செப்டம்பர் அக்டோபர் 2022 / 48 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

 

மருத்துவர் ஜலீலா முஸம்மில், ஏறாவூர், இலங்கை

அனைவரையும் அன்பால் விழித்தவளாக..

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்.

மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகும். பண்பாடு கலாச்சாரம் நாகரீகம் போன்றவற்றின் பிரதிபலிப்பாக அது இருக்கிறது. உலகளாவிய மொழிகளில் தனிச்சிறப்புக் கொண்ட தமிழ்மொழியில் இதுவரை ஆயிரக்கணக்கான இலக்கிய நூல்கள் வந்து பெருமைப்படுத்தி உள்ளன. ஆயினும் இன்று உலகின் கவிஞர்கள் பலரால் நேசிக்கப்படும் ஒரு கவி வடிவம் ஹைக்கூ தான் என்பது அசைக்க முடியாத உண்மை. இன்று தமிழில் மக்கள் இலக்கியமாக இது கொண்டாடப்பட்டு வருவதைக் காணலாம்.

ஹைக்கூ என்பது மூன்று வரிகளுக்குள் முழுப் பிரபஞ்சத்தையும் அடக்கக் கூடியது. சிறு துளி ஒன்று பெரியதொரு காட்சியை தனக்குள் உள்ளடக்குவது போல மூன்றே வரிகளில் சமூக அவலங்களைப் படம் பிடித்துக் காட்டக் கூடியதும், படிப்பினைகளைச் சொல்லக் கூடியதுமாக அமைகிறது. தூரத்து நிலாவைக் கைகளுக்குள் கொண்டு வரும் வித்தைகள் தெரிந்தது. மூன்று வரிகளுக்குள் எண்ணற்ற தத்துவங்களைச் சொல்லக்கூடியது என்றே கூறலாம்.

ஆரம்ப காலத்தில் ஐக்கூ கவிதை ஒக்கூ (hokku, ஃகொக்கூ) என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஐகை என்று திரிந்து ஐக்கூ என்று அழைக்கப்பட்டது. ஐக்கூ என்றால் அணுத்தூசி போன்ற சிறிய கவிதை என்று பொருள் படுவதாக அமைகிறது. இக்கவிதையின் பெயரை ஹொக்கு என்று பாரதியார் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஐ + கூ = ஐக்கூ ; ஐ = கடுகு ; கூ = உலகம் கடுகு போல் சிறிய கவிதை வடிவில் உலகளாவிய கருத்துக்களைச் செறிவுடன் செறித்து வைக்கச் செப்பு போல் இடந்தரும் கவிதை வடிவே ஐக்கூ என்றும் பொருள் கூறுகின்றனர்.

பருவநிலை மாற்றங்களை வாழ்வியல் உண்மைகளோடு ஒட்டி வைத்து எழுதுவதே ஹைக்கூ. காட்சிகளைப் படிமம் ஆக்குவதில்தேர்ந்து காணும் எதையும் புகைப்படம் எடுப்பது போல அழகாகச் சொல்லெனும் தூரிகைக் கொண்டு வரையும் ஓவியமே ஹைக்கூ.

ஹைக்கூ கவிதை ஆனது பொருட்செறிவும் இனிமையும் ஆழமும் கொண்டது. வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டி எங்கெல்லாமோ அழைத்துச் செல்லும் வலிமை கொண்டது. ஹைக்கூ கவிதைகளில் மயங்காதவர்கள் இல்லை எனலாம். சிறு வரிகளில் தன்னடக்கத்தோடு பாரிய அர்த்தத்தை உள்வாங்கி தன்னகத்தே கொண்டு இருக்கின்றன ஹைக்கூ கவிதைகள். ஒவ்வொரு வாசகனையும் ஒவ்வொரு விதமாக சிந்திக்கச் செய்து புதுமை செய்கிறது.போதை தருகிறது என்றே சொல்லலாம்.

புத்தமதப் பிரிவாகிய ஜென் தத்துவத்தை பரப்புவதற்காக உருவான கவிதை வடிவமே ஹைக்கூ எனச் சொல்லப்படுகிறது. ஜென் தத்துவம் என்பது வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு விடுதலும், இயல்பாக இருத்தலும் ஆகும். நமக்கு அவசியம் இல்லாதவற்றை ஒருபோதும் வாழ்க்கையில் அனுமதிக்காதே என்று பறைசாற்றுகிறது ஜென் தத்துவம். எண்ணங்களைத் தடை செய்ய வேண்டாம், அது தன் பாட்டுக்கு வந்து போகட்டுமே என்கிறார்கள் ஜென் குருமார்கள். சொல்ல வந்ததை எத்தனை தூரம் சுருக்கமாக அழுத்தமாக சொல்லி இருக்கிறோம் என்பது தான் முக்கியம் என்கிறார் ஹைக்கூ கம்பர் பாஷோ அவர்கள்.

ஹைக்கூ கவிதைகள் தமிழிலே அதிகமான பெயர்கள். துளிப்பா, குறும்பா, சிந்தர் கரந்தடி விடுநிலைப்பா, மின்மினிக் கவிதை, வாமணக் கவிதை, அணில்வரிக் கவிதை என்று பலராலும் காரணப்பெயர்களாக அழைக்கப்படுகின்றன.

1916 ம் ஆண்டு வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஜப்பான் சென்றாராம். திரும்பி வந்ததும் ஹைக்கூக்கவிதையில் மயங்கி அதைப்பற்றி ஒரு பத்திரிக்கையில் கட்டுரை எழுதினாராம். அதைப் படித்த நமது மகாகவி பாரதியார் மனதைப் பறிகொடுத்து அதைப் பற்றியே ஆர்வமாய் அதே ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி சுதேசமித்திரன் பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதினாராம்.இதுவே தமிழுக்கு ஹைக்கூ கவிதைகள் வந்த முதல் அறிமுகமாக அறியப்படுகிறது.

மகாகவி பாரதியார் தமிழுக்குக் கொண்டு வந்த ஹைக்கூ ஒரு நூற்றாண்டு காலத்தைக் கடந்து இன்றைய கவிஞர்களால் தொடர்ந்தும் எழுதப்பட்டு வருவது சிறப்புக்குரியதாகும்.

இதில்…

சென்ரியு, குக்கூ, பழமொன்றியு, மோனைக்கூ, எதுகைக்கூ, லிமரைக்கூ, விடுகவிக்கூ, மணிக்கூ

என்று எட்டு வகைகள் காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் ஹைக்கூ கவிதைகளில் ஈர்க்கப்பட்டு ஹைக்கூ கவிதைகள் எழுதும் ஆசை இருந்தது. ஆனால் சரியான வழிகாட்டல்கள் கிடைக்கவில்லை.தற்போது இந்திய முகநூல் நண்பர்களின் ஆதரவில் அந்த ஆசை நனவானதில் புளகாங்கிதம் அடைகிறேன். இதழ் தொகுக்கும் இவ்வரிய வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் எனக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கான நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.

இவ்விதழில் இடம்பிடித்த அனைத்துக் கவிச் சொந்தங் களுக்கு வாழ்த்துக்கள். ஹைக்கூ திண்ணையின் ஒவ்வொரு இதழையும் சிறப்பாக வடிவமைத்துத் தருகின்ற பணியைச் செவ்வனே செய்து வரும் பிரான்சு தமிழ்நெஞ்சம் அமின் ஐயா அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இலக்கியத்துறையில் மிக நீண்ட காலமாக தடம் பதித்து வரும் இவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

நான் ரசித்த ஹைக்கூ கவிதைகள் சில உங்கள் பார்வைக்காக…

வில்லோ மரங்கள்
மலையின் முகத்தில்
புருவங்கள் வரைகின்றன !
– அரிகிதா மொரிதகே

பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்
– நா. முத்துக்குமார்

சவைத்துச் சாப்பிட
பிளம் புளிப்பில் மீண்டும்
பிறந்தேன் சிறுவனாக
– சீய்ஷி யாமகுச்சி !

அதோ அந்த உழத்தி
அழும் தனது குழந்தை இருக்கும்
திக்கில் நடுகிறாள் நாற்று !
– இசா

அத்தனை மீன்கள் வலைகளில்
அடுத்த நாள் கடலிலே
அத்தனை அழுகை அலைகளில்
– ஈரோடு தமிழன்பன்

பதினைந்து மொழிபேசும்
ஒரே தாள்.
ரூபாய் நோட்டு.
– டி.ராஜேந்திரன்

குழந்தையின் கையில்
ஆறாம் விரல்
பென்சில்.
– நாணற்காடன்

கோடிகள் கொள்ளை
கேடியாக இருந்து
கம்பி எண்ணுகிறான்
– கவிஞர் இரா .இரவி

வீட்டில் அழைப்பு மணி
அழுத்தினேன்
எட்டிப் பார்த்தது நாய்.
– கன்னிக்கோவில் ராஜா

மருத்துவமனையில் நோயாளி
அதிகம் வலியை உணர்கிறார்
மனைவி.
– இளையபாரதி கந்தகப்பூக்கள்

எட்டிப் பார்த்தேன்
தூக்கிவிடச் சொன்னது
கிணற்றில் விழுந்த நிலா.
– □

தன்னுடைய புகைப்படம்
தடவிப் பார்க்கிறான்
கண்ணில்லாதவன்.
– கொள்ளிடம் காமராஜ்

கூரை கிழிசல்களை
குத்திக்காட்டுகின்றன
மழை ஊசிகள்
-மு.முருகேஷ்

பறவை பறக்காத இடமும்
பறந்து அலைகிறது
பறவையின் இறகு.
– அனுராஜ்

மேய்ச்சல் மாடுகள்
வீட்டுக்கு அழைத்து வரும்
இடையனின் குழலோசை
– கவிநிலா மோகன்

ஏற்கனவே சுக்கு நூறாய்
உடைந்திருக்கிறது மனம்
கல்லுடைக்கும் சிறுமி
– கவிச்சுடர் கல்யாணசுந்தரம்

மரத்திலிருந்து சத்தமின்றி
விழுந்து தன்நிழலைத் தொடும்
பழுத்தயிலை
– ஷர்ஜிலா யாகூப்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..