I மின்னிதழ் I நேர்காணல் கவிஞர் இராஜ பிரபா

கவியரங்கமானாலும் பட்டிமன்றமானாலும் தன்னம்பிக்கைப் பேச்சரங்கமானாலும் தனித்த ஒரு முத்திரை பதிப்பவர். சுருக்கெழுத்து தட்டச்சராகப் பணியாற்றிய பணியாளர் இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நேர்முகஉதவியாளர் என்ற நிலைக்கு உயர்ந்தவர். நீதிமன்றப் பணிகள் மட்டுமின்றி தமிழ்ப்பணிகளையும் தளர்வின்றி ஆற்றி வருபவர். கதை கவிதை கட்டுரை என அனைத்துத் துறைகளிலும் பயணித்துவருபவர். கவிதைநூல்களைப் படைத்து ஒரு சிறந்த படைப்பாளியாகவும் திகழக்கூடியவர். உளவியல் நூலக அறிவியல் வணிக மேலாண்மை சட்டம் கலை என பல்வேறு பிரிவுகளில் முதுகலைப்பட்டங்கள் பெற்று பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் கூற்றுக்குச் சான்றாக நடந்து வரும் பெண்மணியார். ஆம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிவரும் கவிஞர் இராஜ பிரபா அவர்களைத்தான் நேர்காணல் செய்ய மதுரை வந்துள்ளோம். இதோ நேர்காணல்.

நேர்காணல் செய்பவர்:
தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் அவர்கள்

நவம்பர் 2023 / 80 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

வணக்கம்

தமிழ்நெஞ்சம் இதழின் சார்பாக எனது இனிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

உங்கள் பிறந்த ஊர் எது?

இயற்கை எழில் கொஞ்சும் முல்லை நதி பாயும் மூதூராம் தேனி மாவட்டத்தில் தேனி நகரில்.

தேனி மாவட்டத்தில் நிறைய இலக்கியவாதிகளும் படைப்பாளிகளும் உள்ளனரே? எவ்வாறு?

எல்லோரும் வியக்கும் விடயம் நானும் அவ்வாறே வியக்கிறேன். இயற்கையிலே இயற்கை இவ்வரிய வரத்தை எங்கள் மாவட்ட படைப்பாளர்களுக்குத் தந்திருக்கிறது என நினைக்கின்றேன்.

நிறைய படித்துள்ளீர்களே? எவ்வாறு? ஏன் இவ்வளவு பட்டங்கள் பெற்றுள்ளீர்கள்?

எதிர்காலம் திட்டமென்று எதுவுமின்றி என்னுடைய இளங்கலைப் படிப்பை (கணிதம்)  வி.வி.வி. வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரி, விருதுநகரில் முடித்ததைத் தொடர்ந்து, கொடைக்கானல், நாயுடுபுரம் கிறித்துவ சகோதரிகள் நடத்தும் பி.சி.கே மையத்தில் செயலர் பட்டயப் படிப்பு;  வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற வெறியில் சுருக்கெழுத்து மற்றும்  தட்டெழுத்து ஆகியவற்றை  முடித்தவுடனேயே இராம்நாடு, கிருஷ்ணகிரி, கோயமுத்தூர் என பல்வேறு மாவட்டங்களில் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி, பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிக்குச் சேர்ந்தேன்.  முதுகலை படிக்க வேண்டும் என்ற ஆசையில் எம்.ஏ., (பொது நிர்வாகம்), சட்டம் பற்றி தெரிந்து கொள்ள எண்ணி பி.ஜி.எல்., உயர்பதவிக்காக பி.ஏ.எல்., மற்றும் பி.எல்.ஐ.சி.  உள்ளத்து அழுத்தத்தை குறைக்கும் உளவியல் படிப்பை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எம்.எஸ்சி, உளவியல் படித்தேன். இப்படியாகத் தான் என் கல்விப் பயணம் சென்று கொண்டிருக்கிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நேர்முக உதவியாளர் என்பது ஒரு சவாலான பணியா? எவ்வாறு இந்தப் பணிக்கு வந்தீர்கள்?

 எங்கள் அலுவலக மொழி ஆங்கிலம். நீதிபதிகள் தரும் தீர்ப்புகளை எல்லாம் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலத்தில் தான் தட்டச்சு செய்ய வேண்டும். நான்  என்னுடைய ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்றதால் பணிக்கு சேர்ந்த பொழுதில் ஆங்கிலத்தைக் கையாளுவது  ஒரு சவாலாகவே இருந்தது. இரகசியம் காத்தல், வழக்கு நடக்கும் வேளையில் குறிப்புகளை எடுத்தல் என இன்றும் கூட பல நேரங்களில் சவாலாகவே உள்ளது.

 விடா முயற்சி, பணம் மற்றும் பதவி மேல் கொண்ட மோகம்   மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நேர்முக உதவியாளர் பதவிக்கு நடத்தப்பட்ட பலகட்ட தேர்வுகளில் வெற்றி பெற்று  பணிக்குச் சேரந்தேன். பதினான்கு ஆண்டுகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது பணி.

அரசு பணியை ஆற்றிக் கொண்டே தமிழ்ப்பணியும் செய்வதற்கு நேரம் உள்ளதா?

தமிழ்ப் பணி செய்வதற்குப்  பெரிய ஆளுமைகள் இந்த மண்ணில் இருக்கின்றனர் அவர்களின் முன் எனது பணி என்பது எள்ளளவு கூட இருக்காது. 

காலை பத்து மணி முதல் இரவு 7:30 மணி வரை அலுவலகப் பணி முடித்துவிட்டு, இரவு வீடு திரும்பும் போது  மூளையானது கொஞ்சம் சோர்வடைந்து விடுகிறது.  அப்படிப்பட்ட சூழலில்  நேரம் இருந்தாலும் சிந்தையைச்   சீர்படுத்திப் படிப்பது, எழுதுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.  எனது மொழிதான் என்னை அடையாளப்படுத்தி இருக்கிறது எனக்கான அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது. ஆகையால்  எனது பணிகளையெல்லாம் தாண்டித் தமிழோடு எனது பயணம் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன்.

தாங்கள் பெற்ற விருதுகள் பற்றி..

 முதல் விருது பெறும்போது எல்லோருக்குள்ளும் ஒரு பெரிய மகிழ்ச்சி இருக்கும். இரண்டு, மூன்று எனப்  படிப்படியாக விருதுகளைப் பெறும் போது நம் மனம் முதல் விருதுக்கு அடைந்த மகிழ்ச்சியை அடைய வாய்ப்பில்லை. இருப்பினும் நம் வீட்டு அலமாரியில் நம்மால் வாங்கப்பட்ட விருதுகளை எல்லாம் பார்க்கும்போது ஒருவித பெருமிதம் மனத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. விருதுகள் எனக்கான அங்கீகாரங்கள். நானாகத் தேடிச் செல்லாமல் தானாகக் கிடைக்கும் விருதுகள் என்பதால் நான் பெற்ற விருதுகள் எனக்கு முழு மன நிறைவைத் தருகிறது.

தமிழக அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருது பற்றி ஒரு சில வார்த்தைகள்.

 மொழியோடு உறவாடப் பாதை வகுக்கும் அரசு.  பாராட்டுதல்களுக்கு உரியது.. அதில் நானும் ஒரு விருதாளராய் அகம் மகிழ்கிறேன்..

தூய தமிழ் சாத்தியமா?

முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை. முயற்சிப்பதில் தான் சிக்கல்கள் இருக்கின்றன. தூய தமிழில் பேசாவிட்டாலும் ஆங்கிலம் கலவாத வழக்குத் தமிழிலாவது பேச முயற்சிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதையே எல்லோரிடமும் எடுத்துரைக்கிறேன்.

கவிதை எழுத ஆர்வம் எவ்வாறு வந்தது?

 பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்ட  அனுபவம் உண்டு.  சிறு சிறு கவிதைகளும் எழுதியதுண்டு. முதன் முதலில், முகநூலில் செயல்பட்டு வரும் நிலா முற்றம் கவிக் குழுமத்தில் தான் எனது கற்பனைகளைக் கவியாக்கினேன். அதனைத் தொடர்ந்து பல குழுமங்களில் கவியெழுத ஆரம்பித்தேன்.

எந்தக் கவிதை எழுதப் பிடிக்கும்? மரபா? புதுக்கவிதையா?

 இரண்டுமே பிடிக்கும்.  புதுக்கவிதையாக மனதில் நினைப்பதை எளிதில் எழுத வந்து விடுகிறது.  மரபுக் கவிதை என் பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தைகள் விழுந்து விழுந்து படிப்பது போல, நான் ஒவ்வொரு முறையும் மரபு எழுதும் போது மீண்டும் மீண்டும் வாய்ப்பாடுகளை படித்து  எழுதுவது கொஞ்சம் சிரமமாக உள்ளது

மூன்று பேர் இணைந்து எழுதிய நூல் பற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

முதலில் மூன்று பேர் சேர்ந்து ஒரு படைப்பை தரலாம் என்று கூறியது அன்பிற்குரிய நண்பர் பொ.திருமலை செல்வம் அவர்கள்தான். முக்கோண முகவரிகள் என தலைப்பிட்டு ஒரே தலைப்பிற்கு வெவ்வேறு கோணத்தில்  கவிதை எழுதியது வித்தியாசமான அனுவம். எங்கள் நட்பை உலகிற்கு பறைசாற்றும் உயரிய படைப்பாக இதைப் பார்க்கிறேன்.

நுரை ததும்பிய சொற்கள் நூல் உருவாக்கம் குறித்து

 வாழ்வியல் எதார்த்தங்களைப் பதிவு செய்யும் நோக்கில் எழுதப்பட்ட எளிமையான எளிய கவிதைப் படைப்பு.

தற்காலக் கவிஞர்களுள் தங்களைக் கவர்ந்த கவிஞர்கள் நான்கு பேரைப் பற்றி ஒரு சில வரிகளில்.

மரபு மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர் அன்புச் சகோதரர் இராம வேல்முருகன் அவர்கள். கவிஞர் என்பதையும் தாண்டி நல்லுள்ளம் படைத்த மனிதர்.

கவிஞர் முனைவர் கூடல்தாரிக் அவர்கள் எனது மாவட்டத்தை சேர்ந்தவர். என்னுடைய நுரை ததும்பும் சொற்கள் நூலுக்கு அணிந்துரை தந்தவர். ஐந்து கவிநூல்களை தந்தவர். பறவைகளின் காதலர். ஒரு நாள் காலம் அவரது படைப்புகளை பேசும் என்பது உண்மை

எம் ஆர் ஜெயந்தி, தஞ்சாவூர் ஆழமாகச் சிந்தித்து அற்புதமான கவிவரிகளை எழுதக் கூடியவர்.

விரசமில்லா வார்த்தைகளால் கவியெழுதி அதனை படைப்பாக்குவதிலும் முனைப்போடு செயல்படும் தர்ம்புரியைச் சேர்ந்த கவிஞர் பாக்கியபாரதி அவர்கள்..

ஒரு பெண்ணாக தாங்கள் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து.

எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் ஒரு பெண் தானாக ஒரு முடிவை எடுக்க முடியாது குடும்ப உறவுகளைச் சார்ந்துதான் முடிவு எடுக்க முடியும். அது எனக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் இருக்கக்கூடிய இடர்பாடு

 ஒரு உயரிய பதவியில் இருக்கிறோம் என்பதை மறந்து எல்லோருடனும் இயல்புடன் பழகுவது சில நேரங்களில் மற்றவர்கள் குறைவாக எடை போடுவதற்கான வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

பெண்களுக்கு முழுமையாகச் சுதந்திரம் கிடைத்து விட்டது என நம்புகிறீர்களா?

பெண்களினுடைய முழுமையான சுதந்திரம் பெண்களிடம் தான் இருக்கிறது அவர்களாக வெளியே வராத வரை அவர்களுக்கு சுதந்திரம் என்பது ஒரு கேள்விக்குறியே

தங்களது காசி தமிழ்ச் சங்கமம் குறித்த அனுபவம் பயனுள்ளதாக இருந்ததா?

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் கவி பாடும் வாய்ப்பு பாரதியார் வாழ்ந்த இல்லத்தை பார்த்து வந்த பரவசம்  வாழ்வின் நிலையாமையை உணர்த்திய  மயானக் காடுகள் என ஒவ்வொரு நிகழ்வுகளும் பசுமரத்தாணி போல என்றும் அழியாது என்னுள்.

குசராத் பயணம் குறித்து ஒரு சில வார்த்தைகளில்.

 கூம்பு வடிவில் கட்டப்பட்ட கோவில்கள் ஒவ்வொரு கோவிலிலும் பறந்து கொண்டிருக்கும் கொடிகள்  ஒற்றுமையின் சிலை சர்தார் வல்லபாய் பட்டேல், பிரமிப்புகள் நிறைந்த பயணம்..

இளைஞர்களுக்கு தங்களின் அறிவுரை என்னவாக இருக்கும்?

தடைகள் பல வந்தாலும் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள் காலம் கம்பளம் விரித்து உங்களுக்குச் சிறப்பு செய்யக் காத்திருக்கிறது..

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் குறித்து ஒருசில வார்த்தைகள்.

இலக்கியங்கள் பொதிந்து கிடக்கும் எல்லோர் இதயங்களையும் கொள்ளை கொள்ளும் தமிழ் இதழ் தமிழ்நெஞ்சம் மின்னிதழ்

“தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்களுக்காக பதிலுரைத்ததற்கு இனிய நன்றி சகோதரி. மேலும் பல விருதுகளைப் பெற்று, பல நூல்களைப் படைத்து மென்மேலும் உயர்வதற்கு எங்கள் தமிழ்நெஞ்சம் இதழ் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றோம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »