மின்னிதழ் நேர்காணல் மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

நேர்காணல்  தமிழ்நெஞ்சம்அமின்

சனவரி 2024/ 148 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை எமது வாசக நெஞ்சங்களுக்காக  அறியத் தாருங்கள்!

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் கடந்த 15 வருடங்களாக வைத்திய அதிகாரியாகக் கடமை புரிந்து வருகிறேன். தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பணி புரிகிறேன்.தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் சேவை அனுபவம் உண்டு.சுமார் ஐந்து வருடங்களாக இலக்கியத் துறையில் பயணித்து வருகிறேன்.

உங்கள் தொழில் சார்ந்த விடயங்கள் எவை?

கல்வியில் தேர்ச்சி பெற்று வைத்தியத்துறையில் பிரவேசித்ததும் பணியாற்றுவதும் கல்வி ரீதியான அடைவாகும். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. முதற்கண் இறைவனுக்கும் அடுத்து என் பெற்றவர்களுக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

களனி மருத்துவ பீடத்தில் மருத்துவக்கற்கையை மேற்கொண்டேன்.

தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பணி புரிகிறேன்.தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் சேவை அனுபவம் உண்டு.

இலக்கியத்தின் மீதான ஆர்வம் ஏற்பட தூண்டுகோலாக இருந்தது எது? (யார்)

சிறு பராயம் முதலே வாசிப்பிலே ஆர்வம். தமிழ் மொழியில் அப்படியொரு பற்று. வாசிப்போடு உறவு கொண்டிருந்ததாலேயே தமிழிலே விருப்பு வந்தது என்றால் அது மிகையாகாது. எனது தந்தை ஹயாத்து முஹம்மது அவர்கள் கணித ஆசிரியராக இருந்தபோதிலும் தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். மரபுக் கவிதை புதுக்கவிதை போன்றவற்றை இயற்றக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். செய்யுள்களையும் காவியங்களையும்  கதைகளையும் தமிழ் ஊற தமிழ் சொட்டச் சொல்லித் தருவதில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார்கள். இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட தூண்டுகோலாக இருந்தவர் தந்தை என்று தெரிவிப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்.தமிழ்ப்பாடத்தைச் சுவைபடக் கற்பித்த தமிழ் ஆசான்களும் எனது தமிழ் வளரக் காரணமானவர்கள்தாம். இவ்விடத்தில் அவர்களை நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன்.

தூரிகை வரையும் மின்மினிகள் நூல் வெளியீடு
மூத்த கவிஞர் கலாபூஷணம் அப்துல் றகுமான் அவர்களின் மரணித்த சூரியன் நூல் வெளியீட்டு விழாவில்
அன்புத்தந்தையுடன்
ஏறாவூர் பிரதேச செயலகம் மற்றும் கலாச்சார மத்திய நிலையத்தின் இலக்கிய விழாவில்-2022 கலைத்தாரகை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டபோது
ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம்-2023 நிகழ்வில்

ஒரு அரசாங்க உத்தியோகத்தராகவும் இருந்து கொண்டு, எழுத்துத் துறையிலும் பிரகாசித்து வருகிறீர்கள்.இது எப்படி சாத்தியப்படுகிறது? உங்கள் நேரத்தை எப்படி முகாமைத்துவப் படுத்துகிறீர்கள்?

ஒவ்வொரு பெண்ணிற்கும் வாழ்க்கை எனும் நாடகத்தில் நிறைய வேடங்கள் உண்டு. மகளாக, சகோதரியாக, மனைவியாக , தாயாக இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கல்வியிலே தேர்ந்து வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்வது அவளது முதல் வெற்றி என்று சொல்லலாம். திருமணம் என்ற ஒன்றில் அவள் காலடி எடுத்து வைக்கும் போது அவளின் பொறுப்புக்களும் சுமைகளும் இரண்டு மடங்காகி விடுகின்றன என்பதே உண்மை. சிறந்த குடும்பத் தலைவி என்பவள் குடும்பத்தையும் வீட்டையும் மிகவும் சாமர்த்தியத்துடன் நிர்வகிப்பவளே. அவளது நிர்வாகம் ஒரே சீராகச் செல்ல வேண்டும். சூழ்நிலைக்கேற்ப வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் ஒரே ஓட்டத்தில் செல்ல வேண்டும். வைத்திய தொழில் என்பது மிகவும் பொறுப்பு மிக்கதும் வேலைப்பளு மிக்கதுமான ஒரு தொழிலாகும். மிக அவதானத்துடனும் நோயாளர் நலனில் அக்கறை கொண்டும் செய்யக்கூடிய சமூக சேவையாக அது இருக்கிறது. ஒரு பெண் என்ற ரீதியில் வேலைக்கு செல்லுதலும் குடும்ப பொறுப்புகளும் இரட்டைச் சுமையாக அழுத்தினாலும் அதைத் திறம்பட செய்வதில் மிகவும் கவனம் எடுக்கிறேன். இவ்விடத்தில் நேர முகாமைத்துவம் என்பது மிக அத்தியாவசியமாகிறது. நேரத்தைச் சிக்கனப்படுத்தி செலவழிப்பதில் பெண்களின் பங்கு மகத்தானது. அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்துத் துறையில் செலவழிப்பதற்கு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? தமிழ் என்பது எனக்கு ஒரு போதையாக இருக்கிறது.எனது வேலைப்பழுவைத் துரத்தி உற்சாகம் தருவிக்கும் அமுதாக இருக்கிறது. அதைத் தருவதிலும் சுகிப்பதிலும் ஆவலுடன் இருக்கிறேன். எனது எல்லா வகையான முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் எனது அன்புக் கணவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். முற்கூட்டியே திட்டமிட்டு ஒவ்வொரு வேலையும் செய்யும் பழக்கமே இலக்கியத்திலும் தொழிலிலும் சமாந்தரமாகப் பயணிப்பதற்கு உதவுகிறது. இவ்வாறான திட்டமிடல்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் எனது தந்தையே. இவ்விடத்தில் இதைத் குறிப்பிடுவதில் பேரானந்தம் அடைகிறேன்.நேர

முகாமைத்துவமே எல்லா வகையான வெற்றிகளுக்கும் அடிப்படை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இதுவரை  நீங்கள் எழுதிய புத்தகங்கள் குறித்து?

எனது கன்னி வெளியீடு சிறகு முளைத்த மீன்- புதுக்கவிதை நூல் கடந்த வருடம் 2022 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

இரண்டாவது சுய வெளியீடு தூரிகை வரையும் மின்மினிகள் ஹைக்கூ கவிதை நூல் இவ்வருடம் இலங்கையில் வெளியீடு செய்யப்பட்டது.

முகநூல் குழுமங்கள் தவிர்த்து வேறு எங்கெல்லாம் உங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்துகிறீர்கள்?

சுமார் 40க்கும் அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு இதழ்களில் எனது கவிதைகள் கட்டுரைகள் ஊக்கப் பதிவுகள் வெளிவந்துள்ளன.

சஞ்சிகைகள், பத்திரிகைகள், சிற்றேடுகள், மின்னிதழ்கள் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் குழுமங்களில் கவிதைகள், கட்டுரைகள், மருத்துவக் குறிப்புகள், மருத்துவக் கட்டுரைகள்,ஊக்கப்பதிவுகள், சிறுகதைகள் எழுதி வருகிறேன். புலன இலக்கியக் குழுமங்களிலும் இலக்கியப் பயணம் செய்கிறேன்.

தினகரன்,  தினகரன் வாரமஞ்சரி, தமிழன், வேட்டை, அக்கினிச்சிறகுகள், முத்தமிழ்க் கலசம், படிகள், விடிவெள்ளி, மெட்ரோ நியூஸ், வெண்ணிலா, மணிக்கூ மகுடம், அவரி, எழுத்தொளி, சிகரம், முத்திதழ், சுபீட்சம், முரசு போன்ற உள்நாட்டு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும்  துணிந்தெழு, தமிழ்நெஞ்சம், வளரி, காற்றுவெளி இதழ், ஹைக்கூத் திண்ணை, கவிச்சூரியன், அகரமுதல, கவிமாடம், ஹெல்த்கேர், வானம் வசப்படும், தாய்த்தமிழ் பட்டிமன்றக்குழு, முத்தமிழ் நேசன், திறவுகோல், ஆதிரை, கவிதைப்பெட்டி, ஐக்கூச்சாரல், சந்திரோதயம் மதிமலர், புக் டே (book day) போன்ற வெளிநாட்டுச் சஞ்சிகைகளிலும் எனது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

கவிதை இலக்கியம், (புதுக்கவிதை மரபுக் கவிதை தன்முனை,ஹைக்கூ), சிறுகதை பாடலாக்கம், கட்டுரை (ஊக்கப்பதிவு, மருத்துவக் கட்டுரை, பொதுவான கட்டுரைகள்), வலையொளிப் பதிவேற்றங்கள், பேச்சு, விவாதம், பத்திரிகைத்துறை, நூல் விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகிறேன்.

கவிதைத்தொகுப்பு நூல்கள் பலவற்றில் எனது கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவிலும் இலங்கையிலும் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன.

இலக்கியப் போட்டிகளில் கலந்து கொள்வதிலும் பேரார்வம். வெற்றிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.நேரடி, இணையவழிக் கவியரங்கங்களில் பங்கேற்றும் தலைமையாகவும் இருந்துள்ளேன். பதியப்பட்ட இலக்கிய மன்றங்களில் நிர்வாகக்குழுவில் முக்கிய பொறுப்புகளில் இயங்கி வருகிறேன். எமது ஆக்கங்கள் வலையொளியிலும் வானொலி நிகழ்ச்சிகளிலும் பதிவேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.பல்வேறு இலக்கியப் போட்டிகளில் நடுவராகவும் கடமை புரிந்துள்ளேன்.

கிழக்கு மாகாண எழுத்தாளர்களுக்காக அரசாங்கம் வழங்கும் வரப்பிரசாதங்கள் அதிகமென பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.இதுபற்றிய உங்கள் கருத்து?

 ஆமாம்.நிச்சயமாக..இதை ஆமோதிக்கிறேன்.பிரதேச ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் பல்வேறுபட்ட இலக்கியப் போட்டிகள், விருதுத் தேர்வுகள், நூல் கொள்வனவு, சிறப்பு நூல் விருது போன்றவை வருடந்தோறும் இடம்பெறுவது அரசாங்கத்தின் மிகச் சிறப்பான முன்னெடுப்பாகும். இது எழுத்தாளர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் பண்பட்ட ஆளுமைகளையும் திறமையான இலக்கியவாதிகளையும் சமூகத்திற்கு இனங்காட்டுகிறது என்பது எல்லோரும் அறிந்த விடயம்.மிகவும் ஆக்கபூர்வமான இலக்கிய வெளியீடுகளையும் அது சமூகத்திற்கு தந்து செல்கிறது என்பது ஒரு வளமான விடயமாகும்.

இவ்வாறான இலக்கியப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியும் ஈட்டியுள்ளேன் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.அத்துடன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் 2023ஆம் ஆண்டு இளம் கலைஞர் விருதுக்கும் இம்முறை தேராவாகியுள்ளமை பெருமிதமாக இருக்கிறது.

பெயர் பதிக்கும் தகைகள் நூல் வெளியீட்டில் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டபோது
தேனி கலை இலக்கிய மன்றத்தின் ஆண்டு விழா 2021-கவித்தேன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டபோது
"ஏறாவூர் படுகொலைகள் வரலாறும் பிண்ணனியும்" நூல் வெளியீட்டு நிகழ்வில்

ஒரு எழுத்தாளனால் சமூகத்துக்கு செய்யக்கூடிய சேவைகளாக எவற்றைச் சொல்லலாம்?

தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் விரல்கள் எழுத்தாளனுடையவை.

சமூகத்தின் நன்மைக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் தங்களை அர்ப்பணித்து, பாமர மக்களின் ஆசாபாசங்கள், வாழ்க்கை முறைகள், அநுபவங்கள் எல்லாவற்றையும் கோடிட்டுக் காட்டுபவனே எழுத்தாளன்.பேனா முனை ஆயுதமுனையை விடக் கூர்மையானது.வீரம் கொண்டது.

அடிமட்டத்து வேதனையிலிருந்து அனைவரது பிரச்சினைகளையும் அடிக்கோடிட்டு வெளியுலகத்துக்குக் காண்பிப்பதன் மூலம் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்குரிய ஒரு கருவியாக எழுத்தாளன் செயற்படுவது பாரியதோர் சேவை தானே.

பல குழுமங்களில் நிறைய ஹைக்கூ எழுதி வருகிறீர்கள். சில தினங்களுக்கு முன்பு உங்கள் ஹைக்கூ நூலையும் கோலாகலமாக வெளியிட்டுள்ளீர்கள். ஹைக்கூ பற்றிய புரிந்துணர்வு  பலருக்கு  இன்னும் குறைவாகவே உள்ளது. அதன் இலக்கணங்கள் பற்றிய சர்ச்சையும் குறைந்த பாடாக இல்லையே!  இன்றுவரை பல கருத்து வேறுபாடுகள் நிலவும் இக்கவிதை வடிவம் பற்றிய உங்கள் கருத்தும், நிலைப்பாடும் என்ன?

ஹைக்கூ என்றால் என்ன,அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறான கவிதைகள் வரவேற்கத்தக்கதாகவும் புதிய சிந்தனைகள் புதிய பாணிகளைக் கொண்டதாகவும் காணப்படுவது புதுமை செய்வதாகவே இருக்கிறது.அடிப்படை ரீதியாக ஹைக்கூ கவிதைகளுக்குப் பல வரைமுறைகள், இலக்கண விதிகள் இருந்தாலும் பெரும்பாலும் ஆரம்ப இலக்கணங்கள் மாறாதவாறு சற்று வித்தியாசமாக புதுமை செய்தலையும் இலக்கிய உலகம் வரவேற்றுக் கொண்டே இருக்கிறது. இலக்கியம் புதுமையை, முரண்களை விரும்புவது இயல்பு தானே. மாற்றம் என்ற ஒன்றே உலகில் மாறாதது. ஹைக்கூ விடயத்திலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

ஆகச் சிறந்த ஒரு ஹைக்கூ எப்படி அமைய வேண்டும்?

ஹைக்கூ என்பது மூன்று வரிகளுக்குள் முழுப் பிரபஞ்சத்தையும் அடக்கக் கூடியது. சிறு துளி ஒன்று பெரியதொரு காட்சியை தனக்குள் உள்ளடக்குவது போல மூன்றே வரிகளில் சமூக அவலங்களைப் படம் பிடித்துக் காட்டக் கூடியதும், படிப்பினைகளைச் சொல்லக் கூடியதுமாக அமைகிறது. தூரத்து நிலாவைக் கைகளுக்குள் கொண்டு வரும் வித்தைகள் தெரிந்தது. மூன்று வரிகளுக்குள் எண்ணற்ற தத்துவங்களைச் சொல்லக்கூடியது என்றே கூறலாம்.

பருவநிலை மாற்றங்களை வாழ்வியல் உண்மைகளோடு ஒட்டி வைத்து எழுதுவதே ஹைக்கூ. காட்சிகளைப் படிமம் ஆக்குவதில் தேர்ந்து காணும் எதையும் புகைப்படம் எடுப்பது போல அழகாகச் சொல்லெனும் தூரிகைக் கொண்டு வரையும் ஓவியமே ஹைக்கூ.

ஹைக்கூ கவிதை ஆனது பொருட்செறிவும் இனிமையும் ஆழமும் கொண்டது. வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டி எங்கெல்லாமோ அழைத்துச் செல்லும் வலிமை கொண்டது. ஹைக்கூ கவிதைகளில் மயங்காதவர்கள் இல்லை எனலாம். சிறு வரிகளில் தன்னடக்கத்தோடு பாரிய அர்த்தத்தை உள்வாங்கி தன்னகத்தே கொண்டு இருக்கின்றன ஹைக்கூ கவிதைகள். ஒவ்வொரு வாசகனையும் ஒவ்வொரு விதமாக சிந்திக்கச் செய்து புதுமை செய்கிறது.போதை தருகிறது என்றே சொல்லலாம்.

அதாவது மூன்று வரிகள்..ஏழு சொற்கள்.. ஆனால் அது கொண்டு வரும் படிப்பினை ஆனது பக்கம் பக்கமாக விளக்கங்களை எழுதக்கூடிய வகையில் இருக்கும்.ஆகச்சிறந்த ஹைக்கூ என்பது சொற் சிக்கனத்துடன் ஹைக்கூ இலக்கணத்துடன் மூன்றாவது வரியில் அனைவரையும் திகைக்க வைத்து பெரிய தத்துவம் ஒன்றை மனதில் விரிய வைத்துச் செல்வது தான்.

ஏறாவூர் பொது நூலகத்தின் முற்றத்து மல்லிகை நிகழ்வில் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டபோது

ஹைக்கூவில் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது போல ஒருசில பாடுபொருள்களை மையமாக வைத்தே  ஹைக்கூக்கள் உருவாக்கப் படுகின்றனவே! இதனால் ஒருவருடையதைப் போலவே இன்னொருவருடைய ஹைக்கூவும் சாயலாக அமைவது ஏற்புடையதா?

ஒரு ஹைக்கூவால் ஈர்க்கப்பட்டு அதை உள்வாங்கி அதன் சாயலில் அவ்வாறு பல கவிஞர்கள் எழுதக்கூடும். அதை கவிஞர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கவிஞரின் கருப்பொருளை எடுத்து அதே மாதிரி தாமும் எழுதுவது தவறென நினைக்கிறேன். ஆனால் கருப்பொருளை மாற்றம் செய்து அதே சூழலில் எழுதுவது பிழை இல்லை. ஒவ்வொரு கவிஞனும் தான் காணுகின்ற அனுபவிக்கின்ற ரசிக்கின்ற அழுகின்ற பாதிக்கின்ற விடயங்களையும் கவிதைக்குள் கருவாகக் கொண்டு வருகிறான்.

வாழ்வியலில் எண்ணற்ற விடயங்கள் கொட்டி கிடக்கின்றன.அதேபோன்று இயற்கை, சிற்றுயிர் நேசம், பருவ கால மாற்றங்கள், சமூக அவலங்கள் போன்ற விடயங்களும் அவ்வாறு தான்.

எனவே கவிஞர்கள் ஒரே விடயத்திற்குள் நின்று யோசிக்காமல் அவர்களுடைய வாசிப்பையும் தேடலையும் அதிகமாக்கிக் கொண்டு ஹைக்கூ கவிதைகளில் புதுமையும் அழகையும் வித்தியாசங்களையும் பல்வேறுபட்ட கோணங்களையும் கொண்டு வர வேண்டும் என்பதே எனது அவா.

இதுவரை நீங்கள் பெற்ற விருதுகள் எவை?

 இலங்கை – தேனீ கலை இலக்கிய மன்றத்தில் மூன்றாம் ஆண்டு விழாவில் (26/03/2021) கவித்தேன் விருது

  • சிறீலங்கா பென்கிளப் எனப்படும் முஸ்லிம் பெண்கள் எழுத்தாளர் அமைப்பின் முதலாவது மாநாட்டில் (18/12/2021) இலக்கியச் சேவைக்கான விருது
  • தமிழ்நாடு கோவை ஊலளழ இலக்கியக் குழுமம் ஐந்தாண்டு விழா (23/01/ 2022) கவிச்சூரியன் விருது கிடைக்கப்பெற்றமை.
  • ஏறாவூர் தமிழ்ச் சாரல் கலை இலக்கிய வட்டத்தால் (இலங்கை) (17/03/2022) மகளிர் தின விழாவில் கவிச்சாரல் விருது
  • தமிழ்நாடு மதுரமொழிக் கவிச் சங்கத்தினால் இலுப்பை அறக்கட்டளை அனுசரணையுடன் நடாத்தப்பட்ட முப்பெரும் விழாவில் “தமிழ் வேள்” விருது(29/05/2022) வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை.
  • திண்டுக்கல் மாவட்ட பசுமை வாசல் பவுண்டேஷன், குமரி மாவட்ட தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்ட காமராஜர் இளைஞர் வளர்ச்சி பேரவை, சேலம் மாவட்ட ஆத்தூர் ஸ்ரீ சக்ஸஸ் அகடமி & பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளான ஜூலை – 15 ஆம் திகதியை முன்னிட்டு நடாத்திய பல்துறை சாதனையாளர்களுக்கான “பெருந்தலைவர் காமராசரின் மாமணி விருதுகள் – 2022” வழங்கும் நிகழ்வில் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புக்காக ‘செம்மொழிக் கவிமாமணி’ விருது (15/07/2022)
  • ஏறாவூர் தமிழ்ச் சாரல் கலை இலக்கிய வட்டத்தால் (இலங்கை) கவி முகில் விருது (01/10/2022)
  • இலங்கைக் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து ஏறாவூர் நகர பிரதேச செயலகம் நடாத்திய பிரதேசக் கலை இலக்கிய விழா மற்றும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் (29/11/2022) கவிதை இலக்கியத்துக்காக “கலைத்தாரகை விருது” வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை.
  • சிறீலங்கா பென்கிளப் எனப்படும் முஸ்லிம் பெண் எழுத்தாளர் அமைப்பின் இரண்டாவது மாநாட்டில் (24/12/2022) அவிழ்தம் மருத்துவ சஞ்சிகை நிகழ்ச்சிக்கான விருது மற்றும் இலக்கியச் சேவைக்கான விருது (இரு விருதுகள்) மற்றும் சான்றிதழ்கள்.
  • தமிழ்நாடு கோவை ஊலளழ இலக்கியக் குழுமம் ஆறாம் ஆண்டு விழா (21/01/2023) ழகரச் சிற்பி விருது.
  • சிறீலங்கா பென்கிளப் எனப்படும் முஸ்லிம் பெண்.எழுத்தாளர் அமைப்பின் மூன்றாவது மாநாட்டில் (21/10/2023) அவிழ்தம் மருத்துவ சஞ்சிகை நிகழ்ச்சிக்கான விருது மற்றும் அவரி சஞ்சிகை தொகுப்பாசிரியர் விருது என இரு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள்.

எழுத்துத் துறையில் உங்கள் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள் பற்றி?

தமிழ் தொண்டன் பைந்தமிழ் சங்கம் நிகழ்த்திய “பத்தாயிரம் கவிதைகள் ஒரு நூல் தொகுப்பு உலக சாதனை” நூலில் எனது நூறு கவிதைகள் தேர்வாகி  ‘நோபல் உலக சாதனையில்’  பதிவாகி உள்ளது. அதில் எனது “துயில் நதிப் பூக்கள்” எனும் தலைப்பிலான 100 புதுக்கவிதைகள் கவித்தேனருவி பத்தாயிரம் கவிதைகள் கொண்ட கவிதை நூலில் இடம் பெற்றுள்ளது. இக்கவிதைகள் “துயில் நதிப் பூக்கள்” எனும் தலைப்பில்  தனி நூலாகவும், மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு நூலொன்றும், தன்முனைக் கவிதைதொகுப்பும் எதிர்காலத்தில் வெளியீடு காணவிருக்கிறது.

மருத்துவக் கட்டுரைகள் பலவற்றை எழுதி சமூகத்துக்கு ஒரு விழிப்புணர்வை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. இலங்கையில் பால்ய வயது பாலியல் துஷ்பிரயோகங்கள் இவ்வருடம் பாரிய அளவில் அதிகரித்திருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன. இவற்றுக்கு என்ன காரணம்? இதைத்  தடுக்கவும், மக்கள் மத்தியில், குறிப்பாக இளவயது பெண்பிள்ளைகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உங்கள் ஆலோசனை என்ன?

இன்றைய உலகு பலவிதமான புதிய பிரச்சினைகளை நாளுக்கு நாள் சந்தித்துக் கொண்டேயிருக்கிறது. உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு மாபாதகத் செயலாக  பால்யவயது பாலியல் துஷ்பிரயோகத்தைக் குறிப்பிடலாம். பாலியல் ரீதியில் சிறுபெண்பிள்ளைகளைத் துன்புறுத்தும் செயலே இது.

இது தொடர்பாக ஊடகங்களில் நாளுக்கு நாள் செய்திகள் ஒளிபரப்பப்பட்டாலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையினாலோ அல்லது கைது நடவடிக்கையினாலோ இந்த குற்றங்கள் குறைவதாகத் தெரியவில்லை.இந்தக் குற்றத்திற்கு அடிப்படையாக பல்வேறுபட்ட காரணங்களைக் குறிப்பிடலாம். சிறுவர்களின் பாதுகாப்பற்ற நிலைமை, பெற்றோர்களின் கவனக்குறைவு, பொருளாதாரத்தில் பலவீனம், சிறுவர்களின் அறிவீனம், பெற்றோர்களின் விவாகரத்து மற்றும் குடும்பப்பிரச்சினைகள், தாய் தந்தையரின் வெளிநாட்டுப் பயணம், பெற்றோர்களின் கல்வி அறிவின்மை, கையடக்க தொலைபேசிகள் மற்றும் இணையத் தளங்கள்,மதுபானம் மற்றும் போதை வஸ்து உபயோகம், தனிமைப்படுத்தப்பட்டிருத்தல், சிறிய சூழலில் நிறையப்பேர் வாழ்தல் இப்படி பல்வேறு காரணங்களினால் சிறுவர்கள் / பெண் பிள்ளைகள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர்.

ஒரு வைத்தியர் என்ற ரீதியில் நான் கூறும் ஆலோசனையானது இவ்வாறான சந்தர்ப்பங்களில் குடும்பத்தில் உள்ள புத்திஜீவிகள், அறிவாளிகள், மூத்தவர்கள் பிள்ளைகளுக்கான பிரச்சினைகளைக் கண்டறிந்து அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முற்கூட்டியே மேற்கொள்வதுதான்.இன்னும் சிறுவர்களுக்கான உரிமைகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.அத்தோடு பெற்றோர்களுக்கும் இதைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும்.சிறுவர்களுக்கான நல்ல நடத்தைகளை கற்றுக் கொடுத்தல், அவர்களுக்கு தொடுகைகள் பற்றிய அறிவுறுத்தல்களும் பாடசாலைகளில் மேம்படுத்தப்படுதல் வேண்டும். அரசாங்க ரீதியாகவும் இதற்கான பல்வேறுபட்ட செயல்திட்டங்கள் சமூகத்தின் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எனவே முதலில் காரணங்களைக் கண்டுபிடித்து அதற்கான தீர்வுகளையும் முன்கூட்டிய ஆலோசனைகளையும் சமூகத்துக்கு வழங்குவது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

நமது தமிழ்நெஞ்சம் பற்றிய உங்கள் கருத்து?

தமிழ்நெஞ்சம் இதழ் தமிழை வளர்க்கும் பணியை செவ்வனே செய்து வருகிறது. அதிக பக்கங்களுடன் அனேக கவிஞர்களுக்கு, அநேக எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதே இதன் சிறப்பு அம்சமாகும். எனது முதலாவது படைப்பு வெளிவந்த இதழ் தமிழ்நெஞ்சம் என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்வதில் மிகவும் பெருமிதமும் புளகாங்கிதமும் அடைகிறேன். எனது படைப்புகளும் இவ்விதழில் தொடர்ந்து மாதாமாதம் வெளி வருவது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. இதழாசிரியர் தமிழ்நெஞ்சம் அமின் ஐயா அவர்கள் தமிழிலும் இதழ்ப் பணியிலும் மிகவும் கை தேர்ந்தவர். சளைக்காமல் பல தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியை செய்து வருபவர் என்றால் அவருடைய தமிழ்ப்பற்றை மெச்சாது, பாராட்டாது இருக்க முடியுமா? அவருக்கு என் அன்பான அகநிறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனது இரண்டாவது நூலான தூரிகை வரையும் மின்மினிகளை அழகுற வடிவமைத்துத் தந்தவர் என்பதில் நான் பெருமை அடைகிறேன்.

இந்த நேர்காணலுக்கு வாய்ப்பு தந்த தமிழ்நெஞ்சம் அமின் ஐயா அவர்களுக்கு மீண்டும் நனி நன்றிகள் கூறி விடைபெறுகிறேன்.

நன்றி.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்

நேர்கண்டவர் :
தமிழ்நெஞ்சம் அமின்

மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?”

ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார்.

 » Read more about: தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்  »

நேர்காணல்

சுவிஸ் நாட்டுத் தமிழச்சி

வணக்கம்

தங்கள் பூர்வீகம் இலங்கை எனத் தெரியும். இலங்கையில் எந்தப் பகுதியில் தங்கள் குடும்பம் இருந்தது?

இலங்கை யாழ்மாவட்டத்தில் உள்ள கோப்பாயில்  வசித்தோம்.

எப்போது புலம்பெயர்ந்தீர்கள்?

 » Read more about: சுவிஸ் நாட்டுத் தமிழச்சி  »

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.