I மின்னிதழ் I நேர்காணல் I  பெண் அமைப்பின் நிறுவனர் நிறுவனர் நர்மதா

நர்மதா. சென்னை போரூரில் உள்ள சன் பீம்ஸ் பள்ளியின்  தாளாளர்.

 ‘ நல்ல பெண்மணி’ என்ற  பத்திரிகையை 15 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து நடத்தியவர்.

 உடுமலை தனது தாய்வீடு. திருப்பூர் எனது புகுந்தவீடு எனும் இவர், நாற்பது ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார்.

 இதுவரை எனது  10  கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. நமது பெண் அமைப்பு தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

 சென்னைப் பெண்களால் 3/3/ 2019..ல் நமது பெண் அமைப்பு தொடங்கப்பட்டது…  இப்போது மிக வெற்றிகரமாக பல நூறு பெண்களுடன் இயங்கி வருகிறது. அதன் நிறுவனரும் இவரேயாவார். இனி நேர்காணலுக்குள் நுழைவோம்.

நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி

அக்டோபர் 2023 / 100 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

நீங்கள் பெண் அமைப்பை ஏற்படுத்தும் நோக்கம் ஏற்பட்டதற்கான பின்னணி என்ன?

பெண் அமைப்பை நான் உருவாக்குவதற்கான காரணங்கள் நிறைய உள்ளன. முதலாவதாக நான் ஒரு பெண். அதுவும் ஆணாதிக்க செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்ட பெண். சிறுவயதிலேயே அதற்கு எதிர்வினை ஆற்றி தொடங்கிவிட்ட பெண். எனது 16 வயதில் எங்கள் பக்கத்து வீட்டில் மனைவியை அடித்துக் கொண்டிருந்த கணவனை ஓடிச்சென்று நான் தாக்கியதாக என் குடும்பத்தார் பின்னாளில் சொல்லிப் பாராட்டியதைக் கேட்டிருக்கிறேன்.

 பெண்கள் மீது எனக்கு சிறு வயது முதலே அலாதியான நம்பிக்கையும்  மதிப்பும் உண்டு. நான் பார்த்த எல்லாப் பெண்களுமே குடும்பம் விளங்கிட தங்களை மறந்து பணி செய்பவர்களாக இருந்தார்கள். தன்னலம் அற்றவர்களாக இருந்தார்கள்.

 சமீப காலமாக இந்த அரசியலை உற்று நோக்க தொடங்கியபோதுதான் இந்த அரசியலின் ஆண் முகம் துல்லியமாகத் தெரியத் தொடங்கியது. ஆண்களைப் போலவே ஆணின் குண நலன்களுடன் இருக்கும் இந்த ஆண் அரசியல் மாற, பெண்கள் தங்களுடைய நல்ல பல குணங்களுடன் , அசல் பெண்களாக அரசியலுக்கு வரவேண்டும் என்று தோன்றத் தொடங்கியது.

 காலமும் சூழலும் வாய்த்த போது பெண் அரசியலை முன்னெடுக்க அந்த எண்ணங்கள் தூண்டுதலாக இருந்தன என்று நினைக்கிறேன்.

கல்வியறிஞர் வசந்தி தேவி அவர்களுடன்
பொது நூலகத்தில்... பெண் அமைப்பின் ஒரு கலந்துரையாடலுக்குப் பிறகு

உங்கள் கவிதைகள் பெரும்பாலும் பெண் குறித்து இருப்பதற்குக் காரணம் என்ன?

 பெண்ணின் வலிகளை ஒரு பெண்ணாக உணரும் வாய்ப்பு சிறுவயதிலேயே எனக்கு வாய்த்தது. 17 வயதிலேயே திருமணம் ஆனது. ஆனால் அன்றைய திருமணங்கள் பெண் மீது ஏற்றி வைத்த அர்த்தமற்ற பொறுப்புகள், அடிமைத்தனம், மூச்சு முட்ட வைக்கும் கட்டுப்பாடுகள் போன்றவை என்னை பெரும் கொதி நிலைக்கு ஆளாக்கின. அதனால் ஏற்பட்ட குமுறல்களை வெளிப்படுத்த, கவிதைகள்  எனக்கு வடிகாலாக அமைந்தன.

 இள வயதில் எனது கவிதைகள் அத்தனையும் புண்பட்ட எனது மனதின் வெளிப்பாடுகளாக, பெண் பற்றிய கவிதைகளாக இருந்தன. சமூக அவலங்கள் குறித்தும் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன் . ‘திண்ணைகளற்ற பெருநகரங்களில்’  என்ற கவிதைத் தொகுப்பு முழுக்க முழுக்க சமூகம் சார்ந்த கவிதைகளைக் கொண்டிருக்கும்.

2016ல் நர்மதா அவர்களின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் சிறப்புரை

இதுவரை உங்கள் படைப்புகள் எத்தனை வெளிவந்திருக்கின்றன?

நான் ஒரு எழுத்துச் சோம்பேறி என்று ஏற்கனவே என்னுடைய ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறேன். என் வாழ்க்கை நிறைய சுவாரஸ்யங்களும், அவலங்களும் நிறைந்து எழுதுவதற்கான நிறைய உள்ளீடுகள்  கொண்டதாக இருந்தது. ஆனால் நிறைய எழுதவோ, நிறைய பேசவோ  எப்போதும் னக்குப் பிடிப்பதில்லை. ஆனால் உள்ளத்து அவஸ்தைகளைச் சொல்ல வேண்டிய கட்டாயம் நேரும்போது எழுதித்  தீரவேண்டி இருந்தது. அதனால்தான் கவிதை என்ற சுருக்கமான எழுத்து வடிவத்தை எனதாக்கிக்கொண்டேன். அந்த வகையில் இதுவரையில் எனது  10 கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.

உங்கள் இளமைக்கால மறக்கவியலாத நினைவுகளைப் பகிருங்கள்.

எனது இளமைக்கால நினைவுகளில் என் பெற்றோரோடு நான் வாழ்ந்த அந்த 17 வயது வரையிலான காலம்  மட்டுமே நிறைய சந்தோஷங்கள்  நிறைந்த காலமாக இருந்தது. திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை,  தப்பிக்க முடியாத ஒரு கொடுங்கனவாகவே என்னுள்  படிந்திருக்கிறது. அவற்றை திரும்பிப் பார்க்க இப்போதும் நான் அஞ்சுகிறேன். திரும்பிப் பார்க்க விரும்புவதும் இல்லை.

அதற்காக நான் ஏதோ ஒரு பரிதாபத்துக்குரிய பெண்ணாக இருந்தேன் என்று அர்த்தமில்லை. எனது குடும்பம் எப்போதும் என்னுடன் இருந்தது. ஒரு போராளியாக, மிகுந்த சுயமரியாதை உடையவளாக, கட்டுப்பாடுகளுக்குள் அடங்க மறுப்பவளாக, இருந்ததுதான் என்னுடைய பிரச்சனை என்று நினைக்கிறேன்.

இது அடிமைத்தனத்தை வெறுத்து மறுக்கும் அன்றைய ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நிகழ்ந்ததுதான்.

நீங்கள் பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்துள்ளீர்கள். அதைப் பற்றி விளக்கமாகக் கூறுங்கள்.

 மூன்று சகோதரர்களும் மூன்று சகோதரிகளுமாக ஒரு பெரிய குடும்பம் என்னுடையது. எனது அப்பா அந்தக் காலத்திலேயே ஆணாதிக்கம் கொண்டு என் அம்மாவை அடக்குவராக இருக்கவில்லை. என் அம்மாவும் சுயமரியாதை விட்டுவிட்டு அடிமைத்தனம் கொண்டவராக இருந்ததில்லை. இடதுசாரி சிந்தனையும் மனிதாபிமானம் சார்ந்த செயல்களுமாக என் குடும்பமும் பெற்றோரும் இருந்திருப்பதை இப்போது நான் உணர்கிறேன்.  அது என்னுள்ளும் தாக்கத்தை உருவாக்கி இருக்க வேண்டும் .

உ. வாசுகி அவர்களுடன்

உங்கள் குடும்பம் அரசியல் பின்னணி கொண்டதா?

எங்கள் குடும்பத்துக்கு அரசியல் பின்னணி ஏதும் இல்லை.

நீங்கள் பயின்ற கல்லூரிக் காலங்களை நினைவுகூர முடியுமா?

எனக்கு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை. பள்ளிப்படிப்பு முடிந்த அடுத்த ஆண்டே திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதன் பிறகு  கல்லூரி செல்ல பிடிவாதம் பிடித்தேன். ஆசிரியர் பயிற்சியில்  சேர்தார்கள். படிப்பதில் எனக்கு இருந்த தீராத ஆர்வம் காரணமாக 50 + வயதில் தமிழ் எம் ஏ எழுதி தேர்ச்சி பெற்றேன்.

உங்களைப் பாதித்த நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?

சமூக சிந்தனையுடன் வளர்ந்த காரணத்தால் வாழ்க்கை முழுக்க பாதிப்புகள்  நிறைந்த்தாகவே இருந்தது. இந்த மனிதர்களின் எந்த போலித்தனங்களோடும் ஒட்ட முடியாமல் ஒரு விரக்தியில்தான்  வாழ்ந்திருக்கிறேன். இரண்டு குழந்தைகளை ஆளாக்க வேண்டிய பொறுப்பு எனதாக மட்டுமே இருந்தது. எதையும் நினைக்க விடாமல் எதற்குமே நேரமற்ற மனுஷியாக  எனது காலங்கள் பறந்தன.

கடமைகள் முடிந்த, பரபரப்புகள்  குறைந்த இந்தக் காலகட்டத்தில்,  சமூக சிந்தனைகள் மீண்டும்  என்னிடம் வந்துசேர்ந்தன. பெண் அமைப்பை உருவாக்கி பணிகள் செய்ய முடிவதில் மிகுந்த மகிழ்ச்சியை உணர்கிறேன் இப்போது!

இந்தக்கால பெண்களின் நிலை. அக்காலத்தில் பெண்களின் நிலை.எந்தளவுக்கு மாற்றம் அடைந்திருக்கிறது என எண்ணுகிறீர்கள்?

இன்றைய பெண்கள் அந்த காலத்து பெண்களைப் போல இல்லை என்பது மிகப்பெரிய உண்மை. ஆனால், மிகச்சிறிய அளவிலான எண்ணிக்கையில்தான் விழிப்புணர்வு பெற்ற பெண்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மைப் பெண்கள் இன்னும் அதே அடிமைத்தனத்தின் நுகத்தடியில் வலியுடன்தான் வாழ்ந்துவருகிறார்கள்.

உங்கள் பெண் அமைப்பின் பணிகள் குறித்து..

பெண் அமைப்பைப் பொருத்தமட்டில் இரண்டு முக்கியமான கடமைகள் உள்ளன. ஒன்று பெண்களை அவர்களின் தாழ்வு மனப்பான்மையினின்றும்  மீட்டெடுத்து அவர்களின் பேராற்றலை அவர்களுக்கு அவர்கள் உணரவைப்பது. மற்றொன்று பெண்களை ஒருங்கிணைத்து நல்ல அரசியல் ஒன்றை முன்னெடுத்து அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்குவது.

பெண் அமைப்பு நான்காம் ஆண்டு விழாவில்...

பெண்கள் உதவும் மனப்பான்மையை ஏன் வளர்த்துக் கொள்ள வேண்டும்?

உதவும் மனப்பான்மை என்பது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு ஆறறிவின் சாட்சி. இது ஆண் பெண் இருவருமே கொள்ளவேண்டிய ஒரு நல்ல பண்பு என்றுதான் நான் நினைக்கிறேன்.

பெண் அமைப்பு பற்றிய முழு விவரங்கள் அறிய Penn Womanity யூட்யூப் சேனலைப் பார்க்கவும்.


1 Comment

சாரதா சந்தோஷ் · அக்டோபர் 2, 2023 at 7 h 26 min

தமிழ் நெஞ்சம் இதழ் எப்பொழுதும் பெண் படைப்பாளிகள், சாதனையாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.. அருமையான நேர்காணல், மனமார்ந்த வாழ்த்துகள்..

Comments are closed.

Related Posts

நேர்காணல்

ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்

  1. உங்களை பற்றிய அறிமுகத்தை கூறுங்கள்.

1997 ஜனவரி மாதம் 30ஆம் திகதி இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகமை எனும் ஊரில் பிறந்தேன்.

எனது தந்தையின் பெயர் முஹம்மத் ஹூசைன்,

 » Read more about: ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »