுபட வாருங்கள்
நெல்வளமும் மேன்மையுற நீர்வளமும் வற்றாமல்
பல்லாற்றல் காட்டுவளம் பாடுபட்டு காப்போமே.