இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு, தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்றிய பெருமை அண்ணா அவர்களுக்கே உண்டு..
சுதந்திரஇந்தியாவில் பின்னாளில் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்தவர் அண்ணா. “அண்ணா அண்ணா” என்று அண்ணா என்ற ஒற்றைச் சொல்லை வேத மந்திரமாகக் கொண்ட எண்ணற்ற தம்பிகளைக் கொண்ட பேரறிஞரின் சாதனைகள் சொல்லில் அடங்கா. அவரது 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பற்றி மரபுக் கவிதைகளை வைத்து ஒரு தொகுப்பு நூல் செய்து அதனை, தமிழ் நெஞ்சம் இதழின் இணைப்பாக வழங்கியுள்ளோம்.
ஐம்பத்தேழு கவிஞர்களின் 179 விருத்தங்கள் நிரம்பிய இக் கவிதை நூல் அறிஞர் அண்ணாவின் பல்வேறு சிறப்புகளைச் சொல்லக் கூடியதாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது பிறமாநிலத் தமிழ்க்கவிஞர்கள் இலங்கை உள்ளிட்ட பிறநாட்டுக் கவிஞர்கள் எழுதிய மரபுக்கவிதைகள் மட்டும் உள்ளடக்கிய இந்நூல் ஒரு காலப் பெட்டகம்; இன்றும் அண்ணா கவிஞர்ப்பெருமக்களிடையே நிலைத்த புகழை உடையவர் என்பதற்கு இந்நூலே சாட்சியாகும்.
இந்நூலாக்கத்திற்குத் தங்கள் கவிதைகளை அனுப்பிய கவிஞர்ப் பெருமக்களுக்கு இனிய இதயங்கனிந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்.