I நேர்காணல் I மின்னிதழ் I பாடலாசிரியர் உமாசுப்ரமணியன்

பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் இதோ…

நேர்கண்டவர் : பெண்ணியம் செல்வக்குமாரி

கனிமொழி அவர்களுடன் பாடலாசிரியர் உமாசுப்ரமணியன்
ஜூலை 2023 / 100 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.
நல்லக்கண்ணு ஐயாவுடன்

உங்கள் படைப்புகள் பற்றி சொல்லுங்கள்

என் முதல் படைப்பு விடுகதை. விடுகதை என்றால் நாம் ஒருவரிடத்தில் கேட்டு தெரிந்து கொண்டதை இன்னொருவர் இடத்தில் சொல்லி விளையாடுவோம். ஒவ்வொருவரின் வழியாக ஊர் முழுக்க தலைமுறை தலைமுறையாக, செவி வழி இலக்கியமாக மக்களிடத்திலே வலம் வரும் நாமே விடுகதைகளைத் தயாரித்து சொல்லலாமே என்று தோன்றியதில் 10 விடுகதைகளைத் தயாரித்து தீக்கதிர் வழங்கும் செம்மலர் இதழில் 1989இல் வெளியானது. பக்கத்து வீட்டில் தீக்கதிர் தாள் செம்மலர் இதழ் வாங்குவார்கள். ஆகவே என் முதல் படைப்பு செம்மலரில் வெளியானது. திருமணத்திற்கு முன் இந்த ஒரு படைப்பு அத்துடன் 19 91 திருமணம் 19 97 இல் என் முதல் சிறுகதை முதல் நாவல் முதல் கவிதை என 19 97 இல் இருந்து வார இதழ் மாத இதழ்களில் வெளிவர தொடங்கியது. தின பூமி என்ற நாளிதழின் இணைப்பு இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் வெளிவர துவங்கியதில் எனக்கு மிகுந்த ஊக்கமாக இருந்தது. இப்படியாக என் படைப்புகள் தொடர்கின்றன.

திரைப்படத்தில் உங்கள் பங்களிப்பு பற்றி சொல்லுங்க உமா …

விவரம் தெரிந்த வயதிலிருந்து திரைப்படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் வானொலி தான் திரைப்படப் பாடல் ஒலி சித்திரம் நாடகம். இன்று காணொளியாக காணுகின்ற பலவற்றில் செய்திகள் உள்பட எல்லாமே செவி வழியாக ரசித்து மகிழ்ந்திருக்கிறோம். திரைப்பட பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. வானொலியில் பாடல்கள் கேட்கும் போது, திரைப்படத்தின் பெயரைச் சொல்லி பாடல் பாடுபவர் என ஓர் ஆண் பாடகர் பெயரையும் ஓர் பெண் பாடகி பெயரையும் கலந்து சொல்வார்கள். பாடல் ஆசிரியர் மட்டும் ஆண்கள் பெயராகவே இருக்கும். ஏன் பெண் பாடல் ஆசிரியர் இல்லை. பெண்ணுக்கு பாடல் எழுத வராதோ என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழும். அப்போதே முடிவு செய்து கொண்டேன் நான் திரைப்பட பாடல் ஆசிரியர் என்று. திரை உலகம் தோன்றி நூறாண்டுகளுக்கு மேல் ஆகியும் விரல் விட்டு எண்ணுகிற அளவே பெண் பாடல் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எனக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகிறேன்.

கதை சூழலுக்கான கதாபாத்திரத்தின் உணர்வுகள் தான் பாடல் என்றாலும் சில பாடல்களில் கவிஞருக்கு வரி சுதந்திரம் கிடைக்க வாய்ப்பு அமைகிறது. அப்படி அமைந்த படம் வில்லாளன் அந்தப் படத்தில் “தாயே மெய் மெய் மயக்கிடும் யாவும் பொய் பொய் மனதினில் வை”  என்று தொடங்கும் பாடலில் “ஓர் இனமே அழியுது, அங்கே பார்” என்ற வரியினை குறிப்பிட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அம்மையார் அவர்கள் பாராட்டினார்கள். குமரா என்ற படத்தில் “எங்கே போகுது நாடு ஏன் இந்த வன்முறை கேளு” என்கிற பாடல் வரிகளை முதலமைச்சர் கலைஞர் ஐயா சமூக அக்கறையோடு இந்தப் பெண் கவிஞர் எழுதி இருக்கிறார் என்று சொல்லி பாராட்டினார்கள். இப்படியான வரிகளை திரைப்பட பாடலின் வாயிலாக சொல்வதை இந்த சமூகத்திற்கு நான் ஆற்றுகின்ற பங்களிப்பாக எண்ணுகிறேன்.

பெண் அமைப்பில் இருக்கின்றீர்கள். அந்த அமைப்பில் தங்களுடைய பணி என்ன?

பாடலாசிரியராக வேண்டும் என்று எனக்கு இருந்த ஆர்வம் போலவே… அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது பெரும் பகுதியாக இருக்க வேண்டும். இருக்கின்ற கட்சிகளில் நாம் பெரும்பான்மையாக இணைந்து பங்காற்றுவதை விட முழுக்க முழுக்க பெண்களால் கட்டமைக்கப்படுகின்ற ஒரு கட்சியைத் தோற்றுவிக்க வேண்டும் என்று கட்சிக்கான பெயரைக் கூட நான் முடிவு செய்து விட்டேன். அந்த நேரத்தில் பெண் அமைப்பின் ஓர் அமைப்பு எனக்கு தெரிய வருகிறது. ‘ஆஹா லட்டு திங்க ஆசையா’ என்பது போல அந்த பெண் அமைப்பின் துவக்க ஆண்டிலேயே நான் உறுப்பினராக இணைகிறேன். உறுப்பினராக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். அமைப்பிற்கான ஓர் அடையாள பாடலை எழுதியிருக்கிறேன்.

” பெண்ணே நீ வேலியற்ற பெருவெளி” பெண் அமைப்பு தன்னை வளர்த்தெடுக்கின்ற நிலைப்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. என்னால் முடிந்த பணிகளைச் செய்வேன். பெண்களை மீண்டும் வீட்டுக்குள் அடைத்து விட நினைக்கின்ற எந்த ஒரு சூழலையும் நான் எதிர்ப்பவளாக இருப்பேன்.

புகுந்த வீடு பிறந்த வீடு பற்றி தங்கள் உணர்வுகளை சொல்லுங்க

பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. எனக்கு நான்கு தம்பிகள் கணவருடன் பிறந்தவர்கள் ஐவர். ஆகவே எனக்கு என் பிறந்த வீடு போலவே தான் புகுந்த வீட்டையும் பார்க்கின்ற உணர்வு. ஆனால் காலப்போக்கில் மகளாக அக்காவாக, கவிஞராக, படைப்பாளியாக என் பிறந்த வீட்டில் கொண்டாடப்படுகிற நான் மருமகளாகவும், அண்ணியாகவும் மட்டுமே புகுந்த வீட்டில் ஏற்றுக் கொள்ளப்படுகிறேன். இந்த நிலை மாறுகின்ற போது பெண் தன் ஆற்றலை இந்தச் சமூகத்தில் வெளிப்படுத்துவதில் பெரும் போராட்டங்கள் இருக்காது. கணவரின் முழு ஒத்துழைப்பு எப்போதும் எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது என்பதால்தான் வெளிச்சமூகத்தில் என்னால் தொடர்ந்து இயங்க முடிகிறது.

சென்னை தமிழிலக்கிய பேரவையினரால் விருதுபெறும் தருணம்
எஸ்தர் ஃபைன் ஆர்ட்ஸ் இசைக்குழு விருதினை வழங்குபவர் திரைப்படத்தயாரிப்பாளர் கருணாகரன்

சிறுவயது நினைவுகள் பற்றி சொல்லுங்க… 

நிறைய இருக்கு மகிழ்வான தருணம். சில அனுபவ தருணங்கள் இப்படியாக கிடைக்கின்ற நேரங்களில் எல்லாம் விளையாடி மகிழ்ந்திருக்கிறோம். இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு கிடைக்காத வாய்ப்பு இது. பள்ளிக்கூடம் அருகே சின்னதாக ஒரு பெட்டிக்கடை இருக்கும் பத்து பைசா இருந்தால் இரண்டு மூன்று வகையான தின்பண்டம் வாங்கி சுவைத்து விடலாம். பொம்மை மிட்டாய் என்று ஒருவர் ஒரு கம்பில் பொம்மையை வைத்துக் கொண்டு வருவார். அதில் கடிகாரம் நெக்லஸ் என நாம் கேட்பதை வடிவமைத்து தருவார். இனிப்பு கடிகாரத்தை நுனி நாவால் நக்கி நக்கி சுவைத்து மகிழ்ந்த தருணங்களை அடிக்கடி நினைப்பதுண்டு. மரங்களில் ஏறி இறங்குவது ஏதோ சாதனை செய்தது போன்ற உணர்வினை தரும். சில நேரங்களில் கீழே விழுந்து அடிபட்டு வீட்டுக்கு வந்தால் அம்மாவும் அடிப்பார்கள் குரங்கு போல் ஏன் மரங்களில் ஏறி விளையாடுறீங்க என்பார்கள். அதேபோல் சே சின்ன வயதில் நாம் இப்படி எல்லாம் கூட இருந்திருக்கிறோமே என்று என்மீதே எனக்கு வெறுப்பு வந்த தருணங்களும் உண்டு. தலையில் பேன் இருக்கின்ற பெண் பிள்ளைகளுடன் நட்பாக இருக்க மாட்டேன். அதேபோல கருப்பாக இருக்கின்ற பெண்களுடனும் நான் பழக மாட்டேன். அதில் ஒரு பெண் அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். என்னோடு விளையாட பழக தொடர்ந்து முயன்றாள். உன் தம்பி கூட தான் கருப்பா இருக்கான்னு அவள் சொன்னபோது, அவன் என் தம்பி என்று அவள் வாயடைத்து இருக்கிறேன். நிறத்தில் என்ன இருக்கிறது என்பதை காலப்போக்கில் உணர்ந்த நான் அவளுடன் 40 ஆண்டு காலமாக நட்போடு இருக்கிறேன். இப்படி பல நினைவுகள் அடிக்கடி நினைத்துப் பார்க்க நிறைய இருக்கிறது. சிலவற்றை தான் சொல்ல முடிகிறது.

எந்த எந்த விழாக்களில் கலந்து கொள்கிறீர்கள். கலந்து கொள்ளும் நோக்கம் என்ன?

விழாக்கள் என்றாலே மகிழ்ச்சிதான். இலக்கிய விழாக்களில் நம் எழுத்தை வெளிப்படுத்திக் கொள்ளவும் சக படைப்பாளியின் படைப்பை தெரிந்து கொள்ளும் விதமாகவும் தான் விழாக்களை நான் பார்க்கிறேன். நல்ல படைப்பாளிகளின் நட்புகளும் கிடைக்கின்ற இடமாகவும் விழாக்கள் அமைகின்றன. அப்படி ஒரு விழாவில் தான் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் பெண்ணியம் செல்வகுமாரி. குடும்ப உறவினர்களைத் தாண்டி நட்பு உறவுகளையும் தாண்டி இலக்கிய உறவுகள் என்று மூன்றாவது உறவாக கிடைக்கும் படைப்பாளர்களின் நட்புறவு ஒருவரை ஒருவர் பாராட்டவும், வழிப்படுத்தவும் மனிதர்களை நிறைய சம்பாதித்துக் கொள்ள விழாக்கள் பாலமாக இருப்பதாக நான் உணர்கிறேன். பெரிய விழாக்கள் சிறிய விழாக்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை 10 பேர் கூடுகின்ற அமைப்பில் பல செய்திகளை தெரிந்து கொள்ள நேர்கிறது ஆயிரம் பேர் கூடுகின்ற அரங்கத்தில் நேரம் சில நேரங்களில் விரயமாக கூட ஆகிறது முன்கூட்டியே விழாக்களை கணித்து விட முடியாது. விழாக்களை என்றாலும் ஒவ்வொரு படைப்பாளியின் அல்லது கலைஞர்களின் உழைப்பிற்கும் போராட்டத்திற்கும் விழாக்களில் தான் அங்கீகாரம் நிறுவப்படுகிறது. விழாக்கள் தான் படைப்பாளிகளுக்கு விலா எலும்பென்று நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இலக்கியத்தில் தங்கள் படைப்புகள் எந்த வகையை சேர்ந்தவை?

சிறுகதைகள் நாவல்கள் கவிதைகள் என நான் வார மாத இதழ்களில் எழுதத் துவங்கியவள். எழுத படிக்க தெரிந்தவர்களின் வாசிப்புக்கு ஏற்ற படைப்புகளாக இருக்கிறது என்று நினைக்கிறேன். என் படைப்புகளில் நாவலில் தொடர்ந்து மருத்துவ சிந்தனைகளை கருவாகக் கொண்டு கதைகளை அமைத்திருக்கிறேன். முதல் நாவல் விமலா ஒரு விடிவெள்ளி இதில் கருப்பை அறுவை சிகிச்சை இந்த நாவலில் உள்ள மருத்துவ சிந்தனை மருத்துவத்தில் சாத்திய பட்டுள்ளதாக 20 10 2018 அன்று தினத்தந்தி செய்தித்தாளில் குஜராத் மாநிலம் வடோராவை சேர்ந்த மீனாட்சி வாளன் என்கிற பெண் தன் தாயின் கருப்பையை பெற்று மகளைப் பெற்றிருப்பதாக செய்தி வெளிவந்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மருத்துவ முன்னேற்றத்தின் மீது எனக்கு எப்பவுமே ஒரு ஈர்ப்பு உண்டு. தொடர்ந்து பூப்படையாத பெண்ணின் வாழ்க்கையும் அந்த நாவலின் நிறைவு அத்தியாயத்தில் பிரபல மருத்துவர் ஞானசௌந்தரியின் ஆலோசனையும் இடம் பிடித்தது. பதப்படுத்திய உயிரணு பற்றி உயிர்ப்பு என்கிற நாவலில் பதிவு செய்திருப்பேன். இப்படியாக சிந்தனையிலும் கற்பனையிலும் ஆர்வம் உண்டு. ஒட்டிப் பிறக்கின்ற இரட்டைக் குழந்தைகளை கரு வளர்ச்சியில் பிரிக்கும்படியான ஓர் அற்புதம் மருத்துவத்தில் நிகழுமா என்று எதிர்பார்க்கிறேன். இப்படி பகரும்போது நீங்க ஒரு ஆய்வு மருத்துவராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டீங்களா என்று கேட்பார்கள். இல்லை எதிர்பார்ப்பு மருத்துவம் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறது. ஆகையால் இந்த எதிர்பார்ப்பு சிந்தனைகள் எனக்குள் அவ்வப்போது எழுந்து கொண்டே இருக்கிறது .

யாருடைய படைப்பு உங்களை அதிகமாக ஈர்த்தது அல்லது தேர்ந்தெடுத்து வாசிப்பீங்களா

வாசிப்பு என்பதே எனக்கு மிக காலதாமதமாக கிடைத்த வாய்ப்பு தான் அப்பா கவிஞராக இருந்த போதும் நிறைய புத்தகங்கள் படிக்கக் கூடியவராக இல்லை. செய்தித்தாள்களுடன் நிறுத்திக் கொள்வார். ஆகையால், கிடைக்கின்ற புத்தகங்களை படிக்க துவங்கியிருந்தேன். பக்கத்து வீட்டில் தீக்கதிர் நாளிதழும், செம்மலர் புத்தகமும் அவ்வப்போது படிக்க கிடைக்கும். மூலதனம் படைக்கின்ற வாய்ப்பு அப்படித்தான் கிடைத்தது. மளிகை பொருள் வாங்கி வந்த பொட்டல பேப்பரில் இருந்த கவிதை யார் எழுதியது என்று தெரியவில்லை. தேங்கி கிடந்த மழை நீரில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் வானத்தை அசைக்கிறான் என்று படித்தேன். இன்றுவரை இந்த கவிதை அப்படியே மனதில் பதிந்து விட்டது. இதை எழுதிய கவிஞர் யார் என்று தெரியவில்லை. தேர்ந்தெடுத்து வாசிப்பேன் என்பதை விட நிறைய வாசிக்கின்றவர்களின் பரிந்துரை புத்தகங்களை வாசிப்பேன். இப்படியாக மட்டுமில்லாமல் மிகப் பழமையான புத்தகங்கள் தேவி பாகவதம், ஒட்டக்கூத்தரின் தங்கையாக பரணி படிக்க பிடிக்கும். அலாதியான கற்பனை காட்சிகள். கற்பனை என்கிற ஒப்பனை இல்லை என்றால் வாழ்க்கை கருப்பு வெள்ளை படமாக இருக்கும் என்று நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டுள்ளேன். (அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று தான் மேற்கோள் காட்டுவார்கள் நீங்க உங்க வரிகளை மேற்கோளாக சொல்றீங்களேன்னு கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது எவராவது சொல்வார்களா என்று எதிர்பார்ப்பதை விட இவரை (நான்) சொல்கிறார். எழுத்துரு கொண்டவைகளையும் காட்சிகளையும் படித்துக் கொண்டே வாழ்வதுதான் வாழ்க்கை என்று உணர முடிகிறது.

வாழ்க்கையில் உங்களுக்கு ஆர்வம் தரக்கூடியவைகள் பற்றி சொல்லுங்கள் ?

பாடலாசிரியர் கனவு போலவே… செய்தி வாசிப்பாளர் கனவும் சேர்ந்து வந்தது. வாசித்தல் என்பது பிடித்தமான ஒன்று. அதிலும் செய்திகளை வாசிப்பது. வீட்டில் செய்தித்தாளினை நான் சத்தமாக தான் ஏற்ற இறக்கத்தோடு வாசிப்பேன். தலைப்புச் செய்திகளை வாசிக்கும் பாணி தனியாக இருக்கும். இந்த ஆசையால் ஓர் தனியார் தொலைக்காட்சியில் சில மாதம் செய்தி வாசிப்பாளராக இருந்தேன். (இன்றைய தேதி வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன் செய்தி வாசிக்க போகலாமா என்று) ஒருமுறை கிடைத்திருக்கின்ற இந்த மனித வாழ்வை பயனுள்ள வாழ்க்கையாக வாழ்ந்திட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வாழுகின்றேன். என் குறைகளையும் நிறைகளையும் என்னால் காண முடிகிறது. ஆகையால் காலம் செதுக்குமென்று காத்திருக்காமல், நாளும் என்னை செதுக்கி கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஆர்வம் தரக்கூடிய  வகையில் முக்கிய பங்கு என் மீது என் கணவர் செலுத்துகின்ற அன்பு, காதல், நேசம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 30 ஆண்டுகளாக நேசத்தோடு வாழுகின்ற வாழ்க்கையில் எல்லா பகுதியும் நான் ஆர்வத்தோடு அணுகுவதற்கு முக்கிய ஊக்கியாக இருக்கிறது.

வரும் காலத்தில் எதை நோக்கி பயணிக்கிறீங்க ? யாரை கைப்பிடித்து அழைத்துச் செல்ல போகிறீர்கள் ?

நிகழ்கணத்தில் வாழ்ந்து கொண்டே எதிர்காலத்தை நோக்குகிறேன். நேர்மை என்பவரை, நீதி என்பவரை, சமம் என்பவரை, நேயம் என்பவரை பரிவு என்பவரை, விளிம்பு நிலை வாழ்வாளர்களின் விடியலுக்காக கைப்பிடித்து அல்ல கைகூப்பி அழைத்து வர ஆசைப்படுகிறேன். கற்காலம் பொற்காலம் என்றெல்லாம் வரலாறுகளில் படித்திருக்கிறோம். நற்காலம் என்ற ஒன்றை நோக்கி பயணிக்கிறேன். அந்தக் காலம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால் பசுமையான பூமியும் பசியில் வாடாத உயிர்களும் வாழுகின்ற காலமாக இருக்க வேண்டும். மிக எளிய வாழ்க்கையை இடைப்பட்ட காலத்தில் ஏகத்திற்கும் ஒப்பனை செய்து மதிப்பீடுகளைத் தந்து மலைக்கும் மடுவுக்கும் ஆன பிரிவு செய்து பிரமித்து இருக்கிறோம். ஒரு புத்துலகைக் காண விரும்பி பயணிக்கிறேன். சிறப்பான கேள்விகளால் என் மன உணர்வுகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கிய தமிழ்நெஞ்சம் இதழுக்கு நன்றி. நேர்காணல் நிகழ்த்திய தங்களுக்கும் எனது நன்றிகள் . “வாழ்வதற்குப் பொருள் தேடும் போதே வாழ்ந்ததற்கும் பொருள் தேடு” என்கிற என் வரிகளோடு நிறைவு செய்கிறேன் நன்றி.


3 Comments

சாரதா சந்தோஷ் · ஜூலை 1, 2023 at 16 h 44 min

அருமையான நேர்காணல்..** பசுமையான பூமியும், பசியில் வாடாத உயிர்களும் வாழுகின்ற காலம் வேண்டும் ** என்பது மிக உயரிய கருத்து..கனவு மெய்பட வேண்டும்.. மனமார்ந்த வாழ்த்துகள்..

கரு.கிருஷ்ணமூர்த்தி · ஜூலை 19, 2023 at 4 h 25 min

படைப்புகள் அனுப்பவேண்டியா முகவரி அறிந்துகொள்ள விரும்புகிறேன்

Admin · ஆகஸ்ட் 1, 2023 at 6 h 59 min

மின்னஞ்சலில் அனுப்பவும். இதழில் மின்னஞ்சல் ஐடி தரப்பட்டிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »