I மின்னிதழ் I நேர்காணல் I கோவுஸ்ஸ உலகநாதன்
நேர்காணலில் நாம் சந்திக்கவிருப்பவர், தமது காத்திரமான படைப்புகளோடு இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்.’கோவுஸ்ஸ ராம்ஜி’ எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வலம் வரும் காளியப்பன் உலகநாதன் ஆவார்.
நேர்கண்டவர் வஃபீரா வஃபி
வணக்கம்! உங்களைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன் இந்த நேர்காணலைத் தொடங்குவோமா?
வணக்கம்! இலங்கை, மலையகத்தின் ஊவா மாகாணத்தின் எல்ல பிரதேச சபை வட்டாரத்தில் அமைந்துள்ள, கோவுஸ்ஸ என்ற ஊரில் வசிக்கும் நானோர் விவசாயி. வயது 64.எனக்கு மூன்று பிள்ளைகள்.
தாங்கள் ‘கோவுஸ்ஸ ராம்ஜி’ என்ற பெயரிலேயே அனேகமாக எழுதி வருகிறீர்கள். இதற்கு விசேட காரணம் ஏதும் உள்ளதா?
எனது எழுத்துக்களால் என் ஊரின் பெயரும் பிரபலமாக வேண்டும் என்றெண்ணியே என் புனைபெயரோடு என் ஊரின் பெயரையும் இணைத்து எழுதுகின்றேன்.
இதுவரை பல நூல்கள் எழுதியுள்ளீர்கள். அதுபற்றிய விபரங்களை நம் வாசகர்களுடன் பகிரலாமே!
- “தேயிலை புஷ்பங்கள்” 2018
- “கொழுந்தம்மா” 2020
- ‘இவன்’ 2021
- “என் கொல்லைப்புறத்து 2021 நதி” 2021
- “கொரோனாக் கூட்டில் ஒரு லயத்துக்குருவி” 2022
ஒரு சிறுகதை தொகுப்பும், மூன்று கவிதை நூல்களும், ஒரு சுயசரிதை நூலுமாக மொத்தம் ஐந்து நூல்கள் வெளியிட்டுள்ளேன்.
நீங்கள் எழுதிய ‘கொழுந்தம்மா’ சிறுகதைத் தொகுப்பை இந்தியாவில் வெளியிட்டதாக அறியக் கிடைத்தது. அப்படியான எண்ணம் ஏற்படக் காரணம்?
தமிழ்நெஞ்சம் ஐயா ஹைக்கூ 2020 நூல் வெளியீட்டுக்காக சென்னை வருவதாக அறிந்து கொண்டேன்.அவரை நேரில் காணவேண்டும் என்ற ஆவலும், என் எழுத்துக்கள் இந்திய மக்களையும் சென்றடைய வேண்டுமென்ற நோக்கமும் தான் என் நூலை இந்தியாவில் வெளியிடத் தூண்டின.
மலையக மக்களைப் பற்றிய சமூக அக்கறையை உங்கள் எழுத்துக்களில் காண முடிகிறது.இவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள், சிக்கல்களை எழுத்தாளர்களின் எழுதுகோல்களால் தீர்த்து வைக்க முடியும் எனக் கருதுகிறீர்களா? அப்படியானால், அது எவ்விதமாக அமைந்தால் சாத்தியப்படும்?
என் உறவுகளான மலையக மக்கள்,இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட இனமாகவே இருக்கின்றனர்.எம்மவர்களின் பிரச்சினைகளை சிலர் வியாபாரமாக்கினாலும், தீர்வைப் பெற்றுத்தர அவர்கள் விரும்புவதில்லை. எழுத்தாளர்களால் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர முடிந்தாலும், அதை தீர்த்துவைக்கும் பொறுப்பை தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களே ஏற்று, தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டும்.
பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் மலையக மக்களின் வாழ்வியல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு இலகுவான வழிமுறை எதுவென நினைக்கிறீர்கள்?
மலையக மக்களின் பிரச்சினைகள் மிகச் சுலபமாக தீர்க்கக்கூடியவையே! முதலில் அவர்களை இலங்கையின் பிரஜைகளாக பெரும்பான்மையினர் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்.200 வருட வரலாற்றைக்கொண்ட இந்த மக்களை வெறுமனே உழைக்கும் இயந்திரமாகவே ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். இந்த மனநிலை மாற வேண்டும்.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இலக்கியம் எந்தளவில் வளர்ந்துள்ளது? அதன் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களில் உண்மைத்தன்மை இருக்கிறதென நம்புகிறீர்களா?
இந்தியாவைப்பொறுத்தவரை இலக்கியம் இமாலய வளர்ச்சி கண்டுள்ளது. இலங்கையில் வடகிழக்கில் தமிழ் இலக்கியம் நல்ல வளச்சி கண்டுளது,ஆனால் மலையகத்தில் தமிழ் இலக்கியம் பாரிய வளர்ச்சி காணவில்லை. இதற்க்கு மலையகத்தின் மூத்த இலக்கியவாதிகள் சிலரின் சுயநலப்போக்கும் காரணம்.
சமூக நலனுக்கான தொலைநோக்கு சிந்தனையோடு எழுதப்படும் விடயங்கள் சில நேரங்களில், மக்களின் வரவேற்பைப் பெறாமல், கண்டுகொள்ளப் படாமலேயே போய்விடுகின்றனவே! உங்கள் பார்வையில், இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?
ஒன்று போதிய அளவுக்கு இந்த கருத்துக்கள் மக்களை எட்டவில்லை, அல்லது மக்களிடையே விவாதிக்கப்படவில்லை.என்னதான் உயர்வான கருத்துக்கள் என்றாலும், அவை மக்களிடையே விவாதிக்கப்படாத விடத்து மக்களால் கண்டுகொள்ளப்படுவதில்லை.
சமூக விழிப்புணர்வுக்கான முன்னெடுப்புகளில் எழுத்தாளர்களின் பங்களிப்பு போதுமானதாக உள்ளதா?
எழுத்தாளர்கள் இப்போது சமூக சிந்தனையுடன் எழுதுவது குறைந்து விட்டதாகவே நான் கருதுகின்றேன். என்றாலும் சமூகப்பற்றுடன் சிந்தித்தெழுதும் இலக்கியவாதிகள் சிலர் இப்போதும் இருக்கவே செய்கின்றனர் என்பதும் உண்மை.
இலக்கியத்துறையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் உங்களின் இலக்கு எது? அதை அடைந்து விட்டதாகக் உணர்கிறீர்களா?
இலக்குகளை அடைந்து விட்டால் ஓட்டம் ஓய்ந்துவிடுமே? எனவே இலக்குகளை அடைய நானும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன். சிங்கள மொழியிலும் என் நூல்களை வெளிக்கொணர ஆவல். இப்போதைய இலக்கு இதுதான்.இதற்கு சில சிங்கள நண்பர்கள் ஒத்துழைக்கத் தயாராகவே உள்ளனர்.
பிள்ளைகளை வளர்ப்பதில் பாரிய சவால்களை எதிர்நோக்கும் இன்றைய சூழலில், இந்த சமூகச் சீர்குலைவிலிருந்து நம் சந்ததிகளை மீட்டெடுக்க, பெற்றோராகிய எமது தார்மீகக் கடமை என்னவாக இருக்கும்?
இது ஒரு முக்கியமான கேள்வி. இன்றைய பிள்ளைகளை சரியான வழியில் வளர்ப்பது மிகப்பெரிய சவால்தான்.பரந்த உலகில் தொடர்புகள் விரிவாகியுள்ளதால் பல்முனை கலாச்சார கலவையில் மூழ்கியுள்ள நம் சமூகத்தில், பிள்ளைகளை வளர்ப்பது பெரும் சவால்தான் என்றாலும், இந்த சவால்களை வென்று நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு போதிக்க வேண்டிய கடமை நமக்குள்ளதை மறுக்க முடியாது
இதுவரை செய்த சாதனைகள், பெற்ற விருதுகள் பற்றி ஒரு சில வார்த்தைகள்…?
சாதனைகள் செய்துவிட்டதாக சொல்ல முடியவில்லை.1979 முதல் எழுதி வந்தாலும், விருதுகளை தேடிப் போனதில்லை. என்னைத்தேடி விருதுகள் வரவேண்டும் என்றே நினைக்கிறேன். கலாபூசணம்’ அரசவிருதினை 2021ல் எங்கள் எல்ல பிரதேச கலாச்சார உத்தியோகஸ்தர் பெற்றுத்தந்தார்.
எண்பதுகளில் பண்டாரவளை இந்து இளைஞர் மன்றம் ‘கவிச்சுடர் ‘விருது வழங்கி கௌரவித்தது.
1986ல் ஒரு வாசகர் தபால் அட்டையொன்றில் வடிமைத்து வழங்கிய “தேயிலை தேசத்தின் கவிக்குரல்”என்ற பட்டத்தையே மிக உயர்வான விருதாக கருதுகின்றேன்.
நம் பாரம்பரிய இலக்கியங்கள், பண்பாடுகள், கலாசாரங்கள் இவற்றையெல்லாம் சிதைவின்றி நம் எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகள் எவை?
இது மின்னணு யுகம். இலக்கியங்களை முடிந்தளவு மின்னிதழ்களில் பதியலாம். என்றாலும் பழைய ஓலைச்சுவடிகளை இன்றும் ஆய்வாளர்கள் வாசிப்பதைப்போல தேடல் மிகுந்த எதிர்கால சந்ததியினர் தேடி வாசிப்பார்கள். ஆனால் கலாச்சாரமும் ,பண்பாடும் மாற்றமடைவதை முற்றாக தடுக்க முடியாது, என்றாலும் நம் பாரம்பரிய விழாக்கள், திருமண வைபவங்கள்,ஏன் மரணச்சடங்குககளில் கூட பாரம்பரியத்தையும்,கலாச்சாரத்தையும் கட்டாயமாக கடைபிடித்தால் எதிர்கால சந்ததியினரும் அதை ஓரளவுக்காவது பின்பற்றுவார்கள்.
வாழ்க்கையில் பல கரடுமுரடான பாதைகளில் பயணப்பட்டு வந்தவர் நீங்கள். உங்களது இன்றைய உயர்விற்கான காரணகர்த்தா யார்?
நான் தமிழில் நான்காம் வகுப்பும்,சிங்கள மொழியில் ஏழாம் வகுப்பும் கற்றவன்.என் இலக்கியப்பயணத்திற்கு காரணம் வாசிப்பு பழக்கமே! இலக்கியத்துறையில் நான் வளர காரணமானவர்கள், பிரபல பல்துறை கலைஞர் கலைக்கமல்,மஹ்தூம் ஜமால்தீன் ஐயா,திரு மாணா மக்கீன் ஐயா,திருமதி லீலா இராமையா அம்மையார், திரு தமிழ் நெஞ்சம் அமின் ஐயா ஆகியோர் என் நன்றிக்குரியவர்கள்.
தற்கால எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்கள் எழுத்துச் சுதந்திரம் எனும் பேரில் கண்டதையும் எழுதுகிறார்களே! ஒரு எழுத்தாளனின் எழுத்துச் சுதந்திரம் என்பது எந்தவகையில் பேணப்பட வேண்டும்?
அதுதானே எழுத்துச்சுதந்திரம்? எழுதும் எல்லாமே காலத்தை வென்று வாழாது.எல்லா காலங்களிலும் இத்தகு இலக்கியங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன,காலம் நல்லதை வைத்துக்கொண்டு அல்லாததை ‘குப்பை’க் கூடையில் போட்டுவிடும்.
அதனால் கவலை வேண்டாமே!
உங்கள் எதிர்காலத் திட்டங்கள், வெளியீடு காணவிருக்கும் நூல்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பெரிய திட்டங்கள் எதுவுமில்லை.இறைவன் வழி நடத்துவான் என்ற நம்பிக்கையில் பயணிக்கும் நான், அடுத்து ஆறாவது நூலாக “ஒரு பிடி கொழுந்து”என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட முயன்று வருகின்றேன்.
கடைசியாக, நமது தமிழ்நெஞ்சம் இதழைப் பற்றிய உங்கள் கருத்து?
மின்னிதழாக மின்னும் ‘தமிழ்நெஞ்சம்’ மாத இதழ் அச்சிலும் வருகின்றது.
உலகம் முழுதுமுள்ள தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்து வெற்றிநடை போடும் ‘தமிழ் நெஞ்சம்’ எப்போதும் புதியவர்களை வாழ்த்தி வரவேற்கத் தயங்குவதில்லை. ஆசிரியர் தமிழ் நெஞ்சம் ஐயா பிரான்சிலிருந்தாலும் தமிழை வளர்ப்பதில் ஒரு சாதனையாளரே! சாமானியனான என் ‘கொழுந்தம்மா’ நூலை சென்னையில் வெளியிட்டு என்னை இந்திய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதை மறக்கவே முடியாது.
இறுதியாக தமிழ்நெஞ்சம் ஆசிரியர் தமிழ் நெஞ்சம் அமின் ஐயா, வாசகர்கள், மேலும் இந்த நேர்காணலை நடத்திய சகோதரி வஃபீரா ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
எழுத்தாளரும் கவிஞருமான கோவுஸ்ஸ ராம்ஜி வெற்றிப்பாதையில் பயணித்து இலக்குகளை எய்த தமிழ்நெஞ்சம் சார்பாக நாமும் வாழ்த்துகிறோம்.
1 Comment
Pavai Kichenamourty · ஆகஸ்ட் 2, 2023 at 12 h 43 min
உலகநாதன் அவர்களிடம் செய்த நேர்காணல் மிகவும் அருமை
மலையகத் தமிழர்களின் படைப்புகள் இலங்கை மக்களிடம் பரவலாக்கச் செய்வது மிகவும் அவசியம் அந்த வகையில் மிகவும் அருமை