தொடர் – 40
லிமர்புன்
ஹைக்கூ கவிதை வகைமைகளில் அடுத்தபடியாக நாம் காணவிருப்பது லிமர்புன்.
இது சற்றேறக்குறைய ஹைபுன் போலவே தான். முன்னதாக ஒரு உரைநடையோ அல்லது கவிதையோ பதிவிட்டு இறுதியில் அந்த உரைநடைக்கு பொருந்தி வருமாறு..ஹைக்கூவிற்கு பதிலாக லிமரைக்கூவை பதிவிட்டால் அதற்கு லிமர்புன் என்று பெயர்.
லிமரைக்கூப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். முதலடி மற்றும் ஈற்றடி இறுதியில் சந்தமோ, இயைபுத் தொடை அமைத்து ஹைக்கூ படைக்கும் போது, அது ஹைபுன் என்ற நிலையில் இருந்து மாற்றம் பெற்று லிமர்புன் வடிவம் பெறுகிறது.
அதே போல… அமெரிக்க லிமரிக் வடிவ கவிதையோடு, ஜப்பானிய சென்ரியுவை இணைத்து ‘லிமர்சென்ரியு’ என்ற வடிவமும் பரிசோதிக்கப் பட்டுள்ளது. இம்முயற்சியை 2004 ல் புதுவையிலிருந்து வெளியாகும் கரந்தடி இதழில் புதுவை தமிழ்நெஞ்சன் பதிவு செய்தார். இந்த கரந்தடி இதழ் ஹைக்கூ கிளை வடிவங்களுக்கெனவே உருவாக்கப்பட்ட இதழுமாகும்.
2008 பிப்ரவரியில் ‘’மழை விடும் நேரம்’’ என லிமர் சென்ரியுவுக்கான நூலையும் கொண்டு வந்துள்ளார்.
‘லிபுன்’ எனும் புது வடிவம் கொண்டுவர எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பெருமுயற்சி செய்தார். அதுவே லிமர்புன் எனும் வடிவில் அவரது மறைவிற்குப் பின் பெயர்மாற்றமாகி வெளியானது.
ஒரு இலக்கிய வடிவில் இவ்வாறான முயற்சிகளும், ஆராய்ச்சிகளும் அவசியமே. ஏனெனில் அவ்வாறான முயற்சிகளே இலக்கியத்தை செழுமைப் படுத்தும் காரணிகளாகும்.
லிமர்புன்… எவ்வாறு இருக்கும்…?!..எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போமா..
லிமர்புன்.
பொதுவாக உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஆனால் சிலவகை உணவுகளை சூடுபடுத்தினால் நஞ்சாக மாறிவிடுமென்று கட்டுரை ஒன்று எச்சரிக்கிறது. நைட்ரேட்டுகள் நிறைந்த காய்கறிகள், : கீரை வகைகள், கேரட், முள்ளங்கி இவற்றை மீண்டும் சுட வைக்கும்போது அது நஞ்சாக மாறுமாம். கீரை வகைகளில் உள்ள இரும்புச் சத்தும் ஆபத்தை ஏற்படுத்தலாம். வேகவைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலசு செரியசு என்னும் பாக்டீரியா நஞ்சாக மாறும். புரோட்டின் நிறைந்த முட்டையில் நைட்ரசனும் அதிகமாக இருக்கும். நீண்ட நேரத்திற்கு பிறகு சாப்பிட நேரிட்டால், சூடுபடுத்தாமல் சாப்பிடுதலே நல்லதாம். கோழிக் கறியை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட்டால் அதில் உள்ள புரோட்டின் சத்து நஞ்சாக மாறும். உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை அதிகமாக சூடுபடுத்தினால் அதில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் C, B6 ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துகள் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளாக வளர்ந்து நஞ்சாக மாறும். காளானும் அப்படித்தான். இதில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் மினரல் சத்துக்கள் மீண்டும் சுட வைத்தால் ஆபத்தாக மாறும். செரிமானமின்மையை உண்டாக்கும்.
அளவாய்ச் சுட அமுது
நல்ல சத்தும் நஞ்சாய் மாறும்
அடுத்துச் சுட பழுது.
- சோமு சக்தி
லிமர் புன்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் படித்த பள்ளிக்குச் சென்றிருந்தேன்.
நான் வைத்த மரங்கள் இலைகளை உதிர்த்து என்னை வரவேற்பதை போல உணர்ந்தேன்.
இன்று இரண்டடுக்கு கட்டடமாக, சென்னை மாநகராட்சி பள்ளியாக இருக்கும் இந்த பள்ளி..
அன்று நான் படிக்கும்போது கத்திவாக்கம் நகராட்சி நகரிய நடுநிலைப்பள்ளியாக வண்ணம் மங்கி காறைகள் உதிர்ந்தநிலையில் ஓடுகள் வேய்ந்த கட்டிடமாக இருந்தது.
பள்ளியின் பின் பகுதியில் எண்ணூர் இரயில் நிலையம்.
அடிக்கடி இரயில்கள் போகும்போதும் வரும்போதும் அதிர்ச்சியில் ஓடுகள் கீழே விழும்.
ஒருமுறை என்தலையிலும் விழுந்து அடிப்பட்ட தழும்பை
என் கைகள் தன்னிச்சையாக தடவி பார்த்துக் கொண்டன.
உதட்டில் நினைவின் புன்முறுவல்..
என்றும் மறவாத கனவுகள்
எங்கள் பள்ளியை கடக்கையில் மனதில்
எழுமே பசுமையான நினைவுகள்.!
- விஜயகுமார் வேல்முருகன்.
1 Comment
Code of destiny · ஏப்ரல் 16, 2025 at 17 h 01 min
I’m really impressed with your writing abilities and also with the layout to your weblog. Is that this a paid subject or did you customize it your self? Anyway stay up the excellent high quality writing, it’s uncommon to see a great blog like this one nowadays!