மின்னிதழ் நேர்காணல் கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர், முன்னாள் அதிபர், பெண் படைப்பாளி கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

நேர்காணல் : முஷ்தாக் அஹ்மத்

உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை தாருங்கள்?

பச்சை நிற தேயிலை தோட்டங்களும் மலைகளும் சூழ்ந்த இயற்கை அழகு நிறைந்த மலை நாட்டின் புசல்லாவையை பிறப்பிடமாகக் கொண்டவள். எனது தந்தை சேகு தாவூத் இந்தியாவில் உள்ள திருநெல்வேலியைச் சேர்ந்தவர். வியாபாரம் செய்வதற்காக இலங்கைக்கு வந்தவர். தாயார் சித்திரசீதா ரம்பொடையைச் சேர்ந்த முன்னாள் கிராம சேவகர் பீர் முகமதுவின் மகளாவார். புசல்லாவையில் உள்ள பெருமை பெற்ற பரிசுத்த திருத்துவக் கல்லூரியில் கல்வி கற்றேன். அங்கு எனக்கு தமிழ் ஆசானாக இருந்த இணுவிலை சேர்ந்த பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் எனக்கு தமிழ் பற்றையும் எழுதும் ஆர்வத்தையும் ஊக்குவித்தார் என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 

உங்கள் கல்வி வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?

புசல்லாவை பரிசுத்த திருத்துவ கல்லூரியில் உயர்தரம் கற்றபின் 1977 ஆம் வருடம் முதல் நியமனம் கிடைத்தது. மத்திய மாகாணத்தில் உள்ள ரொத் சைல்ட் தமிழ் வித்தியாலயம், கழுகல தமிழ் வித்தியாலயம், யோகலட்சுமி தமிழ் வித்தியாலயம் கலஹா ஆகிய அரசாங்க பாடசாலைகளில் 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை கடமையாற்றிவிட்டு, ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் கண்டி கிரீன்ஹில் சர்வதேச பாடசாலையில் கடமை புரிந்த பின்பு தற்போது ஹாவட் மேத்தா சர்வதேச பாடசாலையில் கடமை ஆற்றுகிறேன்.

குழந்தைகளோடு இருப்பதும் அவர்களுக்கு கற்பிப்பதும் எனக்கு பிடித்தமான ஒன்று. இதை முழு மனதுடன் சேவையாகவே செய்கிறேன். கஷ்டப் பிரதேச அரசாங்க பாடசாலைகளிலே அதிக காலங்கள் கடமையாற்றினேன். அந்தப் பணியை நான் விருப்புடன் செய்தேன்.

தனது கணவர் எஸ். விஸ்வநாத ராஜாவுடன் திருமணத்தின்போது

உங்கள் இலக்கிய பயணம் எங்கு, எப்படி ஆரம்பமானது?

எனது இலக்கிய பயணம் பள்ளியில் படிக்கும் பொழுதே ஆரம்பமாகிவிட்டது எனலாம். இலக்கிய ஆர்வம் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கையெழுத்து பத்திரிகைகளை நடத்தினோம். அதற்கு ஆசிரியர்களும் ஒத்துழைப்பு நல்கினார்கள். ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கல்கண்டு முதலிய பத்திரிகைகளும், வாசிகசாலையில் இருந்து கிடைத்த தமிழ் நூல்களும் எங்களை எழுத ஊக்குவித்தன. இயற்கையை இரசிக்கும் ஆசையும் மானிடர்களின் துயரங்களை உற்று நோக்கி அதற்கு தீர்வு காணும் வேகமும் என்னை எழுதத் தூண்டின எனலாம். ஆரம்ப காலத்தில் இலங்கை வானொலிக்கே நான் எழுதி வந்தேன். பூவும் பொட்டும், மங்கையர் மஞ்சரி, வாலிப வட்டம், இசையும் கதையும் போன்றவற்றை நான் எழுதியுள்ளேன். காங்கிரஸ் பத்திரிகையில் ‘பயணம் முடியவில்லை’ என்ற சிறுகதையே எனது முதல் சிறுகதை ஆகும். இதன் மூலம் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன். இலங்கையில் வெளிவந்த தினகரன், வீரகேசரி, தினபதி, நான், கொழுந்து, கொந்தளிப்பு, மலை குருவி, சிந்தாமணி, தீர்த்தக்கரை போன்ற பத்திரிகைகளிலும் இன்னும் பல பத்திரிகைகளிலும் அடிக்கடி எழுதி உள்ளேன். எனது எழுத்துக்கள் இலங்கையிலும் வெளிநாட்டு சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. பல கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

மலையக மனிதர்களின் வாழ்வியல் வலிகளை சிறுகதைகள், கவிதைகள் மூலமாக சமூகத்தின் அவதானத்துக்கு ஏன் கொண்டு சென்றீர்கள்?

நான் மலையகத்தில் உள்ள புசல்லாவை என்ற ஊரில் வசித்தேன். அங்கே எனது தந்தை கடை நடத்தி வந்தார். அந்த கடைக்கு நிறைய மலையக மக்கள் பொருட்களை வாங்க வந்து போவார்கள். அந்த மக்களின் வறுமை நிலை என் மனதை வாட்டியது. கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை வசதி என்பவற்றில் பின் தங்கிய நிலையில் இருந்த அவர்களது நிலை என்னை சிந்திக்க வைத்தது. குடிக்கும் பழக்கம் காரணமாக அவர்கள் மட்டுமின்றி அவர்களது சந்ததியினரும் வீணாகி இருப்பதை கண்கூடாகக் கண்டேன். அந்தக் குழந்தைகள் தேயிலை மலைக்கு பேர் பதிந்து வேலைக்குப் போவதையும் வேறு இடங்களில் வேலை செய்வதையும் காணும் போது மிகவும் துயரம் அடைந்தேன். இந்த சந்தர்ப்பத்திலேயே மலையக பாடசாலைகளில் எனக்கு நியமனம் கிடைத்தது. சிறிது காலம் ஆசிரியராகவும் பின்பு தொடர்ச்சியாக அதிபராகவும் பதவி வகித்தபோது மலையக மக்களோடு மிகவும் நெருங்கி பழகும் சந்தர்ப்பமும் அந்த குழந்தைகளின் நிலைப்பாடும், எந்தவிதமான முன்னேற்றமும் இன்றி அவர்களது வாழ்க்கை வீணே புழுதியில் கிடப்பதையும் நேரில் கண்டேன். எனக்கு அவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற உத்வேகம் எழுந்தது.

என்னால் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமானால் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதுடன் அவர்களைப் பற்றிய செய்திகளை வெளி உலகுக்கும் கொண்டுவர வேண்டும் என்ற ஆதங்கத்திலே நான் எழுத ஆரம்பித்தேன். எழுத்து எனக்கு இந்த வகையில் கைகொடுத்தது எனலாம்.

கண்டிப்பிரதேச சாஹித்திய விழாவில் கவிதை பாடி கெளரவிக்கப்பட்டபோது

இரு தசாப்தங்களுக்கு மேலாக கற்பித்தல் துறையிலும் அதிபர் சேவையிலும் கடமையாற்றிய நீங்கள் ‘மாணவர்களின் மனப்பாங்கு’ குறித்து புரிந்து வைத்திருப்பது என்ன?

மாணவப் பருவம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இனிமை சேர்க்கும் காலமாகும். இக்காலகட்டத்தில் சுறுசுறுப்பும், எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும், விளையாட்டில் விருப்பமும், தேடி அறியும் ஆசையும் அவர்களிடம் இயல்பாகவே அமைந்திருக்கும். அனைத்தையும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். என்னை பொருத்தவரை இத்தருணத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டுவது ஆசிரியர்களின் கடமையாகும். மாணவர்களை சுயமாக சிந்திக்கவும், அவர்களது தனித்தன்மைகளை மதிக்கவும் ,நல்ல விருப்பங்களுக்கு ஆதரவளிக்கவும் முயல வேண்டும். சதா தடைசொல்லவும், குறைகூறவும், அவர்களிடம் நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தவும் முனைந்தால் அவர்களுடைய வளர்ச்சி தடைப்படும். அவர்களது பாதைகள் வேறுபடும் என்பது உண்மை. எனவே வீட்டிலும் சரி பாடசாலையிலும் சரி அவர்களுக்கு சரியான வழிநடத்தல் இருந்தால் இப்போது நமது நாட்டில் காணப்படும் பல குறைபாடுகள் இல்லாமல் போகும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே, நல்ல விதைகளை மாணவர்களுக்கு விதைத்து நல்ல பயிர்களை அறுவடை செய்ய உதவுவோம்.

உங்களது ஆக்கங்கள் வெளிவந்த நூல்கள் பற்றி கூறுங்கள்?

  • 1992 இல் “ஒரே மண்” என்ற சிறுகதை பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளிவந்த பாரிஸ் முரசு என்ற பத்திரிகையில் வெளிவந்தது.
  • 1994இல் “துறவி” பதிப்பகத்தாரின் “உழைக்கப் பிறந்தவர்கள்” என்ற தொகுப்பில் “அப்பாவுக்கு கல்யாணம்” என்ற சிறுகதை வெளிவந்தது. (இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பரிசு பெற்ற சிறுகதை ஆகும்)
  • அந்தணி ஜீவாவின் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பில் “காயாம் பூவும் வாழை மரமும்” என்ற எனது சிறுகதை இடம் பெற்றுள்ளது.
  • சுவீஸ் நாட்டின் ஊடரறு வெளியீட்டின் “மை” என்ற கவிதை தொகுதியில் 2005 ஆம் ஆண்டு எனது கவிதை இடம்பெற்றுள்ளது.
  • கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கமும்” மாவத்த” சங்சிகை வெளியீட்டாளரும் கூட்டாக வெளியிட்ட சிங்கள கவிஞர் பராக்கிரம கொடி துவக்குவினால் மொழிபெயர்க்கப்பட்ட “இந்து சா லங்கா” “பிபி தென பெய” ஆகிய நூல்களிலும் எனது கவிதைகள் சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. (இக் கவிதைகள் தமிழில் “விழிப்பு” என்ற சஞ்சிகையில் வெளிவந்ததாகும்.)
  • ‘ FOR THE DAWING OF THE NEW ‘ , ‘ DREAM BOAT ‘ ஆங்கிலத்தில் எனது கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
  • ஹிஸ்புல்லா பவுண்டேஷன் ஏற்பாட்டில் காத்தான்குடியில் வெளியிடப்பட்ட “நதியை பாடும் நந்தவனங்கள்” என்ற நூலிலும் எனது கவிதை இடம்பெற்றதோடு, அங்கே பொற்கிழி வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டேன்.
  • பல்வேறு கவியரங்கம்களிலும் நான் கவிதை பாடியுள்ளேன்.
ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பான SRI LANKA PEN CLUBஇன் வருடாந்த மாநாட்டில் வைத்து கெளரவிக்கப்பட்டபோது
ஓய்வு பெற்ற பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் திரு. துரை மனோகரன் அவர்களுடன்

உங்கள் கலை இலக்கிய பயணத்தில் நீங்கள் சாதித்த சாதனைகள், மற்றும் பரிசுகள் குறித்து கூறுங்கள்.

பரிசுகள் பாராட்டுக்கள் இவற்றை விரும்பி இலக்கிய சேவை செய்யவில்லை என்றாலும் பிற்காலத்தில் கிடைத்த பொழுது மனநிறைவடைந்தேன்.

  • 1996 இல் கலைஞர் விருது.
  • 1996-2019இல் இரத்தின தீப விருது.
  • 2012 இல் 25 வருட இலக்கிய சேவைக்காக தினகரன் விருது.
  • 2014 ஹிஸ்புல்லா பவுண்டேஷன் பொற்கிழியும் விருதும்.
  • 1997 – இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கான பரிசு.
  • ரோட்டரி கிளப் நடத்திய கண்டி சுற்றாடல் மேம்பாடு தொடர்பான போட்டியில் முதல் பரிசு.
  • 2020-2021.11.03 அன்று வழங்கப்பட்ட கலாபூஷணம் விருது.
  • 2021-சுட்டு விரல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவில் கிடைத்த விருது. (இந்நூலில் எனது கவிதையும் இடம் பெற்றுள்ளது.)
  • 2023-கண்டி ரத்ன தீபம் அமைப்பினால் வழங்கப்பட்ட “சித்திலெப்பை” ஞாபகார்த்த விருது.
  • ஸ்ரீலங்கா பெண் கிளப் அமைப்பினால் கலாபூஷணம் பெற்றமையை கௌரவித்து 2021-12-24 வழங்கப்பட்ட விருது.
  • 1977 தொடக்கம் 2011 வரை அதிபர் சேவையை செய்தமைக்காக சேவைகள் நலன் பாராட்டு விழாவில் கம்பளை வலய தமிழ் அதிபர்கள் ஒன்றியம் 3-7-2012 எனக்கு வழங்கிய கௌரவ விருது.
  • இலங்கையில் தயாரிக்கப்பட்ட “சாமிலாவின் இதய ராகம்” எனும் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளேன்.
கண்டி விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்ற லங்காபுத்ர, தேசமான்ய, தேசபந்து வேலுப்பிள்ளை சிதம்பரநாதன் அவர்களின் 80ஆவது அகவை அமுத விழாவில் வைத்து கெளரவித்த போது
மலையகத்தில் குழந்தைகளோடு

‘சமகால இலங்கையின் இலக்கிய வரலாற்றில் மலையக இலக்கியவாதிகளின் பங்களிப்பு தனித்துவமானது’ என்பது பற்றிய உங்களது விடயவதானங்களை தெரியப்படுத்துங்கள்?

அன்று தொடக்கம் இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் மலையக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் முக்கியம் பெற்றுள்ள பிரச்சினைகள் அந்தந்த காலகட்டத்தில் எழுதப்பட்டு வந்துள்ளன. இவ்வாறு மலையக இலக்கியவாதிகள் பலரும் மக்களின் பிரச்சினைகளை பலவாறு சித்தரித்து காட்டியுள்ளனர் எனலாம். இவ்வாறு பார்க்கும் போது மலையக இலக்கியவாதிகளின் பங்களிப்பு தனித்துவமானது. மலையக எழுத்தாளர்களான தெளிவத்தை ஜோசப், சி.வேலுப்பிள்ளை, குறிஞ்சித் தென்னவன், குறிஞ்சிநாடன், மல்லிகை சி.குமார், வெள்ளைச்சாமி, முரளிதரன் போன்றவர்களோடு வேறு இடங்களைச் சேர்ந்த பலரும் இக்பால் அலி, ஞானசேகரன் ஐயர் போன்றவர்களும் எழுதியுள்ளார்கள். வேறு மதங்களை சேர்ந்தவர்களும் மலையகம் பற்றி எழுதியுள்ளார்கள்.

மலை நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு எழுத்தாளர்களே முக்கிய காரணம் எனலாம். இப்போது மத்திய வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக அநேக மலையக மக்கள் மாறிவருகின்றனர். மலைநாட்டை விட்டு வெளியேறி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் தொழில் செய்கின்றனர். அது மட்டுமின்றி, நன்றாக கற்று ஆசிரியர்களாக, வைத்தியர்களாக, வழக்கறிஞர்களாக, அரசியல்வாதிகளாக பல்வேறு உயர் தரத்தை அடைந்து இருக்கிறார்கள். பல்கலைக்கழகம் செல்வோர் தொகை அதிகரித்து வருகிறது. மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும். எனவே, இவ்வாறான ஒரு சிறந்த மாற்றத்திற்கு மலையக இலக்கியவாதிகளின் பங்களிப்பு அதிகமாக உதவி இருக்கின்றன என்றே கூறவேண்டும். அந்த வகையிலே நாம் எழுத்தாளர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் .

‘தமிழ்நெஞ்சம்’ சஞ்சிகை குறித்தும் அதன் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக நீங்கள் அவதானித்தவை பற்றி ஏதாவது?

தமிழ்நெஞ்சம் சஞ்சிகையின் நிர்வாகக் குழு மிகச் சிறப்பாக இயங்குகின்றது. அதுமட்டுமின்றி அண்மைய சஞ்சிகையை பார்வையிட்டேன். மிகச்சிறப்பாக ஆக்கங்கள் காணப்பட்டன. சமூகத்துக்கு தேவையான அறிவுசார்ந்த பல கவிதைகளையும் கட்டுரைகளையும் விடயங்களையும் நான் கண்டேன். இந்த காலகட்டத்தில் ஒரு சஞ்சிகையை தரமாக வெளிக்கொணர்வது மிகப்பெரிய சாதனை தான். சஞ்சிகை தொடர்ந்து வெளிவர வேண்டும். சமூகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும் என்று கூறி எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Posts

நேர்காணல்

ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்

  1. உங்களை பற்றிய அறிமுகத்தை கூறுங்கள்.

1997 ஜனவரி மாதம் 30ஆம் திகதி இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகமை எனும் ஊரில் பிறந்தேன்.

எனது தந்தையின் பெயர் முஹம்மத் ஹூசைன்,

 » Read more about: ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »