தொடர் – 41
உலக அரங்கில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியச் சொல் ஹைக்கூ..
அனைத்துக் கவிஞர்களையும் ஈர்க்கும் ஒரு வடிவமாகவும்..அனைவரும் எழுதத் துடிக்கும் ஒரு வடிவமாகவும் ஹைக்கூ விளங்குகிறது.
எந்தக் கவிதை வடிவமும் பெறாத..ஓர் உயரிய இடத்தை ஹைக்கூ மட்டும் எப்படி பெற்றது..?!
எளிய வடிவம் ஒரு காரணம்..கவிஞனோடு வாசகனையும் பங்கெடுத்துக் கொள்ள வைக்கும் யுக்தி..
ஒரு கருத்தைச் சொல்ல வந்து ஈற்றடியில் எதிர்பாரா ஒரு புதிய திருப்பத்தை தந்து ஆச்சரியப்படச் செய்யும் வடிவம்…கவிதைகளுக்கே உகந்த கற்பனை..உவமை…உருவகம் என எதுவுமே இல்லாது படைக்கப்படும் வடிவ முறை..குறைவான வார்த்தைகளைக் கொண்டு மிக அடர்த்தியானப் பொருளைத் தரும் கவிதை எனப் பலவாறு சொல்லிக் கொண்டே போகலாம்..
அத்துடன்..ஒரு விசயத்தை நேரடியாக சொல்லாமலும்…கவிதை வாயிலாக உணர்த்தி விடவும் இவ்வடிவம் வகை செய்கிறது..ஹைக்கூவில் சொல்வதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவதும்..கவிதையில் அழகு சேர்த்து விடுகிறது..அது எப்படி..எனக் காணலாம்.
தாத்தாவின் கரம்பற்றி
நடக்கும் குழந்தை.
தள்ளாடும் நிழல்.
- கன்னிக்கோவில் ராஜா ( தொப்புள்கொடி)
இங்கு நிழல் இருக்கிறது..ஆனால் நிழல் வர காரணமான வெயில் அல்லது இரவு நேரத்து வெளிச்சம் இங்கு குறிப்பாய் சொல்லப்படவில்லை..ஆக மறைமுகமாய் இக்கவிதைப் பகல்பொழுதையோ..அல்லது இரவுப் பொழுதையோ.. ஊர்ஜிதப்படுத்தி விட்டு நகர்கிறது..குழந்தையின் கரம் பற்றி நடக்கும் முதியவரின் நிழல் தள்ளாடுகிறதா அல்லது அப்போது தான் நடைபயிலும் அக்குழந்தையின் நடை தள்ளாடுகிறதா…இதுவும் சொல்லப்பட வில்லை…வாசகரே ஊகித்துக் கொள்ள பல கோணங்கள்.
வரையப்பட்ட ஓவியத்தின் …ஓவியத்தை விட அதை சுற்றியிருக்கும் வெற்று இடங்கள் நிறையக் காட்சிகளை மனதில் விதைக்கும் சமயத்தில்… அதுபோல இது.
அதே போல்.. என்னுடைய கவிதை ஒன்று
படரும் கொடி
தேடிக் கொண்டிருக்கிறது
தனக்கான இடம்.
அது கொடிதானா..அல்லது எவருடைய துணையையாவது தேடியலையும் ஒரு உயிரா..படரும் கொடி எனும் போது பற்றுதல் தேடும் பெண்ணாகவும் கொள்ள வாய்ப்பிருக்கிறது…ஹைக்கூ இப்படித்தான்..கவிதையும் காட்சியும் நமக்கொன்றை உணர்த்திவிட்டு நகர்ந்து விடும்..அதிலிருந்து நாம் தான்..பல கோணங்களில் சிந்தித்து..ஒவ்வொரு அடிக்கும் முப்பது அர்த்தங்களை சிருஷ்டித்துக் கொண்டிருப்போம்..
இவ்வாறான ஒரு செயல்பாட்டின் காரணமாகவே ஹைக்கூ கவிதையுலகில் கோலோச்சுகிறது எனலாம்.