வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!
அணைச்சொல்லாய் அறிவுதேக்கும் நீர்ப்ப ரப்பாய்
அருந்தமிழை அகம்முழுக்க அணிந்த வன்நீ!
கொடைச்சொல்லாய்க் கலைஞரெனும் நற்றி றத்தைக்
காவலனாய்த் தேர்ந்தளித்த கண்ணி யம்நீ!
விடைச்சொல்லாய்த் தமிழ்நாடு என்ற பேரை
மீட்டெடுத்துத் தாய்மகிழத் தந்த வன்நீ!
மடைச்சொல்லாய் மனுவடைத்த கதவு டைத்து
மதிநிறைக்கக் கல்விதந்த மன்ன வன்நீ!
படைச்சொல்லாய் அண்ணாநீ தமிழ ருக்குப்
பகையறுக்கும் பனங்கருக்காய் வாய்த்த வன்நீ!
கலைச்சொல்லாய்க் கழகமென்னும் கவிதை தன்னைக்
காவியமாய்ப் படைத்தளித்த பாவ லன்நீ!
தலைச்சொல்லாய்த் தலைநிமிர்த்தித் தமிழ ரெல்லாம்
தன்மானம் போற்றவைத்த தலைம கன்நீ!
அலைச்சொல்லாய்ப் பெரியாரின் படைக்க ளத்தின்
ஆயுதமாய் அடர்ந்தெழுந்த அணுக்க திர்நீ!
நிலைச்சொல்லாய்த் தமிழேந்தும் நெஞ்ச மெல்லாம்
நீக்கமற நின்றொளிர்வாய் அண்ணா நீயே!
செல்வ மீனாட்சி சுந்தரம்