மின்னிதழ் நேர்காணல் I  இசை இளவரசர், லிடியன் நாதஸ்வரம்

பதிமூன்று வயதில்,  உலக அளவில் நடத்தப்பட்ட  பியானோ இசைப்போட்டியில் கலந்து கொண்டு,  முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாகத் தட்டிச் சென்று, உலக மக்களை தன் பால் ஈர்த்த இளம் இசைக் கலைஞர். தன் இசைத் திறமையால் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இளம் பியானோ வித்தகர். செஸ் ஒலிம்பியாட் 2022ல் ,தொடக்க விழாவில்,  கண்களைக் கட்டிக் கொண்டு,   இரண்டாவது ஸ்பீடில்  பியானோவை வாசித்து அரங்கையே அதிர வைத்தவர், 30 இசைக்கருவிகளை வாசிக்கும் வல்லமை படைத்தவர்,  பாடகர்,  நடிகர், பதின் பருவத்திலேயே வெள்ளித் திரையில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகப் போகிறவர். இசைஞானி இசைப்புயல் இருவரின் அன்புக்கும் பாத்திரமானவர்,

இசைஞானியின் ஒரே மாணவர்,  தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக  தன் சகோதரியுடன் சேர்ந்து,  ஒரு புதிய சாதனையை நிகழ்த்த இருப்பவர். இவ்வளவு பெருமைக்கும் புகழுக்கும் உரியவரான பன்முகத் திறன் கொண்ட  இசை இளவரசர், ‘திரு. லிடியன் நாதஸ்வரம்’ அவர்களுடன் ஒரு நேர்காணல்…

நேர்கண்டவர்
மாலதி சந்திரசேகரன்.

டிசம்பர் 2023 / 104 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.
இசைஞானியின் ஒரே மாணவன்

சிறு வயதிலேயே எப்படி இசை ஆர்வம் ஏற்பட்டது?

என் தந்தை,  திரு. வர்ஷன் ஒரு இசைக் கலைஞர். சகோதரி அமிர்தவர்ஷிணி பாடகி, புல்லாங்குழல் மற்றும் சாக்ஸபோன் கலைஞர். இருவருமே  பாடிக்கொண்டும்,,  அல்லது இசை கருவிகளை மீட்டிக் கொண்டும் இருப்பதால், எங்கள் வீட்டில் எப்பொழுதும் இசை ஒலித்துக் கொண்டே இருக்கும். எனக்கும்,  என் அக்கா அமிர்தவர்ஷிணிக்கும் நல்ல இசையை அடையாளம் காட்டியும்,  ஊட்டியும் எங்கள் தந்தை வளர்த்திருக்கிறார். தென் இந்திய இசை  வட இந்திய இசை  மேற்கத்திய இசை,  சினிமா பாடல்கள்  கர்நாடக சங்கீதம், வாத்தியக் கருவிகளின் இசை என்று பல விஷயங்களையும்  அறியப்படுத்தியதால், அவைகளைக் கேட்டுக் கேட்டு பழகிய எனக்கு இசையின் மேல் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

‘சி.பி.எஸ்.’ (Columbia Broadcasting System) அமைப்பின்  சார்பில் நீங்கள் பங்கு கொண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு சாதித்ததும்   அதற்கு உங்களுக்கு கிடைத்த சன்மானமும் பற்றி சில வரிகள் கூறுங்களேன்?

சிறுவயதிலிருந்தே எங்கள் தந்தை,  திரு. வர்ஷன்,  எங்கள் இருவரிடமும்,  நீங்கள் சிறப்பாக வாசித்தால்,  நீங்க தான் வேர்ல்ட் பெஸ்ட் ஆக இருப்பீர்கள் என்று கூறிக் கொண்டே இருப்பார். இந்த வாக்கியம் எனக்கு  ஒரு தாரக மந்திரம் போலவே ஆகிவிட்டது.

எனக்கு சுமார் பதிமூன்று வயது இருக்கும் பொழுது,   ஒரு சிறப்பான மேடை அமைந்தது. என் தந்தை,  பொதுவாக எங்களை எந்த தொலைக்காட்சிக்கும் அல்லது மேடைக்கும் போட்டிக்கு என்று அனுப்பியது இல்லை. ஆனால் எங்கள் வாசிப்பை  பல இடங்களுக்கு  வீடியோவாக அனுப்பி இருக்கிறார். அப்படி அனுப்பியதில் அமெரிக்காவின் ஒரு டிவி சேனலில் இருந்து என் தந்தைக்கு அழைப்பு வந்தது.  ‘ உங்கள் மகனின் வாசிப்பை நாங்கள் கேட்டோம்.  மிகவும் நன்றாக உள்ளது. இங்கு மிகப் பெரிய அளவில் ஒரு போட்டி  நடக்கப் போகிறது. அந்தப் போட்டியில்   195 நாடுகள் கலந்து கொள்ளப் போகின்றன. அதில் தேர்வான 65  நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள்,  இங்கு சேனலில் நேரில் வந்து வாசிக்கப் போகிறார்கள் .மற்றவர்கள் வீடியோவிலேயே எலிமினேட் ஆகி விடுவார்கள். நாங்கள் இந்தியாவிலிருந்து உங்கள் மகன் ஒருவரை தான் தேர்வு செய்திருக்கிறோம் .இதில் வெற்றி பெறும் கலைஞருக்கு “The World’s Best” என்கிற பட்டம் கிடைக்கும்’ என்று கூறினார்கள். அந்தப் போட்டிக்கு அனுப்ப என் தந்தை எண்ணம் கொண்டார். என்னுடைய வீடியோக்களை அவர்களுக்கு அனுப்பிய பொழுது,  65 நாடுகளில் கலந்து கொண்ட கலைஞர்களில், இந்தியாவிலிருந்து ஒரு கலைஞனாக என்னை மட்டுமே  தேர்வு செய்தார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த இந்த போட்டியில்  செமி பைனல்ஸ்,  பைனல்ஸ் என்று தேர்வு  செய்யப்பட்ட  ஒரு மாதம் காலம் வரை அங்கேயே தங்கியிருந்தோம். செமி பைனல்ஸ் நடந்த பொழுதுதான், ‘இந்தப் பட்டத்தை வென்றவருக்கு,   ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக கிடைக்கும்’ என்று கூறினார்கள்.  பைனலில் தேர்வு பெற்று ‘வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்கிற டைட்டிலை  வென்ற பொழுது  எல்லோரும் அவ்வளவு சந்தோஷப்பட்டார்கள். இது ஒரு மில்லியன் டாலருக்காக ஏற்பட்ட சந்தோஷம் அல்ல. என்னுடைய படிப்பை நிறுத்திவிட்டு முழுவதுமாக இசைப்பக்கம் என்னைத் திருப்பியதில்,  பலருக்கு என் வாழ்க்கையை தந்தை கெடுத்து விட்டார் என்கிற எண்ணமே வந்தது. இதனால் நான் யாரையும் குறை சொல்கிறேன் என்கிற அர்த்தமில்லை. நான் இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறேன் என்கிற பெரிய விஷயம்,  எல்லாவற்றையும் கடந்து வரும்படி செய்து விட்டது. இந்த போட்டி,   சீசன் 1 ,சீசன் 2 , என்பது போன்று நடத்தும் போட்டி அல்ல. கூகுளில், வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்று தேடிப்பார்த்தால்  லிடியன் நாதஸ்வரம் என்கிற  பெயர் ஒன்று மட்டும்தான் இருக்கும். அதற்கு முன்போ இல்லை அதற்குப் பின்போ அந்த மாதிரி போட்டிகள் நடத்தப் படவில்லை என்பது புரியும். பிறந்த நான்கு மாதங்களில் இருந்தே இசையை நான் ரசித்ததாக பெற்றோர் சொல்லி கேட்டிருக்கிறேன். மியூசிக் மியூசிக் என்று இசையை விரும்பி ஏற்று ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் பிராக்டிஸ் எடுத்து நான் உழைத்ததற்கு  எனக்குக் கிடைத்த டைட்டில், ஆண்டவன் கொடுத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல முடியும்.

வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியின் பைனலில், சாதாரணமாக 160 bpm (beats per minute) வாசித்துவிட்டு, அடுத்து 208 bpm  என்று நீங்கள் சொன்ன பொழுது, பார்வையாளர்கள் திகைத்தார்கள். அதை முடித்து விட்டு அடுத்து 325 bpm என்று கூறிவிட்டு, வாசிப்பைத் தொடர்ந்தீர்கள்? பயம் ஏற்படவில்லையா?

பயம் என்பது உண்டாகவில்லை .என்னால் நிச்சயம் முடியும் என்கிற ஒரு தன்னம்பிக்கை தான் என் உள்ளே இருந்தது .என் தந்தை என்னை அப்படித்தான் வளர்த்திருந்தார். வாசிப்பை முடித்த பிறகு எல்லோரும் ஸ்டேண்டிங் ஓவியேசனில்  கைத்தட்டி ஆர்ப்பரித்த பொழுது,  எனக்கு உண்டான சந்தோஷமும் , சவாலை நிறைவேற்றிய திருப்தியும் ஏற்பட்டது. அந்த தருணத்தில் ஏற்பட்ட ஒரு  சந்தோஷத்திற்கும் மன திருப்திக்கும் ஈடு இணையே இல்லை. என்னுடைய அசுர சாதனைக்கு இதை கூட நான் செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம்?

கண்களைக் கட்டிக் கொண்டு வாசிப்பதும் ,இரு கைகளாலும் இரண்டு விதமான பாடல்களை ஒரே சமயத்தில் வாசிப்பதும் எப்படி சாத்தியப் படுகிறது?

தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியின் முதல் நாள் அன்று தான் ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் வெவ்வேறு இசையை வாசித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. முதல் நாள் தான் இதற்கு உண்டான பயிற்சியை மேற்கொண்டேன். போட்டி தினத்தன்று நான் அப்படி வாசித்த பொழுது எனக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. போட்டி முடிந்த பின் கிரீன் ரூமிற்குள் அனைவரும் வந்து எனக்கு வாழ்த்து கூறினார்கள். இந்த போட்டியில் 3 அமெரிக்க நடுவர்களும்,  50 பல நாட்டைச் சேர்ந்த நடுவர்களும் பங்கு பெற்றிருந்தார்கள். இந்தச் சாதனையை நான் செய்ய,  என் முதல் குருவான என் தந்தை திரு. வர்ஷன்,  எங்களுக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும் எங்கள் தாய்,  மற்றும் குருமார்கள் எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் அனுக்கிரகம் என்று தான் கூறுவேன்.

மலையாள படத்திற்கு இசையமைப்பாளராக தேர்வானது எப்படி?

வேர்ல்ட்ஸ் பெஸ்ட் டைட்டிலை நான் வென்ற பிறகு,  திரு. மோகன்லால் சாரிடம் இருந்து, என் தந்தைக்கு போன் வந்தது. அவர் எனக்கு தன்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பிறகு என் தந்தையிடம்,  தனக்கு ஒரு ப்ராஜெக்ட் இருக்கிறது என்றும், அதை மைடியர் குட்டிச்சாத்தான் படத்திற்கு கதை எழுதிய திரு.ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான்,  அவர் இயக்கப் போகும் பாரோஸ் படத்திற்கும் கதை எழுதி இருக்கிறார் என்றும், அது விஷயமாக  திரு, ஜிஜோ அவர்களே நேரில் வந்து கதையைக் கூறி, டிஸ்கஸ் செய்வார் என்றும் கூறினார். 3 டி யில் உருவாகும் அந்தக் கதையை திரு.ஜிஜோ கூறினார். பதினொரு வயது சிறுமிக்கும்,  ஒரு பூதத்திற்கும் உண்டான கதையாக இருந்தது. சிறுவர்கள் படமாக இருப்பதால் சிறுவனான நானும் அந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக அமைவது பொருத்தமாக இருக்கும் என்று என் தந்தை எண்ணினார். அதனால் அந்த ப்ராஜெக்ட்டிற்கு என் தந்தை சம்மதம் தெரிவித்தார். இந்தப் படத்தில் என் அக்காவும்  பாடியிருக்கிறார். கோவிட் காரணத்தால் தாமதமான இந்தப் படம், இந்த வருடத்தில் வெளியாகும் என்று நினைக்கிறேன். ‘ பரோஸ் ‘ என்கிற இப்படத்தை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சாரே இயக்கியிருக்கிறார்.

நேர்காணல் செய்த மாலதி சந்திரசேகரன்.

நீங்களும் உங்கள் சகோதரியும் திருக்குறள் சம்பந்தப்பட்ட ஒரு ப்ராஜெக்ட்  செய்யப் போவதாக அறிந்தோம் .அதைப் பற்றி சற்று கூறுங்களேன்?

தெய்வப் புலவர்,  திருவள்ளுவர்,  உலகப் பொதுமறையான திருக்குறளை நமக்கு அருளிச்செய்திருக்கிறார். அந்த 1330 திருக்குறளையும் இசை வடிவில் கொடுத்து, அவற்றின் கருத்தையும் சுருக்கமாக சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.  ஆயிரம் பாடகர்களை அதில் பாட வைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.  தமிழ் உச்சரிப்பு நன்றாக அமைந்து,  நன்றாகப் பாடும் திறமையும் கொண்டவர்களாக இருந்தால்,   இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இ.மெயில் ஐடிக்கு தங்கள் குரலை பதிவு செய்து அனுப்பலாம். நானும் என் அக்காவும் சேர்ந்து செய்யும் இந்த ப்ராஜெக்ட்டை  2023 டிசம்பருக்குள் முடிக்க உத்தேசித்திருக்கிறோம்.

lydian@lydianofficial.com

புகழ் ஏணியில், எட்டாத உயரத்தில் இருக்கும், கடவுளின் குழந்தையான, திரு. லிடியன் நாதஸ்வரம் அவர்களுக்கு,   அவரின் தெய்வ பக்தி,  குரு பக்தி, பணிவு,  தன்னடக்கம்,  பெற்றோரைப் போற்றுதல் போன்ற சிறந்த குணங்களே  இந்த உயர்வைத் தந்திருக்கிறது என்றால் மிகையில்லை. அவர் மேலும் பல உயர்ந்த விருதுகளைப் பெற்று, கனவுகளை சிறப்பாக நனவாக்க எல்லோரும் வாழ்த்துவோம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »

நேர்காணல்

உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்

 நேர்கண்டவர் :

தமிழ்செம்மல் 
இராம வேல்முருகன் வலங்கைமான்

 உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?

           என் சொந்த ஊர் –

 » Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்  »

நேர்காணல்

தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்

நேர்கண்டவர் :
தமிழ்நெஞ்சம் அமின்

மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?”

ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார்.

 » Read more about: தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்  »