தொடர் – 46
ஹைக்கூ உண்மைக்கு நெருக்கமாய் நின்று எழுதப்பட வேண்டிய ஒரு கவிதை வடிவம்.
ஆகவே தான்.. கற்பனைகளை இதில் தவிர்க்கிறோம்… உவமை..உவமேயங்களையும் இதில் கையாள்வதில்லை.. நாம் காணும் காட்சியை…உணர்ந்த உணர்வினை உண்மைத் தன்மையோடு எந்தவித சமரசங்களுக்கும் இடமின்றி இக்கவிதை வடிவில் தர முயற்சிக்கிறோம்.
அதே போல.. கவிதைகளுக்கு உகந்த.. பொருத்தமான வார்த்தைகளை கையாளுதலும் மிகமிக அவசியமான ஒன்றாகும்.
இங்கு ஏற்கனவே இது குறித்த தகவலை நான் பகிர்ந்துள்ளேன்.. இருப்பினும் இன்னும் சற்று விளக்கமாகவும்…விரிவாகவும் இங்கு காண்போம்.
திருவிழா காலம்
அதிகரித்துச் செல்கிறது
கழிவுகள்.
இது ஒரு கவிஞரின் கவிதை..திருவிழா நேரங்களில் தேவையற்ற கழிவுகளானது அதிகப்படியாகிறது என்ற ஒரு காட்சி.
ஆனால்…இங்கு கவனிக்க வேண்டியது
அதிகரித்துச் செல்கிறது… என்றிருக்கும்… இரண்டாவது அடியானது இவ்வாறு அதிகமாகச் சேர்கிறது என இருந்தால் சிறப்பாய் இருக்கும்.
திருவிழாக் காலம்
அதிகமாகச் சேர்கிறது
கழிவுகள்.
அதே போல…இதை கவனியுங்கள்..
திருவிழாக் கூட்டம்
அதிகரித்துச் செல்கிறது
பனிக்கூழ் வியாபாரம்.
இங்கும் அதே போல்… சின்ன மாற்றம் அவசியமாகிறது.. இரண்டாவது அடியில்..
திருவிழாக் கூட்டம்
அதிகமாய் நடக்கிறது
பனிக்கூழ் வியாபாரம்.
என்றிருப்பின் பொருத்தமாய் அமையும்..ஈற்றடியின் தன்மைக்கே ஏற்ப இரண்டாவது அடியின் சொல் அமைதல் வேண்டும்.. அது மட்டுமின்றி அது முதலாம் அடியோடும் இயைந்து வருதல் அவசியம் என்பதையும் மறந்து விடக் கூடாது.
ஹைக்கூவில் வார்த்தைகள் வலிமையானவை.சுருக்கமான வார்த்தைகளே பொருள் அடர்த்தி கொண்ட ஒரு ஹைக்கூவை வழிநடத்துகிறது..ஆகவே அதனை கையாள்வதில் நாம் மிக கவனத்துடன் செயலாற்றுவதும் மிக அவசியம்.
சொல்லவரும் கருத்தை தெளிவாக கவிதையின் கருவிற்கு அருகில் நின்று தெளிவுபடச் சொல்லுதல் வேண்டும்.. என்பதே ஹைக்கூவின் சித்தாந்தம்.
ஆகவே தான் ஹைக்கூவின் பிதாமகரான பாஷோ சொன்னார்
வாழ்நாளில் ஒரேயொரு ஹைக்கூவையாவது சிறப்பாக படையுங்கள்.. அதற்காக பல ஆண்டுகள் தவமிருந்தாலும் தவறில்லை என்று.